"பட்ஜெட் பெரிய விஷயம் இல்லை!'' - நிதின் சத்யா

""சின்னச் சின்ன தவறுகள் எல்லாம் சேரும்போதுதான் பெரிய பெரிய அனுபவங்கள் கைக்கு வரும். அப்படி ஒட்டு மொத்த அனுபவங்களையும் பெற்று விட, இந்த ஒரு வாழ்க்கை போதாது.
"பட்ஜெட் பெரிய விஷயம் இல்லை!'' - நிதின் சத்யா

""சின்னச் சின்ன தவறுகள் எல்லாம் சேரும்போதுதான் பெரிய பெரிய அனுபவங்கள் கைக்கு வரும். அப்படி ஒட்டு மொத்த அனுபவங்களையும் பெற்று விட, இந்த ஒரு வாழ்க்கை போதாது. இதோ நம் பக்கத்தில் நடக்கிற சின்னச் சின்ன தவறுகளிலிருந்து கூட, அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இது ஏதோ ஓர் உபதேசம் போல் இருக்கலாம். ஆனால் உண்மை. நல்ல சினிமாவை நோக்கி ஓட வேண்டும். அதுதான் வாழ்க்கை என்பதில் மட்டும் உறுதியாக இருக்கிறேன்'' நம்பிக்கையுடன் பேசுகிறார் சினிமாவில் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கும் நடிகர் நிதின் சத்யா.
"" பட்ஜெட் பெரிய விஷயம் இல்லை. என்னைப் பொருத்தவரைக்கும் அது நல்ல சினிமாவாக இருக்க வேண்டும். இந்தக் கதைக்கு தொடக்க காட்சியில் 5 பேர் ஹெலிகாப்டரில் இருந்து குதிப்பது கதைக்கு தேவைப்பட்டால் அதையும் கண்டிப்பாகச் செய்வேன்.
கதை, கதையம்சம், கதை சார்ந்த விஷயங்கள் இதுதான் முக்கியம். நல்ல கதை மற்றும் தரமான படம் என்பதைத்தான் முதலில் பார்ப்பேன். இன்டர்நேஷனல் அளவுக்குத் தரமான படங்கள் எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். கிராபிக்ஸ் அனிமேஷன்ஸ், குழந்தைகள் படங்கள் என்று வித்தியாசமான களங்களை நோக்கி தயாரிப்பாளராக முன்னே போக வேண்டும் என்று ஓர் ஆசை உண்டு'' தொடர்கிறார் நிதின் சத்யா.

"வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்' பட வாய்ப்பு நடிகராக உங்களுக்கு நல்ல அறிமுகம் தந்தது?

சினிமாவில் என்னுடைய தொடக்கம் நன்றாகவே இருந்தது.
எங்கேயாவது ஆடிஷன் நடந்தால் ஓடிப் போய் கலந்து கொள்வேன். அப்படி ஒரு நாளில்தான் "வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தின் நடிகர்கள் தேர்வில் கலந்து வந்தேன்.
இந்தப் படத்தில் நான் நடித்த கதாபாத்திரம், வேறொரு முகம் தெரிந்த பெரிய நடிகர் நடிப்பதாக இருந்தது. ஆனால், பி.ஆர்.ஓ நிகில், ""இந்த ரோல் நிதின் செய்யட்டும்'' என்று பேசி வாங்கிக் கொடுத்தார். "ஆழ்வார்ப்பேட்ட ஆண்டவா' பாடல் படப்பிடிப்பு நான்கு நாள்கள் நடந்தது. நான்கு நாள்களும் கமல் சார் கூடவே இருந்தது பெரிய சந்தோஷமாக இருந்தது. இது நடந்த போது சினிமாவுக்கு கடைக்குட்டி நான். முக்கியமாக, டான்ஸ் மாஸ்டர் ஷோபிக்கு நடன இயக்குநராக முதல் பாட்டு இது. அதனால், மறக்க முடியாத நினைவான படமிது. கமல் சாரும் ரொம்பவே நெருக்கமாக என்னை வைத்திருந்தார்.

அப்படியே "சத்தம் போடாதே' பட வில்லனும் நன்றாக இருந்தது. அதை ஏன் தொடர்ந்து செய்ய முடியவில்லை?

சில படங்கள் அமைவதைப் பொருத்தது அது. நாம் எந்தத் திசையை நோக்கி போகிறோம் என்பதும் இங்கே முக்கியம்.
இந்தப் படம் முடிந்தவுடனே ஹீரோவுக்கான நிறைய வாய்ப்புகள் வந்தன. சில தரமான படங்கள் வந்தன. சில படங்கள் பெரிய தோல்வியும் அடைந்தது. இருந்தும், சினிமாவில் கற்றுக் கொள்ள எல்லாவற்றையும் கலந்து கட்டி நடிக்க ஆரம்பித்தேன்.
வில்லன், ஹீரோ, கதாபாத்திரங்கள், காமெடி என்று எல்லாமே முயற்சிகள்தாம். இருந்தும், "சத்தம் போடாதே' மாதிரியான தரமான கதாபாத்திரம் இன்னும் எனக்கு அமையவில்லை என்பதில் வருத்தம்தான். சொல்லப் போனால் இந்தப் படத்துக்காக வசந்த் சார் கதை எழுதிக் கொண்டு இருந்தபோது, வாய்ப்பு கேட்டேன். அவருக்கும் கதைக்கு புது வில்லன் தேவைப்பட்டார். "ஆசை' படத்தில் பிரகாஷ்ராஜ் சாரை அறிமுகப்படுத்திய மாதிரியே என்னையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைத்தார். எப்படி நடிக்க வேண்டும், லைட் எங்கே வைக்க வேண்டும், ஒவ்வோர் இடத்திலும் எப்படி லைட்டிங் கொடுக்க வேண்டும், டப்பிங் பற்றி எப்படி என எதுவுமே தெரியாமல் நடித்த படமிது.
எல்லாவற்றையும் வசந்த் சார்தான் எனக்குச் சொல்லிக் கொடுத்தார். அதே மாதிரி படத்தில் பிரித்விராஜ் மற்றும் பத்மபிரியா என்று இரண்டு பேரும் நன்றாக நடிக்க தெரிந்த நடிகர்கள். என் கதாபாத்திரத்தில் வசந்த் சாரின் ஆளுமை அதிகமாக இருக்கும். ஆனால், இந்த இரண்டு பேரும் நான் நன்றாக நடிக்க எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். தட்டிக்கொடுத்து வேலை வாங்கினார்கள். நன்றி.

ராஜமௌலியின் "ஆர் ஆர் ஆர்' படத்தில் நீங்க வில்லனாக நடிப்பதாக ஒரு தகவல் வந்ததே?
எப்படி என்று தெரியவில்லை. எனக்கும் இந்தப் படத்துக்கும் சம்பந்தமே இல்ல. ஆனால், ராஜமௌலி சார் வாய்ப்புக் கொடுத்தால் நான் அதில் கண்டிப்பாக நடிப்பேன். அதில் எந்த சந்தேகமும் இல்ல.

"ஜருகண்டி', "லாக்அப்' என தயாரிப்பாளராகத் தொடர்வது எப்படி உள்ளது?

சினிமாவுக்கு வந்த பலருக்கும் நிறைய கதைகள் இருக்கும். ஆனால் எனக்கென்று அப்படி ஒன்றும் இல்லை. துக்கம், கவலை, மகிழ்ச்சி, கொண்டாட்டம், அன்பு, அழுகை இவையெல்லாம் நிறைய இருக்கின்றன. நான் பார்த்து பழகின மனிதர்கள் எல்லாரும் அவ்வளவு நல்லவர்கள். நல்ல நல்ல அனுபவங்களைக் கொடுத்தார்கள். சினிமா, வாழ்க்கை என இரண்டிலும் இருந்த குழப்பங்களைப் புரிந்து கொள்ள துணை நின்றார்கள். அதுதான் இந்த இடத்துக்கு என்னை கொண்டு வந்திருக்கிறது. "இவன் பெரிய ஆளு'ன்னு சில பேர் எடை போட்டார்கள். சிலர் மனதைப் பார்த்துப் பார்த்து பழகினார்கள். இப்படி வாழ்வு நெடுகிலும் நல்ல ஆசான்கள். எல்லாருக்கும் நன்றிகள். சில படங்கள் நடித்திருக்கிறேன். இரண்டு படங்கள் தயாரித்திருக்கிறேன். நல்ல அனுபவம். சினிமாவை விட்டு எங்கேயும் போக மாட்டேன். இதுதான் தெரியும். விரும்பி வந்த இடம். பார்க்கலாம்.

அதற்குள் நிறையப் பேரின் அன்பும், ஆதரவும் கிடைத்திருக்கிறது. "இயல்பா இருக்கப்பா'ன்னு நிறைய பேர் சொல்வதில் மகிழ்ச்சி. இவற்றையெல்லாம் விட போராடி வெற்றி பெறத் துடிக்கும் உதவி இயக்குநர்கள், நல்ல சினிமாவை நேசிக்கும் புதுப் படைப்பாளிகள் எல்லாருக்கும் என் இடம் பிடித்திருக்கிறது. ஆறுதலாக வந்து விழுகிற வார்த்தைகள் எல்லாம் அற்புதம்.

எல்லாமும் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கிறது. சினிமா ஒரு பதற்றத்துடன் நிற்க வேண்டிய இடம்தான். ஆனால் நம்பிக்கையோடு உழைத்தால், ஆசீர்வதிக்கப்பட்ட இடம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com