கரிகாலன் பற்றி ஒரு புத்தகம்!

பல்கலை ஆட்சி மன்ற உறுப்பினர், கவிஞர், பேச்சாளர் போன்ற பன்முகத் திறமைகளைக் கொண்டிருக்கும் ஆதலையூர் சூரியகுமார். தமிழக அரசின் "கனவு ஆசிரியர்' விருதும் பெற்றவர்.
கரிகாலன் பற்றி ஒரு புத்தகம்!

பல்கலை ஆட்சி மன்ற உறுப்பினர், கவிஞர், பேச்சாளர் போன்ற பன்முகத் திறமைகளைக் கொண்டிருக்கும் ஆதலையூர் சூரியகுமார். தமிழக அரசின் "கனவு ஆசிரியர்' விருதும் பெற்றவர். சிறுகதைகள், நாவல், பயணம், கல்வி குறித்து சுமார் முப்பது நூல்களை எழுதியுள்ளார்.

சூரியகுமாரின் சமீபத்திய படைப்பு "கரிகாலன் சபதம்'.

""சோழ மன்னர்களான ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் பற்றியெல்லாம் தமிழில் பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன, திரைப்படம் கூட வெளிவந்துள்ளது. சோழ மன்னர்கள் அனைவருக்கும் முன்னோடியாகவும், ரோல் மாடலாகவும் இருந்த மன்னன் கரிகாலனைக் குறித்து தமிழில் நாவல் எழுதப்படவில்லை. அதனால் 590 பக்கங்கள் கொண்ட நாவலை எழுதும் வாய்ப்பு எனக்கு வந்து சேர்ந்தது. மற்ற சோழ மன்னர்கள் கோயில் கட்டினார்கள். இசை வளர்த்தார்கள்.

ஆனால் கரிகாலன் கோயில் கட்டியதுடன் மக்கள் நலனையும், நீர் மேலாண்மையையும் கருத்தில் கொண்டு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கல்லணையைக் கட்டினான். நீர்ப்பாசனத்திற்காக ஆறுகளையும், வாய்க்கால்களையும் வெட்டினான்.

கல்லணை போலவே கரிகாலன் பெருவளத்தான் கால்வாய் இன்றைக்கும் இருக்கிறது. வெண்ணிப் போர் நடந்த இடம் இன்றைக்கு "கோயில் வெண்ணி' என்று அறியப்படுகிறது. தான் ஆட்சி செய்த வெண்ணியில், கரிகாலன் கட்டிய சிவன் கோயிலில் ஒருகால பூஜை இன்றைக்கும் நடைபெறுகிறது. இந்தக் கோயில் குளத்தை "வெந்நீர் குளம்' என்று இப்போது அழைக்கிறார்கள். மக்களின் மகேசனான கரிகாலனை சிறப்பித்து கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய "பட்டினப்பாலை' காப்பியம்தான் நாவலுக்கு அடிப்படை.

கரிகாலன் குறித்த தகவல்களை சேகரிக்க ஒரு வருடத்திற்கு முன்பே, கல்லணைக்கும், கரிகாலன் தொடர்புடைய ஊர்களுக்கும் பல முறை சென்று வந்தேன்.

"கரிகாலன் சபதம்' என்ற தலைப்பில், நாவலை எழுதி முடிக்க ஓராண்டு ஆனது. கரிகாலனின் பெயர் சொல்லும், காவிரி இளைப்பாறும் கல்லணையில் வைத்து. நாவலைச் சென்ற மாதம் வெளியிடவும் செய்தேன்.

எழுத்து - படைப்பு இவற்றுடன் ஆசிரியராக கல்வி கற்பிப்பிப்பதையும் தாண்டி, மாணவிகளுக்கு கைத்தொழில் மற்றும் கணினி பயிற்சி கொடுத்து வருகிறேன். பட்டதாரி ஆசிரியராக பத்து ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உண்டு. தொடக்கத்தில் மதுரை மேலூரில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் எட்டு ஆண்டுகள் பணிபுரிந்தேன். நூறு பட்டி சேர்ந்த கிராமம்தான் மேலூர். படிக்கும் மாணவிகளோ வறுமை கோட்டிற்கும் கீழே உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பள்ளிப்படிப்பு முடிந்ததும் பகுதி நேர வேலையாக மாணவிகள் வருமானம் பெற கையில் மருதாணி டிசைன் போடுவது, ஆன்லைனில் மின்சார பில் கட்டுவது, மொபைல் ரீசார்ஜ் செய்வது, டிடிபியில் பிரிண்ட் எடுப்பது, வங்கிக் கணக்கு பேணுவது போன்றவற்றைச் சொல்லிக் கொடுத்தேன். இந்த சேவைகள்தான் எனக்கு "கனவு ஆசிரியர்' விருது கிடைக்கக் காரணமாக
அமைந்தன.

மாணவிகளுக்குத் தரப்பட்ட பயிற்சிகளில், மாணவிகளுக்கு கை கொடுப்பது மருதாணி கலைதான். கிராமங்களில் திருமணம் நடக்கும் போது, மணப்பெண்ணுக்கும், மணப்பெண் - மணமகன் வீடுகளைச் சேர்ந்த இளம் பெண்களுக்கும், மருதாணி போட்டுவிடுவது இன்றைய காலகட்டத்தில் முக்கிய சடங்காகவே மாறிவிட்டது.

ஒரு கைக்கு மருதாணி போட ஐநூறு கட்டணம் என்றாகிவிட்டது. மருதாணியில் கலைவண்ணம் போடுவதைக் கற்றுக் கொடுக்க திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைதூர படிப்பு மையத்தின் உதவியுடன் மாணவிகளுக்குப் பயிற்சி கொடுக்கச் செய்தேன். இதை அறிந்த அன்றைய தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் சபீதா பாராட்டு கடிதம் எழுதியிருந்தார்.

மேலூர் பகுதியில் டெங்கு காய்ச்சல் தாக்கி ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் இறந்து போனார்கள். மேலூரில் டெங்கு காய்ச்சல் எப்படி வந்தது? என்று கள ஆய்வில் நானும் மாணவர்களுடன் இறங்கி மக்களுக்கு உதவி செய்தேன். மேலூரில் மாணவிகளுக்குப் பாடத்திட்டத்துடன் வருமானம் ஈட்டும் பயிற்சியை வழங்கி வந்தது போல், இப்போது வேலை பார்க்கும் கும்பகோணத்தை அடுத்துள்ள தென்குவளைவேலி அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் வழங்கி வருகிறேன்'' என்கிறார் ஆதலையூர் சூரியகுமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com