தமிழகத்துக்கு பெருமை சேர்த்த வீரர்

சிலம்பம் பயின்றதன் மூலம் படிப்பிலும் என்னால் அதிக ஆர்வத்துடன் ஈடுபட முடிந்தது. போட்டிகளில் பங்கேற்று அதிக அளவில் வெற்றிகளைப்
தமிழகத்துக்கு பெருமை சேர்த்த வீரர்


கோவையைச் சேர்ந்த பிளஸ் 2  மாணவர் ஒருவர் தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியின் தனிப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

கோவை, புலியகுளம் அருகேயுள்ள கருப்பராயன் கோயில் வீதியைச் சேர்ந்த சகாயராஜ்- கீதா தம்பதியரின் மகன் அரவிந்த்ராஜ் .  இவர்  கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். 

அரவிந்த்ராஜின் சித்தப்பாவான அந்தோணிராஜ் அப்பகுதியில் பிரபல சிலம்ப பயிற்சியாளராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது பயிற்சி வகுப்புகளை சிறு வயதில் நேரில் காணச் செல்லும் அரவிந்த்ராஜ் அங்கிருக்கும் தடிகளை எடுத்து சுற்றி விளையாடியுள்ளார். அப்போது இவரைக் கவனித்த அந்தோணிராஜ், அரவிந்த்ராஜுக்கு இயல்பிலேயே சிலம்பம் சுற்றும் ஆர்வம் இருப்பதைக் கண்டறிந்து அவரை ஏழாம் வகுப்பில் இருந்து பயிற்சி அளித்து மெருகேற்றி வந்துள்ளார்.

தனது சிலம்ப ஆர்வம் குறித்து மாணவர் எஸ்.அரவிந்த்ராஜ் கூறுகையில், ""படிப்பு, விளையாட்டு என இரண்டிலும் எனது விருப்பத்தின்படி செயல்பட வீட்டில் பெற்றோர் முழு சுதந்திரம் அளித்துள்ளனர். வீட்டில் அப்பா, சித்தப்பா உள்ளிட்டோருக்கு சிலம்பம் தெரியும் என்ற காரணத்தினால் எனக்கும் அதன் மீது இயல்பிலேயே ஆர்வம் இருந்தது. இதைக் கண்டறிந்த அப்பாவும், சித்தப்பாவும் சிறு வயதிலேயே அடிப்படைப் பயிற்சிகளை அளித்தனர்.

சிலம்பம் பயின்றதன் மூலம் படிப்பிலும் என்னால் அதிக ஆர்வத்துடன் ஈடுபட முடிந்தது. போட்டிகளில் பங்கேற்று அதிக அளவில் வெற்றிகளைப் பெற்றதன் மூலம் என்னைப் பார்த்து என்னுடன் பயிலும் நண்பர்களும் சிலம்பம் கற்க ஆர்வம் தெரிவித்துள்ளனர். சர்வதேச அளவிலான  சிலம்பப் போட்டிகளில் பங்கேற்று உலக அரங்கில் தமிழர் பெருமையை நிலைநிறுத்த வேண்டும் என்பதே எனது ஒரே நோக்கம். பள்ளி அளவிலும் எனக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தலைமையாசிரியர் ஐ.ஆன்ட்ரூ மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்'' என்றார்.

இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் எதிர்பாராதவிதமாக அந்தோணிராஜ் உயிரிழந்தார். இதனால் ஏற்பட்ட மனசோர்வு காரணமாக சுமார் 6 மாதங்கள் வரை அரவிந்த்ராஜ் சிலம்பம் பயிலாமல் இருந்துள்ளார். பின்னர் தனது தந்தை அளித்த உத்வேகத்தின் காரணமாக மீண்டும் சிலம்பப் பயிற்சியைத் தொடங்கியுள்ளார். சகாயராஜுக்கும் சிலம்பம் தெரியும் என்பதால் அரவிந்த்ராஜை பயிற்றுவிப்பதில் அவருக்கு எவ்வித சிரமமும் இருக்கவில்லை.

மண்டல அளவு, மாவட்ட அளவிலான போட்டிகளைக் கடந்த அரவிந்த்ராஜ் அதில் பல பதக்கங்களை வென்றுள்ளார். இதையடுத்து மாநில அளவிலான 14 வயதுக்குள்பட்டோர் பிரிவு, 17 வயதுக்குள்பட்டோர் பிரிவுகளில் கடந்த நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து முதலிடம் பெற்றுள்ளார் அரவிந்த்ராஜ். இந்நிலையில் தேசிய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் ஜனவரியில் நடைபெற்றன. இதில் தமிழக அணி சார்பில் கலந்துகொள்பவர்களுக்கான தேர்வுப் போட்டிகள் தஞ்சாவூரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றன. இந்தப் போட்டியில் ஒற்றைக் கம்பு, இரட்டை கம்பு, வாள் வீச்சு, நேரடிச் சண்டை, வேல் கம்பு ஆகிய 5 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன. இதில் ஒற்றைக் கம்பு(தனி நபர் பிரிவு) பிரிவில் அரவிந்த்ராஜ் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

இதையடுத்து தேசிய அளவிலான போட்டிகளுக்கு தமிழக அணிக்கு அரவிந்த்ராஜ் தேர்வு செய்யப்பட்டார். 

school games federation of india எஸ்.ஜி.எஃப்.ஐ சார்பில் 65-ஆவது தேசிய பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் தில்லியில் ஜனவரி 3 முதல் 9 -ஆம் தேதி வரை ஒரு வார காலம் நடைபெற்றது. இதில் தமிழக அணி சார்பில் "ஒற்றைக் கம்பு வீச்சு' பிரிவில் பங்கேற்ற அரவிந்த்ராஜ் அதில் வெண்கலம் வென்று பெருமை சேர்த்துள்ளார். தற்போது அடுத்தடுத்த தேசிய போட்டிகள் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளுக்கு அரவிந்த்ராஜ் தயாராகி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com