திரை கொண்டாட்டம்

சினிமாவின் மேல் வெறும் ஆசையை மட்டும் கொள்ளாமல், அதைப் பற்றித் தீவிரமாகத் தெரிந்து கொண்டேன். ஆனால் சினிமா
திரை கொண்டாட்டம்

புதுமுகம் வர்மா
"தீரன் அதிகாரம் ஒன்று', "காளி', "தடம்', "இரும்புத்திரை' என அத்தனை படங்களிலும் கவனம் ஈர்த்திருக்கிறார் வர்மா. சினிமா மீதான ஆர்வத்தால் வங்கி வேலையை விட்டுவிட்டு சிரமம் ஏற்று சினிமாவுக்கு வந்தவர்... ""சினிமாவுக்கு சம்பந்தம் இல்லாத குடும்பம்.  ஆனால் படிப்பு முக்கியம் என அப்பாவும், அம்மாவும் சொன்னார்கள். அதற்காக படிப்பு, வங்கி வேலை...  அவ்வப்போது வருகிற படங்களின் பெரும் வெற்றி, அது தரும் உத்வேகம் இந்தப் பயணத் தொடக்கத்துக்கு பெரும் பலம். 

சினிமாவின் மேல் வெறும் ஆசையை மட்டும் கொள்ளாமல், அதைப் பற்றித் தீவிரமாகத் தெரிந்து கொண்டேன். ஆனால் சினிமா வாசலுக்கான திறவுகோல் என்னிடம் இல்லை. முதல் வாய்ப்பில் ஆயிரம் கஷ்டங்கள். ஒரு வழியாக ஏற்று நடித்த எல்லா கதாபாத்திரங்களும் நல்ல இடம் தந்தது. கமர்ஷியலாகவும் பெரும் வெற்றி, வசூல்.... நல்ல சினிமாவின் பக்கமும் நின்றது.  நல்ல சினிமாக்களின் பக்கம் நிற்க ஆசையாக இருக்கிறது. அடுத்து கதாநாயகனாக ஒரு படம் நடிக்கிறேன். இது என் வாழ்வின் அடுத்த படி'' என்றார் வர்மா. 

சினிமா கதை 
காது கேளாத பிறவி குறைபாடு உள்ள ஒரு பெண் முதன்மை பாடகியாக எவ்வாறு உருவாகிறாள், எப்படி உருவாக்கப்படுகிறாள் அதற்காக எத்தகைய பிரச்னைகளை எதிர்கொள்கிறாள் என்பதை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் படம் "மாருதம்'.

பவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஜீவா, அர்ஜூன், ரவி, ராமசாமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் இளமாறன்.

படம் குறித்து பேசும் போது.. ""சினிமா ஒரு மாயமான். சினிமா என்ற கனவின் மீது ஒவ்வொரு நாளும் எத்தனை கனவுகள் பொழிகின்றன. உழைப்பையும் மனசையும் மட்டுமே சுமந்து பெருநகரம் வரும் ஆயிரமாயிரம் இளைஞர்களின் கைகளில் ஆயிரமாயிரம் விளக்குகள். அணையாமல் உரிய இடத்தில் எரிவது எத்தனை. பாதியில் அணைந்து கருகியது எத்தனை என நினைக்கும் போது மனம் எங்கெங்கோ அலைகிறது. இதை ஒரு பின்னணி பாடகியின் வாழ்க்கையாக இங்கே சித்தரித்து இருக்கிறேன்'' என்றார்.

வில்லியான இஷா
தமிழ் சினிமாவில் வாய்ப்பு இல்லாத நடிகைகள் சமீபகாலமாகக் கேரக்டர் ரோல்களில் தொடர்ந்து நடித்து வருகின்றனர். அப்படி விஜய்க்கு ஹீரோயினாக நடித்த நடிகை ஒருவர் தற்போது சிவகார்த்திகேயனுக்கு வில்லியாக நடிக்கிறார். 

சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், கருணாகரன் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் "அயலான்'.  வேற்று கிரக வாசியாக ரோபோ கலந்த கதாபாத்திரத்தில் விஜய் உடன் "நெஞ்சினிலே' படத்தில் ஹீரோயினாக நடித்த இஷா கோபிகர் நடிக்க உள்ளார். 

புதிய சாதனை
"டேக் ஓகே'  சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் " மிரட்சி '.   ஜித்தன் ரமேஷ்,  ஷ்ரத்தா தாஸ், , சாய், சனா, நிக்கிதா அனில்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை எழுதி இப்படத்தை எம்.வி. கிருஷ்ணா இயக்குகிறார். 

படம் பற்றி இயக்குநர் பேசும் போது..... ""சைக்கோ த்ரில்லர் பாணி படமாக உருவாகி வருகிறது. இதுவரை வெளியான சைக்கோ த்ரில்லர் படங்கள் எல்லாமே ஒரே வரிசையில் இருக்கும். ஆனால்,  அது மாதிரி இல்லாமல் காதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளது. 
தன் காதலுக்கு எதிராக இருக்கும் அம்மாவை மீறி தன்னை உயிராக நேசிக்கும் நாயகனின் காதலை ஏற்க தன்னுள் மனப்போராட்டம் நடத்துகிறாள்.அந்த நிலையில் பெண்களைக் கடத்தி கொலை செய்யும் சைக்கோ கொலைகாரனிடம் மாட்டிக்கொள்கிறாள், இறுதியில் அவளுக்கு என்ன நேர்ந்தது என்பதே திரைக்கதை. 

கோவாவில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.  கிளைமாக்ஸ் காட்சிகளை மூன்று நாட்கள் 72 மணி நேரம் தொடர்ந்து படமாக்கியுள்ளோம். இது தமிழ் சினிமாவில் புதிய சாதனை. சென்னை, கோவாவில் படமாக்கப்பட்டுள்ளது'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com