ரோஜா மலரே!

நான் என்ன சொல்வது, செய்வது என்று தெரியாமல் மேடையில் நின்றிருந்த போது, அதே மேடையில் இருந்த  மாணவர்கள்,
ரோஜா மலரே!



அனைவரது முன்னிலையிலும் எனக்கு ஒரு பரிசு கொடுத்தார்கள்,  கலை உணர்வு மிக்க மாணவர்கள் எனக்குக் கொடுத்த பரிசு நான்கு தங்க வளையல்கள்!

நான் என்ன சொல்வது, செய்வது என்று தெரியாமல் மேடையில் நின்றிருந்த போது, அதே மேடையில் இருந்த  மாணவர்கள், “""எங்கள் பணத்தில் நாங்கள் உங்களுக்கு இதைத் தருகிறோம். தயவு செய்து வாங்கிக் கொள்ளுங்கள்''”, என்று சொன்னபோது மாணவர்கள் வைத்துள்ள அன்பை நினைத்து ஆனந்த கண்ணீர் வந்து விட்டது. ஆனால் மேடையில் அழக்கூடாது என்பதால் நான் என் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, அந்த வளையல்களை வாங்கிக் கொண்டேன். 

அதற்குப்பிறகு,  மாணவர்கள் என்றால் கூச்சல், கலாட்டா, கிண்டல், கும்மாளம் மட்டும் நிறைந்தவர்கள் என்று பலர் நினைப்பார்கள். ஆனால், இந்த மாணவர்கள் மிகவும் அன்பாக, எனக்குப் பரிசை கொடுத்து கெüரவித்திருக்கிறார்கள் என்று நினைத்த போது  மாணவர்கள் மீதுள்ள பலரின் விமர்சனம் முற்றிலுமாக மாறிவிட்டது. 

அந்த மாணவர்கள் மிகவும் கட்டுப்பாடாக நடந்து கொண்டார்கள். மாணவர்களின் அன்பை அவர்கள் நடந்து கொண்ட முறையில் நான் கண்கூடாகப் பார்த்தேன். இன்றும் அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரியை கடந்து சென்றால், எனக்குப் பழைய நினைவுகள் வந்து போகும். காரணம், அவர்கள் கொடுத்த அந்த தங்க வளையல்  என் குடும்பத்திற்கு ஒரு கட்டத்தில் மிகவும் உதவியது என்று அன்று நான் யாரிடமும் சொல்லவில்லை. பின்னரும் இந்தச் செய்தியை இவ்வளவு நாள் என் மனதின் ஆழத்தில் வைத்திருந்தேன். யாரிடமும் இது பற்றி மூச்சு கூட விடவில்லை. ஆனால் இன்று நான் உண்மையைக் கூற ஆசைப்படுகிறேன். 

அந்த தங்க வளையல்கள் எங்களுக்கு மிகவும் உதவிகரகமாக இருந்தது. மாடிலட்சுமி அக்கா மட்டும் அல்ல, எனக்கு இன்னொரு அக்காவும் உண்டு. அந்த அக்காவிற்குக் கல்யாணம் நிச்சயமாகி விட்டது. கல்யாண ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று கொண்டிருந்தது. கல்யாணத்திற்காக நாங்கள் சொன்ன அளவிற்கு எங்களால் பவுன் (தங்கம்) அன்று போட முடியவில்லை. இந்த விஷயம் எனக்குத் தெரியாது. யாரும் என்னிடம் சொல்லவும் இல்லை. 

நான் குழந்தை என்பதால் என்னிடம் சொல்லவில்லையோ என்னவோ? என்ன பண்ணுவது என்று தெரியாமல் அவர்கள் எல்லோரும் யோசனை செய்து கொண்டிருந்த போது ஒரு நாள், எங்கள் வீட்டின் வழக்கப்படி எல்லோரும் நடு ஹாலில் உட்கார்ந்து இருந்த வேளையில் இந்தப் பவுன் குறையும் விஷயத்தை என் அம்மா சொல்ல, மற்றவர்கள் பேசுவதற்கு முன் நான், எனக்கு என்று நான்கு வளையல் இருக்கு, அதை விற்று அக்காவுக்குக் கல்யாணம் பண்ணுங்க”, என்று அனைவர் முன்பும் சொன்னேன். எல்லோரும் என்னையே பார்த்தார்கள்.. என் அக்காவின் கல்யாணம்தான் எனக்கு முக்கியம் என்பதனால் நான் சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து  விட்டேன். யாரும் நான் இப்படிச் சொல்வேன் என்று எதிர்பார்க்கவில்லை. அதனால் அங்கு சிறிது நேரம் மெüனம் நிலவியது.  

அதே காலகட்டத்தில்தான் வேறு ஒரு நிகழ்ச்சியும் நடந்தது. எப்படி அமைச்சர் சி. சுப்ரமணியம் சொல்லி நாங்கள் கோவைக்குச் சென்று நடன நிகழ்ச்சி பங்கேற்றோமோ, அதே  போன்று அமைச்சர் சி.சுப்ரமணியம் சொல்லி வேறு ஒரு நிகழ்ச்சியும் நடந்தது. மத்திய அரசாங்கம் பண்டித ஜவஹர்லால் நேரு பிறந்த நாளன்று வெளியிட,  குழந்தைகள் நடிக்கும் படம் ஒன்றை தயாரிக்க முடிவு செய்து, அதை தமிழில் தயாரித்து இயக்குநர் கே.சுப்ரமணியத்திடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தது. 

அது மட்டும் அல்லாமல் மாநில அரசாங்கத்திடம், “"நீங்கள் 13 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை நடிக்க வையுங்கள். குறிப்பாக சினிமாவில் நடித்துப் புகழ் பெற்ற குழந்தைகள் என்றால் நன்றாக இருக்கும். நாங்கள் வட நாட்டில் இருந்து சில குழந்தைகளைச் சென்னைக்கு அனுப்பி வைக்கிறோம்”' என்றும் சொன்னார்கள். இங்குள்ள கோயில்கள், மற்றும் சில சுற்றுலா இடங்களை வைத்து ஸ்கிரிப்ட் ஒன்றை கதை வசனத்துடன் எழுதி தயாராக வைத்துக்கொண்டார்கள். இதில் முக்கியமானது, நமது நாட்டின் கலாசாரம், பண்பாடு பற்றி எல்லாம் சொல்ல வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்திருந்தார்கள். 

அதில் தென்னகத்தின் உள்ள பிரபலமான குழந்தை நட்சத்திரங்களை நடிக்க வையுங்கள்” என்று சொல்லி இருந்ததால், நான்தான் அமைச்சர் சி.சுப்ரமணியம் கண்களில் பளிச்சென்று தெரிந்தேன். அன்று நான் தான் பிரபலமாக இருந்த குழந்தை நட்சத்திரம் என்பதால் என் பெயரை முதலில் சொன்னது,  இவர்தான் என்று பின்னர் தான் எனக்குத் தெரிந்தது. 

அந்த இருவர் யார் தெரியுமா? அமைச்சர் சி.சுப்ரமணியம் மற்றும் இயக்குநர் கே.சுப்ரமணியம். இருவரும் என் பெயரையே சொல்ல எல்லோரும் ஒரு மனதாக ஒப்புக்கொண்டனர். இதில் நான் நடிக்கிறேன் என்றும், இப்படி ஒரு குறும்படம் தயாரிக்கப் போவதாக எனக்கு அமைச்சர் சி.எஸ்.தான் சொல்லி, என்னை நடிக்கச் சொன்னார். நான் உட்பட பல்வேறு குழந்தைகள் இந்தப் படத்தில் சந்தோஷமாக நடித்தோம். குறிப்பாக நாட்டியம் தெரிந்த குழந்தைகள் இதில் அதிகமாக இருந்தார்கள்.  

என்னைப் பொருத்தவரை இந்தப் படத்தில் நடிப்பது ஏதோ பள்ளியில் சுற்றுலா அழைத்துச் செல்வது போல் தான் இருந்தது. காரணம், எங்கள் எல்லோருக்கும் ஒரே பேருந்தில் தான் பயணம். நாங்கள் சென்ற இடங்கள் பலவற்றை குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால் வைகை அணை, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் போன்ற தமிழ் நாட்டின் பல்வேறு இடங்களைச் சொல்லலாம். அது மட்டும் இல்லாமல் சென்னையிலும் சூட்டிங் நடந்தது. குறிப்பாக மதுரையில் உள்ள புகழ் பெற்ற விழா அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா தான். இந்தக் காட்சியைப் படம் பிடிக்க வேண்டும் என்று முன் கூட்டியே முடிவு செய்து வைத்திருந்தார்கள். 

அந்தக் காட்சியில் குழந்தைகளை வைத்து படப்பிடிப்பு நடத்தத் தயார் செய்தார்கள். சித்திரை மாதம், உச்சி வெயில். எங்கள் எல்லோரையும் வாட்டி எடுத்து விட்டது. சித்திரை மாதத்தில்தான் திருவிழா நடக்கும் என்று எல்லோருக்கும் தெரிந்தது தான் என்றாலும், இவ்வளவு தகிக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. கோயில் உள்ளே படப்பிடிப்பை நடத்தி விட்டு வெளியே வந்தால், வெயில் கடுமையாக இருந்தது. குழந்தைகள் யாரும் செருப்பு போடாமல் ஒரு அடி கூட கீழே கால் வைக்க முடியவில்லை. கோயில் என்பதால் யாரும் செருப்புப் போடக்கூடாது என்று சட்டம். என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. முன்பே இந்தப் படப்பிடிப்பிற்கு அனுமதி வாங்கி இருந்தாலும், செருப்புப் போடாமல் எப்படி என்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றிருந்தோம்.

அதற்குள் அந்தப் படத்தின் தயாரிப்பு நிர்வாகி குழந்தைகள் செருப்பு போட்டுக் கொண்டு  செல்ல அனுமதியுடன் வந்தார்.  அதாவது சாமிக்கு மிகவும் நெருக்கமாக நிற்கும் குழந்தைகள் மட்டும் ஒரு சில நிமிடங்கள் செருப்பு போடாமல் இருக்க வேண்டும் என்றும் மற்ற குழந்தைகள் செருப்பு போட்டுக் கொண்டு வர அனுமதி தந்தார்கள். ஒரு பாதத்தின் மீது மறு பாதத்தை வைத்துக் கொண்டு நான் எப்படியோ அந்தக் காட்சியில் நடித்துச் சமாளித்தேன். 

இந்தப் படத்தில் நடித்ததால் எனக்கு ரெட்டிப்பு மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆமாம் உண்மையில் எனக்கு ரெண்டு சந்தோஷ நிகழ்வுகள் நடந்தது இன்றும் என் மனதில் நிழலாடுகின்றன. ஒன்று இந்தக் குறும்படத்தில் நடித்ததால் எனக்கு ஒரு பரிசும் கிடைத்தது.  பத்து ஆண்டில் முதிர்வு கொள்ளும் வகையில்  ஒரு தொகை  குறிப்பிட்டுப் பத்திரம் ஒன்றை பரிசாக அமைச்சர் சி.சுப்ரமணியம் மேடையில் எனக்கு வழங்கினார்.. மற்றொரு மிகப் பெரிய பரிசும் எனக்குக் கிடைத்தது. அது என்ன பரிசு?
(தொடரும்)          
சந்திப்பு: சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com