இசை நாட்டிய நாடகம்: நெகிழ வைத்த மாணவிகள்!

விடுமுறை தினமான ஞாயிறு 22.12.2019 அன்றும் ராஜா அண்ணாமலை மன்றம் முழுக்க இசைப்பிரியர்கள்,  தமிழ் ஆர்வலர்களால் நிரம்பி வழிந்தது. சங்கத்தமிழ் இசை நாட்டிய நாடகம் நடைபெறுவதைக் காண்பதற்குத்தான்
இசை நாட்டிய நாடகம்: நெகிழ வைத்த மாணவிகள்!

விடுமுறை தினமான ஞாயிறு 22.12.2019 அன்றும் ராஜா அண்ணாமலை மன்றம் முழுக்க இசைப்பிரியர்கள்,  தமிழ் ஆர்வலர்களால் நிரம்பி வழிந்தது. சங்கத்தமிழ் இசை நாட்டிய நாடகம் நடைபெறுவதைக் காண்பதற்குத்தான் இந்தக் கூட்டம். 

தமிழிசையின் தொன்மைகளில் ஒன்று சங்ககாலத் தமிழ் இலக்கியங்கள். பத்துப்பாட்டு எட்டுத்தொகையிலிருந்து குறிப்பிட்ட சில பாடல்களைத் தேர்வு செய்து பண்முறையில் இசைப்படுத்தி, நாடகமாக அரங்கேற்றியுள்ளனர், தமிழ் இசைக் கல்லூரி நாட்டியத்துறைச் சேர்ந்த 17 மாணவியர்.  

சங்ககால மன்னர்கள் தாங்கள் கண்ட வெற்றிக்குத் துணையாக இருந்த வீரர்களைப் போற்றும் வகையில் உண்டாட்டு விழா எடுப்பது வழக்கம். வீரன் ஒருவன் உண்டாட்டைத் தொடங்கி வைக்க மன்னன் முன் தங்கத் தாம்பாளத்தில் கள் மொந்தையை ஏந்தி வருகிறான். அப்போது மன்னன் அருகில் நிற்கும் அவ்வையார்  "நீ கொண்டாடும் இந்த வெற்றிக்குப் பெரிதும் காரணமாக இருந்த உன்னைக் காத்த பெருவீரன் இதோ நிற்கிறான். அவனுக்கு முதலில் கள்ளைக் கொடு. அவன் அருந்த இந்த உண்டாட்டு விழா தொடங்கட்டும்' என்கிறார். இப்படியாக வண்ணமயமாக முதல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. "காட்சிக்குரிய இவற்குஈந்து உண்மதி கள்ளே சினப்போர்' என்ற வியாழக்குறிஞ்சி பாடல் பாடப்பட்டது. 

மலை, அருவி, காடு, மரங்கள்-கொடிகள்- செடிகள் என இயற்கை அழகை பறைசாற்றின. வீரன் ஒருவன் காட்டிற்கு வருகிறான். அந்தப் பகுதியில் புலவர் ஒருவர் பாடிக்கொண்டு போவது போல் இரண்டாவது காட்சி இருந்தது. இதில் "மண் திணிந்த நிலனும்' என்ற சீகாமரம் பாடல் நாதநாமக்கிரியா ராகத்திலும், ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம் என்ற பழம்பஞ்சுரப் பண் சங்கராபரணம் ராகத்தில் பாடப்பட்டது.

தலைவனின் பசியறிந்து தலைவி சமையல் செய்கிறாள். அடுப்பில் எழும் புகையினால் கண் கசக்கி புடவையிலேயே கைத்துடைக்கிறாள். தலைவன் இதைக் காண்கிறான். அமுது படைக்கிறாள். இனிமையாக இருக்கிறதென்று மகிழ்ந்து உண்கிறான் தலைவன். கணவனின் புகழ்ச்சிக் கேட்டு முழு நிலவு போன்ற அவளின் முகம் ஒளி விடுகிறது. இதுவே நாடகத்தின் மூன்றாவது காட்சி.

வீரர்கள் போருக்குத் தயாராகும் காட்சி. வீரர்கள் களம் நோக்கி புறப்பட்டனர். நாட்கள் பல கடந்த நிலையில் தலைவனின் நிலை தெரியாமல் தவிக்கும் தலைவி, தலைவனின் தாய் இருக்கும் இல்லம் நோக்கி நடக்கிறாள். அவளின் வரவை உணர்ந்த தாய் தலைவியைச் சந்திக்கிறாள். தன் மகனைக் காணாமல் வருந்தி வந்துள்ளாள் என்பதை உணர்ந்த தாய், "புலி தங்கிய குகை போன்று என் வயிறு உள்ளது. வெளியேறிய புலி எங்குள்ளது என்பது எனக்குத் தெரியாது' என்கிறாள். நான்காவது காட்சியை மாணவியர் தத்துரூபமாக நடித்துக் காட்டினார்கள்.

எதிர் நாட்டு வீரர்களுடன் போரிடும் காட்சி. பகைவனின் வேல் ஒன்று மன்னன் மார்பு நோக்கி வருவதைப் பார்த்து விரைந்தோடி வந்த வேலை தன் மார்பில் தாங்குகிறான் வீரன். மண்ணில் வீழும் காட்சி ஐந்தாவது காட்சி இடம் பெற்றது.
போரில் ஏற்பட்ட காயத்தால் வலி தாங்காமல் துடிக்கிறான். "இவனைக் காப்பது நம் அனைவரின் கடமை. வாருங்கள். தோழியரே வாருங்கள். இலவு மரத்தின் இலை, வேப்பிலை கொண்டு வாருங்கள். யாழ், ஆம்பல் குழல் ஊதுங்கள், காஞ்சிப்பண் பாடுங்கள். வெண்சிறுகடுகு புகையுங்கள். மஞ்சள் நீர்த் தெளியுங்கள்' என தலைவி தலைவனைக் காப்பாற்ற முயற்சி செய்கிறாள். 

மன்னன் அவ்வையின் அறிவுரைப்படி தன்னையும், தன் நாட்டையும், தம் மொழியையும் காத்த வீரனுக்கு முதலில் மரியாதை செய்கிறான். அப்போது "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என கணியன் பூங்குன்றனார் பாடுகிறார். 

தாய் நாட்டையும், தாய் மொழியையும் காக்கும் வீர இளைஞர்கள் உள்ளவரை தமிழ்நாடு தன்னிகரில்லாத பெருமையுடைதாக உயர்ந்து நிற்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்ற இறுதி காட்சியுடன் நாடகம் நிறைவுபெற்றது. 

இந்த நாடகம் உருவாகக் காரணமாக இருந்த முன்னாள் துணை வேந்தர் மு. தங்கராசுவிடம் பேசினோம்."" நாடகமும், சங்கத்தமிழும் ஒன்றோடு ஒன்று இணைந்தது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த நாட்டிய நாடகத்தை உருவாக்கினோம். ஒரு போர் வீரன் எப்படி உருவாகிறான் என்பதை நாடகத்தின் காட்சிகள். இதற்காக புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை, குறிஞ்சிப்பாட்டு ஆகியவற்றிலிருந்து பாடல்கள் தேர்வு செய்து காட்சிகளை அமைத்தோம். இரண்டு வாரம் காலம் மாணவிகள் நாடகம் தொடர்பான பயிற்சிகளைச் சிறப்பான முறையில் மேற்கொண்டனர். அதுவே பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது'' என்றார்.

"" சங்க பாடல்களுக்கும் இசை அமைக்க முடியும் என்பதை நிறுவவும் இந்த முயற்சி மேற்கொண்டோம் அந்தவகையில்  சில பாடல்களையும் வரிகளையும் எடுத்து நாட்டியத்திற்கு ஏற்றவாறு அமைத்து, அவற்றைத் தொடர்ச்சியாக ஒரு சிறுகதை போன்று உருவாக்கினோம். தமிழ்மொழி, தமிழ் இனம், எத்தகைய பண்பாடு நாகரிக மேன்மை உடையது என்பதை இந்த நாட்டிய நாடகத்தின் வாயிலாகத் தெரியப்படுத்தினோம்.

இந்த நாட்டிய நாடகத்தில் தமிழர்களுடைய வீரமும் தெரியும், காதலும் தெரியும் இல்லறமும் இதில் காட்டப்பட்டிருக்கிறது. வீரர்கள் எவ்வாறு தாய் நாட்டினையும்,  தாய் மொழியையும் காப்பாற்றுகிறார்கள் என்பதையும் போரில் வீரன் மன்னருக்காகவும் நாட்டிற்கெனவும் போராடி விழுப்புண் பெற்றவுடன், அவனைச் சார்ந்தவர்கள் எல்லாம் அவனுக்கு எவ்வாறு உதவுகிறார்கள் என்பதையும் இந்த நாடகத்தின் வழி காட்டி இருக்கிறோம். காஞ்சிப்பண் பாடிய நோய் தணித்த முறையும், இசை மருத்துவ முறையும் கூடக் காட்டியது இதன் தனிச்சிறப்பு. மேலும் தாய்நாட்டையும் தாய்மொழியையும் காக்கும் வீர இளைஞர்கள் உள்ளவரை தமிழ்நாடு தன்னிகரில்லாத பெருமை உடையதாக உயர்ந்து நிற்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்பதையும் எடுத்துச் சொல்லியுள்ளோம். மேலும் நம் மொழியையும் இனத்தையும் காத்திடும் எங்களின் கதாநாயகன் போன்ற வீர தமிழன் இருக்கும் வரை இந்த இனத்தையும் மொழியையும் வீழ்த்த நினைக்கும் எவர் சூழ்ச்சியும் பலிக்காது என்பதையும் ஆணித்தரமாக எடுத்துக்காட்டியுள்ளோம். எங்களது மாணவிகள் பக்கபலமாக இருந்தார்கள்'' என்கிறார் தமிழ் இசைக்கல்லூரி முதல்வர் மீனாட்சி.   

""சங்கத்தமிழின் பெருமைகளைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள எங்களுக்கு இந்த முயற்சி நல்ல வாய்ப்பாக அமைந்தது. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பெருமைகளை உணர்ந்து நடித்தோம். இப்போதுள்ள இளையதலைமுறையைச் சேர்ந்த எங்களுக்குத் தமிழின் முக்கியத்துவம் என்ன என்பதையும், இசையின் முக்கியத்துவம் இந்த நாடகம் மூலமாகத் தெரிந்து கொண்டோம். நாங்கள் நடித்த ஏழு காட்சிகளும் இப்போதும் எங்கள் கண்முன் வந்து போகின்றன. இதில் நாங்கள் நடித்ததைப் பெருமையாகக் கருதுகிறோம். இனி எங்கள் கல்லூரியில் இது போன்ற நாட்டிய நாடகம் நடைபெற்றால் அதில் கண்டிப்பாகப் பங்கேற்று நடிப்போம்'' என்று மாணவிகள் கூறினார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com