தைவானின் தேசத் தந்தை

இந்தியாவின் தேசத் தந்தை யார் என்று கேட்டால், நாம் உடனேயே மகாத்மா காந்தி என்று சொல்லி விடுவோம்.
தைவானின் தேசத் தந்தை

இந்தியாவின் தேசத் தந்தை யார் என்று கேட்டால், நாம் உடனேயே மகாத்மா காந்தி என்று சொல்லி விடுவோம். அது போல தைவானின் தேசத் தந்தை என்றால் அது Sun Wen தான் என்று தைரியமாகச் சொல்லலாம். இவர் நாட்டுக்காக பல்வேறு துன்பங்களை அனுபவித்த மாமனிதர். தியாகச் செம்மல். அன்றிருந்த அரசுக்கு பயந்து தலைமறைவாக இருந்து, பல்வேறு நாடுகளுக்குச் சென்று தஞ்சமடைந்து, பின்னர் சீனாவிற்கும், தைவானுக்கும் திரும்பி வந்தார். இவரது இயற் பெயர் Sun wen தான் என்றாலும் இவருக்குப் பல்வேறு பெயர்கள் உள்ளன.

இவர் ஜப்பானில் தலைமறைவாக இருந்த போது இவரது பெயர் Topten Miyazaki. இப்படி இவர் ஏன் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறார் என்று பலரும் சிந்திக்கலாம். அதற்குக் காரணம் இவர் தன் நாட்டிற்கு விடுதலை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகப் பல பெயர்களில் இவர் வாழ்ந்துள்ளார். அது மட்டும் அல்ல, இவரது புகழைப் போற்றும் வகையில் பல்வேறு நாடுகளில் இவரது நினைவு இல்லங்கள் இன்றும் உள்ளன. அவை மலேசியா, சீனா, அமெரிக்க, கனடா, என்று சொல்லிக் கொண்டே போகலாம். அது மட்டுமல்லாமல் மகாத்மா காந்திஜியின் திரு உருவத்தை எப்படி நம் நாட்டு ரூபாய் நோட்டில் நாம் அச்சடித்து வைத்துள்ளோமோ, அது போல Sun Wen உருவத்தைத் தைவானின் 100 டாலர் பணத் தாளில் அச்சடித்து வைத்துள்ளார்கள்.

தனது 10 - ஆவது வயதில் இவர் ஹவாய் தீவில் உள்ள ஹானலூலு என்ற இடத்தில் படித்தார். பின்னர் ஹாங்காங்கில் மருத்துவம் படித்துத் தேர்ச்சி பெற்றார். மருத்துவத்துறையில் வேலை செய்யாமல் சீனாவின் மக்களுக்கு உழைக்க, முடிவு செய்தார். அந்த நேரத்தில் சில குழுக்கள் இவருடன் சேர்ந்தன. எல்லோரும் சேர்ந்து பிறகு இங்குள்ள ஆட்சியாளர்கள் இவரைத் தீவிரமாகத் தேடத் தொடங்கினர். அதனால் இவர் தப்பி ஓடி தங்ஸ்ண்ஸ்ங் Revive China Society என்ற அமைப்பை ஆரம்பித்தார். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு இவரை அரசு மீண்டும் தேடத் தொடங்கியது. அப்பொழுது இவர் ஜப்பானில் தஞ்சம் புகுந்தார். இவர் ஜப்பானில் மட்டும் தஞ்சம் அடையவில்லை. ஐரோப்பியாவிலும், அமெரிக்காவிலும், கனடாவிலும் இவர் யாருக்கும் தெரியாமல் பல ஆண்டுகள் வாழ்ந்து வந்திருக்கிறார்.

பல்வேறு போராட்டங்களுக்கு இடையில், பல ஆண்டுகளுக்குப் பின்னரே, இவரால் தனது நாட்டிற்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுக்க முடிந்தது. இவர்தான் முதல் ஜனாதிபதியாக இருந்தார். பின்னர் இவர் உடல் நிலையில் கவனம் செலுத்தாமல் விட்டதால் கல்லீரல் புற்றுநோய் அவரைத் தாக்கியது.

சீனாவிலும் பெரிய பெயரோடு வாழ்ந்த இவர். தைவானில் தேசத் தந்தை என்று புகழப்படுகிறார்.

இவரது நினைவைப் போற்றும் வகையில் ஓர் அழகிய மண்டபத்தில் இவர் உபயோகப்படுத்திய பல்வேறு பொருள்கள் எல்லாம் வைக்கப்பட்டு, அத்துடன் அவரது வாழ்க்கை வரலாற்றைப் படங்களுடன் வரைந்து ஒரு கண்காட்சியை ஏற்படுத்தி உள்ளார்கள். தைபெய் திரைப்படவிழா நிறைவு நாள் பரிசளிப்புக் கூட்டம் இங்குள்ள அரங்கத்தில் தான் விமரிசையாக நடைபெற்றது. "நாம் ஒரு நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தைப் பார்க்கலாமா என்று கேட்டார்' சிம்பியா. "நான் தயார்' என்று பச்சை கொடி காட்டியவுடன், "வாருங்கள்' என்று என்னை அழைத்துக் கொண்டு வேகமாக நடக்கத் தொடங்கினார்.

அங்குள்ள நாற்சந்தியைக் கடந்த பொழுது அங்கு ஓர் அழகான கட்டடம் இருந்தது. அதைச் சுற்றியும் பச்சை பசேல் என்று சிறிய செடி கொடிகள் மேலே எல்லாம் படர்ந்திருந்தன. “இப்படிப் பெரிய நிலம் எங்களுக்குக் கிடைத்தால் அதில் இப்படித்தான் நாங்கள் பச்சை செடிகளை வளர்த்து விடுவோம். இந்த நான்கு சாலைகள் சந்திக்கும் இடமெல்லாம் இப்படி அழகாக ஒரு கட்டடம் எழுப்பப்படும். நம் நாட்டில் ஒரு சிலை இருக்கும். அங்கு அப்படி இல்லாமல் ஒரு அழகான கட்டடம் இருக்கிறது. அங்கிருந்த ஒரு பார்க்குக்கு அழைத்துச் சென்றார். அது மிகவும் முக்கியமான பூங்கா என்று குறிப்பிட்டு சொன்னார் எஸ்தர். அந்தப் பூங்கா ஜனாதிபதி மாளிகைக்கு நேர் எதிரே இருந்தது.

இந்தப் பூங்காவுக்கு "228 சமாதான நினைவு பூங்கா' என்று பெயர். இந்த 228 எதைக் குறிக்கிறது என்று நீங்கள் யோசித்தாலும் நீங்கள் கண்டிப்பாகக் கண்டு பிடிக்கவே முடியாது. முயன்று பாருங்கள், அதற்குள் இந்தப் பூங்காவை பற்றிச் சில செய்திகள். இந்தப் பூங்கா 1900- ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்பொழுது ஜப்பானின் வசம் தைவான் இருந்தது. அன்று இந்தப் பூங்காவினுள்ளே ஒரு வானொலி நிலையமும் இருந்தது. ஆனால், ஜப்பான் 1945 -ஆம் ஆண்டு தைவானை பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு சீனாவிடம் ஒப்படைத்தது. அப்பொழுது அந்தப் பூங்காவிற்கு "தைபெய் புதிய பூங்கா' என்று பெயரிட்டனர்.

அங்கே இருந்த வானொலி நிலையமும் Taiwan Broadcasting Company என்று பெயர் பெற்றது. அதைத் தொடர்ந்து 1947 -ஆம் ஆண்டு சில எதிர்ப்பாளர்கள் காவல் துறையினரின் அராஜக போக்கைக் கண்டித்து இந்த வானொலி நிலையத்தில் நுழைந்தனர். இதற்குக் காரணம் தைவான் மக்களை அந்தக் காவல் துறையினர் அடித்துத் துன்புறுத்தியதை கண்டிக்கத்தான். அந்த எதிர்ப்பாளர்களின் வசம் வானொலி நிலையம் மாட்டிக் கொண்டது. பல்வேறு பிரச்னைகள் இந்த நேரத்தில்தான் எழுந்தது. இந்தக் காலகட்டத்தைதான் Chinese Civil War அல்லது Taiwan's Period of White Terror என்று அழைத்தார்கள். அங்கிருந்த வானொலி நிலையத்தை Broadcasting Corporation of China (BCC). என்று மறு பெயரிட்டு அழைத்தார்கள். தைவான் அரசு இந்தப் போராட்டங்களுக்குப் பிறகு பூங்காவையும், வானொலி நிலையத்தையும் தன்னகத்தே எடுத்துக் கொண்டது.

அன்று இருந்த ஜனாதிபதி Lee Teng hui மக்களிடம் பொது மன்னிப்புக் கேட்டார். அரசும் அந்த இடத்தைச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அறிவித்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து அந்த வானொலி நிலையம் இருந்த இடம் 228 Memorial Museum என்றும் பூங்கா மறுபடியும் "228 Peace Memorial Park' என்றும் மறு பெயர் கிடைத்தது. எப்படி இந்தப் பெயர் கிடைத்தது என்று இப்பொழுது உங்களுக்குத் தெரிந்திருக்குமே?

போராட்ட காலம் நடைபெற்றது 1947 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 -ஆம் தேதி. அந்தக் காலத்தைச் சுருக்கி 228 "அமைதி நினைவுப் பூங்கா' மற்றும் "228 நினைவு அருங்காட்சியகம்' அதாவது பிப்ரவரி மாதம் வருடத்தில் 2 -ஆம் மாதம், நடந்த நாள் 28 ஆக இதை எல்லாம் சுருக்கி 228 என்று வைத்து அந்த பூங்காவையும், நினைவு அருங்காட்சியகத்தையும் அழைக்கிறார்கள். இதில் சிறப்பு என்னவென்றால் ஜனாதிபதி மாளிகைக்கு நேர் எதிரேதான் இந்த இடம் இருந்தது. நான் சென்ற போது யாருமே இல்லை வெறிச்சோடிகிடந்தது.

அங்கிருந்து மெல்ல நடந்து நான் தங்கி இருக்கும் "அம்பா' ஓட்டலுக்குச் செல்ல முடிவு செய்து நடக்கத் தொடங்கினேன். அப்பொழுது எஸ்தர் என்னிடம் சில கேள்விகள் கேட்டார்.

நீங்கள் பத்திரிகையாளர்தானே?

உங்களுக்கும் எழுத்துக்கும் சம்பந்தம் இருக்கு இல்லையா? நான் அவருக்கு விடை சொல்லும் முன்னே சின்பியா என்னிடம் நெருங்கி வந்து, “"படிப்பதும் எழுதுவதும் தான் உங்கள் தொழில் என்று எனக்குத் தெரியும். நீங்கள் இந்தி மொழியில் எழுதுவீர்களா?' என்று ஆவலோடு கேட்க, நான் அவர்களுக்கு நம் தமிழின் தொன்மை, வளமை, செழுமையுடன், எப்படித் தமிழில் பல்வேறு புதுமைகளையும் செய்ய முடியும் என்று தமிழ் மொழியின் சிறப்பை ஒரு குட்டி சொற்பொழிவு நிகழ்த்தி இருவருக்கும் சொன்னேன்.

அது மட்டுமல்லாமல் உலகின் முதல் மொழி தமிழ் தான் என்று நான் சொன்னபோது அவர்கள் இருவரும் மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். நடந்து கொண்டே இவ்வளவையும் பேசிக்கொண்டே வந்ததால், எனக்கு நேரம் போனதே தெரியவில்லை. ஆனால், அவர்கள் இருவரும் நாங்கள் கேட்ட கேள்விக்கு விடை இதுதான் என்று ஒரு பெரிய கட்டடத்தைக் காண்பித்தார்கள். அது என்ன என்று நெருங்கிப் பார்த்தால் தான் எனக்கே தெரிந்தது. எனக்கு மிகவும் தேவையான இடம் மட்டும் அல்ல, பிடித்த இடமும்தான் என்று.. அது என்ன?

(தொடரும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com