அரங்கேற்றம் வேண்டுமா- வேண்டாமா? 

கிருஷ்ண கான சபாவின் 39-ஆவது நாட்டிய கலா மாநாடு 5 நாட்கள் அவர்களது அரங்கில் சிறப்பாக நடைப்பெற்றது.
அரங்கேற்றம் வேண்டுமா- வேண்டாமா? 

கிருஷ்ண கான சபாவின் 39-ஆவது நாட்டிய கலா மாநாடு 5 நாட்கள் அவர்களது அரங்கில் சிறப்பாக நடைப்பெற்றது. ஒவ்வொரு நாளும் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருந்தது. அதைஅழகாக அமைத்து இருந்தார்கள் அதன் செயலாளர் ஒய். பிரபுவும், நிர்வாகி சாஸ்வதி பிரபுவும். இதை தொகுத்தளித்தவர் ரமா வைத்தியநாதன். அதிலிருந்து ஒரு பகுதி இங்கே:

நடனம் கற்றுக்கொடுக்கும் குருமார்களிடம் கேட்கப்பட்ட கேள்வி: அரகேற்றம் வேண்டுமா வேண்டாமா?

சித்ரா விஸ்வேஸ்வரன் (தலைமை):

சிலப்பதிகாரத்திலேயே அரங்கேற்ற காதையிலே 11 வகை கூத்துகள் உள்ளன. அரங்கேற்ற திற்கு எப்படிபட்ட ஓர் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று இதன் மூலம் எல்லாருக்கும் தெரியும். பிரமாண்டமாக அரங்கேற்றம் செய்யலாம் அல்லது சிறு கோயிலிலும் அரங்கேற்றத்தை நடத்தலாம்.

நான் கொல்கத்தாவில்தான் சிறுவயதில் வளர்ந்தேன். இன்னும் சொல்லப் போனால் என்னுடைய அரங்கேற்றம் நடந்ததும் அங்கு தான். என்னுடைய குரு, பத்து மாதத்திற்கு பிறகு எனது பெற்றோரிடம் அரங்கேற்றம் பண்ணலாம் என்று சொன்னபோது, நாங்களும் சரி என்றோம்.

இன்று நீங்கள், நடனம் என்ன உங்களுக்கு கொடுத்தது? என்று கேட்கலாம். அன்று மட்டும் அல்ல இன்றும் எனக்கு எல்லாமே நடனம் தான். அன்றும் சரி இன்றும் சரி, நடனம் தான் என் வாழ்க்கை என்று வாழ்ந்து வருகிறேன்.

சாப்பாடு, வெளியே உள்ளே என்று எதை பார்த்தாலும், எங்கு இருந்தாலும் நடனம் தான் எனக்கு தெரியும். இன்று என்னிடம் வரும் பெற்றோர் ""எப்போது அரங்கேற்றம் வைத்து கொள்ளலாம்'' என்று என்னிடம் கேட்பதில்லை. அப்படி அவர்கள் கேட்டால். ""நான் பணிவாக போய் வருகிறீர்களா?'' என்று வாசற் கதவை காண்பித்து விடுவேன். ஆனால் அதெல்லாம் நடந்து முடிந்த கதை. இன்று நிலைமையே மாறிவிட்டது. அரங்கேற்றம் என்பது சமூகத்தில் வழக்கமாகி கொண்டு வருகிறது. அது எல்லோரும் கூடும் இடமாக மாறிவிட்டது. அரங்கேற்றம் வேண்டுமா, வேண்டாமா, சரியா, தவறா என்று யாரும் இங்கு முடிவு சொல்லப் போவதில்லை. நமது கருத்துகளை நாம் தைரியமாக சொல்ல ஒரு மேடை என்று மட்டும் இதை நான் பார்க்கிறேன்.

ரத்தன பாப்பா குமார்:

நான் அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் நகரில் இருந்து வந்துள்ளேன். அரங்கேற்றம் என்பது பல விஷயங்களை உள்ளடக்கியது. பல ஆண்டுகளாக, தங்கள் குழந்தைகள் கற்று வந்த நடனக்கலையை வெளிக்காட்டும் விதமாக அரங்கேற்றம் நடத்தப்படுகிறது. இன்றைய தேதியில் பல்கலைக்கழகங்களில் கூட extra curricular activities - இல் நடனம் என்று சொன்னால் அரங்கேற்றம் ஆகிவிட்டதா என்று தான் கேட்கிறார்கள். பெற்றோரும் இது முக்கியம் என்று நினைக்கும் அளவிற்கு அமெரிக்காவில் பார்க்கப்படுகிறது.

தீபக் மஜூம்தார்:

நான் நடனம் கற்றுக் கொண்ட பிறகு அரங்கேற்றம் செய்யவில்லை. முதலில் நான் மேடையில் நடனம் ஆடும் போது சுமார் 13 பாடல்களுக்கு ஆடினேன். இரண்டு முறை இடைவேளை விட்டேன். ஒரு இடைவேளை சிறியது. அடுத்த இடை வேளை பெரியது. இன்று அரங்கேற்றம் ஒரு சமூகக் கட்டாயமாகப் பார்க்கப்படுகிறது. அன்று அப்படி இல்லை. சாஸ்திரத்தில் கூட அரங்கேற்றம் தேவை என்று சொல்லப் படவில்லை. ஆத்மார்த்தமாக, உள்ளுணர்வுடன், சரியாக எதை செய்தாலும், அதன் மூலம் பார்க்கும் மக்களை உங்களுடன் அழைத்துச் செல்ல முடியும் என்று நான் நினைக்கிறேன். என்னைப் பொருத்தவரை ஒரு குழந்தைக்கு ஒரு பெற்றோர்தான் இருக்கமுடியும். அதைப்போல ஒரு குருவைத் தேர்ந்தெடுங்கள், அவர் சொல்வதை முழுமையாகக் கேட்டு உழையுங்கள். உயர்வு பெறுவீர்கள் என்பதை வலியுறுத்துகிறேன்.

டாக்டர். சரோஜா வைத்தியநாதன்:

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வந்த குரு சிஷ்ய பரம்பரையைப் பின்பற்றி நான் நடப்பவள். இன்று பலர் கேட்கும் கேள்வி அரங்கேற்றம் தேவையா என்பது. ஏனென்றால் இன்று பல மாணவர்கள் நடனத்தைச் சில மாதங்களே கற்றுக் கொண்டு எல்லாமும் தெரிந்து கொண்டு விட்டேன் என்று கூறுகிறார்கள்.ஆனால் "அடவு' முதல் "தில்லானா' வரை தெரிந்து கொள்ள அவரவர்கள் திறமையைப் பொருத்தவரை, சில வருடங்கள் ஆகலாம். இதை எல்லாம் திறமையாக ஆட அரங்கேற்றம் இருந்தால் தான் அது நிறைவு பெறும் என்று நான் நினைக்கிறேன். காரணம் நான் குரு சிஷ்ய பரம்பரையில் இருந்து வந்தவள் என்பதனால்!

லீலா சாம்ஸன்:

அரங்கேற்றம் தேவையில்லை என்று சொல்வதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஒன்று அதற்காகும் பணச் செலவு அமெரிக்காவில் 75,000 டாலர்கள் ஆகிறது. அதே அளவு பணம் இங்கேயும் செலவாகிறது என்று கூறலாம். கலாஷேத்ரா ருக்மணி தேவி அருண்டேல் ஒரு முறை கேட்டாராம்,. "அரங்கேற்றம் தேவையா'? என்று. இன்று இருக்கும் நிலையில் அதையே நாமும் கேட்கலாம் என்று நான் நினைக்கிறேன். அதில் எந்த விதமான தப்பும் இல்லை. மேடையிலும் சரி அரங்கத்திலும் சரி, பல்வேறு நாட்டிய குருக்கள் இருக்கிறார்கள், அவர்கள் எல்லோரையும் என் குடும்பமாகப் பார்க்கிறேன். அரங்கேற்றம் நடக்கும் போது என்னை அழைத்தால், நான் குற்ற உணர்வுடன் போகிறேன். அதற்கு, காரணங்கள் பல. அதனால்தான் நான் அரங்கேற்றம் வேண்டாம் என்று கூறுகிறேன்.

ஷீலா உன்னிகிருஷ்ணன்:

நான் நடனம் ஆட வேண்டும் என்று என் பெற்றோர் விரும்பினார்கள். எனது குரு “அரங்கேற்றம் ஆனால்தான் மேடையில் ஆடவைப்பேன் என்ற கண்டிஷனோடு என்னை சிஷ்யையாக ஏற்றுக் கொண்டார். ஒரு வருடம் முடிந்த பிறகு அரங்கேற்றம் நடந்தது. பிறகு வேம்பட்டி சின்ன சத்யத்திடம் நான் குச்சுப்புடி நடனம் கற்றக் கொள்ள ஆரம்பித்தேன். ஒரு நாள் திடீர் என்று ஒரு புரோகிராமில் ஆட சொன்னார்கள். நான் சலங்கை பூஜை கூட ஆகவில்லையே மாஸ்டர் என்று சொன்னேன். அதெல்லாம் பரவாயில்லை என்று சொல்லி ஆட வைத்தார்கள். அது போல வேறு ஒரு நிழ்ச்சியில் ஆட சொன்ன பொழுது, இன்னும் அரங்கேற்றம் ஆகவில்லை என்று சொன்னேன். அது தேவை இல்லை என்று சொன்னார்கள். அரங்கேற்றம் நடத்த வேண்டும் என்றால் மாஸ்டரே தேர்ந்தெடுத்து, அவரே செலவு செய்து அரங்கேற்றம் செய்வார். இதைப் பார்த்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பரத நாட்டியத்திற்கும், குச்சுப்புடிக்கும் இவ்வளவு வித்தியாசம் இருக்கிறதா என்று நான் நினைத்தேன். என்னிடம் வரும் குழந்தைகள் எல்லாம் மிகவும் சிறிய குழந்தைகள். அவர்களுக்கு அரங்கேற்றம் ஒரு பெரிய விஷயம். "அரங்கேற்றம்' என்ற சொல்லுக்கே ஒரு பவர் இருக்கு. இந்தச் சொல்லுக்காக இவர்கள் எக்ஸ்ட்ரா எஃபர்ட் போடுவார்கள். இது மட்டும் அல்லாமல் குரு-சிஷ்யை என்ற ஒரு bonding உருவாகும். இதை எல்லாம் பார்க்கும் போது எனக்கு அரங்கேற்றம் தேவை என்றே தோன்றுகிறது.

சுஜாதா ராமலிங்கம்:

நான் கொல்கத்தாவிலிருந்து வருகிறேன். எங்கள் ஊரில் அரங்கேற்றம் என்று ஒன்று கிடையாது. அப்படியே யாருக்காவது செய்ய வேண்டும் என்றால் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நடைபெறும். பெங்காலில் அரங்கேற்றம் செய்வதை அவர்கள் ஊக்கபடுத்துவது கிடையாது. அதே போன்று தான் நானும். எனது மாணவிகளும் (சுமார் 200-300) இங்கு வந்து சொன்னாலும், அரங்கேற்றம் ஆன மாணவிகளுக்கு நிகராக அவர்களும் சரியாக, நிறைவாக ஆடுவார்கள். அரங்கேற்றம் என்றால் என்னவெல்லாம் சொல்லிக்கொடுப்பார்களோ அதையே அவர்களுக்கு நானும் சொல்லிக் கொடுக்கிறேன். எத்தவிதத்திலும் குறையில்லாமல், நிறைவாக நான் அவர்களுக்கு எனக்குத் தெரிந்ததை எல்லாம் சொல்லிக் கொடுக்கிறேன். அதுவே எனக்குச் சந்தோஷம் என்று கூறலாம்.

மீனாட்சி சித்தரஞ்சன்:

இந்தக் கலந்துரையாடலுக்கு ஆங்கிலத்தில் Boon or bane என்ற பெயர் வைத்துள்ளார்கள். என்னைக் கேட்டால் அரங்கேற்றம் என்ற சொல்லே ஆங்கிலத்தில் சொல்வது போல் "புத்திசாலிதனம்' என்று கூடச் சொல்லலாம். ஆங்கிலத்திலேயே சொல்வதாக இருந்தால் Boon Bane என்று இரண்டையும் சொல்வேன். Boon என்றால் அத்துடன் ஒரு Pain இதனுடன் இணைகிறது. அதே போல் bane என்று சொன்னால் pleasureருடன் நாம் இதைச் செய்கிறோம் என்று கூறலாம்.

நடனம் என்பது ஒரு விஷுவல் கலை. நம் முன்னே நிகழும் கலை. இதற்கு ஒரு மேடை தேவை, தனியாக ஆடவேண்டும். வேடிக்கையாகச் சொல்வதானால் இந்தச் சொல்லுக்கு ஆங்கிலத்தில் Happily married என்று சொல்லலாம். நான் 35 வருடங்களுக்கு மேலாக நடனத்தை எனது மாணவிகளுக்குக் கற்றுக் கொடுத்து வருகிறேன். 6-7 வயதில் இருந்து எனது மாணவிகள் சுமார் 6 வருடங்கள் என்னிடம் பயில்கிறார்கள். மற்ற இடங்களில் எப்படியோ எனக்குத் தெரியாது-இந்தச் சிறிய வயதில் மாணவிகள் அரங்கேற்றம் என்ற சொல்லை நான் சொன்னவுடனேயே அவர்கள் கண்களில் ஓர் ஒளி, உத்வேகம், ஆனந்தம் ஏற்படுகிறது. முன்பு இருந்ததை விட உற்சாகத்தோடு அவர்கள் மேலும் கற்றுக் கொண்டு ஆடுகிறார்கள். அதனால் எனக்கு அரங்கேற்றம் இருந்தாலும் சரி, இல்லாமல் இருந்தாலும் சரி நான் சொல்லிக் கொடுக்கும் முறை எப்போதும் ஒரே மாதிரியாகதான் இருக்கும்.

டாக்டர்.பத்மஜா சுரேஷ்:

என்னுடைய "அரங்கேற்றம்' எனக்குப் பரிசாகக் கிடைத்தது. எந்தவிதமான பணமும் கைமாறவில்லை. எனது குரு எனக்குக் கொடுத்தது போல நான் எனது சிஷ்யர்களுக்கும் கொடுக்க ஆசைப்படுகிறேன். எனது சிஷ்யைகள் பலரும் இலவசமாகக் கற்றுக் கொண்டு, பல்வேறு பிரமுகர்கள் முன்பாக ஆடி இருக்கிறார்கள். உதாரணமாக மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர்.அப்துல் கலாம் முன்னும் ஆடி, பாராட்டுப் பெற்றிருக்கிறார்கள். அதில் இரண்டு மாணவிகள் எந்த விதமான பணமும் கொடுக்காமல் தங்களது அரங்கேற்றத்தை சந்தோஷமாக நடத்தியிருக்கிறார்கள். அந்த மாணவிகள் அரசாங்க பள்ளியில் இருந்து வந்தவர்கள். நமது சாஸ்திரத்தின் படி எந்த ஒரு குருவும் நடன அறிவை (knowledge) சொல்லிக் கொடுக்க மறுக்கக் கூடாது. இந்தப் பரம்பரையில் நடன குருவை "ஆச்சார்யா' என்று அழைப்பார்கள்.

அந்த ஆச்சார்யாவிற்கு ஆச்சாரம் தேவை. அந்த ஆச்சார்யா "நிஷ்காம்ய கர்மம்' என்று சொல்பவர்கள். யார் ஒருவர் பணம் வாங்குகிறார்களோ அவர் "உபாத்யாயா' என்று கூறுவார்கள். வருவாய் மிகக் குறைவாக உள்ள குடும்பத்தில் இருந்து வரும் குழந்தை கொடுக்கும் தக்ஷிணையை நாம் தொடவே கூடாது. அப்படித் தொட்டால் பிரம ரட்ஷக என்பது போய், பிரம்ம ராக்க்ஷஷியாக மாறிவிடுவார்கள். இன்றைய காலகட்டத்தில் நாட்டிய சாஸ்திரம் 36 chapters படித்து, அதை உள்ளடக்கிய நடனத்திலும் தேர்ச்சி பெற்ற பிறகே வேண்டுமானால் அரங்கேற்றம் செய்யச் சொல்லலாம். தியரி, பிராக்டிகல் இரண்டிலும் தேர்ச்சி பெற்ற பின் அரங்கேற்றம் எதற்கு?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com