விதைகளே பேராயுதம்!

"அதிகாரமும், உலகமயமாக்கலின் போதையும் நிரம்பிய மனித மனங்களுக்கிடையே மனசாட்சியுடன் செயல்பட முயற்சிக்கும் ஒரு மனிதனின் ஊசலாட்டம், கையறுநிலை என
விதைகளே பேராயுதம்!

"அதிகாரமும், உலகமயமாக்கலின் போதையும் நிரம்பிய மனித மனங்களுக்கிடையே மனசாட்சியுடன் செயல்பட முயற்சிக்கும் ஒரு மனிதனின் ஊசலாட்டம், கையறுநிலை என குற்ற உணர்ச்சி நிறைந்த மனசாட்சிதான் கதை. விவசாயம், கிராமம், தமிழ் கலாசாரத்தின் முகம், காதல், குடும்பம், அனுபவங்கள்தான் படம். பணம், பொருள் தாண்டி அன்பும் பரிவும்தான் நிரந்தரம் என்பதைக் காட்சிகளின் வழியாக நின்று பேசியிருக்கிறேன். விவசாயம்தான் இங்கே எல்லாவற்றுக்கும் ஆதாரம். ஏமாற்றிப் பிழைக்காதவர்கள், சுய நலமாகச் சிந்திக்காதவர்கள், பொய் முகம் காட்டி புன்னகைக்காதவர்கள் விவசாயிகள். இந்த உலகம் கொடுத்த வாழ்வை அதன் வழியாக நின்று மற்றவர்களின் தேவையைப் பூர்த்தி செய்கிற கடவுள். வலியை, வாழ்வை தற்காலச் சூழலில் பயணத்தில் பதிவு செய்கிறேன்'' ஆழ்ந்து பேசத் தொடங்குகிறார் இயக்குநர் பி.எல். பொன்னி மோகன். "வாழ்க விவசாயி' படத்தின் இயக்குநர்.
 விவசாய வேதனைகளைப் பதிவு செய்யும் போது.... வாழ்க விவசாயி என தலைப்பு.... முரணாக தெரிகிறதே....
 ஆமாம்... வாழ்க விவசாயி என கோஷம் போட்டே ஆக வேண்டிய சூழலில் இருக்கிறோம். அதன் வெளிப்பாடாகத்தான் இந்தத் தலைப்பு. இலக்குகளுடன் சென்னைக்கு வந்த காலத்திலிருந்து விவசாயத்தின் தேவையை உணர்ந்தே இருக்கிறேன். ஒரு வாய் சாப்பாடு... அம்மாவை, அப்பாவை, காதலியை, இழந்ததை, தவறுகளை, லட்சியத்தை... எதை எதையோ நினைவுப்படுத்தியிருக்கிறது. பசி ஏற்படுத்தும் அவமானத்தையும் வலியையும் விட வலியது வேறு இல்லை.
 பசியைத் தீர்ப்பது ஒரே கனிதான். ஆனால், அதற்காக நாம் கடப்பது ஒரு வனம். பசியும் ஆசையும் உயிர்களை ஒரே பாதையில் துரத்திக் கொண்டே இருப்பது ஏன்... என்ற கேள்விதான் அவ்வப்போது பிரதானமாக எழும். சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் தமிழினம் போர்ச் சூழல் இல்லாமல் வாழ்ந்ததற்கு விவசாயமே அடிப்படை. உலகின் ஆதி இனம்... விதைத்து, அறுத்து, உழைத்துத் தின்னும் கலாசாரத்தை உருவாக்கிய இனத்தை... நிலம் இழந்த துயரப் பரப்புகளில், பசியின் உதிரம் பெருகப் பெருக அலைய விட்ட வரலாற்றை எந்தச் சாபம் தண்டிக்கப் போகிறது. இந்தக் கதைக்கு எது உண்மையோ, எது நேர்மையோ... அவ்வளவுதான் படம்.
 இதன் அடித்தளம் எப்படியிருக்கும்....
 ஆயிரமாயிரம் ஆண்டுகளாக விவசாயக் கட்டமைப்புகுள் வாழும் நாடு இந்தியாதான். உலகத்திலேயே தலை சிறந்த விவசாய நாடு என மெச்சி கொள்கிறோம். இங்கே எங்கே இருக்கிறது விவசாயம். நவ யுகத்துக்குள் நுழைந்து விட்டதாகப் பெருமை பேசிக் கொள்ளும் அதே நேரத்தில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு விவசாய தற்கொலைகள் தமிழகத்தில் நடந்தேறி வருகின்றன. இதை எதன் அடிப்படையில் இங்கே பேசுவது. அரசு, முதலாளித்துவம் என எல்லாமே இதற்குக் காரணம்.
 ஒரு வகையில் ஆதிக்கத் தற்கொலை எனக் கூடச் சொல்லலாம். இதன் பின்னால் உள்ள கதைகள் கூடும்போது, இன்னும் அதிர்ச்சிகள். ஏன் இத்தனை தற்கொலைகள்...? ஒரே காரணம்தான்... "மனிதமாண்புகள் விழுமியங்கள் மாறிவிட்டன". இந்தக் காரணத்துக்குப் பின்னால் பண்பாடு சார்ந்த அழுத்தமான அரசியலும் இருக்கிறது. நாங்கள் புது யுகத்துக்குள் நுழைந்துவிட்டோம்...நவ நாகரிகம் அடைந்துவிட்டோம். அந்தக் கணத்தின் அனைத்துப் பரிமாணங்களிலும் வாழ்கிறோம்... கொண்டாடுகிறோம் என்று கொண்டாட்டத்தை வெளித்தோற்றத்தில் முன் வைத்தாலும். அவர்கள் உள்ளுக்குள் சிக்கல்களில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதன் தெளிவான எடுத்துக்காட்டுத்தான் இது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் நான் என்னை மனிதனாக உணர்ந்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன். அதனால் எந்தச்சமரசமும் இதில் இல்லை.
 விவசாயத்தில் தன்னிறைவு என்பது எப்போதுதான் நிகழும்....
 இன்னமும் நம்மில் பலர், "வசந்த வாழ்க்கை என்பது நகரத்தில்தான் கொட்டிக் கிடக்கிறது . அங்கே கைநிறைய சம்பாதிப்பதும் கார் பங்களா என்று செட்டிலாவதும்தான் வாழ்க்கைப் பேறை அடையும் வழி' என்ற கற்பிதத்தை மனதுக்குள் விதைத்துக்கொண்டு வாழ்கிறோம். ஆனால், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், "இயற்கையோடு இயைந்து வாழ்வதுதான் வாழ்க்கை. அது கிராமங்களில்தான் மலிஞ்சு கிடக்கு" என்று உரக்கச் சொல்லிவிட்டுப் போனார்.
 அதை அவர் சொன்ன காலத்தில் ஏற்காத பலரும் இப்போது, "அவர் சொன்னதுதான் சரி" என்றபடி, கிராமத்து வாழ்க்கைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, வெளிநாட்டு, கைநிறைய சம்பளத்தை அள்ளித்தரும் ஐ.டி துறை வேலைகளைக்கூடத் துறந்துவிட்டு, இளைஞர்கள் பலரும், "இயற்கை விவசாயம், தற்சார்பு பொருளாதாரம், தற்சார்பு வாழ்க்கை' என்று "யு டர்ன்' அடித்துக் கிராமங்களுக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்.
 இன்றைக்கு நோய், நொடிகள் பெருகியதற்கு முக்கியக் காரணிகளில் ஒன்று, நாம் சாப்பிடும் நஞ்சான உணவுகள்தான். அதனால், நல்ல விதைகளைக் கொடுத்து, எல்லோரையும் நல்ல உணவுப் பொருள்களை உற்பத்தி செய்ய வைப்பதே என் வாழ்நாள் லட்சியம். நம்மாழ்வார் காட்டிய வழியில் பயணித்துக் கொண்டே நிறைய இளைஞர்கள் இருக்கிறார்கள். நிச்சயம் அந்த இலக்கை எல்லோரும் எட்டிப் பிடிக்க வேண்டும். அதிக விளைச்சல் என்ற நினைப்பில் வீரிய ஒட்டுரக விதைகளைப் பயன்படுத்துவதால் அதற்கான சாகுபடி செலவும் அதிகரித்து விவசாயிகள் பெருமளவு நட்டத்துக்குத் தள்ளப்படுகின்றனர்.
 வருங்காலத்தில் விதைக்காகப் பன்னாட்டு நிறுவனங்களிடம் விவசாயிகள் கையேந்தும் நிலை ஒழிக்கப்பட வேண்டும். விவசாயத்தில் உற்பத்தி செய்யக்கூடிய பொருள்களை மதிப்புக் கூட்டுப் பொருளாக மாற்றி விற்பனை செய்வதன் மூலம் விவசாயத்தில் இருமடங்கு லாபம் அடையலாம்" "விதைகளே பேராயுதம்' என நம்மாழ்வார் சொன்னதைப்போல மீண்டும் நாட்டு விதைகள் பரவலாக்கம் செய்தால் மட்டுமே "உணவே மருந்து' என வாழமுடியும்''

 படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் பற்றி....
 இந்தக் கதையை எழுதி முடித்ததுமே, என் முதல் தேர்வாக இருந்தவர் அப்புக்குட்டி. அவரிடம் இருப்பது தமிழ் விவசாயி முகம். உழைத்து, களைத்து போகிற உடல் வாகு. ஏற்கெனவே அது மாதிரி உதாரணக் கதைகளில் அவரும் நடித்திருக்கிறார். அதை அப்படியே கதைக்குள் எடுத்து வந்திருக்கிறேன். இன்னொரு பக்கம் வசுந்த்ரா.
 மண் சார்ந்த அழகு, உயரம் என அப்படிப் பொருந்தி வருகிற முகம். இரண்டுமே எனக்குத் தேவை. இருவருமே முதல் சந்திப்பிலேயே ஒப்புக் கொண்டு முன் வந்தார்கள். இசை, எடிட்டிங், ஒளிப்பதிவு, கலை என எல்லாவற்றுக்குமே நல்ல நண்பர்கள் துணை வந்தார்கள். எல்லோருக்குமே புதிய அனுபவம் கிடைத்தது. எதிர்பார்த்தபடி கைக்கு வந்து சேர்ந்திருக்கிறது படம்.
 -ஜி.அசோக்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com