எம்.வி.வெங்கட்ராம் நூற்றாண்டு - இல.சொ.சத்தியமூர்த்தி

"தனித்து இயங்க தைரியம். தியாகம். நல்ல பிள்ளை என்று பெயரெடுப்பதில் ஆசை இல்லாத சுதந்திரப் பாங்கு இவை எல்லாம் ஒருங்கிணைந்த படைப்பாளிகள் மூவரை, மூன்று இலக்கிய ஆசிரியர்கள் என்று
எம்.வி.வெங்கட்ராம் நூற்றாண்டு - இல.சொ.சத்தியமூர்த்தி

"தனித்து இயங்க தைரியம். தியாகம். நல்ல பிள்ளை என்று பெயரெடுப்பதில் ஆசை இல்லாத சுதந்திரப் பாங்கு இவை எல்லாம் ஒருங்கிணைந்த படைப்பாளிகள் மூவரை, மூன்று இலக்கிய ஆசிரியர்கள் என்று பட்டியலிடும் போது முதலாவதாக எம்.வி.வெங்கட்ராமைக் குறிப்பிட்டு அறிமுகப்படுத்தவில்லை. மாறாக ஞாபகப்படுத்துகிறேன்' என 1964-ஆம் ஆண்டு தி.ஜானகிராமன் இலக்கிய வட்டத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ், ஆங்கிலம், இந்தி, செளராஷ்ட்ரா மொழிகளில் புலமைப் பெற்ற எழுத்தாளர். மொழி பெயர்ப்பாளர். சிற்றிதழைத் தொடங்கி நடத்திய நிர்வாகி. இதழாசிரியர். சிறுகதை,புதினம், ஓரங்க நாடகம், கவிதை, கட்டுரை எனப் பல்வேறு இலக்கிய வகைகளிலும் இருநூறுக்கும் மேற்பட்ட படைப்புகளைப் பங்களிப்புச் செய்து எழுத்துலகின் பன்முக ஆளுமையாகத் திகழ்ந்தவர் எம்.வி.வெங்கட்ராம்.
தமிழ்மொழியில் சென்ற நூற்றாண்டில் கருவாகி பின்னர் உருப்பெற்று வளர்ந்து இன்று நிலைபெற்றுள்ள சிறுகதை, புதின இலக்கிய வடிவங்களுக்குத் தரமான, தாராளமான பங்களிப்பைக் கொடுத்த நகரம் கும்பகோணம். காவிரி மற்றும் அதன் கிளையான அரசலாறு என்ற இரு நதிகளும் வட தென் எல்லைகளாகப் பாய்ந்து வளம் சேர்க்கும் கோயில் நகரமான குடந்தையில் அரசலாற்றின் வடகரையிலுள்ள தோப்புத் தெருவில் பிறந்து வாழ்ந்த எழுத்தாளர் - வாசகர்களாலும் சக படைப்பாளிகளாலும் "எம்.வி.வி' என்றழைக்கப்பட்ட எம்.வி.வெங்கட்ராம்.
கும்பகோணத்தில் வாழ்ந்த பட்டுக் கைத்தறி நெசவாளரான ரெங்கவீரைய்யர்- சீதையம்மாள் இணையருக்கு 1920-ஆம் ஆண்டு மே 18-ஆம் நாள் மகனாகப் பிறந்தார், அந்நாளில் தோப்புத் தெருவில் வசித்து வந்த வெங்கடாசலபதி - சரஸ்வதி குடும்பத்தில் பிறந்த பத்து குழந்தைகளும் தொடர்ந்து இறந்து போனதால் அத்தம்பதியினர் எம்.வி.வெங்கட்ராமை சிறுகுழந்தையாக மகவேற்பு முறையில் மகனாகப் பெற்று வளர்த்து அவரது பத்தொன்பதாவது வயதில் ருக்மணி அம்மையாரை திருமணம் செய்து வைத்தனர். பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் மற்றும் இந்தி மொழியில் பண்டிதர் நிலை வரை படித்தவர் எம்.வி.வி. தமது மாணவப் பருவத்தில் பதினாறாம் வயதில் எழுத்துலகில் காலடியைப் பதித்துள்ளார்.
"மணிக்கொடி' இதழில் "சிட்டுக்குருவி' என்ற அவரது முதல் சிறுகதை வெளியானது. "விக்ரக விநாசன்' என்ற புனைப்பெயரில் எம்.வி.வி எழுதிய சிறுகதைகளைக் குறிப்பிட்டு, அந்தக் காலகட்டத்தில் வெளியான சிறுகதைகளின் போக்கிற்கு மாறாகப் புதிய உத்தியிலும், மொழியிலும் அமைந்திருந்தன என்று எம்.கோபாலகிருஷ்ணன் கூறியிருப்பதே அவரது கதை புனையும் ஆற்றலை உணர்த்தும்.
அவரது "வேள்வித் தீ' புதின இலக்கிய வகையில் புதிய முயற்சியாகும். கும்பகோணத்தில் வாழும் பட்டு நெசவாளியின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட அக்கதை, வரலாற்றில் இதுவரை பேசப்படாத ஒரு சமூகத்தின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டியுள்ளது. குஜராத் மாநிலத்தின் ஒரு பகுதியிலிருந்து புலம்பெயர்ந்தவர்களாகத் தமிழகத்தில் தற்போது வேரூன்றி வாழும் செளராஷ்ட்ரா மொழிபேசும் சிறுபான்மையின மக்களின் வாழ்க்கை, தொழில், அரசியல் இவற்றை "வேள்வித் தீ' யில் எம்.வி.வி ஆவணமாக்கியுள்ளார். 
நித்ய கன்னிக்கு முன் முயற்சியாக அவர் படைத்த "திலோத்தமை' "கிராம ஊழியன்' இதழில் வெளிவந்த போது அதன் அழகில் பரவசமடைந்த கு.ப.ரா உங்கள் திலோத்தமை தாகூரின் ஊர்வசியை விட அழகாய் இருக்கிறாள் என்று பாராட்டியதை நினைத்து பெருமை கொண்டு தொடர்ந்து புலோமையை படைத்த பின்னர் மூன்றாவதாக "நித்ய கன்னி' என்ற புராண புதினத்தை இக்கால வாசகர்களுக்காகப் பழைய மதுவை புதிய கோப்பையில் ஊற்றி பருகக் கொடுத்துள்ளார். 
மாதவி என்னும் பெண், மணமுடித்துக் குழந்தைப் பெற்ற பிறகு தான் இழந்த கன்னித் தன்மையை மீண்டும் திரும்பப் பெறும் தன்மை கொண்டவள். அதனால் மூன்று அரசர்களையும் ஒரு முனிவரையும் மணந்து நான்கு குழந்தைகளைப் பெற்று அவற்றைப் பெற்ற இடத்திலேயே விட்டு விட்டு மீண்டும் தந்தையிடம் கன்னியாகத் திரும்பி வருகிறாள், அவளை மணமுடிக்க ஏற்பாடு செய்யும் தந்தையிடம் மறுத்துப் பேசி வாழ்வைத் துறந்து காட்டுக்குத் தவம் செய்யச் செல்கிறாள், இவ்வாறு வாழ வேண்டிய வயதில் விரக்தியடைந்து காட்டுக்குச் செல்லும் மாதவியின் பால் பரிவுகொண்டு மூலக்கதையைப் பல மாறுதலுக்கு உட்படுத்தி எம்.வி.வி புதியவகைப் புதினமாக வழங்கியுள்ளார்.
தி. ஜானகிராமனும், எம்.வி.வியும் குடந்தைக் கல்லூரியில் ஒரு சாலை மாணாக்கர்களாகப் பயின்றவர்கள். நவீன தமிழிலக்கியப் படைப்புகளை ஆர்வத்துடன் படிக்கத் தொடங்கி இருவருமே எழுத்தாளுமைகளாகப் பரிணமித்தனர். தமிழ் எழுத்துலகில் தடம் பதித்த புதுமைப்பித்தன், கு.ப.ரா. பிச்சமுர்த்தி. பி.எஸ்.ராமையா இவர்களின் கதைகளோடு எம்.வி.வியின் கதைகளும் தனக்கு வழிக்காட்டியதாகத் தி.ஜானகிராமன் குறிப்பிட்டுள்ளார்.
எம்.வி.வெங்கட்ராமுக்கு சாகித்திய அகாதெமி விருதைப் (1993) பெற்றுத் தந்த "காதுகள்' என்ற நாவல் பற்றி சஃபி குறிப்பிடும் போது, பிறழ்வான மனநிலையில் மனதில் ஒலிக்கும் மாய அசரீரி குரல்களைப் (Auditory Hallucination) பற்றிய மிக நுணுக்கமான அரிதான இலக்கியப் பதிவாகும். தனக்கு நேர்ந்த உக்கிரமான பிறழ்வான அனுபவங்களில், கணிசமான பகுதியைத் தணிக்கை செய்துவிட்டுதான் "காதுகள்' நாவலைப் படைத்ததாகப் பதிவிட்டுள்ளார் எம்.வி.வி. 
பிறழ்வு உளவியலில் ஆர்வம் கொண்டவர்களுக்கான அரிதான ஆவணம் "காதுகள்' என்ற கருத்தை அப்புதினத்தைப் படித்தவர்கள் தயக்கமின்றி ஒப்புக் கொள்வர். பொய்யும் செயற்கையுமான தாமஸ உணர்ச்சிகளை மெய்யாகவும் இயற்கையாகவும் ஏற்கும் மெய் ; தன்னிச்சையாகப் பேசும் வாய்; விபரீதக் காமக் களேபரக் காட்சிகளைக் காணும் விழிகள். இல்லாத நாற்றத்தையும் வாசத்தையும் நுகரும் நாசி; எந்நேரமும் சந்தைச் சந்தடி செய்யும் காது; ஐம்புலன்களாலும் குழப்பப்பட்டு மருளும் மனம் - இவற்றோடு இவன் புத்தியால் போராடுகிறான்; அதாவது இவன் தன்னோடு போராடிக்கொண்டு இருக்கிறான், என்று மனித உயிரை ஏற்றுள்ள உடலில் புலன்கள் நடத்தும் போராட்டத்தின் நேர்முக வர்ணனையைக் கேட்பது போன்ற உணர்வை அளிக்க வல்ல புதினமான "காதுகள்' உள்மனத்தின் ஓசை என்று மனநல மருத்துவ நிபுணர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.
தனது கதைகளில் எம்.வி.வி படைத்து வலம் வரச் செய்த பெண் பாத்திரங்கள் பழைமையான மரபுகளால் கட்டமைக்கப்பட்ட குடும்பச் சூழலில் பிறந்து வளர்ந்தவர்கள், அவரது கதை மங்கையர்கள் கெளசல்யா, ஹேமா, (வேள்வித் தீ) ராணி, மீனா (உயிரின் யாத்திரை), மாதவி (நித்ய கன்னி), பூவின் மேன்மையும் பாறையின் திண்மையும் அமையப்பெற்ற பனி முடி மீது வாழ்ந்த கண்ணகி முதல் பார்வையிலேயே மனிதர்களை மதிப்பிடும் அழகி சாயாதேவி, வயிற்றுப் பசியுடன் காத்திருந்த நிர்மலா உள்ளிட்ட அனைவருமே வாழ்க்கைச் சூழலில் எதிர்பாராத பல திருப்பங்களையும் எதிர்கொண்டு கரையேறியவர்கள். அவர் படைத்த பெண் பாத்திரங்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர் ச. மணி. தமிழ்மொழி இலக்கியத்தில் கதைகள் நிலைத்திருக்கும் வரை கொண்டாடப்படும் ஆளுமையாகவே எம்.வி.வி நிலைத்து நிற்பார் என்று புகழ்ந்துரைக்கிறார்.
அவரது சிறுகதைகளில் மிகச் சிறந்த ஒன்றாகப் "பைத்தியக்கார பிள்ளையை' மதிப்பிடுகிறார் எழுத்தாளர் பாவண்ணண். ஐந்து ஆண். ஐந்து பெண் எனப் பத்து குழந்தைகளைப் பெற்று விட்டு மணமுடிப்பது எப்படி என்ற கவலையில் இறந்து போனார் தந்தையார். உடனே குடும்பச் சுமைகளைத் தனது தோளில் சுமந்த மூத்தபிள்ளை ராஜம், கடன் சுமைகளையும் சுமர்ந்தபடி மூன்று தங்கைகளுக்குத் திருமணம் செய்து வைக்கிறார். தம்பிகள் தனிக்குடித்தனம் போனாலும் குடும்பத்திற்காகத் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்கிறான். பிணமாக வைக்கப்பட்டிருந்த ராஜம் கழுத்தில் ரோஜாப்பூ மாலையுடன் மாப்பிள்ளைக் கோலத்தில் உட்கார்ந்திருந்தது போல இருப்பதைப் பார்த்த அவனது காதலி பங்கஜம் என்ற பெண் நல்லவேளை திருமணம் செய்து கொண்ட பிறகு இப்படிச் செய்யாமல் இருந்தானே? என்று பேசுவதை கும்பகோணத்தின் கொசுக்கடியுடன் ஒப்பிட்டு கதை முடிகிறது.
சுவாரஸ்யமான பல அடுக்குகளைக்கொண்டது எம்.வி.வி யின் வாழ்க்கை. அப்பா அம்மா வீட்டில் வறுமை. தத்துப்போன வீட்டில் கோடீஸ்வர வாழ்க்கை. பதிமூன்று வயதில் எழுதத் தொடங்கியது. பதினாறு வயதில் "மணிக்கொடி'யில் "சிட்டுக்குருவி' என்ற கதை பிரசுரம். பி.ஏ. பொருளாதாரம் படிக்கும்போதே தி.ஜானகிராமன் இவரை குருபோல வியந்து பார்த்து நட்பாக்கிக்கொள்வது. இந்தி விஷாரத் படிப்பில் தேர்ச்சி. ஆங்கில இலக்கியப் புலமை. இளம் வயதில் திருமணம். பட்டு ஜவுளி ஜரிகை வியாபாரம். நாற்பத்தெட்டில் "தேனீ' பத்திரிகை தொடங்கியது. பத்திரிகையில் நஷ்டம். அதனால் வியாபாரத்தில் நஷ்டம். அடியாட்களை வைத்துக்கொண்டு ரவுடியாகச் சில காலம். பின்னர் கட்சியில் சேர்ந்து கவுன்சிலர் பதவிக்கு நின்று தோற்றது ஒரு நேரம். பல பெண்களாலும் காதலிக்கப்பட்ட வசீகரனாக இருந்தது ஒரு கட்டம். 
"இந்த அனுபவங்களும் கூட இல்லாவிட்டால், எழுத்தைத் தவிர என்னதான் மிஞ்சியிருக்கும் என் வாழ்வில்' என்பார் எம்.வி.வி. என்று ரவி சுப்பிரமணியன் தன்னுடைய கருத்துடன் எம்.வி.வியின் கூற்றையும் இணைத்துக் கூறியிருப்பது மிக எதார்த்தமான மதிப்பீடாகும்.
திருமூலரின் பதினான்கு பாடல்களைக் கதைப்பொருளுக்கேற்ப புனைந்து வழங்கிய "உயிரின் யாத்திரை' "சுதேசமித்திரன்' வாரஇதழில் வெளிவந்த புதினமாகும். 
"தேனீ' என்ற இலக்கிய இதழைத் தொடங்கி (1948) அதன் ஆசிரியராக இருந்து வெளியிடும் படைப்புகளுக்கு மதிப்புமிக்கத் தொகையை வழங்கிப் படைப்பாளிகளின் புரவலாகவும் விளங்கினார்.அப்பத்திரிகையில் அறிமுகம் செய்யப்பட்ட சிறுகதை ஆசிரியர்தான் மெளனி என்பது வரலாறு கூறும். பட்டு ஜரிகை வியாபாரம் செய்த பொருள் வளம் மிக்கக் குடும்பத்தில் வாழ்ந்தும் எழுத்தும், படைப்புகளும் எம்.வி.விக்கு வறுமையைப் பிரதிபலனாகக் கொடுத்தன. ஆனாலும் தளராத உறுதியுடன் தரமான இலக்கியப் பங்களிப்புச் செய்துள்ளார். இந்திய விடுதலைப் போரில் பங்கேற்ற தேசிய தலைவர்கள், தியாகிகளைப் பற்றி எம்.வி.வி மொழிபெயர்த்தும் எழுதியும் குவித்த நூல்கள் இருபதாம் நூற்றண்டின் அரசியல் தலைவர்களின் வரலாறாக வடிவம் பெறும் தகுதிபடைத்தன. ஒரு வகையில் அவை குழந்தை இலக்கியப் படைப்புகள் எனவும் கருதத் தக்கவை. 
1992-ஆம் ஆண்டு கரிச்சான் குஞ்சுவின் நினைவேந்தல் கூட்டத்தில் "நான் கல்லாப் பெட்டியை மூடிவிட்டேன். விளக்கையும் அணைத்தாயிற்று. என் கடையைக் கட்டிப் பூட்டிவிட்டேன். சூடமும் கொளுத்தியாகிவிட்டது. அதுவும் கொஞ்ச நேரத்தில் அணையும். இப்போது என் குருநாதரின் சொல்லுக்குக் காத்திருக்கிறேன்' என்று பேசிய எம்.வி.வியின் உயிரின் யாத்திரை 2000-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் நாள் முடிந்து இயற்கை எய்தினார். 
அவரது இறுதிக்காலத்தில் தான் எழுதிய சிறுகதைகளை ஒட்டுமொத்த நூலாக வெளியிட விரும்பினார். அந்தப் பெரும் பணியை சென்னை "கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ்' நூலாக்கிய போது பார்க்க இயலாத விழிகள். ஆனால், நூல் அமைப்பை தடவிப் பார்த்து அறிந்து மகிழ்ந்தது மனம். எம்.வி.வியின் படைப்புகளை மீண்டும் வாசித்துப் பயனடைவதும் இத்தலைமுறையினாரிடம் அதனைக் கொண்டு சேர்ப்பதும் அந்தக் கதையுலகச் செம்மலுக்கு அவரது நூற்றாண்டில்(1920-2020) நாம் செலுத்தும் நன்றியாகும். 
14-1-2020 அவரது நினைவு நாள். 
2020 - அவரது நூற்றாண்டு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com