கவிஞராக மாற்றிய "தினமணி'

தினமணி தனிமணியாக ஒலித்துக் கொண்டிருக்கும் "தமிழ்மணி'! வாசகரை கவர்ந்த வைகறைமணி; வண்ணமணி. அரியமணியாகிய தினமணிக்கும் அறுபது ஆண்டுகள் தொடர்பு.
கவிஞராக மாற்றிய "தினமணி'

தினமணி தனிமணியாக ஒலித்துக் கொண்டிருக்கும் "தமிழ்மணி'! வாசகரை கவர்ந்த வைகறைமணி; வண்ணமணி. அரியமணியாகிய தினமணிக்கும் அறுபது ஆண்டுகள் தொடர்பு.
 பள்ளிப் பருவத்திலேயே படிக்கின்ற பழக்கம் பற்றிக் கொண்டது. அதாவது காலையில் நாளேடு வாசிக்கும் பழக்கம் வந்துவிட்டது.
 1957-இல் கல்கி 30 காசு கொடுத்து வாங்கி அகிலனின் "பாவைவிளக்கு' படிப்பிலும், அரு.இராமநாதனின் "குண்டுமல்லி'வாசிப்பிலும் பைத்தியமான காலம். பத்தாம் வகுப்புப் படிக்கும் போதே பாட்டெழுதும் பயிற்சி பெற்றேன்.
 டாக்டர் உ.வே.சாமிநாதய்யரிடம் நேரடி மாணவர் த.சுந்தரேச்சாரியார் என் தமிழாசிரியர். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மீனாட்சி கல்லூரியாக இருந்த காலத்தில் அவரிடம் தமிழ் கற்றவர்.
 என் தமிழாசிரியர் யாப்பிலக்கணம் கற்பிக்கும் போது பாடல் எழுதிக் கற்றுக்கொண்டேன். 1954-இல் பதினோராம் வகுப்பு முடித்து வெளிவரும் போதில் ஒரு நேரிசை வெண்பா எழுதித் தலைமையாசிரியரிடம் கொடுத்தேன். அப்பாடல் இன்றும் பள்ளித் தலைமையாசிரியர் அறையை அலங்கரித்துக் கொண்டுள்ளது.

யாப்பறிந்த பயனாகத் தீபாவளி, பொங்கல் திருநாள் பற்றிச் சிறுசிறு பாடல்கள் இயற்றித் தினமணிக்கு அனுப்புவேன். அப்பாடல்கள் அச்சுவாகனம் ஏறித் தினமணியில் வந்த போதெல்லாம் தினமணியைக் கையில் கொண்டு ஆகாயத்தில் பறந்து பூமிக்கு வருவேன்.
 அது மட்டுமா? சில நாள்கள் சென்றபின் என் பெயருக்கு ஐந்து ரூபாய் அல்லது பத்து ரூபாய் வரும். அப்போது நான் பெற்ற மகிழ்ச்சியை இப்போது எப்படி எழுதுவது?
 "தமிழ்நிலா' என்னும் காப்பியம் எழுதிப் பரிசாக ஐந்தாயிரம் ரூபாய் பெற்றேன். "மிஞிலி' என்னும் காப்பியம் எழுதியும் பரிசு பெற்றேன். அக்காப்பியத்தைப் படித்துப் பாராட்டித் தினமணி-தமிழ்மணியில் கலாரசிகன் எழுதியதை நினைவு கூர்ந்து மகிழ்கிறேன்.
 "கிராம மோகினி' எழுத்தாளர் துமிலன் எழுதிய நெடுங்கதை, ஒவ்வொரு வாரமும் தவமிருந்து பெறுவது போல தினமணி நாளிதழையும் எதிர்பார்த்துப் பெற்றுப் படிக்கின்ற நிலை உருவாயிற்று.
 நான் எழுத்தாளராகவும், கவிஞராகவும் இருப்பதற்கு முழு முதற் காரணம் என் மாணவப் பருவத்திலேயே தினமணி எனக்களித்த ஊக்கமே யாகும்.
 "கண்ணன்' மாத இதழ் ," கல்கி' , "கோகுலம்' போன்ற இதழ்கள் என் பாடல்களைப் பிரசுரம் செய்து அளித்த சன்மானம் என் படிப்புக்கு உதவியது.
 "சிறுவர் மணி' யில் என் பாடல்களை வெளியிட்டும் "தமிழ்மணி'யில் என் கட்டுரைகளைப் பிரசுரித்தும் வருகிற தினமணிக்கு நன்றி.
 }காழிக்கம்பன் வெங்கடேசபாரதி
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com