பூலோக வைகுண்டம்! - கி. ஸ்ரீதரன்

"பூலோக வைகுண்டம்' எனப் போற்றப்படும் திருவரங்கம் திருக்கோயில் தமிழகத்தில் சிறந்த வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது.
பூலோக வைகுண்டம்! - கி. ஸ்ரீதரன்

"பூலோக வைகுண்டம்' எனப் போற்றப்படும் திருவரங்கம் திருக்கோயில் தமிழகத்தில் சிறந்த வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது.
 இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாட்டு பயணிகளும் இத்திருக்கோயிலைக் காண்பதற்கு நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
 வைணவ சமயத்திற்கும் இக்கோயில் ஒரு திசைவிளக்காககத் திகழ்கின்றது. ஆழ்வார்கள் அனைவரும் போற்றி மங்களாசாசனம் செய்த திருத்தலம் இது. நாதமுனிகள், உய்யகொண்டார், ஆளவந்தார், பெரிய நம்பிகள், எம்பெருமானார், கூரத்தாழ்வான், பட்டர், நம்பிள்ளை, பெரியவாச்சான்பிள்ளை, பெரிய ஜீயர் (மணவாள மாமுனிகள்) போன்ற பல வைணவ ஆச்சாரியர்கள் இங்கே வாழ்ந்து திருவரங்கம் கோயிலுக்கும், வைணவ சமயத்திற்கும் பெரும் தொண்டு செய்த தலமாகவும் விளங்குகிறது.
 திருவரங்கம் கோயிலில் பள்ளி கொண்ட அரங்கனின் சிறப்பை"விரிதிரைக் காவிரி வியன் பெருந்துருத்தித் திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்'" என்று சிலப்பதிகாரம் எடுத்துரைக்கின்றது. அரங்கன் பள்ளி கொண்டிருக்கும் பிரணவ ரூபமான ரங்க விமானத்தை, பிரம்மா, சூரியன் புதல்வன் மனு, இட்சுவாகு, தசரதர், இராமர் ஆகியோர் வழிபட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. இராமர் விபீடணிடம் ரங்க விமானத்தை அளித்ததாகவும், இலங்கைக்குக் கொண்டு செல்லும் வழியில் மாலையில் காவிரி ஆறு மேம்பால அமைந்திருக்கும் அழகினைக் கண்டு "திருவரங்கத்தில்' எழுந்தருள விருப்பம் கொண்டார். இங்கேயே கோயில் அமைந்தது. இதனை ""குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி, வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கி இருப்பதாக" தொண்டரடிபொடியாழ்வார் தம் பாசுரத்தில் குறிப்பிடுகிறார். விபீடணன் ரங்க விமானத்தைத் தாங்கி நிற்கும் கோலத்தில் சிற்பங்களைச் சேஷராயர் மண்டபத்தில் காணலாம். விபீடணன் அரங்கனை வழிபடும் கோலத்தில் மேட்டு அழகிய சிங்கர் சந்நிதியில் ஓவியமும் காணப்படுகிறது.
 தங்க விமானம்
 அரங்கன் எழுந்தருளியுள்ள விமானம், தங்க விமானம் என்று அழைக்கப்படுகின்றது. இதற்குப் பொன் வேய்ந்த மன்னர்களில் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (1250 - 84) சிறப்பாகக் கருதப்படுகிறான். "பொன் வேய்ந்த மகிபதி'" என்று ஸ்ரீரங்கம் கோயில் கல்வெட்டு புகழ்ந்து பேசுகிறது.
 கல்வெட்டுகள்
 இக்கோயிலில் 500-க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன. இவை தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி ஆகிய மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. சோழர் பாண்டியர், போசளர், விஜயநகர - நாயக்க மன்னர்கள் இக்கோயிலை விரிவுபடுத்தியும், திருப்பணி செய்தும், கோயிலில் சிறப்பான வழிபாட்டிற்கும் தானமளித்துள்ளனர். கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலங்கள், நகைகள், நடைபெற்ற விழாக்கள், கோவிலின் நந்தவனங்கள், பெருமாளுக்குப் படைக்கப்பட்ட அமுதுகள், கோயில் நிர்வாகம் போன்ற பல செய்திகளை எடுத்துக்கூறும் இக்கோயில் கல்வெட்டுகள் அரிய வரலாற்றுக் கருவூலமாகத் திகழ்கிறது. சோழர், பாண்டியர், போசள, விஜயநகர - நாயக்க மன்னர்கள் இக்கோயிலுக்குத் திருத்தொண்டு செய்துள்ளனர். இவர்களால் கட்டப்பெற்ற கோபுரங்களிலும் மண்டபங்களிலும் அவர்களது அரச இலச்சினைகள் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளதையும் கண்டு மகிழலாம்.
 திருவரங்கத்திருப்பதி
 திருவரங்கம், ஸ்ரீரங்கம், திருவரங்கத்திருப்பதி என்று இத்தலம்; அழைக்கப்படுகிறது. கோயில் கொண்டுள்ள பெருமாள் "அரங்கத்துப் பெருமானடிகள்', "அரங்கத்து எம்பெருமான்', "திருவரங்கத்து ஆழ்வான்', "பெரிய பெருமாள்' என்றெல்லாம் குறிக்கப்படுகின்றார். இக்கோயிலில் இருந்த மரக்கால் கூட "பள்ளிக் கொண்டான் மரக்கால்' என அழைக்கப்பட்டதை அறிய முடிகிறது.
 உத்தமசோழன் காலத்தில் பீமசேணி கற்பூரம் நெய்யுடன் சேர்ந்து விளக்கு எரிக்கத் தானம் அளிக்கப்பட்டது. சந்தன மண்டபத்தில் உள்ள ஒரு தூணின் உச்சிப்பகுதி சற்றுப் பள்ளமாக உள்ளது. இதில் விளக்கு ஏற்றி வைத்திருக்கின்றனர். இது "கற்பூரத் திருவிளக்கு' என அழைக்கப்பட்டது.


 ஸ்ரீவைஷ்ணவ வாரியம்
 கோயில் பணிகளைக் கவனிக்க "ஸ்ரீகாரியம்' என்ற அதிகாரிகள் இருந்திருக்கின்றனர். இவர்களுக்கு உதவியாக "ஆழ்வார் கன்மிகள்' என்ற அமைப்பு உதவி செய்தது. இதில் "ஸ்ரீவைஷ்ணவ வாரியம்', "ஸ்ரீ பண்டார வாரியம்' என்ற இரு குழுவினர் இருந்தனர். "ஸ்ரீ வைஷ்ணவக் கணக்கு' என்ற அலுவலரும் இருந்தார் என்பதையும் அறிய முடிகிறது. கோயில் நிர்வாகம், அமைப்பு முறை, பணியாளர்கள் பற்றிய விரிவான செய்திகளைக் கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன.
 கோதை ஆண்டாள் நந்தவனம்
 திருவரங்கத்தில் கோயில் வழிபாட்டு முறையே தனிச்சிறப்பு வாய்ந்தது. கோயில் நந்தவனத்திலிருந்து வரும் மலர் மாலைகளையே பெருமாளுக்குச் சூட்டுவார்கள். எனவே நந்தவனங்களை அமைத்து கோயிலுக்கு மலர் அளித்ததைப் பற்றிப் பெரும்பாலான கல்வெட்டுகள் கூறுகின்றன. சுமார் 80-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் நந்தவனங்களைப் பற்றிய செய்திகளைத் தருகின்றன. மதுராந்தக நந்தவனம், திருவரங்கத்தாழ்வார் நந்தவனம், வல்லிதாசன் நந்தவனம், ஸ்ரீரங்க நாச்சியார் நந்தவனம், கோதை ஆண்டாள் நந்தவனம், ஸ்ரீ சடகோபன் நந்தவனம் என்று முப்பதுக்கும் மேற்பட்ட நந்தவனங்களின் பெயர்கள் காணப்படுகின்றன.
 இங்கிருந்து அளிக்கப்படும் மாலை "திருப்பள்ளித்தாமம்', "திருத்தோள் மாலை' என்றும், இங்குப் பணி செய்தவர்கள் "ஸ்ரீ வைணவர்கள்' என்றும் கூறுகிறது. இங்குப் பணியாற்றியவர்களிள் பெயர்களில் சில - "திருவரங்கப்பிச்சர், திருப்பாற்கடல்தாசன், திருவாய்ப்பாடிநம்பி' என்பன செந்தாமரை, செண்பகம், கருமுகை போன்ற மலர்கள் பயிரிடப்பட்டன. மேலும் வாழை, தெங்கு, மா, பலா போன்ற மரங்களும் வளர்க்கப்பட்டன என்பதையும் அறிந்து மகிழ்கிறோம். பெருமாளுக்கு நந்தவன பணி செய்து மாலை அணிவித்து மகிழ்ந்த தொண்டரடிப்பொடியாழ்வார் வரலாற்றையும், கோதை சூடிக் கொடுத்த மாலையை அணிந்து மகிழ்ந்த அரங்கன் வரலாற்றையும் நாம் அறிவோம்.
 திருப்பாவை விண்ணப்பம்
 தேட்டருந்திறல், திருப்பள்ளியெழுச்சி, திருவாய்மொழி, திருப்பாவை முதலிய திவ்யபிரபந்த பாசுரங்களை இக்கோயிலில் விண்ணப்பம் செய்யவும் தானமளிக்கப்பட்ட செய்தியையும் அறிய முடிகிறது.
 நூலகம்
 அரங்கன் ஆலயத்தில் 13-ஆம் நூற்றாண்டில் போசள மன்னர்கள் காலத்தில் பாலப்பள்ளி நீலகண்ட நாயக்கர் என்பவர் ஒரு நூல் நிலையத்தை ஏற்படுத்தினார். இதன் அருகே மண்டபத்தில் சரசுவதி, வேதங்களைக் காப்பாற்றிய ஹயக்கிரீவர் பெருமாள் வேதங்களை முறைபடுத்திய வேதவியாச பகவான் ஆகிய திருமேனிகளை எழுந்தருளுவித்தும் வழிபாட்டிற்கும் தானம் அளித்த செய்தியை அறிய முடிகிறது.

ஆரோக்கியசாலை
 திருவரங்கம் திருக்கோயிலில் மருத்துவத்திற்கு தெய்வமாக விளங்கும் "தன்வந்தரி பெருமாள்' சந்நிதி உள்ளது ஒரு சிறப்பாகும். இங்கிருந்த மருத்துவமனை "ஆரோக்கியசாலை' என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இதனைப் பராமரிக்க நிலம் தானமாக கருடவாகன பண்டிதர் வசம் அளிக்கப்பட்டது என்பதையும் அறிகிறோம்.
 விஜயநகர மற்றும் நாயக்கர் மன்னர்கள் காலத்தில் இக்கோயில் மிகவும் உன்னத நிலையை அடைந்தது. திருவிழாக்கள் பல நடத்தப்பட்டன. பல அணிகலன்கள் அளிக்கப்பட்டன. விஜயரெங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில் அளிக்கப்பட்ட தங்க வட்டில் மற்றும் குடை போன்றவற்றையும், அதன் மீது தெலுங்கில் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதையும் காணலாம்.
 கட்டடம் - சிற்பக்கலைச் சிறப்பு
 போசள மன்னர்களால் கட்டப்பட்ட வேணுகோபால சுவாமி சந்நிதி கல்லிலே வடிக்கப்பட்ட காவியமாக அழகிய சிற்பங்களுடன் காட்சி தருகிறது. சேஷராயர் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், ஊஞ்சல் மண்டபம், ஆகியவை விஜயநகர மன்னர்களின் கலைக்குச் சிறந்த எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றன. இக்கோயிலுக்குத் தொண்டு செய்த மன்னர்களின் திருவுருவங்களை, கருட மண்டபம், மகேந்திரன் திருச்சுற்று, தாயார் சந்நிதி போன்ற இடங்களில் கண்டு மகிழலாம்.
 ஓவியங்கள்
 ஆழ்வார்களின் வரலாறு, ராமகாதை, ஸ்ரீரங்க மகாத்மியம், பாகவத புராணம் போன்றவை அழகிய வண்ணங்களில் தாயார் சந்நிதி, ராமானுஜர் சந்நிதி, ரங்கவிலாஸ மண்டபம் ஆகிய இடங்களில் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளன. இராமப்பிரானே வழிப்பட்ட இவ்வாலயத்தில் ராம காதையை விளக்கும் சிற்பங்கள் பல இடங்களில் காணப்படுகின்றன.
 அருங்காட்சியகம்
 இக்கோயிலில் வரலாற்று அருங்காட்சியகமும் உள்ளது. கோயிலுக்கு அளிக்கப்பெற்ற தானங்களைக் குறிப்பிடும் செப்பேடுகள், தந்த சிற்பங்கள், பண்டைய கத்திகள், கோயிலின் சிறப்பை விளக்கும் நிழற்படங்கள், திருக்கோயில் பண்டைய பூட்டுகள் ஆகியன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கோவிலின் வரலாற்றுச் சிறப்பினை அறிந்து கொள்ள இக்காட்சியகம் பெரிதும் உதவுகிறது.
 ராமானுஜரின் தொண்டு
 திருவரங்கம் கோயிலில் வழிபாடு, உற்சவங்கள் எல்லாமே தனிச்சிறப்பு உடையது. இக்கோயிலின் வழிபாட்டு முறைகளை நெறிபடுத்தியவர் உடையவர் என்னும் ராமானுஜர் ஆவார். ராமானுஜர் சந்நிதி தனியே உள்ளது. ஸ்ரீராமானுஜரின் "தானான திருமேனி' இக்கோயிலில் காணப்படுவது சிறப்பாகும்.
 வைகுண்ட ஏகாதசித்திருவிழா
 இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா அண்மையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முதல் பத்துநாள் "திருமொழி
 திருநாள்' எனவும் இராப்பத்து திருநாள் "திருவாய் மொழி திருநாள்' எனவும் அழைக்கப்படுகிறது. இத்திருவிழாவில் ஆழ்வார்களின் பாசுரங்களை அபிநயத்துடன் பாடப்படும் "அரையர் சேவை' ஒரு கண்கொள்ளா காட்சியாக விளங்குகிறது. ஆழ்வார்களின் பாசுரங்களான திவ்யபிரபந்தம் பக்தி மணம் கமழும் பைந்தமிழ் பூக்களாக விளங்குகின்றன.

 திவ்யபிரபந்த சிறப்பு
 பெரியாழ்வார் கண்ணனுடைய லீலைகளைப் பற்றிக் குறிக்கும் பொழுது "செந்நெல் அரிசி சிறு பருப்புச் செய்த அக்காரம் நறுநெய் பாலால் பன்னிரெண்டு திருவோணம் அட்டேன்' என்று தனது திருமொழியில் பாடி போற்றுகின்றதை காணலாம்.
 திருவரங்கம் கோயிலுக்கு ராமானுஜ ஜீயர் என்பவர் 120 பொன் தானமளித்தார். அதிலிருந்து வரும் வட்டியை கொண்டு அரங்கநாதர் முன்பு திருவாய்மொழி பாடும்பொழுது அக்கார அடிசில் படைக்கத் தானம் அளிக்கப்பட்டதாகக் கல்வெட்டு ஒன்று கூறுகிறது.
 இதனை சுவாமி நம்பெருமாள் அமுது செய்தருளும்படி "சென்னரிசி சிறு பருப்பு செய்த அக்காரம் நறுநெய் பாலால் என்கிற திவ்ய ஸ்ரீ சூக்தி (நாலாயிர திவ்ய பிரபந்தம்) படியே அக்கார அடிசில் செற்றியுடனே அமுது செய்தருளி' என்று திவ்யபிரபந்த பாசுரப் பாடலின் வரியையும் கல்வெட்டு குறிப்பிடுவது இன்புறத்தக்கது.
 இத்தகைய சிறப்புகள் உடைய திருவரங்கம் பெரிய கோயிலை "ஆராத அருளமுதம் பொதிந்த கோவில்' என தேசிக பிரபந்தம் போற்றுகின்றது.
 தொல்லியல் துறை (ஓய்வு), சென்னை
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com