ரோஜா மலரே! 23 - குமாரி சச்சு

அந்தப் படத்தின் பெயர் "அன்னை'. படத்தைத் தயாரித்த ஏ.வி.எம். படத்தின் கதைப்படி சந்திரபாபுவும், நானும் பானுமதி அம்மா வீட்டிற்கு அருகிலேயே உள்ள அவர்களின் வீட்டில் வாடகை குடியிருப்பில் வசிப்பவர்கள்
ரோஜா மலரே! 23 - குமாரி சச்சு

அந்தப் படத்தின் பெயர் "அன்னை'. படத்தைத் தயாரித்த ஏ.வி.எம். படத்தின் கதைப்படி சந்திரபாபுவும், நானும் பானுமதி அம்மா வீட்டிற்கு அருகிலேயே உள்ள அவர்களின் வீட்டில் வாடகை குடியிருப்பில் வசிப்பவர்கள். அந்த வீட்டின் அருகிலேயே தங்கி உள்ளதால், பானுமதி அம்மாவுக்கு எப்பொழுது, எது கேட்டாலும் உதவி செய்வார் சந்திரபாபு. என் மேல் பானுமதி அம்மாவிற்குப் பாசம் அதிகம். 
நான் கல்லூரிக்கு செல்லும் பெண். என் படிப்பிற்காக அவர் பணம் கட்டி என்னைப் படிக்க வைப்பார். நானும் அவர் மேல் மிகுந்த மரியாதை வைத்திருப்பேன். அதே சமயம் அவர்களது மகன் ராஜாவின் மேல் நான் காதல் கொண்டிருப்பேன். அவரும் என் மேல் காதல் வயப்பட்டு இருந்தார். இது யாருக்கும் தெரியாது. இதன் நடுவில் சந்திரபாபுவும் என் மேல் ஒருதலையாய் காதல் கொண்டிருப்பார். இது எனக்கும் தெரியாது. 
ஒவ்வொரு முறையும் எனக்கு இவர் உதவி செய்யும் போது நான் அவரது உதவியை ரொம்ப இயல்பாக வாங்கிக் கொள்வேன். ஆனால் நாம் காதலிக்கும் பெண்ணிற்குதான் இதை எல்லாம் செய்கிறோம் என்று அவர் நினைக்க, நான் என் மேல் உள்ள பாசத்தினால்தான் பாபு இதையல்லாம் செய்கிறார் என்று நான் நினைத்து வாங்கிக் கொள்வேன். ஒரு முறை இவர் எனக்கு ஒரு தங்க வளையல் வாங்கிக் கொண்டு என்னிடம் கொடுக்க வருவார். வீட்டின் வாசல் வரை வந்த அவர் நானும் அப்பாவும் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டு நின்று விடுவார்.
நான் வேகமாக வெளியே செல்ல, என் புத்தகத்தை எடுப்பேன். அது தவறுதலாக, உள்ளே நுழைந்து கொண்டிருந்த என் அப்பாவின் கால்களில் அருகில் விழுந்து விடும். அதனுள் இருந்த ராஜாவின் புகைப்படம் வெளியே வந்து விழ, என் அப்பா தன் கால் அடியில் விழுந்த ராஜாவின் படத்தைப் பார்க்க, எங்கள் காதல் அவருக்குத் தெரிந்து விடும். நான் அம்மா இல்லாத பெண். ஏழ்மையான நிலையில் அப்பாவுடன் இருக்கும் பெண். 
நான் ராஜாவை காதலிக்கும் விஷயம் அந்தப் புகைப்படத்தைப் பார்த்தவுடன் அப்பாவுக்குத் தெரிய என்னைப் பார்த்து அவர், ஒரே ஒரு விஷயத்தை மட்டும் என்னிடம் சொல்வார். "ரொம்பப் பணக்கார இடம். நாம் அவர்களது வீட்டில் குடி இருக்கிறோம். இது எனக்கு சரியாகபடவில்லை. அவர் எங்கே நாம் எங்கே", என்று கூற வாசலில் உள்ள சந்திரபாபு இதைக் கேட்டவுடன் நின்று விடுவார். நான் என் அப்பாவை சமாதானம் செய்யும் நோக்கில், ஏதோ கூறிவிட்டு என் முகத்தை என் அப்பாவிடமே காட்ட கூடத் துணிவில்லாமல் வெளியே வர, அங்கு சந்திரபாபு நிற்பதை பார்த்து விட்டு என்ன என்பது போல் பார்வையாலேயே கேட்பேன். 
அப்பொழுது அவர் தன் பையில் இருந்த வளையலை எடுத்து என்னிடம் நீட்ட, நான் சந்தோஷ மிகுதியால், "ரொம்ப சந்தோஷம், தாங்க்ஸ் அண்ணா", என்று கூற, அவர் கண் கலங்கி விடும். அவரது கண்கள் கலங்கியதற்கான காரணம் நான் அண்ணா என்று சொன்னதுதான் என்று படம் பார்க்கும் மக்களுக்குத் தெரியும். உடனேயே அவர் என்னிடம் "நீ காதலிக்கிறாயா' என்று கேட்க, நான் "உங்களுக்கும் தெரிந்து விட்டதா'" என்று கேட்க, "நீ விரும்பினவரையே உனக்கு நான் திருமணம் முடிக்க உன்னுடன் உறுதுணையாக இருப்பேன்'", என்று சொல்வார். இந்தக் காட்சி படத்தில் முக்கியமான காட்சி. 
படத்தின் இயக்குநர்கள் கூட "சச்சு உன் நடிப்பு தான் இந்தக் காட்சியில் மிக முக்கியம்'", என்று கூறினார்கள். சந்திரபாபு கூட என்னிடம் வந்து, "நீ நடிப்பதை பார்த்துத்தான் நான் உன்னைவிட நன்றாக நடிக்க வேண்டும் என்று நினைப்பேன். எப்பொழுதுமே கூட நடிக்கும் நடிகர்கள் flat ஆக நடித்து விட்டால், உடன் நடிக்கும் நடிகர்கள் நடிப்பு எடுபடாது. இந்த மாதிரி ஒருவரை மிஞ்சி மற்றொவர் நடிக்க வேண்டும் என்று நினைத்தால் தான் காட்சி சிறப்பாக வரும்'' என்று சொன்னார்.
இதை ஆங்கலத்தில் every action has positive reaction. இதை நான் அப்பொழுது உணரவில்லை. குழந்தை நட்சத்திரமாக நான் இருந்தாலும் எனக்குத் தெரியவில்லை என்று தான் சொல்வேன். முதலில் எடுக்கும் ள்ட்ர்ற் களில் நான் சுமாராக நடித்ததால் எல்லோரும் என்னிடம் வந்து இதைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள். சந்திரபாபுவே "என்னிடம் வந்து" "நீ குழந்தை நட்சத்திரமாக நடித்தது இங்கு எடுபடாது. இதில் நீ கதாநாயகியாக நடிக்கிறே. அது போலவே இங்கு நீ நடித்தால் அது சரியாக வராது' என்று சொல்ல," நான் சரி' என்று தலை ஆட்டினேன். காரணம், எனக்கும் தெரியும் குழந்தை நட்சத்திரமாக நடித்தது வேறு . நாம் ஏதோ உணர்ச்சி வசப்பட்டு நடிக்க, over acting என்று சொல்லி விடுவார்களோ என்ற பயம் தான் நான் அடக்கி வாசித்தற்குக் காரணம். 
எல்லோரும் இடையே குறிப்பிட்டு சொல்ல, நான் தைரியமாக என் நடிப்பை காட்ட, எல்லோரும் என்னைப் பாராட்டினார்கள். இதிலிருந்து ஒன்றை வளர்ந்து வரும் இளம் நடிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாம் நன்றாக நடித்தால்தான் எதிரில் இருப்பவர் நமக்கு ஈடு கொடுத்து நடிக்க முடியும். அவரது நடிப்பு நன்றாக இருந்தால்தான் நாம் அவருக்கு counter reaction கொடுக்க முடியும். இப்படி ஒருவர் மாற்றி ஒருவர் நன்றாக நடித்தால்தான் படமே நல்ல நடிப்பினால் எடுபடும். "அன்னை'" படத்தைப் பொருத்தவரை என்னைச் சுற்றி நடித்தவர்கள் எல்லாமே ஜாம்பவான்கள். எப்பொழுதுமே ஒரு காட்சியில் நமக்கு ஒன்றும் வேலை இல்லை என்று நினைத்து விட க்கூடாது. நம்மால் முடிந்தவரை ஏதாவது செய்து score செய்ய வேண்டும். அது தான் நல்ல நடிப்புக்கு, பெயர் எடுப்பதற்கு வழி வகுக்கும். இப்படிப் பலரது உற்சாக வார்த்தைகளால் தான் நான் இன்றும் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறலாம். 

நான் இன்று இருக்கும் அபிராமபுரம் வீட்டிற்குப் பின்புறம்தான் சந்திரபாபுவின் வீடு அன்று இருந்தது. எங்கள் குடும்பத்தினருடன் அவருக்கு நெருங்கிய பழக்கம் உண்டு. நாங்கள் அவரது வீட்டிற்குச் செல்வோம். அவர் எங்கள் வீட்டிற்கு வருவார். இன்னும் சொல்லப் போனால் எங்கள் குடும்பத்தினருடன் அவர் சினிமாவிற்குக் கூட வந்திருக்கிறார். நான் இப்பொழுது கூட அவர் இருக்கும் வீட்டிற்கு அருகில் செல்லும் போது பல்வேறு பழைய நினைவுகள் மலரும். அவர் பல வருடங்கள் அந்த வீட்டில்தான் இருந்தார். 
இன்று அவர் இருந்த வீட்டை இடித்து விட்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டி விட்டார்கள். ஆனால், நான் எனது வீட்டை விட்டு அவரது தெருவிற்குத் திரும்பினாலே சந்திரபாபு நினைவுதான் வரும். திடீரென்று எனக்கு கேக் மற்றும் தின்பண்டங்கள் வரும். சில நாட்கள் எங்களிடம் வந்து இன்று என்ன சூட்டிங் சென்றேன். அதில் என்ன நடித்தேன் என்று நடித்துக் காண்பிப்பார். அன்று ஏதாவது பாடல் ஒலிப்பதிவு என்றால் அதைப் பற்றிக் கூறுவார். இல்லை என்றால் அந்தப் பாடலை எங்கள் குடும்பத்தினருக்குப் பாடி காண்பிப்பார். அந்தமாதிரி "புதையல்'" படத்தின் பாடலை நாங்கள் பாடல் ஒலிப்பதிவு செய்த அன்றே கேட்டு மகிழ்ந்திருக்கிறோம். அவர் பாடிய பாடலை எங்கள் எல்லோரையும் கூட நடனமாட வைப்பார். குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போதே எங்களுக்கு அவரைத் தெரிந்திருந்ததால், எங்கள் வீட்டில் அவர் ஒருவர் என்று தான் நாங்கள் எல்லோரும் அவரை நினைத்தோம். அவரும் அப்படித்தான் எங்களுடன் பழகினார். 
சந்திரபாபுவுக்கு எந்த வேடமும் பொருந்தும். கோட்டு சூட்டுடன் கழுத்தில் டை கட்டி அவரை நடக்க விட்டால், அவர் ஒரு வெளிநாட்டுக்காரர் போல் தெரிவார். அதே சமயம் "சபாஷ் மீனா'" திரைப்படத்தில் அவரை ஒரு லுங்கி கட்டி, மெட்ராஸ் பாஷையும் பேச வைத்து, காட்டியபோது அவர் அப்படியே அவர் ஒரு ரிக்ஷாகாரர் போல் தோன்றினார். அந்தப் படத்தில் அவர் ரிக்ஷாகாரர் பாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு இரு வேறு கதாபத்திரங்களும், அதிலும் நேர் எதிரான பாத்திரங்களைச் சிறப்பாகச் செய்யும் திறமை படைத்தவர். 
அவருக்கு சென்னை பாஷை கை வந்த கலை. அதில் ஒரு காட்சி கூட எனக்கு நினைவில் இருக்கிறது. அந்தப் படத்தில் இவர் ஒரு ரிக்ஷாகாரர். சரோஜாதேவி இவரைக் கூட்டிக் கொண்டு வந்து விடுவார். ஒரு காட்சியில் சாதத்தை நிறையக் கொட்டிக் கொண்டு, ஒரு பெரிய குழியை உருவாக்கி அதில் குழம்பு, பொரியல், அப்பளம் என்று எல்லாவற்றையும் கொட்டி சாப்பிடுவார் பாருங்கள், அப்பொழுது சரோஜாதேவி அழுவார். அதற்கு சந்திரபாபு கேட்பார், " நான் சோறு துன்னா நீ ஏன் அழுவுறே. ஒரு ரிக்ஷாகாரர் இப்படித்தான் சாப்பிடுவாரோ என்று நினைக்கத் தோன்றும். அவருக்கு இந்த இரண்டு கதாபாத்திரங்களும் கன கச்சிதமாகப் பொருந்தி வரும். 
மதராஸ் பாஷை பேச வேண்டும் என்று சொன்னவுடனே அவர் ஒரு நாள் மயிலாப்பூரில் உள்ள ரிக்ஷாக்காரரிடம் சென்று பேச்சு கொடுத்து, அவர் எப்படிப் பேசுவார் என்று தெரிந்து கொண்டார். இதையும் எங்கள் குடும்பத்தினரிடம் சொல்லி உள்ளார். அதே போல் பல சமயம் யோசனை செய்வார். கல்யாணம் தேவையா? இது கண்டிப்பாக வேண்டுமா என்று? இப்படி எல்லாம் எங்களிடம் விவாதித்துள்ளார். அப்பொழுது என் அக்கா மாடி லட்சுமிதான் "நீங்கள் நல்லபடியாகச் சம்பாதிக்கிறீர்கள். உங்களைப் பார்த்துக்கொள்ள ஒருவர் தேவை என்று சொன்னார். இப்படி நாங்கள் அவரின் நலம்விரும்பி. அதே போல் எங்களிடம் அவர் பல்வேறு குடும்ப விஷயங்களைச் சொல்லி யோசனையைக் கேட்பார். நாங்கள் எல்லோரும் முதல் முறையாக வெளிநாட்டிற்குச் சென்றோம். எந்த நாட்டிற்குத் தெரியுமா? அடுத்த வாரம் சொல்கிறேன்.
(தொடரும்) 

மயிலாப்பூரில் உள்ள ரிக்ஷாக்காரரிடம் சென்று பேச்சு கொடுத்து அவர் எப்படிப் பேசுவார் என்று தெரிந்து கொள்வார் சந்திரபாபு
சந்திப்பு: சலன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com