ரோஜா மலரே - 48: குமாரி சச்சு

அந்த இயக்குநர் யார் என்று கேட்டால் இன்றும், என்றும் தனது, அன்பாலும், பண்பாலும் அனைவரையும் கவர்ந்து விடும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தான்.
ரோஜா மலரே - 48: குமாரி சச்சு


அந்த இயக்குநர் யார் என்று கேட்டால் இன்றும், என்றும் தனது, அன்பாலும், பண்பாலும் அனைவரையும் கவர்ந்து விடும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தான். இந்த வெயிலில் நிற்கும் பயிற்சியின் போது கையில் ஒரு சிறிய ஐஸ் கட்டியையும் கொடுத்து விடுவார்கள். அவ்வப்போது கண்ணில் அந்த ஐஸ் கட்டியை ஒற்றிக் கொண்டு நான் நன்றாக, நேராகப் பார்த்த படி நிற்க வேண்டும். இப்படி வெயிலில் நிற்க வைப்போம் என்று அவர்கள் எந்த ஒப்பந்தமும் போடவில்லை. ஆனாலும் அவர்கள் வெயிலில் நிற்க சொன்னதை நான் ஒப்புக் கொண்டு, சொல்கிறபடி செய்தேன்.

நான் சரியாக நிற்கிறேனா என்று பார்ப்பது இயக்குநர் முத்துராமனின் வேலை. நான் படும் கஷ்டத்தைப் பார்த்த போது அவரே என்னிடம் வந்து "நீ படும் கஷ்டம் எனக்குத் தெரிகிறது. உனக்கு நல்லது செய்யத்தான் இப்படி நாங்கள் செய்கிறோம். இது மேலிடத்து உத்தரவு' என்று சொல்லுவார். முதல் நாளுக்குப் பிறகு, வீட்டிற்கு வந்தவுடன், என் அம்மாவிடம் நான் படும் அவஸ்தையைச் சொல்லி அழுதேன். "இப்படிக் கஷ்டப்பட்டு நான் சினிமாவில் நடிக்க வேண்டுமா? நான் இப்படி கஷ்டப்பட்டு வரும் வருமானம் குடும்பத்துக்குத் தேவையா? எல்லாக் குழந்தைகளும் ஜாலியாக வீட்டில் விளையாடுகிறார்கள். நான் மட்டும் இவ்வளவு கஷ்டங்கள் படவேண்டுமா', என்று நான் அழுது கொண்டே கேட்டபோது, என் அம்மாவிற்கும், பாட்டிக்கும் கண்களில் கண்ணீர் வந்து விட்டது. ஆனால் அவர்கள் சொன்னது இன்றும் எனக்குக் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ""இன்னிக்குக் கஷ்டபட்டாலும், நீ பின்னால் கண்டிப்பாகச் சந்தோஷப்படுவாய். ராணுவத்தில் போய் வேலை செய்தாலும் கஷ்டம் தான். உனக்கு சின்ன வயசு என்பதனால் இந்த அளவிற்கு உனக்கு இது கஷ்டமாகத் தெரிகிறது. உனக்கு நல்ல பேர் வரும், புகழ் கிடைக்கும். அதற்குத் தான் இதை எல்லாம் செய்கிறார்கள் என்று நீ எடுத்துக்கொள்ள வேண்டும். இதை எல்லாம் நீ சமாளித்து நடந்து கொள்ள கொள்ள வேண்டும். உன் நன்மைக்குதான் இது எல்லாம் நடக்கிறது என்று நீ உணரவேண்டும்'' என்றார்கள்.

அன்று எஸ்.பி. முத்துராமன் கூட ஒரு சமயம் நான் படும் கஷ்டத்தைப் பார்த்து அவர் கண்களில் கண்ணீர் வந்தது. இன்று கூட என்னைப் பார்க்கும் போது, ""அன்று உனக்கு எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்பதற்காகதான் இதை எல்லாம் செய்தோம். அன்று உன்னுடன் பலர் புதுமுகங்களாக வந்தார்கள். ஆனால் இன்று அவர்களில் ஒருவர் கூட நிலைத்து நிற்கவில்லை. இன்றும் நீ தொடர்ந்து நடித்துக்கொண்டு இருக்கிறாய். அதற்கு அந்தப் பயிற்சியும், உன் முயற்சியும் ஒரு காரணம் என்று நீ நினைக்க வேண்டும். இன்று நீ சுயமாக எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும், எப்படி இருந்தாலும் சிறப்பாகச் செய்கிறாய், அதற்கு அந்தக் கடுமையான பயிற்சி தானே காரணம்'' என்று சொன்னார்கள்.

அவரிடமே நான் சொன்னேன். ""நான் அன்று மிகவும் வருத்தப்பட்டேன். ஆனால் இன்று நான் சந்தோசப்படுகிறேன். அன்று இதை எல்லாம் தெரிந்து கொள்கிற வயசும், மன நிலையும் இல்லை. இன்று எல்லாம் தெளிவாகத் தெரிகிறது. என் நல்லதுக்குத் தான் நீங்கள் எல்லாம் செய்தீர்கள்'' என்று மகிழ்ச்சியாக சொன்னேன்.

ஏவி.எம்மில் மாத சம்பளத்தில் வேலை செய்ததால், அவர்களாக ஏற்பாடு செய்து எனக்கு விளம்பரம் செய்தார்கள். இன்று தடுக்கி விழுந்தால் பத்திரிகைகள், மற்றும் ஊடகங்கள் இருக்கின்றன. ஆனால், அன்று பத்திரிகைகளும் ஊடகமும் இன்று உள்ளது போல் இல்லையென்றாலும், இருக்கும் ஒரு சில பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் இருந்தன. அதைத் தெரிந்து கொண்டு இருக்கும், சில பத்திரிகையில் என் பேட்டி மற்றும் புகைபடங்கள் வெளிவர செய்தார்கள். உதாரணமாக, அன்று வெளிவந்த "பொம்மை', "பேசும் படம்', போன்ற பத்திரிகைகளில் எனது படங்கள், மற்றும் என் பேட்டிகள் வெளிவந்தன.

புது முகம் என்பதால் நன்றாக மக்களிடையே என் முகம் பரவ, எந்த வழியில் எல்லாம் எனக்கு விளம்பரம் தேவையோ, அதையெல்லாம் செய்தார்கள்.. நான் தமிழ் பொண்ணுதான். ஆனாலும் எனக்கும் வசன உச்சரிப்பிற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பலவகைகளில் தமிழை நான் பேச எனக்குப் பயிற்சி கொடுத்தார்கள். இன்றும் எனது தமிழ் உச்சரிப்பிற்கு வசனகர்த்தா ஆரூர்தாஸ் தான் காரணம். தமிழில் பல்வேறு வகையான வட்டார உச்சரிப்பு இருக்கு. எல்லாமே தமிழ் தான் என்றாலும் அதற்கு என்று தனி அழகு இருக்கிறதல்லவா? இதை எல்லாம் எப்படி சொல்ல வேண்டும் என்று அவர் தான் அன்று எனக்குக் கற்று கொடுத்தார். அதே போல் நடனப் பயிற்சியும் எனக்குக் கொடுத்தார்கள்.

நான் நடனம் தெரிந்தவள் தான் என்றாலும் சினிமா நடனம் எப்படி ஆடவேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்களோ. அதே போல் தான் சண்டைக் காட்சியும். இதற்கு என்று எனக்குத் தனியாகப் பயிற்சி அளித்தார்கள். இதை எல்லாம் ஒரு பல்கலைக்கழகத்தில் சொல்லி கொடுப்பது போல் எனக்கு எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தார்கள்.

என்னைப் பொருத்தவரையில், நான் ஏவி.எமில் இருந்த 2 வருடங்கள் எனக்கு மறக்க முடியாத வருடங்கள். நான் தெரிந்து கொள்ள வேண்டிய பலவற்றை எனக்குக் கற்று கொடுத்த நிறுவனம். இன்று நான் தொடர்ந்து இந்தத் திரையுலகில் இருப்பதற்கு அடித்தளத்தை அமைத்து கொடுத்த இந்த நிறுவனத்தையும், அதன் தலைவர் ஏவி.எம் செட்டியாரையும் என்னால் என்றும் மறக்க முடியாது. இன்றும் யார் கேட்டாலும் நான் பெருமையாகச் சொல்வது, நான் ஏவி.எம்மில் பயின்றவள் என்றுதான்.

ஏவி.எம் நிறுவனத்தில் நான் நுழைந்தது "அன்னை' படத்தில் நடிக்கத்தான். முன்பே சொன்னபடி என்னை இயக்குநர்கள் கிருஷ்ணன் பஞ்சு பார்த்தார். நான் வளர்ந்து விட்டதால் என்னை "அன்னை' படத்தில் ஓர் இளம் கதாநாயகி வேடத்தில் நடிக்க வைத்தார்கள். "அன்னை' படத்தில் நடித்தவர்கள் எல்லாம் ஜாம்பவான்கள், ஒரு பக்கம் நடிப்பிற்கே இலக்கணம் வகுத்த பானுமதி அம்மா . இன்னொரு புறம் எந்த வேடத்தையும் சிறப்பாகச் செய்யும் செளகார் ஜானகி . நான் முதலில் நடிக்க வரும் போது பானுமதி அம்மாவிற்கு ஜூனியராகத் தான் நடித்தேன். இந்த இருவருடனும் எஸ்.வி.ரங்கா ராவ், சந்திரபாபு, டி.எஸ்.முத்தையா போன்ற பலரும் நடித்திருந்தார்கள். இதில் நாகேஷ் கெளரவ வேடத்தில் வந்து அசத்துவார். இந்தப் படத்தின் கதை ஒரு வளர்ப்பு தாயின் பாசம் பெரியதா, இல்லை பெற்ற தாயின் அன்பு உயர்ந்ததா என்று கேட்பதற்கேற்ப இருக்கும். பல்வேறு உணர்ச்சிகரமான காட்சிகள் இதில் உண்டு. இந்தப் படத்தின் வசனத்தை கே.எஸ்.கோபால கிருஷ்னன் எழுதியிருந்தார்.

இந்தப் படம் வங்காள மொழியில் வெளி வந்த "மாயா மிர்கோ' (ஙஹஹ்ஹ ஙழ்ண்ஞ்ர்) என்ற படத்தின் தமிழாக்கம்தான். முதலில் இந்த வங்காள படம் ஒரு நாடகமாக நடிக்கப்பட்டு, அப்புறம் படமாக வெளிவந்தது. எப்பொழுதுமே வங்காள மொழி பேசுபவருக்கும் நமக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. அவர்கள் சிம்பிளாக இருப்பவர்கள், நாமும் தான். நமது இருவருக்குமான கலாசாரம், பழக்க வழக்கங்கள் என்று சிலவற்றில் நாம் ஒன்று படுகிறோம். இதே போல் தான் "படிக்காத மேதை' படமும். இந்தப் படத்தை வாங்கிக் கொண்டு வந்த பின்னர் எல்லோரும் பார்க்கும் வண்ணம் திரையிட்டு காட்டினார்கள். அப்போழுது நான் பார்க்கவில்லை. இயக்குநர்கள், வசனகர்த்தா என்று எல்லோரும் பார்த்து விட்டார்கள். இந்த வங்காள படமான "மாயா மிர்கோ' பார்க்காதவர்கள் இருவர்தான். அவர்கள் இருவர், இந்தப் படத்தில் நடிக்க இருப்பவர்கள். ஒருவர் அந்தப் படத்தின் ஆணிவேறான பானுமதி அம்மா. மற்றொருவர் அந்தப் படத்தின் இளம் கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருக்கும் நான்.

இந்தப் படத்தைப் பார்ப்பதில் இரு வேறு சிக்கல் இருந்தன. ஒன்று, எப்பொழுதுமே இப்படி மொழி மாற்றம் செய்யும் படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்டால், பானுமதி அம்மா, எந்தக் காரணத்தைக் கொண்டும் வேற்று மொழி படத்தைப் பார்க்க மாட்டார்கள். அப்படியே அந்த வேற்று மொழி படத்தைப் பார்க்க ஒப்புக்கொண்டாலும், தன்னுடன் வேறு ஒரு நடிகையோ அல்லது நடிகருடனோ அந்தப் படத்தைப் பார்க்கமாட்டார்கள். அப்படியே பார்க்க வேண்டும் என்றால் அந்தப் படத்தின் இயக்குநர், இருக்கலாம். அல்லது அவருடன் வந்தவர்கள் யாராவது இருக்கவேண்டும். இதை அவர் ஒரு சட்டமாக கடைப்பிடித்து வந்தார். இது திரைப்படத்துறையினர் எல்லோருக்கும் தெரியும். ஆனால் செட்டியாரோ வங்காள படத்தை பானுமதி அம்மா பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். எல்லோரும் பானுமதி அம்மா அவர்களிடம் சொல்ல, தயங்குகிறார்கள் என்று தெரிந்தவுடன் செட்டியாரே அவரிடம் சொல்ல முடிவு செய்தார். செட்டியார் சொன்னாரா, பானுமதி அம்மா பார்த்தார்களா?

(தொடரும்)

சந்திப்பு: சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com