ஊரடங்கிலும் உற்சாகப்படுத்தும் தமிழ்ச் சொற்கள்

அன்றாட வாழ்வில் பள்ளி, வீடு, சுற்றுப்புறத்தில் பயன்படுத்தும் பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்கள் கண்டுபிடிக்கப்பட்டு "சொற்குவை' யின் சுட்டுரை பக்கத்தில் பதிவிடப்படுவது தமிழ் ஆர்வலர்களை
ஊரடங்கிலும் உற்சாகப்படுத்தும் தமிழ்ச் சொற்கள்

அன்றாட வாழ்வில் பள்ளி, வீடு, சுற்றுப்புறத்தில் பயன்படுத்தும் பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்கள் கண்டுபிடிக்கப்பட்டு "சொற்குவை' யின் சுட்டுரை பக்கத்தில் பதிவிடப்படுவது தமிழ் ஆர்வலர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
 தமிழக அரசின் "செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்' சார்பில் "சொற்குவை தளம்' செயல்பட்டு வருகிறது.
 இன்றைய கல்விப் புலத்தில் உள்ள 600-க்கும் மேற்பட்ட துறைகளில் புழங்கும் கலைச்சொற்கள் அனைத்தையும் திரட்டி அவற்றுக்கு நிகரான தமிழ்க் கலைச் சொற்களை வடிவமைத்து இணைய தளத்தின் பொதுவெளியில் வெளியிடவும், இதுவரை தமிழில் வெளிவந்துள்ள அகராதிகளில் இடம் பெற்றுள்ள அனைத்துச் சொற்களையும் ஒன்றுதிரட்டி அவற்றுள், வந்த சொல்லே மீண்டும் வராத வகையில் (deduplication) நிரல்படுத்தி தமிழின் சொல்வளத்தை உலகறியச் செய்யவும் "சொற்குவைத்' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
 கடந்த ஆண்டு சிகாகோவில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தொடங்கி வைத்த இந்தத் திட்டத்தின் கீழ் சொற்குவை.காம் (sorkuvai.com) என்ற இணையதளத்தின் வாயிலாக தமிழ்க் கலைச்சொல் தொடர்பான ஐயங்களைத் தீர்த்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
 பொது முடக்க காலத்தில் குழந்தைகளும் பயன்பெறும் வகையில் சொற்குவை தளத்தின் சுட்டுரைப் பக்கத்தில் நாள்தோறும் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழி சொற்களுக்கு நிகரான 10 தமிழ்ச் சொற்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.
 இந்தச் சொற்கள் பெரும்பாலான பெற்றோரைச் சென்றடையும் வகையில் யு-டியூப், முகநூல் ஆகியவற்றுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.


 இது குறித்து அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் இயக்குநர் தங்க.காமராசுவிடம் கேட்டோம்:
 "இன்றைய சூழலில் ஆங்கிலக் கல்வியின் மீதான ஈர்ப்பு வெகுவாக அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் நமது குழந்தைகளுக்கு தமிழ் மொழியைப் பற்றியும், அதில் உள்ள சொற்கள் குறித்தும் கற்றுக் கொடுப்பது அவசியம். நாம் ஒவ்வொரு நாளும் தமிழ் என நினைத்து பயன்படுத்தும் பல சொற்கள் பிறமொழிச் சொற்கள் ஆகும்.
 அதற்கு நிகரான தமிழ்ச் சொற்களை இளம் தலைமுறையினரிடம் அறிமுகப்படுத்த வேண்டும் என நினைத்திருந்த வேளையில், பொது முடக்கம் அதற்கான வாய்ப்பாக அமைந்தது. இந்த நேரத்தில் வீட்டிலிருக்கும் குழந்தைகளிடம் இந்த சொற்களை கொண்டு சேர்க்க வேண்டும் என முடிவெடுத்தோம்.
 அதன்படி, கடந்த ஏப்.1-ஆம் தேதி முதல் சொற்குவையின் கீச்சகத்தில் (சுட்டுரை) தினமும் 10 சொற்களைப் பதிவிட்டு வருகிறோம்.
 அதில் பல சொற்களை பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து வருவதாக முகநூல், யு-டியூப், சுட்டுரைப் பதிவுகளில் தெரிவிக்கின்றனர். சொற்குவை தளத்தில் கலைச் சொற்களைப் பெறுவதற்காக கடந்த 7 மாதங்களில் 14 கல்லூரிகளில் மாணவர்களிடையே கலைச் சொற்கள் குறித்த விழிப்புணர்வு முகாமை நடத்தினோம். அதன் மூலம் சுமார் 30 ஆயிரம் சொற்கள் கிடைத்தன. என்றாலும், அதில் 212 சொற்களுக்கு மட்டுமே வல்லுநர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதே போன்று கட்டணமில்லா தொலைபேசி மூலமாக இளைஞர்கள், மாணவர்கள் 1,200 சொற்களை வழங்கியுள்ளனர். இது தவிர அகர முதலித் திட்ட இயக்ககத்தில் உள்ள 10 பதிப்பாசிரியர்கள் 15 முதல் 20 கலைச் சொற்களை உருவாக்கி உள்ளனர். இந்த தளத்தில் இதுவரை 4 லட்சம் கலைச் சொற்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
 சொற்குவை தளத்தை உலகெங்கும் உள்ள புலம் பெயர்ந்த தமிழர்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் சொற்குவைக்கு தினமும் புதிய சொற்களை வழங்குகின்றனர். தங்களுக்கு தேவையான சொற்களையும் எடுத்துக் கொள்கின்றனர்.
 இதற்காக 14469 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்து வரும் சில மாதங்களில் இந்த கட்டணமில்லா தொலைபேசி எண்ணை 24 மணி நேரமும் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். இதற்கான புதிய அலுவலகம் சென்னை பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி நகரில் உள்ள நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள கட்டடத்தின் முதல் தளத்தில் செயல்படவுள்ளது'' என்றார்.
 இந்தத் தளத்தை இளைஞர்கள் அதிகளவில் பயன்படுத்தி வரும் நிலையில், அதை குழந்தைகளிடமும் கொண்டு சேர்க்கும் முயற்சியில் அகர முதலித் திட்ட இயக்கம் தற்போது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி இதற்குச் சான்றாக பென்சில்- கரிக்கோல், ரீஃபில்- மைக்குழல், ரோஸ் மில்க்-செம்பால், சமோசா- கறிப்பொதி, வைரஸ்- தீநுண்மி, சந்தோஷம்- மகிழ்ச்சி, ஜாக்கிரதை- விழிப்புணர்வு, ரசகுல்லா- பாகு உருண்டை, பூஜ்ஜியம்- சுழியம், தொப்பி- தலையணி, சுத்தம்- தூய்மை, சீக்கிரம்- விரைவு, சார்ஜர்- மின்னூட்டி, ஸ்மார்ட்போன்- திறன்பேசி உள்ளிட்ட சொற்களை இளையதலைமுறையிடம் வேகமாக சென்றடைந்து வருகிறது.


 -அ.ஜெயச்சந்திரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com