பூதப்பாண்டி பிரபலங்கள்

பூதப்பாண்டி என்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சிற்றூர். அருமநல்லூருக்கு அருகிலுள்ள ஊர். 
பூதப்பாண்டி பிரபலங்கள்

பூதப்பாண்டி என்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சிற்றூர். அருமநல்லூருக்கு அருகிலுள்ள ஊர். அந்தக் காலத்தில் என்னுடைய மாமா உட்பட அந்த ஊரிலுள்ள பெரும்பாலானவர்கள் பூதப்பாண்டி அரசு பள்ளியில்தான் படித்திருப்பார்கள். நான் என்னுடைய பள்ளி பருவத்தில் அம்மாவின் ஊருக்குப் போகும்பொதெல்லாம் வழியில் பூதப்பாண்டியில் நிறைய குரங்குகளையும் நாகப்பழ மரங்களையும் பார்த்திருக்கிறேன்.
 இந்த ஊர் பெயர் வருகிறபோதெல்லாம், நாங்கள் பள்ளி பருவத்தில் சக நண்பர்களோடு விளையாடும் போது "குற்றால குரங்கு கொப்பைவிட்டு இறங்கு, பூதப்பாண்டி குரங்கு படியை விட்டு இறங்கு" என்று பாடி ஓடி விளையாடிய நினைவுகள் வருகின்றன. அந்த அளவிற்கு அங்கே தாவும் குரங்குகளும் மரங்களுமாய் அந்தக் கிராமம் இயற்கை எழிலோடு இருந்தது.
 அப்போது. பசுமை நிறைந்த அந்த ஊரிலுள்ள பூதலிங்கஸ்வாமி கோயிலை வைத்தே அந்த ஊருக்கு பூதப்பாண்டி என்ற பெயர் வந்தது. அந்த ஊரில் பூதலிங்கம் என்று சப்தமிட்டு அழைத்தால் நிறையப்பேர் திரும்பி பார்ப்பார்கள். அந்த அளவிற்கு அந்த ஸ்வாமியின் பெயரைக் கொண்டு பூதலிங்கம் என்ற பெயருடையவர்கள் நிறையப்பேர் அந்த ஊரில் இருந்தார்கள்.
 அவர்களை வேறுபடுத்த கறுத்த பூதலிங்கம், வெள்ளை பூதலிங்கம், குண்டு பூதலிங்கம், நெட்டை பூதலிங்கம் என பல சிறப்புப் பெயர்களும் நண்பர்களின் பேச்சு வழக்கில் உலா வருவது உண்டு. இதெல்லாம் இந்த ஊரைப் பற்றிய ஒரு சிறு வரலாறு. ஆனால் இந்த ஊர் எவ்வளவு பெரிய ஆளுமைகளை இந்த உலகிற்குத் தந்திருக்கிறது என்பதுதான் மிகவும் வியக்கத்தக்க செய்தி.
 சமீபத்தில் சர்வதேச பொறுப்பில் தமிழ்நாட்டிலிருந்து இரண்டு ஆளுமைகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒருவர் செளமியா சுவாமிநாதன். இவர் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியாக நியமிக்கப் பட்டிருக்கிறார். இன்னொருவர் டி.எஸ். திருமூர்த்தி. இவர் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா சார்பில் நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்கப் பட்டிருக்கிறார். இவர்கள் இருவருமே தமிழ்நாட்டோடு தொடர்புடையவர்கள் மட்டுமல்ல. குமரி மாவட்டத்திலுள்ள சிற்றூரான பூதப்பாண்டியோடும் தொடர்புடையவர்கள். இந்தத் தொடர்பை அந்த ஊரின் இன்றைய தலைமுறையினராவது தெரிந்திருப்பார்களா என்பது சந்தேகத்திற்குரியதுதான்.
 செளமியா சுவாமிநாதன் இந்திய பசுமைப் புரட்சியின் தந்தையாகப் போற்றப்படுகிற எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் புதல்வி. அவரது தாயார் மீனா சுவாமிநாதன் மிகச் சிறந்த கல்வியாளர். அந்தக் காலத்தில் பூதப்பாண்டியைச் சேர்ந்த மிகப் பிரபலமாக இருந்த பொருளாதார மேதையான சுப்ரமணியம் பூதலிங்கத்தின் மகள்தான் மீனா சுவாமிநாதன்.
 பூதலிங்கம் அப்போது இந்தியாவில் இரும்பு தொழிற்சாலைகள் நிறுவியதில் மிக முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவர். ஐசிஎஸ் பணியில் பல துறைகளில் செயலாளராக இருந்தவர். குறிப்பாக நிதிச் செயலாளராகவும் பணியாற்றினார்.
 1964 -இல் வெளியான ஒரு ரூபாய் நோட்டுக்களில் பூதலிங்கம் அவர்களின் கையெழுத்துதான் இருந்தது. பழைய நோட்டுக்களைச் சேர்ப்போர் இடையே அந்த ஒரு ரூபாய் கிடைப்பது மிக அரிதாக இருந்தது. சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு கூட அந்த ஒரு ரூபாய் நோட்டிற்காக பலரும் 25,000 ரூபாய் கூட தரத் தயாராக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 அதே போல் இந்திய வெளியுறவுத் துறையில் பணியாற்றி வந்த டி.எஸ்.திருமூர்த்தி தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர இந்திய பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருடைய மாமனாரும் இதே பூதப்பாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். திருமூர்த்தியின் மனைவி கெளரி திருமூர்த்தி பிரபல டென்னிஸ் விளையாட்டு வீரரான ராமநாதன் கிருஷ்ணனின் மகளாவார். ராமநாதன் கிருஷ்ணனும் பூதப்பாண்டியில் பிறந்தவர் ஆவார்.
 தமிழகத்தில் எல்லோராலும் அறியப்பட்ட சமூக சீர்திருத்தவாதி, கம்யூனிச சித்தாந்தவாதி பி.ஜீவானந்தம் என்ற ஜீவாவும், தமிழ், மலையாள திரைப்பட உலகில் மிகப் பிரபலமாக இருந்த இசையமைப்பாளர் பி.ஏ.சிதம்பரநாதனும் இந்தப் பூதப்பாண்டியைச் சேர்ந்தவர்கள்தான்.
 நாகர்கோவிலுக்கு வெகு அருகிலிருக்கும் இந்த ஊர் மேற்கு மலைத் தொடரின் அடிவாரத்தில் அழகிய சிற்பங்கள் நிறைந்த பூதலிங்க நாதரின் கோயிலோடு அழகுற வீற்றிருக்கிறது.


 -குமரி எஸ். நீலகண்டன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com