மாணவர்களுக்கு இலவச சேமிப்பு கணக்கு!

மாணவர்களுக்குக் கல்வி மட்டுமன்றி, சேமிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, தகுதி வாய்ந்த மாணவர்களைத் தொழில்முனைவோர் ஆக்கும் சமூகப் பணியில் ஈடுபட்டு வருகிறது கரூர் வள்ளுவர் அறிவியல் 
 மாணவர்களுக்கு இலவச சேமிப்பு கணக்கு!

மாணவர்களுக்குக் கல்வி மட்டுமன்றி, சேமிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, தகுதி வாய்ந்த மாணவர்களைத் தொழில்முனைவோர் ஆக்கும் சமூகப் பணியில் ஈடுபட்டு வருகிறது கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி.
 இதற்காகக் கல்லூரியில் 100 மாணவர்கள் கொண்ட "அறிவு விழிப்புணர்வு படை' உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வங்கிச் சேமிப்பின் அவசியம் குறித்தும் விளக்கப்படுகிறது.
 இதைத் தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களைக் கண்டறிவர், அவர்களது பெற்றோரிடம் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.
 வள்ளுவர் கல்லூரி மற்றும் வள்ளுவர் அறக்கட்டளை சார்பில் மாணவர்கள் பெயரில் ரூ.500 செலுத்தி பிரதான வங்கிகளில் அவர்களுக்கு வங்கிக் கணக்கைத் தொடங்கி அதற்குப் பின் கணக்குப் புத்தகத்தை அவர்களிடம் வழங்குகின்றனர்.
 வள்ளுவர் கல்லூரியின் தலைவர் க. செங்குட்டுவன், அறிவு விழிப்புணர்வு படைக்குத் தலைமை வகித்து, தனது சொந்த நிதியில் கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, கரூர் நகர் பகுதி, லாலாப்பேட்டை, கிருஷ்ணராயபுரம், பழைய ஜெயங்கொண்டம், உப்பிடமங்கலம், ஜெகதாபி, வெள்ளியணை, தரகம்பட்டி, காணியாளம்பட்டி, க.பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் சுமார் 7,000 பேருக்கு தொடக்க இருப்புப் பணத்தைச் செலுத்தி வங்கிச் சேமிப்புக் கணக்கைத் தொடக்கி வைத்துள்ளார். இதன் மூலம் மாணவர்கள் சேமித்த தொகை ரூ.70 லட்சம் ஆகும்.
 இதே போன்று வள்ளுவர் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்பில் சேரும் மாணவர்களிடம் கேட்கப்படும் முதல் கேள்வி, எதிர்காலத்தில் தொழில்முனைவோர்களாக விருப்பம் உள்ளவர்கள் யார்? என்பது தான். தொழில் முனைவோராக விரும்புபவர்களுக்கு கல்லூரி சார்பில் இலவசமாக சேவல், 2 கோழிகள் என 3 நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கப்படுகிறது. அவை நன்கு வளர்க்கப்பட்டு, கோழி, சேவல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அவற்றை விற்பனை செய்ய கல்லூரி சார்பில் கல்லூரி முன்பு தற்காலிகக் கோழிச்சந்தை உருவாக்கப்படுகிறது.
 இங்கு அரவக்குறிச்சி, உப்பிடமங்கலம், க.பரமத்தி, கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வந்து, சேவல்களை விலைக்கு வாங்கிச் செல்கிறார்கள். இதன் மூலம் கிடைக்கும் வருவாய் கல்லூரி சார்பில் மாணவர்கள் பெயரில் வங்கி சேமிப்புக் கணக்குத் தொடங்கிக் வழங்கப்படுகிறது. கடந்த 2012 முதல் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் மூலம் மாணவர்கள் இதுவரை 7, 000 பேர் இணைந்து சுமார் ரூ.40 லட்சம் வரை சம்பாதித்து, தானே கல்லூரி கல்விக்கட்டணத்தைச் கட்டியுள்ளனர். இதுமட்டுமன்றி, மேற்கல்வி பயில்வதற்கும் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.
 இது தொடர்பாக கல்லூரியின் தலைவர் க. செங்குட்டுவனிடம் கேட்டோம்:
 "உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இனி உலகப் பொருளாதாரம் என்னவாகும், எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற வினாவும் ஒவ்வொருவரிடமும் எழுந்துள்ளது. இத்தகைய அசாதாரண சூழலும் கரூர் மாவட்டத்தில் பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர், ஏழை குடும்பத்தினர் தாக்குப்பிடிக்கிறார்கள் என்றால் எங்களால் அவர்களிடையே சேமிப்புப் பழக்கம் உருவாக்கப்பட்டதும் ஓர் காரணம். எத்தனை தலைமுறைக்கு சொத்து இருந்தாலும், சேமிப்பு என்பது இல்லாவிட்டால், சொத்துகள் விரைவில் காணாமல் போய்விடும்'' என்றார் அவர்.
 -அ. அருள்ராஜ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com