தற்கொலை  தீர்வு ஆகாது

ரிஷிகபூர் மற்றும் இர்பான்கான் என இரு பெரிய நட்சத்திரங்களை இழந்த பாலிவுட், தற்போது 34 வயதான இளம் நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலை முடிவால் கலங்கியிருக்கிறது.
தற்கொலை  தீர்வு ஆகாது


ரிஷிகபூர் மற்றும் இர்பான்கான் என இரு பெரிய நட்சத்திரங்களை இழந்த பாலிவுட், தற்போது 34 வயதான இளம் நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலை முடிவால் கலங்கியிருக்கிறது.

பீகாரில் பிறந்து வளர்ந்தவரான சுஷாந்த் டெல்லியில் படித்தவர். நடனத்தில் அதிக ஈர்ப்பு கொண்டவர். பின்னாளில் நடனக்கலைஞராக மாறி சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அவர் அறிமுகமானது சின்னத்திரையில் தான். சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமான சுஷாந்த் சிங் அதன்பின் பெரியதிரைக்கு அறிமுகமானார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட "எம்.எஸ்.தோனி தி அன்ட் டோல்டு ஸ்டோரி' படத்தில் நடித்ததன் மூலம் நாடு முழுவதும் பிரபலமானவர். இப்போது வரை தோனியின் நெருங்கிய நண்பர்களில் சுஷாந்தும் ஒருவர்.

சமூக ஊடகங்களில் தன்னுடைய கருத்துகளை தொடர்ந்து பதிவேற்றி வருபவர். குறிப்பாக தான் படித்த இயற்பியல் பாடங்கள் குறித்து பல்வேறு விஷயங்களை எடுத்துக் கூறி மாணவர்களுக்கு வழிகாட்டுவார். கேரளாவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது அங்குள்ள ஒருவர், "மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உள்ளது. ஆனால், என்னிடம் எந்த வசதியும் இல்லை' என்று சுஷாந்திடம் தெரிவித்து இருந்தார். "உங்களிடம் ஏன் இல்லை என்று சொல்கிறீர்கள்?' என்று அந்த நபருக்கு 1 கோடி ரூபாய் அனுப்பி கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தவர் தான் சுஷாந்த்.

இவர் தனது வாழ்வின் லட்சியங்களை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். அதில், விமானத்தை இயக்க வேண்டும், விண்வெளி குறித்து தெரிந்துகொள்ள ஏழை குழந்தைகளை நாசாவுக்கு அனுப்ப வேண்டும், கைலாய மலைக்கு சென்று தியானம் செய்ய வேண்டும், விவேகானந்தர் குறித்து ஆவணப்படம் எடுக்க வேண்டும் என்று சொல்லியவர் இப்போது தனது மூச்சை தானே நிறுத்திக் கொண்டது அவரது குடும்பத்தாரையும் நண்பர்களையும் நிலைகுலையச் செய்துள்ளது.

2019-இல் ஷ்ரத்தா கபூருடன் இணைந்து சுஷாந்த் நடித்த படம் "சிச்சோரே'. "தங்கல்' படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கியது. தோல்வி என்பது முடிவல்ல, அது வெறும் பாடம் என்று எடுத்துக்கொண்டு, முனைப்புடன் செயல்பட்டால் வாழ்க்கையில் மிகப்பெரிய சந்தோஷங்களும், வெற்றியும் தேடி வரும் என்பதை சொல்லும் படம். தற்கொலை என்பது எந்த பிரச்னைக்கும் தீர்வு ஆகாது என்பதை வலியுறுத்திய படம்.

விண்ணில் பிரகாசமாக ஜொலிக்க வேண்டிய நட்சத்திரம் இப்போது காணாமல் போய்விட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com