வரலாற்றுச் சுவடுகளின் சின்னம் கொடும்பாளூர்!

தமிழக வரலாற்றில் மன்னர்கள் தங்கள் ஆட்சியுரிமையைத் தக்க வைப்பதற்காகப் பல போர்களைச் சந்தித்த இடம் கொடும்பாளூர்.
வரலாற்றுச் சுவடுகளின் சின்னம் கொடும்பாளூர்!


தமிழக வரலாற்றில் மன்னர்கள் தங்கள் ஆட்சியுரிமையைத் தக்க வைப்பதற்காகப் பல போர்களைச் சந்தித்த இடம் கொடும்பாளூர். ஆனால் தற்போது அதற்கான எந்தத்தடயமும் இன்றி அமைதியான ஒரு கிராமமாகத் திகழ்கின்றது கொடும்பாளூர்.

சங்க காலத்திலிருந்தே புகழ் பெற்ற நகரமாக விளங்கிய கொடும்பாளூர் சோழ மன்னர்களின் தலைநகரமான உறையூருக்கும், பாண்டிய மன்னர்களின் தலைநகரமான மதுரைக்கும் இடையே இருந்த பெருவழிப்பாதையில் எழில்மிகு நகரமாக விளங்கியுள்ளது. கோவலனும், கண்ணகியும் புகார் நகரிலிருந்து கொடும்பாளூர் வழியாக மதுரைக்குச் சென்றதாக அறியமுடிகின்றது. கொடும்பாளூர், சிலப்பதிகாரத்தில் "கொடும்பை நெடுங்குளக் கோட்டகம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. "கோனாட்டுக் கொடும்பாளூர்' என்று "கொங்கு மண்டல சதகம்' இவ்வூரைக் குறிப்பிடுகின்றது.

சிவபெருமானைப் போற்றி திருத்தொண்டு புரிந்த நாயன்மார்களில் ஒருவரான "இடங்கழிநாயனார்' இடங்கழி நாயனார் இப்பகுதியின் மன்னராக இருந்து சைவம் தழைத்தோங்கத் தொண்டு செய்தவர் ஆவார்.

இப்பகுதியை அரசாண்ட வேளிர்களின் தலைநகரமாக கொடும்பாளூர் விளங்கியுள்ளது.வேளிர்களில் பேரோடும் புகழோடும் விளங்கிய மன்னரான "பூதிவிக்ரமகேசரி' யும் இரண்டாம் சுந்தரசோழ பராந்தகனும், இரண்டாம் ஆதித்த சோழனும் சம காலத்தவர்கள் ஆவர்.

வானவன் மாதேவி!: சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழுடன் விளங்கிய நம் மாமன்னர் அருள்மொழிவர்மன் (ராஜராஜசோழன்) மீது இணையில்லாத காதல் கொண்ட மங்கையர் திலகம் கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" படித்த யாரும் மறக்க முடியாது.

ஈழத்துப்பட்ட சிறிய வேளாரின் மகளான வானதி இளம் வயதிலேயே தன் தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் பெரிய வேளார் சோழ சாம்ராஜ்யத்தின்சேனாதிபதி பூதி விக்ரமகேசரியால் பாசத்துடன் வளர்க்கப்பட்டவள் வானதி.

ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர் பெரிய வேளார் ஈழத்தீவு சென்றதால் மாமன்னர் ராஜராஜ சோழனின் அன்புச் சகோதரி குந்தவை நாச்சியாரால் சோழ அரண்மனையில் பாசமும் நேசமும் ஊட்டி வளர்க்கப்பட்டாள் வானதி.

குந்தவையின் ஆருயிர் தோழியாக இருந்த வானதி, இயல்பாகப் பயந்த சுபாவம் கொண்டவள். அடக்கமும் இனிமையும் தன்னகத்தே கொண்ட பேரழகுப் பெட்டகம் வானதி.

வானதியின் பயந்த சுபாவத்தைப்போக்கி, தன் தம்பி அருள்மொழிவர்மனுக்கேற்ற வீர மங்கையாக வானதியை மாற்ற அவளுக்கு நிறைய சோதனைகளைக் கொடுத்து அவள் மனதில் தைரியத்தை வளர்த்தவர் குந்தவை நாச்சியார்.

அருள்மொழியின் அன்பைப் பெற்று அவரது கரம் பற்றிய வானதி, "வானவன் மாதேவி" மற்றும் "திரிபுவன மாதேவி" என்ற பட்டப் பெயர்களையும் கொண்டிருந்தார். இவருக்கு மகனாகப் பிறந்தவர் தான் "கங்கைகொண்டான்" "கடாரம் வென்றான்' என்று போற்றப்படும் "மதுராந்தகன்' எனும் "இராஜேந்திரசோழன்'.

கொடும்பாளூர் மூவர் கோயில்: கொடும்பாளூரிலுள்ள மூவர் கோயிலும் முசுகுந் தேஸ்வரர் கோயிலும் வேளிர் வம்ச மன்னர்களின் பெருமைகளுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன. தென்னிந்தியக் கோயில் கட்டடக் கலை வளர்ச்சி தொடர்பான வரலாற்றில் மூவர் கோயிலின் அமைப்பும், அக்கோயிலிலுள்ள எழில்மிகுந்த சிற்பங்களும் சிறப்பானதொரு இடத்தைப் பெறுகின்றன.

மூவர் கோயிலின் நடுக்கோயிலில் ஒரு கிரந்தக் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டு கொடும்பாளூர் வேளிர்களது ஒன்பது தலை முறைகளின் வம்சாவளிகளைப் பற்றிக் குறிப் பிடுகின்றது. கல்வெட்டின் கடைசிப் பகுதி மூவர்கோயிலை நிர்மாணித்த மன்னன்"பூதி விக்ரமகேசரி" யைப்பற்றிக் குறிப்பிடு கின்றது. இவனுக்கு "கற்றளைப் பிராட்டியார்' மற்றும் "வரகுணவாட்டி' என இரண்டு மனை வியர் இருந்ததையும் "பராந்தக வர்மன்' மற்றும் "ஆதித்த வர்மன்' என இரண்டு மகன்கள் இருந்ததையும் இக்கல்வெட்டு தெரிவிக் கின்றது.

வேளிர் வம்ச மன்னனான "பூதி விக்ரம கேசரி' தனது பெயரிலும் தனது மனைவியரான "கற்றளைப் பிராட்டியார்' மற்றும் "வரகுணவாட்டியார்' பெயரிலும் மூன்று கோயில்களைக் கட்டியதாக கொடும்பாளூர் கல்வெட்டு தெரிவிக்கின்றது. இக்கோயில் "மூவர் கோயில்' என வழங்கப்படுகின்றது.

காளாமுகர்களுக்கு மானியம்: "காளாமுகர்கள்' என்பவர்கள் சைவ சமயத்தின் ஒரு பிரிவினர் ஆவர். இவர்கள் நெற்றியில் கருப்பு வண்ணத்தைப் பூசிக்கொண்டுதோற்றத்திற்கு பயங்கரமானவர்களாகத் தெரிவர். காளாமுகர்கள், தாங்கள் மனிதர்களுக்கும் அசுரர்களுக்கும் பிறந்தவர்கள் என்று தம்மைக் கூறிக் கொண்டனர். தண்ணீர் குடிப்பதற்காக மனிதர்களின் மண்டை ஓட்டினை யே காளாமுகர்கள் பாத்திரமாகப் பயன்படுத்தியுள்ளனர். சுடுகாட்டுச் சாம்பலையே தங்கள் உடல் முழுவதும் பூசிக் கொண்டனர். கையில் எப்போதும் மண்டை ஓட்டையும் தடியையும் வைத்துக் கொண்டிருந்தனர். சிவபெருமானுக்கு "கள்" வைத்துப் படையல் செய்தனர். இவர்கள் நீண்ட ஜடாமுடியைத் தரித்திருந்ததோடு ருத்திராட்ச மாலைகளையும் அணிந்திருப்பர்.

சைவ சமயத்தைச் சார்ந்த இந்தக் காளா முகர்கள் கர்நாடக மாநிலத்தில் (கொங்கு நாடு) அதிகமாக வசித்து வந்தனர். கொடும்பாளூரை ஆண்ட வேளிர்கள் கொங்கு நாட்டில் கொண் டிருந்த அரசியல் தொடர்பு காரணமாக"காளா முகர்கள்" கொடும்பாளூருக்கு வந்து தங்கி யிருக்கக்கூடும் என்பது வரலாற்று அறிஞர்களின் கருத்து.

வேளிர்களின் மன்னரான பூதி விக்ரமகேசரி, காளாமுக சைவப் பிரிவின் தலைவனான "மல்லிகார்ஜுனனுக்கு' ஒரு பெரிய மடம் கட்டிக் கொடுத்து அம்மடத்தில் ஐம்பது காளாமுகர்களுக்கு உணவளிக்க பல கிராமங்களை மானியமாக அளித்ததாக மூவர் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டுத் தெரிவிக்கின்றது.

மூவர் கோயில் அமைப்பு: கொடும்பாளூரில் இருந்த மூவர் கோயிலில் தற்போது இரண்டு கோயில்கள் மட்டுமே உள்ளன. வடக்குப் புறம் இருந்த கோயில் சிதைவடைந்து தற்போது இக்கோயிலின் அஸ்திவாரம் மட்டுமே உள்ளது. மூன்று கோயிலிலும் கருவறையும் அதன் முன்னால் அர்த்தமண்டபமும் உள்ளது. இம்மூன்று கோயிலும் மேற்கு திசை நோக்கியுள்ளன. இம் மூன்று கோயிலுக்கும் பொதுவானதாக ஒரு மகாமண்டபம் இருந்துள்ளது. இம்மண்டபமும் காலவெள்ளத்தில் அழிந்து தற்போது அஸ்திவாரம் மட்டுமே உள்ளது.

மூவர் கோயிலின் உள்ளே மூலவர் விமானத்தின் கற்கள் ஒன்றின் மீது ஒன்றாக அழகாக அடுக்கப்பட்டிருக்கும் பாங்கு வியப்பை ஏற்படுத்தியது.

ஒரு கல்லின் மீது மற்றொரு கல்லை அடுக்கி அந்த பாரத்தைக் கொண்டு (இர்ன்ய்ற்ங்ழ் ரங்ண்ஞ்ட்ற்) விமானத்தின் உள்பகுதி கூம்பு போல் வடிவ மைத்திருக்கும் சோழர் காலச் சிற்பிகளின் தொழில் நுட்பம் நமக்கு ஆச்சரியத்தை அளித்தது. ஆனால், வெளியிலிருந்து பார்க்கும் போது முழுவதும் இறுக்கமாகக் (நர்ப்ண்க்) கட்டப் பட்டது போன்ற தோற்றத்தை அளிக்கின்றது.

விமானத்தின் உச்சிப்பகுதி ஒரு திருமந்திரக் கல்லினால் மூடப்பட்டுள்ளது. மாடங்களுக்கு மேல் உள்ள பூதகணங்கள், மகர தோரணங்கள், கூடுகள் ஆகியனவும் சோழர்கள் காலச் சிற்பிகளால் நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது.

கோயில் ஒரு தாமரை மலர் போன்ற பீடத்தின் மேல் அமைக்கப் பட்டுள்ளது. அடிப்பகுதியைச் சுற்றியுள்ளயாளிகளின் சிற்பங்களும் நான்கு மூலைகளிலும் உள்ள மகரங்களின் திறந்த வாயிலிருந்து வெளிப்படும் சிறிய மனித உருவங்களும் நம்மைக் கவர்கின்றன. கருவறைச் சுவற்றின் மூன்று பக்கங்களிலும் மாடங்கள் உள்ளன.

கருவறையின் மாடங்களிலும் விமானத்திலும் காணப்படும் சிற்பங்கள் தமிழக சிற்பக்கலைத் திறனுக்குக் கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளன. இச்சிற்பங்களின் அங்க அமைப்பு, அளவு, பரிமாணங்கள் மனித உடற்கூற்றோடு ஒத்திருப்பது சிறப்பானதாகும்.

சிவபெருமானின் திருவடிவங்கள்: சிவபெருமானின் பல திருவடிவங்கள் புராணக் கதைகளுக்கு ஏற்ப மூவர் தலத்தில் சிற்பங்களாகக் காட்சியளிக்கின்றன.

உமையொரு பாகனாக அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலம், வீணையைக் கையிலேந்தி இசைக்கலையின் வித்தகராகக் காட்சியளிக்கும் வீணாதர தட்சிணா மூர்த்தி, தனது பக்தன் மார்க்கண்டே யனைக் காப்பதற்கு காலனைக்
காலால் உதைத்துக் களிநடம் புரிந்த காலாந்தக மூர்த்தி, நான்முகனின் சிரசினைக்கொய்த பாவத்தைப் போக்க ஆடையற்ற நிலையில் கையிலே கபாலமேந்தி பிச்சை கேட்கும் பிட்சாடனமூர்த்தி, தாருகாவனத்தில் யானை அரக்கனைக் கொன்று அந்த யானையின் தோலைப் போர்த்திக் கொண்டு உக்கிர நடனமாடும் கஜசம்ஹாரமூர்த்தி, முப்புரம் எரித்த திரிபுராந்தகர், தன் தேவி பார்வதியைத் தழுவி இன்புற்றிருக்கும் ஆலிங்கனமூர்த்தி, பார்வதி தேவியின் பாசத்தைப் பங்கிட்டுக் கொள்ள வந்த கங்காதேவியுடன் காட்சியளிக்கும் கங்காதரர் போன்ற சிற்பங்கள் நம் கண்களுக்கு விருந்தாகின்றன.

ஐந்தலைக் கோயில்கள்: மூவர் கோயிலுக் குச் சற்று கிழக்கே "ஐந்தலை' என்று ஐந்து கோயில்கள் இருந்துள்ளன. இவையும் காலப்போக்கில் அழிந்து தற்போது அடித்தளம் மட்டுமே காணப்படுகின்றது.

இக்கோயில் இங்குள்ள மற்ற கோயில்களை விட காலத்தால் முற்பட்டது என வர
லாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

கொடும்பாளூரில் கோயில் பகுதியைச் சுற்றி நடைபெற்ற அகழாய்வில் கிடைத்த சிற்பங்கள் அனைத்தும் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இடங்கழி நாயனார்திருக்கோயில் உள்ள இடத்திலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் வழியில் முசுகுந்தேஸ்வரர் திருக்கோயில் உள்ளது.

சிவனடியார்களுக்குத் திருவமுது படைத்த இடங்கழி நாயனார் அவதாரத்தால் "அன்னம் பாலிக்கும் தில்லை திருச்சிற்றம்பலமாகத் திகழ்ந்த திருவூரான கொடும்பாளூர்' சென்று காலத்தை வென்று நிற்கும் இக்கலைக் கோயில்களைக் கண்டு வருவோம்!

திருச்சி-மதுரை வழித்தடத்தில் விராலி மலையைக் கடந்து இடதுபுறம் சென்றால், கொடும்பாளூர் செல்லலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com