தமிழகம் இந்தியா உலகம்

சின்னப்பா தேவர் சொன்னது: இன்னொரு "தனிப்பிறவி' என்று குறிப்பிடத்தக்கவர் கிருபானந்த வாரியார்.
தமிழகம் இந்தியா உலகம்


சின்னப்பா தேவரும் வாரியாரும் 

சின்னப்பா தேவர் சொன்னது: இன்னொரு "தனிப்பிறவி' என்று குறிப்பிடத்தக்கவர் கிருபானந்த வாரியார். நானும் அவரும் பேசிக்கொள்ளும் பாணியே சுவையாக இருக்கும். என்னை அவர் "தேவரய்யா' என்றே அழைப்பார். நான் அவரை "சாமி' என்று கூப்பிடுவேன். முருகன் யாருக்கு முதலில் முக்தி அளிப்பார் என்பதில் எங்களுக்குள் சர்ச்சை எழும்.

""நீ முரட்டு பக்தன். உனக்குத்தான் முதலில் முக்தி கிடைக்கும்'' என்பார் அவர் என்னைப் பார்த்து. ""கடவுள் யாரிடம் இருக்கிறார்?'' என்பதில் நானும் அவரும் மாறுபட்ட கருத்துகளைப் பரிமாறிக் கொள்வோம். 

உள்ளத்தில் அன்போடு நினைப்பவர்களிடம் கடவுள் இருக்கிறார் என்பார் அவர். நான் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். ""மூன்று வகை மனிதர்களிடம்தான் கடவுள் இருக்கிறார். பிறர் சொத்தை அபகரிக்காதவன். மாற்றான் மனைவி மீது இச்சைப் படாதவன். யாருக்கும் எவ்விதத் தீங்கும் இழைக்காதவன்- இவர்கள்தான் அவர்கள்'' என்பதே என் வாதம். 

"அவரவர் வாழ்வில் ஆயிரம் அர்த்தங்கள்' என்னும் நூலில் இருந்து முக்கிமலை நஞ்சன்.



சீனியர்-ஜூனியர்

நடிகை பாரதி அவருடைய கணவர் விஷ்ணுவர்தன் கன்னடப் படவுலகில் நுழைந்தபோது பாரதி சீனியர். விஷ்ணுவர்தன் ஜூனியர். இருந்தும் இருவரும் இணைந்து நடித்த நாலைந்து கன்னடத் திரை படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. விஷ்ணுவர்தனுக்கு பாரதியை பிடித்துப் போய் திருமணம் செய்ய விரும்பினார். பாரதிக்கும் இது தெரியும். ஆனால் அவருக்கு சினிமா நடிகர்களை திருமணம் செய்து கொள்வதில் இஷ்டமில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் பாரதியின் பெற்றோரே விஷ்ணுவர்தன் பெயரைக் கூற... மனம் மாறி ஒப்புக்கொண்டார். 1975-ஆம் ஆண்டு பிப்ரவரி 27 -ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடந்தது. பாரதி-விஷ்ணுவர்தன் தம்பதிக்கு இரண்டு பெண்கள் கீர்த்தி, சந்தனா. இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். 

-ராஜி ராதா


சிம்லா வைஸ்ராய் குடியிருப்பு 

இந்திய நாட்டின் வைஸ்ராயாக இருந்த மவுண்ட்பேட்டன் இந்தியாவிலிருந்து சென்ற பின்னர் பயன்படுத்தப்படாமல் இருந்த சிம்லா வைஸ்ராய் குடியிருப்பானது உயர்நிலை ஆராய்ச்சி நிறுவனமாக மாற்றப்பட்டு அங்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மாற்றத்தை உருவாக்கியவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். 

(ஆதாரம்: பெருமைக்குரிய பாரத ரத்னாக்கள். தகவல்: தங்க. சங்கரபாண்டியன்


உலகின் முதல் ஏர் ஹோஸ்டஸ் 

விமானத்தில் பறக்கும்போது பயணிகளுக்கு சேவை செய்யும் ஏர்ஹோஸ்டஸ் அல்லது ஸ்டூவார்ட்ஸ் பணி முதன்முதலில் 1930-ஆம் ஆண்டு துவங்கியது. ஓக்லாந்து மற்றும் சிகாகோ இடையே இயக்கப்பட்ட யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் தனது குழுவினருடன் முதன் முதலில் பயணம் செய்தவர் படத்திலுள்ள எலென் சர்ச். 

-ராஜிராதா.


முதல் சோதனைக்குழாய் குழந்தை!

உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தையைப் பெற்றெடுத்தவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த லெஸ்லி பிரவுன். 1978-இல் அவர் டெஸ்ட் டியூப் பேபியைப் பெற்றெடுத்தார். லூயிஸ் பிரவுன் என்பது அக்குழந்தையின் பெயர். தற்போது 42 வயது ஆகிறது. (படத்தில் நடுவில் இருப்பவர்) .

-கே. பிரபாவதி,
மேலகிருஷ்ணன்புதூர்.


முதல் இந்தியர்! 

முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் ஜாகிர் உசேன் 1954-ஆம் ஆண்டு உலகப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்புக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பதவியினை ஏற்ற முதல் ஆசியர், முதல் இந்தியர் இவர்தான்.



ஒரு ஓட்டுக் கூட கிடைக்கவில்லை! 

டாக்டர் ஜாகிர் உசேன் நாட்டின் நான்காவது குடியரசுத் தலைவராக அறிவிக்கப்பட்டபோது மொத்தம் 17 பேர் போட்டியிட்டனர். அந்தத் தேர்தலில் 4 லட்சத்து 71 ஆயிரத்து 244 ஓட்டுகள் பெற்றார் ஜாகிர் உசேன். எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் கே.சுப்பாராவ் 3 லட்சத்து 63 ஆயிரத்து 971 ஓட்டுகள் பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்டவர்களில் 9 பேருக்கு ஒரு ஓட்டுக் கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


முதல் முஸ்லிம் தலைவர்! 

தமது பதவிக் காலத்தில் ராஷ்டிரபதி பவனில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட உத்தரவிட்டவர் டாக்டர் ஜாகிர் உசேன்தான். 


சாக்ரடீஸை தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியவர்! 

1920-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார் ராஜாஜி. அன்றைய ஆங்கில ஏகாதிபத்திய அரசு அவரைக் கைது செய்து வேலூர் சிறையில் மூன்று மாத காலத்திற்கு சிறையில் அடைத்தது. சிறையில் தாம் அடைக்கப்பட்ட காலத்தை பயனுள்ளதாக்க விருப்பம் கொண்ட ராஜாஜி "சோக் ரதர்' என்னும் பகுத்தறிவு மேதை சாக்ரடீஸின் வாழ்க்கை வரலாற்றை அனைவரும் அறிந்து கொள்ள உதவும் வகையில் ஓர் நூலினை எழுதினார். சாக்ரடீசை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்திய பெருமை ராஜாஜியையே சாரும். 

("பெருமைக்குரிய பாரத ரத்னாக்கள்' நூலிலிருந்து) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com