"கம்பாலா' - கலக்கும் இளைஞர்கள்!
By DIN | Published On : 01st March 2020 12:55 PM | Last Updated : 01st March 2020 12:55 PM | அ+அ அ- |

நம் தமிழ்நாட்டில் விளையாடப்படும் மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு போல கர்நாடக மாநிலத்தில் "கம்பாலா' என்றழைக்கப்படும் எருமை மாடு பந்தயம் மிகப் பிரபலம். இது உடுப்பி மற்றும் மங்களூர் பகுதிகளில் உள்ள சேறும், சகதியுமான விவசாய நிலங்களில் ஆண்டுதோறும் நடத்தப்படும் போட்டி. அப்பகுதி இளைஞர்களின் வீரத்தை பறைசாற்றும் விளையாட்டாகக் காலங்காலமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதில் கலந்து கொண்ட கர்நாடக இளைஞர் ஒருவர் இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
அதாவது 142.50 மீட்டர் தூரத்தை 13.62 விநாடிகள் கடந்து அசத்தியிருக்கிறார், சீனிவாச கெளடா என்ற இளைஞர். இவர் மங்களூருவை அடுத்த மூடாபித்ரி கிராமத்தைச் சேர்ந்தவர். சீனிவாச கெளடா போட்டியில் கலந்து கொண்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகவே, ஒரே நாளில் அவர் பிரபலமடைந்திருக்கிறார்.
இவர் பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு, கட்டட தொழிலாளியாக வாழ்க்கைக் கழித்து வருபவர். சிறுவயது முதலே விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டு, கடந்த 5 ஆண்டுகளாகத் தொடர்ந்து இப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தவர் தற்போது இந்தச் சாதனையைச் செய்துள்ளார்.
உசைன் போல்ட், உலகப் புகழ் பெற்ற தடகள வீரர் ஆவார். இவர், 2009-இல் பெர்லினில் நடைபெற்ற உலக தடகளத்தில் 100 மீட்டர் ஓட்டத்தை 9.58 விநாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தார். தற்போது நடைபெற்ற கம்பாலாவில் சீனிவாச கெளடாவின் வேகத்தை உசைன் போல்ட்டின் வேகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சீனிவாச கெளடா 142.50 மீட்டரை 13.62 விநாடிகளில் கடந்துள்ளார். 142.5 மீட்டரில் அவர் ஓடியதை 100 மீட்டர் தூரத்துக்குக் கணக்கிட்டு பார்க்கும் போது அவர் அந்தத் தூரத்தை 9.55 விநாடிகளில் கடந்துள்ளார். 100 மீட்டர் தூரத்தை 9.55 விநாடிகளில், அதிலும் சேறும், சகதியுமான கடினமான களத்தில் ஓடி இந்த அசுர சாதனையைப் புரிந்துள்ளார் என்கிறார்கள் விளையாட்டு ஆர்வலர்கள்.
முறையாகப் பல ஆண்டுகாலம் கடும் பயிற்சி பெற்ற உசைன் போல்ட் ஓட்டப் பந்தயக் களத்தில் சாதனை செய்தது பெரிதல்ல. பயிற்சி பெரிதும் இல்லாத சீனிவாச கெளடா என்ற இந்த கிராமத்து இளைஞர் சேறும், சகதியுமான விவசாய நிலத்தில் ஓடி போல்ட்டின் சாதனையை முறியடித்தது அசாத்தியமான சாதனையாகும்.
இதுதொடர்பாக, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், "இந்த வீரரை மத்திய விளையாட்டு அமைச்சகம் தொடர்பு கொண்டுள்ளோம். அவருக்குத் தலைசிறந்த பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும்'' என பதிவிட்டார். ஆனால் மத்திய அரசு வேண்டுகோளை ஏற்க மறுத்துவிட்டார் சீனிவாச கெளடா .
-ராஜன்
நிஷாந்த் ஷெட்டி
உசைன் போல்ட்டின் சாதனையை உடைக்கும் திறமை படைத்த சீனிவாச கெளடா பற்றிய செய்தியின் தாக்கம் தணியுமுன்பே , சீனிவாச கெளடாவின் சாதனையை உடைத்து முன்னேறியிருக்கிறார் நிஷாந்த் ஷெட்டி. மங்களூரு "கம்பாலா' போட்டியில் புதிய சாதனை படைத்திருப்பது உண்மைதான். உடனே ஜமைக்காவின் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட்டுடன் என்னை ஒப்பிட்டு விடாதீர்கள்.. அது முறையல்ல.. ஏனென்றால் கம்பாலா களத்துக்கும், ஓட்டப்பந்தய களத்துக்கும் அதிக வித்தியாசம் உள்ளது' என்கிறார் கம்பாலா போட்டியில் புதிய சாதனை படைத்த வீரர் நிஷாந்த் ஷெட்டி.
கம்பாலா போட்டியில் 143 மீட்டர் தூரத்தை 13.61 விநாடிகளில் ஓடிக் கடந்து சீனிவாச கெளடாவின் சாதனையை நிஷாந்த் ஷெட்டி முறியடித்துள்ளார். சீனிவாச கெளடாவின் சாதனை 13 .62 விநாடிகள்.
பிப்ரவரி 16 -ஆம் தேதி மங்களூரு வேனூர் பகுதியில் நடந்த கம்பாலா போட்டியில் நிஷாந்த் ஷெட்டி, சீனிவாச கெளடா கடந்த தூரத்தை, 13.61 விநாடிகளில் கடந்து புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார். அதாவது,நூறு மீட்டர் தூரத்தை 9.52 விநாடிகளில் கடந்துள்ளார். நூறு மீட்டர் தூரத்தை உசைன் போல்ட் 9.58 விநாடிகளில், கௌடா 9.55 விநாடிகளில், நிஷாந்த் 9.52 விநாடிகளில் கடந்துள்ளனர்.
இனி நிஷாந்த் ஷெட்டியைத் தேடி பாராட்டுகள் படையெடுக்கும். ஆனால், இந்திய விளையாட்டு ஆணையம் நிஷாந்திற்கு அழைப்பு விடுக்குமா என்ற கேள்வி விளையாட்டு ஆர்வலர்கள் மனங்களில் புரண்டு கொண்டிருக்கிறது...!
-பிஸ்மி பரிணாமன்