மிஷ்கினை நீக்கிய விஷால்
By | Published On : 01st March 2020 12:27 PM | Last Updated : 03rd March 2020 11:31 AM | அ+அ அ- |

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, விநய், ஆண்ட்ரியா, அனு இம்மானுவேல், கே.பாக்யராஜ் நடிப்பில் 2017-ஆம் ஆண்டு வெளியான படம் "துப்பறிவாளன்'. இது வெற்றிப் படமாக அமைந்தது. இதையடுத்து 2-ஆம் பாகத்தை உருவாக்க மிஷ்கின், விஷால் முடிவு செய்தனர். அதன்படி விஷால் தயாரிப்பில் "துப்பறிவாளன் 2-ஆம் பாகம்' படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து 40 நாட்கள் நடந்த படப்பிடிப்பில் விஷால், பிரசன்னா, ரகுமான், கவுதமி ஆகியோர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. இதையடுத்து சென்னையில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்த நேரத்தில் விஷாலுக்கும், மிஷ்கினுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது.
அதாவது, வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்துவதற்கான தளங்களைத் தேர்வு செய்வதற்காக அதிக நாட்கள் எடுத்துக்கொண்ட மிஷ்கின், 40 நாட்களுக்கான படப்பிடிப்பில் 33 நாட்கள் மட்டுமே நடத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், சரியான திட்டமிடல் இல்லாததால், தினமும் படப்பிடிப்பில் விஷாலுக்கும், மிஷ்கினுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், "துப்பறிவாளன் 2' படத்தை இயக்க அதிக சம்பளம் கேட்டுள்ளார் மிஷ்கின். தவிர, படத்துக்கான பட்ஜெட்டையும் அதிகப்படுத்திக் கேட்டிருக்கிறார். இதற்குத் தயாரிப்பு தரப்பு மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து "துப்பறிவாளன் 2' படத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து மிஷ்கின் நீக்கப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள காட்சிகளை விஷால் இயக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.