காதலை உணருங்கள் தோழர்களே!

"வரம்பு மீறல்களைத்தான் பல சினிமாக்கள் அர்த்தப்படுத்தி வந்திருக்கின்றன. அது மாதிரி இல்லாமல், வேறொரு களத்தில் நான் எழுதிய கதை இது.
காதலை உணருங்கள் தோழர்களே!

"வரம்பு மீறல்களைத்தான் பல சினிமாக்கள் அர்த்தப்படுத்தி வந்திருக்கின்றன. அது மாதிரி இல்லாமல், வேறொரு களத்தில் நான் எழுதிய கதை இது.
 கும்பகோணம் பக்கம் கிராமத்து வாழ்க்கை என் பூர்வீகம். இப்போது பெரு நகர வாழ்க்கை. ஆனாலும், எப்போதைக்குமான மனசு அந்தப் பள்ளி
 வாழ்க்கையிலேயே சிலாகிக்க விரும்புகிறது. சக தோழர்கள், ஆசிரியர்கள், அந்த மர நிழல், குளம், ஆறு என எதையும் மறக்க மறுக்கிறது மனசு. ஆயிரங்களில் இருந்து லட்சங்களுக்கு மாறின வாழ்க்கை கிடைத்தாலும், இன்னொரு முறை அந்த வாழ்க்கையை வாழவே முடியாது. வெற்றிடத்தைக் காற்று நிரப்பும் என்பது மாதிரி, முகத்தால்... குரல்களால்... செயல்களால்... சாயல்களால்தான் நம் பிரிவுகளையும் பிரியங்களையும் நிரப்பிக் கொண்டே இருக்கிறோம்.'' உணர்ந்து பேசுகிறார் இயக்குநர் ராஜா முரளிதரன். "நறுவி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வரும் அறிமுகம்.
 தலைப்பே வசீகரமாக இருக்கிறது....
 பல சம்பவங்கள் நிறைந்த நிஜ வாழ்க்கை தரிசனம் இது. காதல் முக்கியமானது. பள்ளியில் படிக்கிற ஒரு பெண். தியேட்டரில் வேலை பார்க்கும் ஒரு பையன். இந்த இருவருக்கும் காதல். ஆனால், சந்தர்ப்பமும் சூழலும் இவர்களை இடம் மாற்றி வைக்கிறது. எல்லோருக்கும் வாழ்க்கையில் ரெண்டு வழிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் வரும். ஆனால், காதலில் எப்படியும் ஜெயித்தே ஆக வேண்டும் என்கிற வழிதான். இப்படியும் போகலாம், அப்படியும் போகலாம் என்பது இதில் இல்லை. இதில் வருகிற கதை நாயகன் தேர்ந்தெடுக்கிற வழிதான் முக்கியமானது. மனிதன் தோன்றிய காலத்திலிருந்து மென்மை, துரோகம், வன்மம், குற்றம் எல்லாம் இருந்து கொண்டே இருக்கிறது.
 கெட்டவனாக இருந்தவனை நல்லவனாக ஆக்குவதற்கான முயற்சியும், அவனை வேறு திசைக்குக் கொண்டு போகிற முயற்சியும் இங்கே நடக்கிறது. அப்படிப்பட்டவனை ஒரு சூழல் தெளிவு நிலைக்குக் கொண்டு வருகிறது. வாழ்வில் எல்லாமும் போன பின்பு, அன்புக்கு மட்டுமே நிஜமாக இருப்போம் என்று போகிற இடங்களும் வருகிறது.

 காதலை அர்த்தப்படுத்துகிற தலைமுறை பிள்ளைகள் மாறியிருக்கிற காலம் இது....
 எல்லாவற்றுக்கும் இங்கே முன் மாதிரிகள் இருப்பதால், உங்களுக்கு அப்படித் தோன்றும். ஆனாலும், இன்னும் உண்மையான அன்புக்கு ஏங்குபவர்கள் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள். காதல் என்கிற அற்பமான, அற்புதமான சந்தோஷம் இருப்பதால்தான் சமூகம் வாழ்கிறது. படித்தது, பார்த்தது, கேட்டது, உணர்ந்ததுதான் படைப்பாக வருகிறது. இந்த கதை, உறவுகள் கூட பழையதுதான்.ஆனால், அதை எனக்கான உணர்வாக, மனிதனாகக் காட்சிப்படுத்தியதுதான் புதிது.
 என் கடவுள், என் மதம், என் ஜாதி, என் பயம், என் பணம்... இப்படி எத்தனை எத்தனை விஷயங்கள் மனிதனை ஆட்டிப் படைக்கின்றன. இந்த எல்லாவற்றையும் கடந்தவர்கள் மரணத்தை அடைய துடிக்கிறார்கள். ஒரு சிலர்தான் சில நல்ல நிமிடங்களைத் தவிர வேறு எதையும் விட்டு போகக் கூடாது என நினைக்கிறார்கள். இந்த மாய மந்திரம் இந்த சினிமாவுக்கும் பொருந்தும். மனித உறவுகளின் மகத்துவத்தை, ஆழத்தை முன் வைக்கிற கதை. காதலை சொல்லலாம். சொல்லாமல் கூட இருக்கலாம். காதல், பேசுகிற விஷயமில்லை. தயவு செய்து அதை உணருங்கள் தோழர்களே!
 
 இப்போதைய சினிமா சூழலில் இது நம்பகமானாதா..
 ஆமாம், நிறைய பேர். அவர்களின் ஒட்டு மொத்த அனுபவமும் இதில் பயன்பட்டு இருக்கிறது. நாள் கணக்கில் கால்ஷீட் வாங்கி இந்தக் கதையை செய்து விட முடியாது. பெரிய அர்ப்பணிப்புத் தேவையாக இருந்தது. அதை ஒவ்வொரு நடிகரும் தர வேண்டிய சூழல் இருந்தது. ஓரிடத்தில் போதை, கஞ்சா, அமைதி இழந்து, தான் தோன்றித்தனமாக ஹீரோ திரிவது மாதிரி வரும். அதை போய் நான் பரிச்சயப்பட்ட ஹீரோவிடம் கேட்க முடியாது. அர்ப்பணிப்புடன் வந்தார் புதுமுகம் செல்லா.
 பொறியியல் மாணவர். சினிமா ஆசையில் எதற்கும் துணிந்தவர். அவர்தான் ஹீரோ.
 ஹீரோயின் அனாமிகா. இமான் அண்ணாச்சி, கோதண்டம், நெல்லை சிவா, தீனா இப்படி ஏக பேர். அத்தனை பேருக்கும் அவ்வளவு துடிப்பான இடம். படத்தை "இந்த டைப் படம்' என்று சொல்ல முடியாமல் இருக்க வேண்டும். சும்மா கலகலவென்று அதே நேரத்தில் அர்த்தமுள்ளதாகப் படத்தைக் கொண்டு போவது மட்டும்தான் என் தெளிவு. வாழ்க்கையின் எந்தப் பக்கத்தைத் திறந்து பார்த்தாலும் அதில் ஆச்சரியங்கள் நிறைந்து கிடக்கிறது. ஈரமான மனசுகள் நாம் எதிர்பார்க்காத இடங்களில் உண்டு. எங்கே நல்லவன், கெட்டவன் உருவாகி வருகிறார்கள் என்று தேடினால், உங்களுக்குக் கிடைப்பது எதிர்பாராத திருப்பங்கள். உங்களின் சந்தோஷத்திற்கும், நிறைந்த எதிர்பார்ப்பிற்கும் நிச்சயம் உறுதியளிக்கிறேன். நானே ரசிக மனப்பான்மையால் பார்த்து ரசித்துதான் சொல்கிறேன். இது சமூகம் சார்ந்த படம். சமூகத்துக்கான படம்.
 - ஜி.அசோக்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com