வியக்க வைக்கும் "மொடேரா'

அமெரிக்காவில் இருந்து கிளம்பும் முன் அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானத்தை, இந்திய பிரதமருடன் இணைந்து திறந்து வைப்பது
வியக்க வைக்கும் "மொடேரா'

அமெரிக்காவில் இருந்து கிளம்பும் முன் அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானத்தை, இந்திய பிரதமருடன் இணைந்து திறந்து வைப்பது தனக்கு மிகுந்த ஆனந்தத்தை அளிப்பதாகவும் கூறினார். அந்தளவு அமெரிக்க அதிபரின் மனதில் இடம் பிடித்தது தான் அகமதாபாத்தில் அமைந்துள்ள மொடேரா (Motera) மைதானம். இங்கு தான் "நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. 
பிசிசிஐ - இந்த மைதானத்தின் ஏரியல் வியூ புகைப்படத்தை எடுத்து , தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டதன் மூலம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது .
உலகின் மிகப்பெரிய அரங்கமாக மாறியிருக்கும் மொடேரா ரூ.700 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்டேடியத்தில் 1,10,000 பார்வையாளர்கள் அமரலாம். 
1982-இல் இதே இடத்தில் கட்டப்பட்ட பழைய கிரிக்கெட் மைதானத்தில் சுமார் 49 ஆயிரம் பேர்வரை அமர முடியும். 64 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த அரங்கத்தைப் புதுப்பித்து ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தைப் போன்ற அமைப்பில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக இதனை அமைக்கவேண்டும் என்பது பிரதமர் மோடியின் நீண்ட நாள் கனவுத் திட்டமாகும். 
இதற்காக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை வடிவமைத்த கட்டடக்கலை நிறுவனத்தால் மொடேரா அரங்கம் வடிவமைக்கப்பட்டது.
புதிய ஸ்டேடியத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், கட்டமைப்பின் படி, ஒவ்வொரு பார்வையாளரும் போட்டியை எந்தவித தடையுமின்றி கண்டு ரசிக்க முடியும். இது தவிர, 76 கார்ப்பரேட் பெட்டிகள், நான்கு-அணிகளுக்கான டிரெஸ்சிங் ரூம் மற்றும் அதனுடன் தொடர்புடைய வசதிகள், ஒரு அதிநவீன கிளப் மற்றும் ஒலிம்பிக் அளவிலான நீச்சல் குளம் ஆகியவை உள்ளன. அடுத்த மாதம் ஆசிய லெவன் மற்றும் உலக லெவன் இடையே ஒரு கண்காட்சி போட்டியை மொடேரா நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
"உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் 11 கிரிக்கெட் பிட்ச்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. சில பிட்ச்கள் சிவப்பு மண்ணுடன் தயாரிக்கப்படும், சில களி மண்ணுடன் இருக்கும், சிலவற்றில் இரண்டின் கலவையும் இருக்கலாம். இதன் மூலம் தேவையின் அடிப்படையில் பவுன்ஸ் அல்லது சுழலுக்கு சப்போர்ட் செய்யும் பிட்ச்களும் தயாரிக்கப்பட்டுள்ளது. 
இந்த அரங்கத்தில் சிறந்த வடிகால் வசதிகளும் உள்ளன. அவை 30 நிமிடங்களுக்குள் மைதானத்தின் வெளிப்புறத்தை உலர வைக்க உதவும். மழை நின்ற 30 நிமிடங்களுக்குள் முழு மைதானமும் வறண்டு போகும் வகையில் வடிகால் அமைப்பை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மழை காரணமாக போட்டிகளை ரத்து செய்வதற்கான வாய்ப்புகளை குறைக்க இது எங்களுக்கு உதவும்'' என்கிறார் குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவர் தன்ராஜ். 
ஸ்டேடியத்தின் வாகன நிறுத்தத்தில் 3,000 கார்கள் மற்றும் 10,000 இரு சக்கர வாகனங்களை நிறுத்த முடியும்.
இதன் பழைய அரங்கம் ஒரு சில கிரிக்கெட் சாதனைகளுக்கு சாட்சியாக இருந்தது. இந்த ஸ்டேடியத்தில் தான், டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் எனும் சாதனையை 1987-ஆம் ஆண்டு சுனில் கவாஸ்கர் படைத்தார். 
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, இதே அரங்கத்தில் கபில் தேவ், ரிச்சர்ட் ஹாட்லியின் 432 டெஸ்ட் விக்கெட்டுகளை கடந்தார்.
பழைய ஸ்டேடியம் 1983 முதல் 2014 -ஆம் ஆண்டிற்குள் 12 டெஸ்ட் மற்றும் 24 ஒரு நாள் போட்டிகளை நடத்தியது. 2011-இல் நடந்த உலகக் கோப்பைத் தொடரிலும், 2006-இல் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரும் இங்கு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 


-வனராஜன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com