குக்கிராமங்களில் கல்விப் புரட்சி!

லோகேஷ் 10 வயதுக் குழந்தை. அன்றாடம் தன் தாயை வணங்கி விட்டு படிக்கத் தொடங்குகிறான். இதை பார்த்துக்கொண்டே இருந்த தந்தை, தாயை மட்டும் வணங்குகிறான் என்னை வணங்குவதில்லை என்று சிந்தனையில் ஆழ்கிறார்.
குக்கிராமங்களில் கல்விப் புரட்சி!

லோகேஷ் 10 வயதுக் குழந்தை. அன்றாடம் தன் தாயை வணங்கி விட்டு படிக்கத் தொடங்குகிறான். இதை பார்த்துக்கொண்டே இருந்த தந்தை, தாயை மட்டும் வணங்குகிறான் என்னை வணங்குவதில்லை என்று சிந்தனையில் ஆழ்கிறார்.
 ஒருநாள் மகனை அழைத்து "அம்மாவை தினமும் வணங்கும் நீ என்னிடம் ஏன் பாராமுகமாய் நடந்துகொள்கிறாய்'' என்று கேட்கிறார். அதற்கு அந்தக் குழந்தை "அம்மா நமக்காகவே வாழ்கிறார்கள். ஆனால் நீங்களோ அன்றாடம் குடித்துவிட்டு அம்மாவை அடித்துத் துன்புறுத்துகிறீர்கள் உங்களை ஏன் நான் வணங்க வேண்டும்'' என்று பதில் தருகிறான்.
 இந்த வார்த்தைகள் தகப்பனை அசைத்துப் பார்த்து விட்டன. அதிர்ந்து போய்விட்டார். அந்த நாளிலேயே தன்னுடைய குடிப்பழக்கத்தை விட்டு விட்டு தன் குடும்பத்திற்காக வாழ்வது அவசியம் என்று உணர்ந்து தன் மனைவியோடும் மகனோடும் இனிது வாழ்கிறார்.
 இந்த அனுபவத்தைப் பலர் கூடியிருக்கும் சபை நடுவே அந்தக் குழந்தை சொல்லும்போது மனம் நெகிழ்ந்து கண் கலங்காதோர் எவருமில்லை. விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கம் நடத்தும் ஓராசிரியர் பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவர்களில் லோகேஷ் ஒரு மாணவன். லோகேஷைப்போல, இங்கே கல்வி கற்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் எடுத்தியம்பப் பல பின்னணிகள் உண்டு. சம்பவங்கள் உண்டு.
 "அன்னச் சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னர் உள்ள தர்மங்கள் யாவும் பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்பார் மகாகவி பாரதி. "தர்மம் யாவினும் உயர்ந்த தர்மம் ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.'' அதனைத் தனது ஓராசிரியர் பள்ளிகள் மூலம் செயல்படுத்த முனைந்திருக்கிறது விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கம்.
 "ஆரம்பக் கல்வி தான் அடிப்படைக் கல்வி அதனைச் சரியாகவும் தரமாகவும் தந்து விட்டால் குழந்தைகள் தங்கள் தேவைகளைத் தாங்களே அடையாளம் கண்டு முன்னேற்றத்திற்கான வழிகளைக் காணத் தொடங்குவார்கள். ஆனால், தமிழகத்தில் ஆரம்பப் பள்ளியில் அடி எடுத்து வைக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையோடு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் வெறும் 10 சதவிகித மாணவர்களே பன்னிரண்டாம் வகுப்பு வரை வருகிறார்கள். கல்வியில் அவ்வளவு இடைநிற்றல் இருக்கிறது. அதனை குறைப்பதற்கான ஒரு முயற்சியாகவும் ஆரம்பக் கல்வியில் கவனம் செலுத்துகிறோம்'' என்கிறார் விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கத்தின் கெளரவ செயலாளர் கிருஷ்ணமாச்சாரி.
 உழைப்பின் மீது நம்பிக்கை: கிருஷ்ணமாச்சாரி சிறுவயது முதல் சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர். பல நற்காரியங்களுக்காக சில கோடிகளை தானமாகத் தந்திருக்கிறார். இந்த அறக்கட்டளை மிகுந்த கட்டுப்பாட்டுடனும் பல்துறை வல்லுநர்களின் வழிகாட்டலுடனும் செயல்படுகிறது. இந்த சங்கத்தை நிறுவியவர் உழைப்பால் விதியையும் மாற்றி அமைக்க முடியும் என்னும் நம்பிக்கை கொண்டவர்: வேதாந்தம்.
 சமூக செயற்பாட்டாளர் வேதாந்தத்தின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டது என்றாலும், அதனை இத்தனை ஆண்டு காலமாக வளர்ப்பதற்கும் அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் பல துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் மற்றும் களப்பணியாளர்கள் தங்கள் உழைப்பைத் தந்திருக்கிறார்கள். கே.என். கிருஷ்ணமூர்த்தி தலைவராகவும், கெளரவ செயலாளராக கிருஷ்ணமாச்சாரியும் செயல்படுகிறார்கள். கே.பி.எஸ். கோபாலகிருஷ்ணன் ஐபிஎஸ், நடராஜ் ஐபிஎஸ், ஆன்மிக உரையாளர் வேளுக்குடி கிருஷ்ணன் போன்ற தனி நபர்கள் பலரது முயற்சியும் சமூக அக்கறையும் தொய்வின்றி ஓராசிரியர் பள்ளிகள் வெற்றிகரமாக நடைபெறக் காரணமாய் இருக்கின்றன. பல பெரு நிறுவனங்களும் இவர்களுக்குத் துணை நிற்கிறார்கள்.
 விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கம், பல்வேறு சமூகநலப் பணிகளில் ஈடுபடுகிறது என்ற போதிலும், முதன்மைப் பணியாக அவர்கள் கருதுவது கல்வி. அதிலும் குக்கிராமங்களில் வசிக்கும் ஏழைக் குழந்தை
 களுக்குக் கல்வி சென்று சேர வேண்டும் எனும் உறுதியோடு ஓராசிரியர் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன.
 குழந்தைகள் பள்ளிக்கூடங்களை நாடி வராவிட்டால் பள்ளிக்கூடங்கள் குழந்தைகளைத் தேடிச் செல்லவேண்டும் என்ற சுவாமி விவேகானந்தரின் சிந்தனையை மெய்ப்பிக்க வேண்டும் எனும் உறுதியோடு களமிறங்கியிருக்கிறது விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கம்.
 2006- ஆம் ஆண்டு பூஜ்ய ஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகள் தானே முன்னின்று இந்த ஓராசிரியர் பள்ளிகளைத் துவக்கி வைத்தார். தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் அருளாசியோடும் வழிகாட்டுதலிலும் தொடர்ந்து பதினான்கு ஆண்டுகள் மேன்மேலும் வளர்ந்து இந்த ஓராசிரியர் பள்ளிகள் இன்று 1057 பள்ளிகளாக விரிவடைந்திருக்கிறது.
 ஏறத்தாழ 32 ஆயிரம் குழந்தைகளை ஓராசிரியர் பள்ளிகள் சென்றடைந்திருக்கிறது. ஆரம்பத்தில் மரத்தடிகள், தெருவோரங்களில் செயல்பட்ட ஓராசிரியர் பள்ளிகள், தற்போது வாடகைக் கட்டடங்களிலும் சில சொந்தக் கட்டடங்களிலும் செயல்படுகின்றன.
 இந்த ஓராசிரியர் பள்ளிகள் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கோயம்புத்தூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் என ஒன்பது மாவட்டங்களில் விரிவடைந்துள்ளன. வாரத்தில் 6 நாள்களும் செயல்படும் இந்தப் பள்ளிகள் சனிக்கிழமைகளில் விளையாட்டு, யோகா, வாழ்வியல் கலை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
 சுகாதாரம் தூய்மை பேண வேண்டியதன் அவசியம், மதுப் பழக்கத்தின் தீமைகள், சகோதரத்துவத்தின் மேன்மை, தன்னம்பிக்கை, பெற்றோரை மதித்து நடத்தல், நட்புபாராட்டல், ஒற்றுமையின் வலிமை, சக மனிதருக்கு உதவுதல் எனப் பல நற்பண்புகளை குழந்தைகளுக்கு போதிக்கிறது. ஆரம்பக் கல்விக்கு என்று தனியான கல்வித் திட்டத்தை வகுத்து அதற்கெனப் புத்தகங்களையும் தயார் செய்து வழங்குகிறது.
 குக்கிராமங்களில் வசிக்கும் குழந்தைகள் தங்கள் அடிப்படை அறிவைப் பெருக்கிக் கொள்வதற்கு ஏதுவாக சிறிய நூல் நிலையம் ஒன்றையும் பள்ளிகள் செயல்படும் கிராமங்களில் நடத்துகிறார்கள். ஒவ்வொரு பள்ளிக்கும் ராமகிருஷ்ணா மிஷன் அமைப்பிலிருந்து புத்தகங்கள் தரப்பட்டிருக்கின்றன. தனிப்பட்ட முறையிலும் பலர் குழந்தைகளுக்கான புத்தகங்களை இந்த நூலகத்துக்கு அன்பளிப்பாக வழங்கலாம்.
 தேசத் தலைவர்கள், இந்தியாவின் சிறப்பு மிக்க இடங்கள், திருவிழாக்கள், விடுதலைப் போராட்டம் போன்ற தகவல்களை குழந்தைகள் அறிந்து கொள்ளும்படியான புத்தகங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளன. சுழற்சி முறையில் இந்தப் புத்தகங்கள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. இதனால் மாணவர்களின் வாசிப்புப் பழக்கம் உறுதிப்படுத்தப்படுகிறது. வாசிப்புப் பழக்கம் கொண்ட குழந்தைகள் கல்வியில் போதுமான கவனம் செலுத்த முன்வருகிறார்கள் என்பது இவர்களது அனுபவம்.
 மாணவர்கள் கல்வி கற்கத் தேவையான உபகரணங்களும் பல நிறுவனங்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டிருக்கின்றன. எழுத்து மேஜைகள், புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், எழுதுகோல்கள் என குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து பொருள்களையும் இலவசமாகவே தந்து விடுகிறார்கள். மின்சாரம் இல்லாமல் போனால் கூட குழந்தைகளின் கல்வி எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்று ஒவ்வொரு பள்ளிக்கும் சோலார் மின் விளக்குகள் பலராலும் அன்பளிப்பாக வழங்கப்பட்டிருக்கின்றன.
 குக்கிராமங்களில் நடத்தப்படுகின்றன என்றபோதிலும் பல தொழில்நுட்ப வசதிகளும் இங்கே ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன. 35 கண்காணிப்பாளர்கள் இந்த 1,057 பள்ளிகளுக்கும் சென்று பள்ளிகளின் செயல்பாட்டைக் கண்காணிக்கிறார்கள். இந்தப் பள்ளிகளின் நடைமுறையை கவனிக்கவும் கண்காணித்துக் கொள்ளவும் ஒரு தனி செயலியே இருக்கிறது. மாணவர்களின் வருகைப் பதிவு தொடங்கி, கற்றுத்தரப்படும் பாடங்கள், அவர்கள் கற்றுக்கொண்டதை உறுதிப்படுத்தும் தேர்வுகள், அதன் மதிப்பீடு என்று அனைத்தையும் தெரிந்து கொள்ளவும் இவற்றில் தொய்வு ஏற்படும்போது அதனை சரி செய்யவும் இந்த செயலி பயன்படுகிறது.
 பள்ளிகள் அடிப்படை வசதிகளற்ற, வாகனங்கள் கூடச் செல்ல முடியாத மிகச்சிறு கிராமப் பகுதிகளில் அமைந்திருக்கின்றன. ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் இந்தப் பள்ளிகளில் பணியாற்றுகிறார்கள். இவர்கள் மாலை நேரப் பள்ளிகளில் பணியாற்ற எப்படி ஒப்புக் கொண்டார்கள் என்ற கேள்வி எழுகிறது. தங்கள் கல்வி தங்கள் கிராமத்திற்கே பயன்பட வேண்டும் என விரும்பும் இளைஞர்கள், சொந்த கிராமத்தை விட்டு விலக மனமற்று அங்கேயே தங்கள் உழைப்பைத் தந்து கொண்டிருக்கிறார்கள். பெண் பட்டதாரிகள் இங்கே ஆசிரியர்களாகப் பணியாற்றுகிறார்கள். ஆச்சாரியர்கள் என்றழைக்கப்படும் ஓராசிரியர் பள்ளி ஆசிரியர்களில் 1,015 பேர் பெண்கள். அதாவது ஏறத்தாழ 95% பேர் பெண்கள்.
 இந்தப் பெண்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. ஓராசிரியர் பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் சுழற்சி முறையில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்கென தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்ந்த பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு கிராமத்தில் ஒரு பயிற்சி மையம் ஓராசிரியர் பள்ளிகளுக்காக செயல்படுகிறது. மாதந்தோறும் ஏறத்தாழ 200 ஆசிரியர்கள் பயிற்சி மையத்தில் பயிற்சி பெறுகிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் சிறப்புப் பயிற்சி முகாமும் நடத்தப்படுகிறது.
 சில அடிப்படை மருந்துகளும் ஓராசிரியர் பள்ளி ஆச்சாரியர்களிடம் இருக்கின்றன. திடீரென ஏற்படும் விபத்துக்கள், குழந்தைகளுக்கு அடிபட்டு காயம் ஏற்படுவது போன்ற நேரங்களில் உடனடியாக இந்த ஆச்சாரியர்களை அணுகி முதலுதவி பெறலாம். அதற்கான பயிற்சியும் இவர்களுக்கு உண்டு.
 "டிஸ்லெக்சியா' எனப்படும் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளைக் கையாளுவதற்கும், அவர்களுக்குப் பயிற்றுவிப்பதற்கும் முறையாக பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஓராசிரியர் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் திறனைக் கண்டு அருகில் உள்ள தனியார் பள்ளிகள் அவர்களது பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி தர இவர்களை அழைக்கிறார்கள்.
 ஒவ்வோர் ஆண்டும் ஓராசிரியர் பள்ளிக் குழந்தைகளுக்கு விளையாட்டு விழா, அறிவியல் கண்காட்சி, திருக்குறள் போட்டிகள் என பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. குழந்தைகள் ஊக்கம் பெறுவதற்காக அவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படுகின்றன. தலைமையகமான சென்னையில் ஆண்டு விழா சிறப்பாக நடத்தப்படுகிறது. அதிலும் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த ஆண்டு மார்ச் மாதம் 21-ஆம் நாள் ஓராசிரியர் பள்ளிகளின் பதினான்காம் ஆண்டு விழா.
 கிராமப்புறக் குழந்தைகளுக்கு சுத்தம் - சுகாதாரம் இவற்றை வலியுறுத்தும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஓராசிரியர் பள்ளி ஆசிரியர்களின் மேற்பார்வையோடு குடிசை
 வீடுகளில் வசிக்கும் பெண் குழந்தைகளை மனதில் கொண்டு குளியலறையோடு கூடிய கழிப்பறைகள் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், பல பெருநிறுவனங்களின் உதவியுடன் கட்டப்பட்டுள்ளன.
 இதுவரை சுமார் 464 லட்சம் ரூபாய் செலவில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் 927 குளியலறையோடு கூடிய கழிவறைகள் அடிப்படை வசதிகள் அற்ற கிராமப்புறங்களில் கட்டப்பட்டுள்ளன. இந்தத் தனிநபர் சுகாதார வளாகங்கள் கிராமங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கின்றன. இவற்றில் லயன்ஸ் கிளப் 240 தனிநபர் சுகாதார வளாகங்களுக்கு நிதி உதவி அளித்திருக்கிறது.
 தனிப்பட்ட முறையிலும், விருப்பம் உள்ளவர்களுக்கு அவர்களது சொந்த இடத்திலும் குளியலறையோடு கூடிய கழிவறைகள் கட்டுவதற்கு உதவியும் செய்யப்படுகிறது. இதற்கான பொறுப்பு அந்தந்தப் பகுதி ஓராசிரியர் பள்ளி ஆசிரியர்களைச் சேர்ந்ததாகவே பெரும்பாலும் இருக்கிறது. ஓராசிரியர் பள்ளிகளின் இந்த செயல்பாட்டிற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இருமுறை பாராட்டி கடிதம் எழுதியுள்ளார்.


 ஒவ்வொரு கிராமத்திலும் தட்டுப்பாடின்றித் தண்ணீர் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது. இதனை மனதில் கொண்டு விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கம் ஓராசிரியர் பள்ளிகள் வாயிலாகவே மற்றுமொரு மிகப்பெரும் சவாலான பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. கிராமங்களில் குளங்களை, நீர்நிலைகளைத் தூர்வாரி சுத்தப்படுத்தும் பணியையும் மேற்கொள்கிறார்கள்.
 "இதுவரை 180 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. கிராமங்களில் இதுவரை 38 விழிப்புணர்வுப் பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன. 48 கண் மருத்துவ முகாம்கள் சங்கர நேத்ராலயா உதவியுடன் நடத்தப்பட்டிருக்கின்றன. விஜயா மருத்துவமனையும் இந்தக் கண் சிகிச்சையில் எங்களுக்கு மிகப் பெரும் பலமாக உடன் நிற்கிறார்கள் இன்னும் எத்தனையோ பேர் தங்கள் முகத்தை காட்டிக்கொள்ளாமல் இந்த அரும்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறார்கள்'', என்று அவர்களையெல்லாம் நினைவுகூர்கிறார் கெளரவ செயலாளர் கிருஷ்ணமாச்சாரி.
 ""குழந்தைகள் பெற்றோருக்கு உதவியாக விவசாய வேலைகளுக்குச் செல்ல வேண்டும் எனும் காரணத்தால் ஓராசிரியர் பள்ளிகளுக்கு வருவதை பெற்றோர்களே ஆரம்பத்தில் விரும்பியதில்லை. குழந்தைகளின் எதிர்காலம் பற்றி எடுத்துரைத்து பள்ளிக்கூடத்தை நோக்கிக் கொண்டுவருவதற்கு ஆரம்பத்தில் சிரமம் அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது பல கிராமங்களில் தங்கள் கிராமத்தில் ஓராசிரியர் பள்ளியைத் தொடங்கவேண்டும் என்று கேட்கிறார்கள் அந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறோம். குழந்தைகள் தரமான கல்வியைப் பெற்று ஒழுக்கத்துடனும் பண்புகளுடனும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்தால் தேசம் மேன்மையடையும். அதுவே எங்கள் இலக்கு'' என்கிறார் செயலாளர் கிருஷ்ணமாச்சாரி.
 மனதில் மனிதம் இருக்கும் வரை அதற்கான பணியை ஓய்வின்றி மேற்கொள்வதே எங்கள் கடமை. ஜாதி, மத பேதமின்றி "அனைவருக்கும் கல்வி' என்பதை மிகவும் அடக்கமாகவும், விளம்பரம் இல்லாமலும் செய்துவரும் விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கம் ஏற்படுத்திவரும் குக்கிராமப் புரட்சி பிரமிப்பை ஏற்படுத்துகிறது. "என்தாள் பணி செய்து கிடப்பதே..' என்கிற நாவுக்கரசர் பெருமானின் தேவார வரி
 களின் சொல்படியும் நடக்கிறது விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கம்!
 -கோதை ஜோதிலட்சுமி
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com