சத்தமில்லாமல் மலர்ந்த சிறைப்புரட்சி...!
By DIN | Published On : 22nd March 2020 04:03 PM | Last Updated : 22nd March 2020 04:03 PM | அ+அ அ- |

கரோனா உலக நாடுகளை உலுக்கி வருகிறது. மூன்று மாத காலத்திற்குள் கரோனாவின் கொடிய கைகள் கிட்டத்தட்ட உலக நாடுகள் அனைத்தையும் (கியூபா போன்ற வெகு சில நாடுகளைத் தவிர) இரும்புப் பிடிக்குள் கொண்டுவந்துவிட்டது.
இந்த நாடுகளில் சுமார் ஒன்றே கால் லட்சம் மக்கள் கரோனா கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர் . இந்தியாவில் இதுவரை மூன்று பேர் இறந்துள்ளனர். அந்த மூன்று பேர்களும் அறுபது வயதைத் தாண்டியவர்கள். கேரள, மகாராஷ்டிரா மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது. கேரளத்தில் மட்டும் சுமார் 18000 பேர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் 340 பேர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வைரஸ் பாதிப்பைத் தவிர்க்க திரையரங்குகள் பூட்டப்பட்டுள்ளன.
கரோனா பாதிப்பால் "மாஸ்க்' எனப்படும் மூக்கு மற்றும் வாய் மூலம் கிருமிகள் புகாதவாறு பாதுகாக்கும் "மாஸ்க்' விற்றுத் தீர்ந்து விட்டன. மக்களின் தேவை நாளுக்கு நாள் கூடி வருவதை உணர்ந்து கொண்ட வியாபாரிகள் ஒரு மாஸ்க் ஐம்பது ரூபாய் வரை விற்று வருகின்றனர், அதே சமயம் சில பொறுப்புள்ள வணிக நிறுவனங்கள் ஒரு மாஸ்க்கை இரண்டு ரூபாய் என விலையை குறைத்தும் விற்று வருகின்றனர்.
இரண்டு அடுக்கு மாஸ்க்குகளின் தேவை கேரளத்தில் அதிகரிப்பதை கண்ட முதல்வர் பினராயி விஜயன் கேரளத்தில் முக்கிய நகரங்களில் இருக்கும் சிறைகளில் கைதிகளைக் கொண்டு மாஸ்க்குகள் தயாரிக்க ஆணை பிறப்பித்தார். முதலில் திருவனந்தபுரத்தில் அமைந்திருக்கும் மத்திய சிறையில் கைதிகள் தினமும் 2000 இரண்டு அடுக்கு மாஸ்க்குகளைத் தயாரித்தனர். அதை 2500 ஆக இரண்டாவது நாள் அதிகரித்து விட்டனர். திருவனந்தபுரத்தைத் தொடர்ந்து அனைத்து துணை சிறைகளிலும் எங்கெல்லாம் தையல் பயிற்சி நடைபெறுகிறதோ அங்கெல்லாம் கைதிகள் மாஸ்க் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஒரு மாஸ்க் 15 முதல் 20 ரூபாய் வரை விற்பனைக்குத் தரப்படுகிறது.
இக்கட்டான நிலையில் இருக்கும் கேரள மக்களின் உதவிக்கு ஓடி வந்திருக்கும் கேரள சிறைக் கைதிகளின் பங்களிப்பு மகத்தானது. அது போல கேரள அரசு நிறுவனங்கள் கிருமி நாசினிகளைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளன. எல்லாம் போர்க்கால நடவடிக்கையாக நடந்து வருகின்றன.
கேரள சிறைக் கைதிகளின் சமூகப் பங்களிப்பு இது முதல் முறையாக நடக்கிறது என்று எண்ண வேண்டாம் ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் பல்வேறு சைவ அசைவ உணவுவகைகளைத் தயாரித்து பொது மக்களுக்கு ஸ்டால்கள் மூலம் விற்பனைச் செய்து வருகிறார்கள். உணவுப் பொருள்களின் விலையும் ஹோட்டல்களை விடக் குறைவு. ஒரு சப்பாத்தி இரண்டு ரூபாய் தான். ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலின் விலை பத்து ரூபாய் தான்.
சமையலுக்குத் தேவையான காய்கறிகள் பலவற்றை சிறையில் இருக்கும் தோட்டங்களில் விளைவிக்கிறார்கள். தொடக்கத்தில் 140 ரூபாய் தினக் கூலியாக கைதிகளுக்கு வழங்கப்பட்டது. இப்பொது 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சிறைத் தண்டனை முடிந்து வெளியே போகும் போது சேர்த்து வைக்கப்பட்ட சம்பளத் தொகை வழங்கப்படும்.
திருவனந்தபுரம் சிறைவளாகத்தில் உணவு விடுதி ஒன்று பொது மக்களுக்காக செயல்படுகிறது. பொது மக்கள் தங்களுக்கு வேண்டிய உணவு வகைகளை ஆர்டர் செய்து சாப்பிடலாம். ஆனால் அங்கே வேலை செய்யும் கைதிகளிடம் வேறு விஷயங்கள் குறித்து பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.
ஹோட்டல்களில் அசைவ உணவு வகைகள் விலை அதிகம் என்பதால் நடுத்தர குடும்பத்தினர் குடும்பத்துடன் இந்த விடுதிக்கு வருகை தருகின்றனர்.
திருவனந்தபுரம் சிறை வளாகத்தில் பொது மக்கள் வந்து செல்கிற மாதிரியான இடத்தில் ஆண்களுக்கான பியூட்டி பார்லர் ஒன்றும் செயல்படுகிறது. தனியார் பார்லர்களைவிட அழகு சேவைகளுக்கு இங்கே கட்டணம் குறைவு.
சிறையில், கைதிகளுக்கு மறு வாழ்வு தர தொடங்கப்பட்ட தையல், சமையல், அழகு பராமரிப்பு, தோட்டக்கலை பயிற்சிகள்... கைதிகள் விடுதலையாகி வெளியே வரும்போது கையில் ஒரு தொழிலுடன் வெளியே வருகிறார்கள். முடிந்தால் தொழில் தொடங்கி சொந்தக்காலில் நிற்கிறார்கள்.
சிறைக் கைதிகளாலும் சமூகத்திற்காகப் பங்களிப்பு செய்ய வைக்க முடியும் என்று சாதிக்க வைத்துள்ளது கேரளம். இவை சிறையில் சத்தமில்லாமல் நடக்கும் புரட்சி...!
-பிஸ்மி பரிணாமன்
கரோனாவைத் தானாக முன்வந்து கையாளும் கியூபா...!
கிட்டத்தட்ட எல்லா நாடுகளும் , தனது நாட்டு எல்லையை மூடி வெளிநாடுகளுக்குச் சென்ற சொந்த நாட்டு மக்களைக் கூட உள்ளே விட அனுமதி மறுத்து வருகின்றன. கரோனா பாதித்த சுமார் 600 பிரிட்டிஷ் பயணிகளை ஏற்றி வந்த கப்பலை, அனைத்து நாடுகளும் திருப்பி அனுப்பிய போது....
கியூபா தனது துறைமுகத்தில் தஞ்சம் வழங்கியுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டப் பயணிகளுக்கு மருத்துவ சிகிச்சை தந்து அவர்களை குணப்படுத்த முன்வந்துள்ளது...
கியூபா உலகின் சின்னஞ்சிறிய நாடு. கியூபா மீது எக்கச்சக்கமானப் பொருளாதாரத் தடைகள். கியூபாவுடன் பல நாடுகள் நல்லுறவில் இல்லை. கரோனா பீதி உலக நாடுகளைத் தெறிக்க விட்டிருக்கும் நேரத்தில், கரோனாவைக் கண்டு பயப்படாமல் எதையும் யோசிக்காமல் கரோனாவை தானாக முன்வந்து எதிர்கொள்ளும் கியூபாவை எப்படி பாராட்டாமல் இருக்க முடியும்.
ஆப்பிரிக்க கண்டத்தில் "கோர நோய்' தாண்டவமாடிய போது கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ தன் நாட்டு மருத்துவர்களை அனுப்பி மருத்துவ சிகிச்சை அளிக்க வைத்தார். அந்த மனித நேயம் இன்றைக்கும் கியூபாவில் வாழுகிறது. அதில் ஃபிடல் காஸ்ட்ரோ வாழ்கிறார்..!