சாதனை சாதனை

விளையாட்டு துறையிலிருந்து விண்வெளித்துறை வரை இந்திய சாதனையாளர்களின் பங்கு அதிகம். உலகளவில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த சாதனையாளர்கள் சிலருடைய வெற்றிப் பயணத்தின்
சாதனை சாதனை

விளையாட்டு துறையிலிருந்து விண்வெளித்துறை வரை இந்திய சாதனையாளர்களின் பங்கு அதிகம். உலகளவில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த சாதனையாளர்கள் சிலருடைய வெற்றிப் பயணத்தின் படிக்கட்டுகள் இவை.

திறமையால் உயர்ந்த டெஸ்ஸி!

இந்தியா ஏவுகணை தொழில்நுட்பத்தில் உலக நாடுகளுக்கு சவால் விடும் நிலையினை அடைந்துள்ளது பெருமைப்பட வேண்டிய விஷயங்களில் ஒன்று. இந்தியாற்கு அந்த இடத்தினைப் பெற்றுக் கொடுத்தது அக்னி ஏவுகணை ஆகும். அக்னி ஏவுகணைத் திட்டப்பணி இயக்குநராகப் பணியாற்றி, இந்தியாவின் முதல் பெண் ஏவுகணை விஞ்ஞானி என்றும் ஏவுகணை பெண்மணி டாக்டர் டெஸ்ஸி தாமஸ். இவரை அக்னிபுத்ரி என்றும்
அழைக்கிறார்கள்.

நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த டெஸ்ஸி கேரளா மாநிலத்தின் ஆலப்புழாவில் பிறந்தார். ""சிறுவயதில் எங்களுடைய குடும்பம் தும்பா ராக்கெட் ஏவுதளத்தின் அருகில் இருந்தது. அப்போது அங்கு ராக்கெட் ஏவப்படுவதைப் பார்த்து எனக்கு ராக்கெட் மீது ஆசை வந்தது. அதுவே நான் இந்தத் துறைக்கு வர காரணம்'' என்கிறார் டெஸ்ஸி.

இளம் பருவத்தில் அறிவியல் மீதும் கணிதம் ஆர்வம் கொண்டவராக விளங்கினார். பின்னர் அந்தக் கவனம் இயற்பியலின் மீது திரும்பியது.

கேரள மாநிலம் திருச்சூரிலுள்ள அரசு பொறியியல் கல்லூரியில் படிப்பை முடித்த இவர். தொடர்ந்து புனேயிலுள்ள ஆயுதத் தளவாட தொழில்நுட்ப கல்லூரியில் சேர்ந்து, ஏவுகணை பிரிவினை தேர்ந்தெடுத்து எம்.டெக் பட்டம் பெற்றார்.

அடுத்ததாக குடிமையியல் தேர்வு எழுதினார். அந்த நேரத்தில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சிக் கழகத்திலிருந்து நேர்காணலுக்கு அழைப்பு வந்தது. ராக்கெட் தொழில்நுட்பம் மீதான இவரது ஆர்வத்தால் ஐஏஎஸ் தேர்வினைப் புறக்கணித்துப் பாதுகாப்பு ஆராய்ச்சிக் கழகத்தில் பணியில் சேர்ந்தார். 1985 - இல் ஹைதராபாத்தில் இளநிலை விஞ்ஞானியாக இணைந்தார்.

ஏ.பி.ஜே அப்துல்கலாம் ராக்கெட் தயாரிப்பு ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த நேரம் அது. டெஸ்ஸி தாமஸின் திறமையையும் ஆர்வத்தையும் உணர்ந்த அவர் டெஸ்ஸியை ஏவுகணை திட்டக்குழுவில் 1988 - இல் சேர்த்தார். ஆரம்பத்தில் அக்னி-3 ஏவுகணைத் திட்டத்தின் உதவி திட்ட இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டார்.

அக்னி-3 இன் ஆரம்பக்கட்டத் தோல்விகளுக்கான காரணங்களைக் கண்டறிந்து சரிசெய்ததில் டெஸ்ஸியின் பங்களிப்பு முக்கியமானது. 2008 ஆம் ஆண்டு 3000 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இலக்கினை தாக்கவல்ல அக்னி 3 வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 4000 கிலோமீட்டர் தொலைவு சென்று தாக்கவல்ல அக்னி4 ஏவுகணைதிட்ட ஆய்வு துவங்கியது. அதில் டெஸ்ஸி திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

பெரும் சவால்கள் நிறைந்த அப்பணியைத் திறம்படச் செய்ய, அவரது தொழில்நுட்பத் திறனும், எடுத்த பணியை முடிக்கும் ஈடுபாடும் துணை புரிந்தன. 2011 - இல் அக்னி-4 வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. பின்னர் 5000 கிலோமீட்டர் தொலைவு செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-5 ஆய்விலும் டெஸ்ஸி திட்ட இயக்குநராகப் பணியாற்றினார்.

அத்திட்டம் 2009- இல் ஆரம்பிக்கபட்டு, 2012 -இல் வெற்றிகரமாக இலக்கினை தாக்கியது.

இவரது சாதனைகளுக்காக இவருக்கு லால்பகதூர் சாஸ்திரி விருது, மதிப்புறு முனைவர் உள்ளிட்ட பல பட்டங்களும் விருதுகளும் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்.

கல்லூரி நாட்களில் இவர் சிறந்த பாட்மிண்டன் வீராங்கனையாவார்.

அசராத தன்னம்பிக்கை!

அருணிமா சின்ஹா எவரெஸ்ட் சிகரம் தொட்ட சாதனையாளர். உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏற நம்பிக்கை ஒன்றே போதுமானது, இரண்டு கால்கள் அவசியமில்லை என்பதை நிரூபித்துள்ளார் அருணிமா.

அருணிமா கடந்த வந்த பாதை மிகவும் கரடுமுரடானவை. உத்தர பிரதேசத்தை சேர்ந்த அருணிமா வாலிபால் வீராங்கனை. தேசிய போட்டிகளில் பங்குபெறும் அளவிற்குத் தன்னுடைய திறமைகளை வளர்த்துக்கொண்டவர். தனது குடும்ப சூழல் ஏதாவது வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. அரசுப் பணிக்கான தேர்வு எழுதி வெற்றி பெற்றார்.

நேர்காணலுக்காக தலைநகர் புதுதில்லி நோக்கி ரயில் பயணம் மேற்கொண்ட போது தான் அவர் வாழ்க்கை திசை மாறியது. அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை திருடர்கள் பறித்தனர். மேலும் அவருடைய கைப்பையைப் பறிக்க முயன்றனர். அது இடம் தராமல் அவர்களுடன் போராடினார் அருணிமா.

விளைவு அவரை கடுமையாகத் தாக்கி ரயிலில் இருந்து தூக்கி வீசினர். அவருடைய இடது கால் ரயில் சக்கரத்தில் சிக்கி சிதைந்து போனது. சிதைந்து போனது அவருடைய கால் மட்டுமல்ல எதிர்காலக் கனவுகளும் தான்.

கால் இழந்த தவிப்பை விடத் தன் லட்சியம் முறிந்துவிட்ட தவிப்புதான் அவரை நிம்மதியிழக்கச் செய்தது. ஆனாலும் அவர் கலங்கவில்லை.

தன் வாழ்நாளில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற துடிப்பில் இருந்த அருணிமா இந்த விபத்தினால் சோர்ந்து போய் முடங்க விரும்பவில்லை. ஏதாவது ஒரு விதத்தில் சாதித்தே ஆக வேண்டும் என உறுதிபூண்டார். எவரெஸ்ட் மலையேற்றம் தொடர்பான தகவல்கள், சாதனை வீரர்களைப் பற்றி படித்துத் தெரிந்துகொண்டு அவர் தானும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற வேண்டும் என்று முடிவு செய்து வெற்றியும் கண்டார்.

லட்சியத்தை நோக்கிப் படிபடியாக முன்னேறுங்கள். நிச்சயம் வெற்றி உங்களுக்கு வசப்படும் என்பது தான் அருணிமா சின்ஹாவின் தாரக மந்திரம்.


சச்சின் இடத்தை பிடித்த கோலி!

இந்திய கிரிக்கெட் அணியில் "பேட்டிங் ரன் மெஷின்' என்றழைக்கப்படுபவர் விராட் கோலி. எதிரணயினர் யாராக இருந்தாலும் சரி அவர்களது சொந்த மண்ணிலோ அல்லது இந்திய மண்ணிலோ அதிரடியாக ரன்களை விளாசும் திறமை கொண்டவர். ஒருநாள் கிரிக்கெட்டில் மன்னராக உலக கிரிக்கெட்டில் அசத்தி வருகிறார்.

ஒரு நாள் போட்டிகளில் விராட் கோலி செய்த மூன்று முக்கிய சாதனைகளை என்ன? ஒரு நாள் தேசிய போட்டி தொடரில் 500 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை குவித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். 2018 -ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்த போட்டி தொடரில் பங்கேற்று 3 சதங்களுடனும் , 186 என்ற சிறப்பான சராசரியுடன், 556 ரன்களை குவித்தார். விராட் கோலி-யின் சீரான ஆட்டத்தால் இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் தொடரை கைப்பற்றி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்தது.

தொடர்ந்து 6 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 500-க்கும் மேற்பட்ட ரன்களை அடிப்பது சாதரண விஷயம் கிடையாது . ஆனால் விராட் கோலி அந்த சாதனையைச் செய்து காட்டினார். விராட் கோலி இடத்தை நிரப்ப வேறு ஒரு வீரர் இந்திய அணிக்கு வருவது மிகவும் அரிதான ஒன்றாகும்.

2018-ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் மூன்று போட்டிகளில் விராட் கோலி 140 , 157 மற்றும் 107 ஆகிய ரன்களை விளாசி தள்ளினார்.

ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி மட்டுமே இரு வெவ்வேறு நாடுகளுக்கு எதிராக ஒவ்வொரு ஒரு நாள் தேசிய போட்டி தொடரிலும் 3 சதங்களை விளாசியுள்ளார்.

2018-ஆம் ஆண்டு முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய போது விராட் கோலி முதல் மூன்று ஒரு நாள் போட்டிகளில் 3 சதங்களை குவித்தார் . கோலி இந்த தொடரில் 151 என்ற பிரம்மாண்டமான சராசரியுடன் மொத்தமாக 453 ரன்களை விளாசித் தள்ளினார்.

இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கரின் இடத்தை விராட் கோலி பிடித்துள்ளார் . அத்துடன் அவரை விட மேன்மேலும் பல உலக சாதனையைப் படைப்பார்.

தொழில் தொடங்கி கோடிகளை குவித்த ரித்தேஷ்!

கல்லூரிப் படிப்பைப் பாதியில் நிறுத்திய ரித்தேஷ் அகர்வால், பொழுதுபோக வில்லை என்பதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் ஊர் சுற்றித்திரிந்தார். அப்போது அவர் இந்தியாவில் அக்கம்பக்கங்களில் உள்ள ஹோட்டல்களை ஒருங்கிணைப்பதற்கான வாய்ப்பு பற்றி தெரிந்து கொண்டார். இந்த வாய்ப்பு அப்போது யாராலும் பயன்படுத்தப்படாமல் இருந்தது. எனவே தங்குமிடங்களை ஒருங்கிணைக்கத் திட்டமிட்டு தனது "ஓயோ' நிறுவனத்தை 2013-ஆம் ஆண்டு தொடங்கினார் ரித்தேஷ்.

சுற்றுலா செல்பவர்களுக்குத் தங்கும் விடுதியை கண்டுபிடிப்பதே மிகவும் சிரமமாக இருந்தது. இந்தக் குறையைப் போக்கியது "ஓயோ' நிறுவனம் தான். இந்த "ஓயோ' செயலி பயன்படுத்தி நீங்கள் குறைந்த செலவில் ஓட்டல் அறைகளைப் புக் செய்யலாம். 7 ஆண்டுகளில் எட்ட முடியாத உயரத்தை தொட்டது "ஓயோ'. பல ஆயிரம் கோடி லாபத்தை சம்பாதித்தார் ரித்தேஷ். இன்று உங்கள் பகுதியில்" ஓயோ' என்ற பெயர் உள்ள லாட்ஜ் இருந்தால் அது இவரின் சாதனை தான்.

இதனைத் தொடர்ந்து "ஓயோ' நிறுவனம் தனது வெற்றிப்பயணத்தை அடுத்தக் கட்டமாக இங்கிலாந்து, சீனா, நேபாளம், மலேசியா எனப் பல நாடுகளுக்கும் பரவியது. ""எனக்கு கிடைத்த கூடுதல் நிதியை கொண்டு பல நாடுகளில் இந்தச் சேவையை விரிவுப்படுத்த விரும்புகிறேன்'' என்கிறார் ரித்தேஷ்.

விளையாட்டு போக்காக சாதாரண பட்ஜெட் ஹோட்டலாக தொடங்கப்பட்ட "ஓயோ' கட்டுப்பாட்டில் இன்று ஓயோ ஹோம், ஓயோ டவுன்ஹவுஸ், ரிசார்ட்ஸ் போன்ற பிராண்டுகளையும் நிர்வகித்து வருகிறது.

தற்போது "ஓயோ' நிறுவனத்தில் 700 க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் பணியாற்றி வருகிறார்கள்.. இந்த ஆண்டிற்குள் இரண்டாயிரம் பேருக்கு கூடுதலாக வேலை வாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளார்களாம்.

மேலும், செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் போன்ற தொழில்நுட்பங்களில் தொடர்ந்து முதலீடு செய்ய ஓயோ முனைப்புடன் உள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. தன்னுடைய சொந்த சுற்றுலாப் பயணத்திலிருந்து கிடைத்த அனுபவத்தைத் தொழிலாக மாற்றி, அதில் கோடிகளில் வருவாய் ஈட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் 27 வயதான ஒடிசாவைச் சேர்ந்த ரித்தேஷ்.


பொழுது போக்காக தொடங்கிய டென்னிஸ்

சானியா மிர்சா டென்னிஸ் ஆட ஆரம்பித்தது 6-ஆம் வயதில். பொழுது போக்காக டென்னிஸ் ஆட ஆரம்பித்தவரின் வாழ்க்கையே பின்னாளில் டென்னிஸ் ஆகிப்போனது. ஆரம்பத்தில் பல சறுக்கல்கள் இருந்தாலும், அவரது விடாமுயற்சி மற்றும் உழைப்பின் காரணமாக, அவரது வாழக்கையில் வெற்றிகள் மிக எளிதாகிப்போனது.

6 வயதாகும் போது நீச்சல் வகுப்பிற்கு சானியா டென்னிஸ் களத்தைத் தாண்டித்தான் சென்றாக வேண்டும். அப்போது அவரது அம்மா, அவரை டென்னிஸ் ஆடும்படி கூறியுள்ளார். விடுமுறை என்பதால் பொழுதை கழிக்க சானியாவும் ஆட ஆரம்பித்துள்ளார்.

சானியாவிற்கு டென்னிஸ் கற்றுத்தர இருந்த பயிற்சியாளர் முதலில் அவரைப் பயிற்றுவிக்கத் தயங்கினார். காரணம் சானியாவின் உயரம். 6 வயது சானியா மிகவும் உயரம் குறைவாக இருந்தார் . ஆனால் ஒரு மாத பயிற்சியிலேயே சிறந்த வீராங்கனை என்பதைப் பயிற்சியாளர் உணர்ந்துகொண்டார்.

12-13 வயதிலேயே டென்னிஸ்ûஸ தனது முழுநேர பணியாக எடுக்க சானியா முடிவு செய்தார். ரோஜர் ஆண்டர்சன், சீகே பூபதி, (மகேஷ் பூபதியின் தந்தை) அவரது தந்தை இம்ரான் மிர்சா ஆகியோர் அவரைப் பயிற்றுவித்தனர். சானியா மிர்சாவின் ஒவ்வொரு வெற்றியின் போதும் அவரது பெற்றோர் அளவில்லா ஆனந்தம் கொண்டனர். அவருக்காக அவர்கள் வாழ்வில் பல தியாகங்களையும் செய்தனர்.

இளம் வயதில் 10 ஒற்றையர் மற்றும் 13 இரட்டையர் பட்டங்களை சானியா வென்றார். 2002-ஆம் ஆண்டு ஆசிய போட்டிகளில் லியாண்டர் பயúஸாடு இணைந்து இந்தியாவிற்காக வெண்கல பதக்கம் வென்றார் சானியா.

2016-இத்தாலியன் ஓபன் பட்டம் வென்றனர். 2006-இல் "பத்மஸ்ரீ', விளையாட்டில் இந்திய அரசின் உயரிய விருதான 2015-இல் "ராஜீவ் காந்தி கேல்ரத்னா', பெற்ற பிறகு 2016-இல் லியாண்டர் பயஸ்சிற்கு அடுத்தாக டென்னிஸில் சானியாவிற்குப் "பத்ம பூஷண்' விருது கிடைத்தது.

சரியான நேரங்களில் சரியான ஆசான்கள் அமைவது முக்கியம் என்பது சானியா அனுபவ வார்த்தைகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com