Enable Javscript for better performance
இந்த வாழ்க்கையைப் பழகிக்கொள்ள வேண்டும்!- Dinamani

சுடச்சுட

  

  இந்த வாழ்க்கையைப் பழகிக்கொள்ள வேண்டும்!

  By -ஜி.அசோக்  |   Published on : 17th May 2020 07:42 PM  |   அ+அ அ-   |    |  

  sk19


  தமிழ் சினிமாவில் அம்மா வேடங்களில் நடிப்பவர்களுக்குக் கவனம் ஈர்க்க வாய்ப்புக் கிடைப்பது குறைவு. ஆனால் தான் நடித்த "பிச்சைக்காரன்', "பசங்க 2', "ரஜினி முருகன்', "ஸ்பைடர்', "சிவப்பு மஞ்சள் பச்சை' உள்பட அனைத்து படங்களிலும் தனியாகத் தெரிந்து கவனம் ஈர்த்தவர் தீபா ராமானுஜம். "சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தில் தீபா பேசிய பெண்களின் உடை தொடர்பான வசனம் தனியாகவே சமூகவலைதளங்களில் பிரபலம்.

  கணவருடன் அமெரிக்காவில் வசிக்கும் இவர் அடிப்படையில் நாடக இயக்குநர், நாடக நடிகை, தொழில் முனைவோர். அமெரிக்காவில் கரோனா தாக்கம் உச்சத்தில் இருக்கும் இந்த சமயத்தில் அவரிடம் பேசியதிலிருந்து...
   
  அமெரிக்கா எப்படி இருக்கிறது....

  கலிபோர்னியாவில் சான்பிரான்சிஸ்கோ பகுதியில் வசிக்கிறேன். மார்ச் 21 -ஆம் தேதி இந்தியா திரும்பத் திட்டமிட்டு இருந்தேன். கரோனா காரணமாக ஊரடங்கை முதலில் அறிவித்தது கலிபோர்னியாதான். அந்த அறிவிப்பு வெளியானதும் எனது திட்டத்தை ரத்து செய்து இங்கேயே இருந்துவிட்டேன். அந்த முடிவு நல்லதாகப் போய்விட்டது. இந்தியா வந்து இருந்தால்  சிரமப்பட்டு இருப்பேன். இங்கே அனைவருக்கும் கரோனா பயம்தான். எங்களுக்கு வீட்டிலேயே இருப்பது இப்போது பழகி விட்டது. ஆனால், இந்த அளவுக்கு உலக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன். 

  அங்கு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறதே...

  ஆமாம். நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. உலகம் முழுக்கவே அதிகரித்தாலும் அமெரிக்காவில் மிக வேகமாகப் பரவுகிறது. ஆரம்பத்தில் சீனாவில் இருந்து வரும் பாதை (தாமதமாக) அடைக்கப்பட்டாலும் ஐரோப்பாவில் இருந்து வரும் வழிகள் திறந்துதான் இருந்தன. அங்கிருந்து பரவத் தொடங்கியது. இதுதான் நியூயார்க்கில் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம். தவிர, நியூயார்க் நகரம் அதிக மக்கள் தொகை கொண்டது. நோய்க்கான அறிகுறியே இல்லாமல் அதிகம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர்களுக்கே தெரியாமல் அவர்களிடம் இருந்து நோய் பரவுகிறது.

  நான் இருக்கும் கலிபோர்னியாவில் ஊரடங்கு கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது. நாங்கள் மார்ச் 19 -ஆம் தேதியிலிருந்து வீட்டுக்குள்ளேயேதான் முடங்கி இருக்கிறோம்.  கடைகளுக்குச் சென்றாலும் தெளிவாகத் திட்டமிட்டு வாங்க வேண்டியதை எழுதி எடுத்து சென்று வாங்கி முடித்த உடனே திரும்பி விடுகிறோம். வாங்கும் பொருட்களையும் சுகாதாரமான முறையில் சுத்தப்படுத்தியே பயன்படுத்துகிறோம். ஒரு கடிதம் வந்தால் கூட அதைத் தொடுவதற்குத் தயங்குகிறோம். அந்த அளவுக்குக் கவனமாக இருக்கிறோம். இனி இந்த வாழ்க்கையைப் பழகிக்கொள்ளத் தான் வேண்டும். இத்தனை கவனமாக இருந்தாலும் கலிபோர்னியா கரோனா பாதிப்பில் 5- வது இடத்தில் இருக்கிறது.

  அமெரிக்க மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது...

  கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். கரோனா தந்த உயிர் பயத்தை விட வேலை பறி போவதால் எழும் மன அழுத்தமும் முக்கியக் காரணம்.  இதனால் பெரும்பாலானோர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து
  விட்டனர். கரோனாவுக்குப் பின்னும் இந்தப் பாதிப்புகள் தொடருமே என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. அரசும், மருத்துவர்களும் அதைப் போக்க முயற்சிகள் எடுத்து வருகிறார்கள். 

  ஊரடங்கை மீறுவது அங்கும் நடக்கிறதா...

  ஆமாம். அரசு உத்தரவை மீறுபவர்கள் எல்லா இடங்களிலுமே உண்டு தானே... இத்தனை உயிர்ப்பலிகளுக்கு மத்தியிலும் கடந்த வாரம் கடற்கரை திறக்கப்பட்டபோது மக்கள் கூட்டம் கூட்டமாக செல்ல தொடங்கி விட்டார்கள். தெற்கு கலிபோர்னியாவில் சுமார் 50 ஆயிரம் பேர் வரை  கூடிவிட்டார்கள். அதே நேரம் அரசாங்கம் சமூக விலகலை கடுமையாக நடைமுறைப்படுத்துகிறார்கள். கடைகளில் குறிப்பிட்ட நபர்களுக்கு மேல் அனுமதிப்பது இல்லை.

  இந்தியாவில் பாதிப்பு குறைவாக இருக்கிறதே...

  இந்திய அரசு சிறப்பாக செயல்பட்டு, நோய் பரவுவதற்கு முன்பே ஊரடங்கை அறிவித்தது ஒரு முக்கியக் காரணம். நான் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது,  நாம் சிறு வயதில் போட்டுக் கொண்ட தடுப்பூசிகள், நமது உணவு முறை, நமது நாட்டின் தட்பவெப்ப சூழ்நிலை இவை எல்லாமே இந்தியாவின் குறைவான எண்ணிக்கைக்குக் காரணம் என்று சொன்னார்கள். இவை எந்த அளவு அறிவியல் பூர்வமான உண்மை என்று தெரியவில்லை. இந்தியாவின் மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது இறப்பு எண்ணிக்கை குறைவு தான்.  இருந்தாலும் இப்போது கரோனா வேகம் எடுப்பது கவலை அளிக்கிறது.

  கேரளாவில் கரோனா கட்டுப்படுத்தப்பட்டதாக வரும் செய்தி மகிழ்ச்சி அளித்தது. அங்கு சமூகவிலகலுக்குக் குடைகளைப் பயன்படுத்தியது நல்ல யோசனை. அதுபோன்ற சமூக விலகலை கடைபிடித்தால் கரோனாவில் இருந்து தப்பிக்கலாம்.

  அமெரிக்காவில் நடக்கும் அரசியல் மாற்றங்கள், குறிப்பாக டிரம்பின் பேச்சு, நடவடிக்கைகளுக்கு மக்கள் என்ன சொல்கிறார்கள்...

  அவர் கட்சியை சார்ந்த பலர் அவர் சொல்வதைதான் நம்புகிறார்கள். ஆனால் எங்களது நண்பர்கள் பலருக்கு அவர் இதை கையாளும் முறையில் அதிருப்தி இருக்கிறது. ஆனால் அமெரிக்க அரசியல் அமைப்பில் மாகாணங்களைப் பொருத்த வரை கவர்னர்களுக்குத் தனி அதிகாரம் உண்டு. அந்த வகையில் எங்கள் கவர்னர் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளைத் தான் முன்னெடுக்கிறார்.

  அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களின் நிலையில்  மாற்றம் உண்டா...

  இங்கே இருக்கும் இந்தியர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் வேலையை இழந்து விட்டால்தான் கடும் சிரமத்துக்கு ஆளாவார்கள். 60 நாட்களுக்குள் அவர்கள் புது வேலை தேடிக் கொள்ள வேண்டும், அல்லது அவர்களது விசா ஸ்டேட்டûஸ மாற்றிக் கொள்ள வேண்டும். கடந்த 2 மாதங்களில் அமெரிக்காவில் 3 கோடிக்கும்  (33.5 மில்லியன்) அதிகமான மக்கள் வேலை இழந்துள்ளார்கள். இதில் இந்தியர்களும் அடக்கம். இப்போது எதிலுமே ஒரு நிலை இல்லாத தன்மை இருப்பதால் இந்தியர்கள் மட்டுமல்லாமல் அனைவருக்குமே  பயம் இருக்கிறது. 

  ஊரடங்கு சமயத்தில் பெண்களுக்குப் பணிச்சுமை அதிகரித்து விட்டதே... அங்கே எப்படி...

  நமது ஊரைப் போல வீட்டு வேலைக்கு ஆள் வைத்துக்கொள்ளும் வழக்கம் இங்கு இல்லை. அதனால் எப்போதுமே இங்கே வீட்டு வேலைகளை எல்லோரும் பகிர்ந்துகொண்டு தான் செய்வோம். ஆண்கள் பெண்களுக்கு சமமாக வீட்டு வேலைகளைச் செய்வார்கள். ஆனால் முன்பு எல்லா வேலைகளும் வீட்டிலேயே சாப்பிடுவது என்பது இருக்காது. வாரத்தில் ஒரு முறையாவது வெளியில் சாப்பிடுவோம்.  ஆனால் இப்போது அனைவருமே வீட்டில் இருப்பதால் 3 வேளையுமே வீட்டிலேயே சமைத்து சாப்பிடும் போது பணிச்சுமை அதிகமாகிறது.  ஆனால்,  அனைவருமே சேர்ந்து வேலை செய்யும் போது கஷ்டம் தெரிவதில்லை. 

  ஊரடங்கை தளர்த்திய பிறகு நிலைமை எப்படி இருக்கும்...

  ஒருவரை ஒருவர் நேரில் சந்திப்பது குறையும் என்று நினைக்கிறேன். இங்கே பள்ளி, கல்லூரிகள் வகுப்புகளை ஆன்லைனில் மாற்றி விட்டனர். அமெரிக்காவில் இருக்கும் பாடல், நடன வகுப்பு ஆசிரியர்கள் ஆன்லைனில் தங்கள் வகுப்புகளைத் தொடங்கி விட்டார்கள். மருத்துவர்களும் வீடியோ கால் மூலமாக ஆலோசனை வழங்குகின்றனர். நண்பர்களை சந்திப்பதும் ஆன்லைன் மூலமாகத் தான் என்று மாறிவிட்டது. 

  இனி இதுபோலத் தான் வாழ பழகிக்கொள்ள வேண்டும். சமீபத்தில் என் தந்தையின் 80- வது பிறந்தநாளை உறவினர்களை இணைத்து கொண்டாடினோம். எனது பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இந்த நோய்க்கு தடுப்பூசியோ அல்லது மருந்தோ கண்டு பிடிக்கும் வரை, நாம் அனைவரும் சமூக விலகலை கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். வெளியே செல்லும் போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மிக முக்கியமாக அரசும், மருத்துவர்களும் சொல்வதை கடைப்பிடிக்க வேண்டும். மேற்சொன்ன விஷயங்கள் எல்லாமே நமது வழக்கமாக மாற இருக்கிறது.

  சினிமாத்துறை... 

  நமது துறை மக்கள் அதிக அளவில் கூடி பணிபுரிய வேண்டிய துறை. இதில் சமூக விலகலை கடைபிடிப்பது சிரமமான ஒன்று. மாஸ்க் அணிந்து படங்களில் நடிக்கவும் முடியாது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் பிரச்னை இல்லை. அதுவரை எல்லோருக்குமே மனதுக்குள் பயம் இருந்துகொண்டே இருக்கும். மக்கள் பயமில்லாமல் தியேட்டருக்குப் போய்ப்  படம் பார்க்க எத்தனை நாள் ஆகும் என்று தெரியவில்லை. ஆனால், திரைத்துறையில் அன்றாட வருமானத்தை நம்பி இருக்கும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தான் இதனால் அதிகம் பாதிக்கபட்டுள்ளனர். சினிமா தொழிலாளர்கள் மட்டுமல்ல... ஆட்டோ ஓட்டுநர்கள் உள்பட எல்லாத் தொழிலாளர்களுமே சிரமத்தில் தான் இருக்கிறார்கள்.

  அம்மா வேடம் நடித்தாலும் தனியாகத் தெரிவது எப்படி...

  சசி போன்ற ஒரு சில இயக்குநர்களே பெண் கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். சசி சார் என்றால் கதை கேட்கமால் நடிக்கும் அளவுக்கு நம்பிக்கை உண்டு. 4 படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு, சென்னை வருவதற்கு மிக ஆவலுடன் இருந்தேன். கரோனா பாதிப்பால் என்ன ஆகும், எப்போது படப்பிடிப்புகள் துவங்கும் என்று தெரியவில்லை. 

  இங்கே "கிரியா' என்ற நாடக குழுவை கடந்த 20 ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். இந்தியாவுக்கும் வந்து நாடகம் போட்டுள்ளோம். எங்களது நாடகங்களை பாலசந்தர், கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், இயக்குநர் சசி உள்பட பலர் நேரில் பார்த்து பாராட்டியுள்ளனர். சினிமா டைரக்ஷன் என்னுடைய கனவு. கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதை உட்பட, பல கதைகள் தயாராக இருக்கிறது. விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai