கரோனா துயரங்களும்... மருத்துவ திணறல்களும்...

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூஹானில் முதல் கரோனா நோய் தோன்றிய போது அறிய முடியாத நிமோனியா என ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வூஹான் சுகாதார ஆணையம் விடுத்தது.
கரோனா துயரங்களும்... மருத்துவ திணறல்களும்...

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூஹானில் முதல் கரோனா நோய் தோன்றிய போது அறிய முடியாத நிமோனியா என ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வூஹான் சுகாதார ஆணையம் விடுத்தது. முதல் அடையாளமான இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் ஆகியவை இருப்பதாக மருத்துவர்கள் பார்வைக்கு வந்தது. ஆனால், ஐந்து மாதங்களுக்குப் பிறகு, கரோனா நோய்த்தொற்று பல தீவிர மருத்துவ மர்மங்களை கொண்டிருந்தது. 
இரத்த உறைவு, பக்கவாதம் முதல் செரிமானப் பிரச்னைகள் வரை வந்து அறிவியல் சமூகத்தைத் திணறடித்துக் கொண்டு இருக்கிறது. கரோனா நோய்த் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் தலை முதல் கால் வரை பல்வேறு விதமான அறிகுறிகளை ஏற்படுத்தி பதற வைத்துள்ளது. இது போன்ற பதற்றங்கள் நமது நாட்டில் ஏற்படவில்லை என்பது உண்மை தான். ஆனால், இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் இந்த நோயின் கடுமையான விளைவுகள் குறித்த ஆய்வுகள் வெளியாகியுள்ளன.
கரோனா பாதிப்பின் ஓர் வெளிப்பாடாக நுகர்வு சக்தியையும், சுவையையும் இழக்கச் செய்துள்ளது அல்லது கால்விரல்களில் கொப்புளங்கள் புண்களை உருவாக்குகிறது. அது தவிர நோய் எதிர்ப்பை வீழ்த்தி உடலின் முக்கிய உறுப்புகளை அழித்துப் பலரது உயிர்களைப் பறிக்கிறது. 
இந்த தீநுண்மியைப்பற்றி எவ்வளவு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறதோ அதற்கு மேலாக சிக்கல்களும் வருகின்றன. 
லண்டன் இம்பீரியல் கல்லூரியின் பரிசோதனை மருந்தியல் பேராசிரியர் பீட்டர் ஓபன்ஷா கூறுகையில், "ஒவ்வொரு நாளும் இந்த தீநுண்மி விளையாட்டின் புதிய தந்திரங்களை நாங்கள் கற்றுக்கொண்டு இருக்கின்றோம். பல திடீர்த் திருப்பங்களை இந்த நோய் எங்கள் கண்முன்னால் வெளிப்படுத்தியிருக்கிறது. இப்படிப்பட்ட சிக்கலான இந்த நோய் அறிகுறிகளின் பெருக்கம், சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு மட்டுமல்ல சுகாதார அமைப்புகளுக்கும் ஒரு சவால்' என்கிறார்.
"ஏராளமான பேர்கள் அனுமதிக்கப்பட்டுக் குணமடைவதும் நிவாரணம் பெறுவதுமாக தோன்றினாலும் சுவாசப்பிரச்னைகளையும் தாண்டி பின்னர் கடுமையான நோயுடன் திரும்புகின்றனர். கடந்த சில மாதங்களாக நோயாளிகளின் கடுமையான சுவாச பிரச்னைகளுக்கு செயற்கை சுவாசக்கருவிகளைத் தேடுவதில் கவனம் செலுத்தப்பட்டது. ஆனால் இப்போது மருத்துவமனைகள் ஏராளமான சிறுநீரக சுத்திகரிப்பு (டயாலிசிஸ்) இயந்திரங்களுக்கும், இரத்தத்தில் கட்டித்தன்மையை குறைக்கும் "ஆன்டிகோகுலண்ட்' மருந்துக்கும் தவியாய்த் தவிக்கின்றனர். ஒவ்வொரு நோயாளியும் ஒன்றுக்கு மேற்பட்ட நோயோடு பாதிக்கப்பட்டு இருக்கலாம்'' என்றும் கூறுகிறார் பேராசிரியர் ஓபன்ஷா.
கரோனா நோய்த் தொற்றில் மே 15- ஆம் தேதி வரை உலக அளவில் 45,69,339 லட்சம் பேர்கள் பாதிக்கப்பட்டு, 3,04,798 லட்சம் பேர்கள் உயிரிழந்துள்ளனர். 17, 24, 911 பேர்கள் குணமடைந்துள்ளனர்.
விஞ்ஞானிகள் மருத்துவ வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் ஒரு வேகத்தில் அணிதிரண்டு மனித உடலை பாதிக்கும் கரோனா தீநுண்மியின் எண்ணற்ற வழிகளைப் புரிந்து கொள்ள முயற்சிக்கின்றனர் என்கிறது அமெரிக்கா, சீனா என பல்வேறு நாடுகளில் இருக்கும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் (Johns Hopkins) பல்கலைக்கழகத்தினர்.
இம்பீரியல் கல்லூரி, லிவர்பூல், எடின்பர்க் ஆகிய பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சிக் கூட்டமைப்புப் பிரிட்டனில் உள்ள 166 மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்ட கிட்டத்தட்ட சுமார் 17,000 நோயாளிகளை ஆய்வு செய்தனர். கரோனா நோய்த் தொற்றில் பெரும்பான்மையாக மூன்றில் இரண்டு பங்கு நோயாளிகள் சுவாச அறிகுறிகளால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறினர். 
ஆனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் பல முக்கிய அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என எடின்பர்க்கைச் சேர்ந்த முன்னணி ஆய்வாளர் அன்னிமேரி டோச்செர்டி தெரிவிக்கிறார். 
தசை, மூட்டுவலி, சோர்வுக்கான தசைப்பிடிப்பு அறிகுறிகள்(systemic musculoskeletal symptoms) மற்றும் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற முக்கிய பிரச்னைகள் தவிர ஒரே நேரத்தில் பல்வேறு அறிகுறிகளோடு பாதிக்கப்படுகின்றனர். 
பெரியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பது முக்கியமானதாகும். இலேசான, மிதமான அறிகுறிகளால் ஒரு வாரம் வரை பாதிக்கப்பட்டவர்கள் மோசமான கட்டத்தை எட்டுகின்றனர். பொதுவாக அவர்களது நோய் எதிர்ப்பு சக்தி கரோனா தீநுண்மியை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து முழு மீட்புக்குள் கொண்டுவந்து வைக்கிறது. ஆனால் சில நேரங்களில் இது மிதமிஞ்சிய அழற்சியைத் தூண்டும். உடலின் மிக முக்கிய உறுப்புகளைச் செயலிழக்கச் செய்கின்ற வகையிலான நோய் எதிர்ப்பு சக்திகளின் சூறாவளித் தாக்குதல் (cytokine storm) என்று மருத்துவர்கள் அழைக்கும் அளவிற்குத் திசுக்களையும் முழு உறுப்புகளையும் அழிக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். 
உடல் பருமன் 
கரோனா கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் பருமனாகிறது. இங்கிலாந்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களில் 73 சதவீதம் பேர்கள் எடை அதிகம் அல்லது உடல் பருமனானவர்கள் என லிவர்பூல் பல்கலைக்கழக பேராசிரியர் கலும் செம்பிள் கூறுகிறார். 
சிறுநீரகப் பாதிப்பு 
தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ள நோயாளிகளில் 23 சதவீதம் பேருக்கு சிறுநீரக சிகிச்சை தேவைப்படும் நிலையில் சிறுநீரக பாதிப்பு என்பது கரோனா தாக்குதலினால் அடிக்கடி ஏற்படும் மற்றொரு பின் விளைவாக உருவாகியுள்ளது. மற்ற உறுப்புகளைப் போலவே, தீநுண்மி சிறுநீரகங்களை நேரடியாகத்தாக்குகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கான அமைப்பின் பொதுவான அதிதீவிர செயல்பாடுகளின் விளைவாகவா அல்லது தொடர்ந்து நோயாளியின் ரத்த ஓட்டத்தில் ஏற்படும் மாறுதல்களின் விளைவாகவா? இது இன்னும் தெளிவாகவில்லை. 
இருதயம் 
பிரிட்டன் இருதய அறக்கட்டளையின் மருத்துவ இயக்குநர் நிலேஷ் சமானி இது பற்றிக் கூறுகையில், "கரோனா நோய்த் தொற்றைப் பற்றி நாங்கள் முதலில் கேள்விப்பட்ட போது நுரையீரல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பிரச்னைகளுடன் தான் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்தோம். எனினும் நுரையீரலுக்கு அப்பாலும் இந்த தீநுண்மி பல பிரச்னைகளை உருவாக்குகிறது. குறிப்பாக இருதயம் தொடர்பான சிக்கல்களை இந்த தீநுண்மி ஏன் உருவாக்குகிறது என்பது குறித்தும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது' என்கிறார். 
ரத்தம் உறைதல் 
இந்த தீநுண்மிக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியின்அதீதமான செயல்பாடுகள் சில நேரங்களில் அதீதமான வகையில் ரத்தம் உறைந்து போகும் நிலைக்குக் கொண்டு செல்கின்றன. இத்தகைய உறைதல் மூளையில் ஏற்படுமானால், அது பக்கவாதம் ஏற்படவும் வழிவகுக்கக்கூடும். மிகப் பெரும் தமனி அடைப்பின் விளைவாக மிக மோசமான பக்கவாதத்திற்கு ஆளான ஆறு கரோனா நோயாளிகள் குறித்து லண்டன் பல்கலைக்கழக கல்லூரியைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர்கள்ஆய்வு செய்தனர். இவர்களில் ஐந்து நோயாளிகள் ஒருவார காலத்திற்கு தலைவலி, இருமல், ஜுரம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பிறகே இந்த நிலை ஏற்பட்டது எனில், ஒரு நோயாளிக்கு வேறெந்த அறிகுறியும் தோன்றுவதற்கு முன்பாகவே இந்த நிலை ஏற்பட்டது என்பதும் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
பக்கவாதம்: 
அசாதாரணமான வகையில் ரத்தம் உறைவதற்கு காரணமாக உள்ள டி-டைமெர் என்ற புரதத் துண்டின் ரத்த அளவுகள் நோயாளிகளுக்கு பெருமளவிற்கு அதிகரித்துள்ளதையும் இந்த லண்டன் பல்கலைக்கழக கல்லூரி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த டி-டைபர் புரதத் துண்டு பற்றி முன் கூட்டியே சோதனை செய்யப்பட்டால் இத்தகைய அபாயத்திற்கு உள்ளாகும் வாய்ப்புள்ள நோயாளிகளுக்கு ரத்தத்தை இலகுவாக்கும் (மெல்லியதாக்கும்) மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்க முடியும்; இதன் மூலம் பக்கவாதம் ஏற்படுவது அல்லது உடலின் வேறெந்தப்பகுதியிலும் ரத்தம் உறைந்து போவது ஆகியவற்றுக்கான வாய்ப்புகளைக் குறைக்க முடியும் என்றும் இந்த ஆய்வுக்குழுவின் தலைவரான டேவிட்வெரிங் கூறுகிறார்.
"இதர மோசமான நோய்களுக்கு உள்ளானவர்களுக்கு ரத்தம் உறையும் வாய்ப்பு உள்ளதை விட கரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு நுரையீரல், மூளை, ரத்தக்குழாய்கள் போன்று உடலின் பல்வேறு இடங்களில் ரத்தம் உறைந்து போய்விடும் அபாயம் உள்ளவர்களாக உள்ளனர் என்பதை மிகுதியான ஆதாரங்களுடன் இந்த ஆய்வு நிரூபிக்கிறது'' என ஷெஃப்பீல்ட் பல்கலைக்கழகத்தின் இதய நோய் சிகிச்சைக்கான பேராசிரியர் டிம்சிக்கோ கூறுகிறார்.
மூளை நரம்பு மண்டலம்
நரம்பு மண்டலத்தில் தொற்று ஏற்படுவதற்கான தீவிரமான அறிகுறிகள் மிகக்குறைவாகவே இருந்த போதிலும் கூட, அதீதமான ரத்தம் உறைதலின் மூலம் மறைமுகமாக தாக்குதல் தொடுப்பது மட்டுமின்றி மூளை மற்றும் நரம்பு மண்டலத்தையும் நேரடியாகத் தாக்கும் திறன் கொண்டதாகவும் கரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளதாகவே தோன்றுகிறது. "தீநுண்மி தாக்குதலுக்குப் பிந்தைய காலப்பகுதியில் ஏற்படும் சோர்வின் போது தான் இதன் விளைவுகள் தென்படக்கூடும்' என்றும் கூறுகிறார்.
நுகர்வு சக்தி 
மூக்கில் இருந்து மூளைக்கு தகவலைக் கொண்டு செல்ல உதவும் நுகர்வுத்திறனுக்கான நியூரான்கள் (Neurons) இந்த தீநுண்மியால் பாதிப்புக்கு உள்ளாகின்றன. மிகவும் லேசான தொற்றுக்கு ஆளானவர்களிடம் இந்த நுகர்வுசக்தி இழப்பு இருந்தது. "இவ்வாறு நுகர்வுசக்தியை இழந்தவர்களைப் பொருத்த வரையில் நல்ல செய்தி, கரோனா நோய்த்தொற்று தாக்குதலால் அவர்கள் மிக மோசமான பாதிப்பிற்கு ஆளாக மாட்டார்கள்'' என கலிஃபோர்னியா சான்டியாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த் கரோல்யான் மற்றும்அவரது குழுவினர்தெரிவிக்கின்றனர்.
பலவீனமான ஆண்வர்க்கம் 
இந்த கரோனா நோய்த்தொற்றில் ஆண்களும் முதியவர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகப் பிரிட்டன் தீவிர சிகிச்சை தேசிய தணிக்கை மற்றும் ஆராய்ச்சி மைய தரவுகள் தெரிவிக்கின்றன. ஆண்கள் பொதுவாக அதிக அளவில் புகை பிடிப்பது, மதுப் பயன்பாடு, உடல் பருமனாவது போன்ற உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் செயல்பாடுகள், பாலின ரீதியாகவே நோய் எதிர்ப்பு சக்தியில் உள்ள வேறுபாடுகள் வரை பல்வேறு விளக்கங்கள் தரப்படுகின்றன. பெண்களுக்கு மிகவும் வலுவான நோய் எதிர்ப்பு ஏற்பாடு இருக்கவும் கூடும். அதாவது இத்தகைய தொற்றுக்களில் இருந்து அதிக அளவில் பாதுகாத்துக் கொள்ளும் ஏற்பாடு அவர்களிடம் இருக்கக் கூடும்.
"நோய் எதிர்ப்பிற்கான மிகவும் முக்கியமான பல மரபணுக்கள் எக்ஸ்க்ரோமோசோமில் உள்ளன. இந்த எக்ஸ் க்ரோமோசோம் பெண்களுக்கு இரண்டாகவும் ஆண்களுக்கு ஒன்றாகவும் இருக்கும் நிலையில் கரோனா தீநுண்மிக்கு எதிர்விளைவான நோய் எதிர்ப்பு நடவடிக்கைகள் பெண்களிடையே அதிக அளவில் உள்ளன' என ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்புசக்தி குறித்த ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் பிலிப் கவுல்டர் குறிப்பிடுகிறார்.
குழந்தைகள் 
"இந்த நோயினால் குழந்தைகள் முழுமையாகப் பாதிக்கப்படவில்லை. பிரிட்டன் மருத்துவமனைகளில் உள்ள கரோனா நோயாளிகளில் 3 சதவீத நோயாளிகள் மட்டுமே 18 வயதிற்கும் குறைவானவர்கள். குழந்தைகளின் கீழ்ப்பகுதியில் உள்ள மூச்சுக் குழாயை விட மேல்பகுதியில் உள்ள சுவாசப் பாதையின் மூலம் இந்த ஏசிஇ2 ரிசெப்டர் விரைவாக வளர்வதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில் அவர்களும் கூட இந்த தீநுண்மியால் பாதிக்கப்படும் வாய்ப்பு உருவாகிறது. இதன் மூலம் தீநுண்மியின் செயல்பாடுகளுக்கான தீவிரமான அறிகுறிகள் இல்லாத போதிலும் கூட இந்த நோய்த்தொற்று மற்றவர்களுக்குப் பரப்பவும் அவர்களால் முடிகிறது'' என பேராசிரியர் செம்பிள் கூறினார்.
பரம்பரை அம்சங்கள் 
மூச்சு தொடர்பான சில கரோனா நோய்த் தொற்று ஏற்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு அதற்கு எதிர்வினையாக உடலானது திட்டமிட்ட வகையில் வீக்கத்தை உருவாக்குகின்றன. பரம்பரை அம்சங்களும் கூட இந்தத் தொற்றில் ஒரு பங்கினை வகிக்கக் கூடும் என்ற வகையில் கரோனா நோய்த தொற்றுக்கான அறிகுறிகள் ஏன் வேறுபடுகின்றன என்பதை விளக்கும் வகையில் மனித பாரம்பரிய அம்சங்களைக் கண்டறிவதற்கான சர்வதேச ஆய்விற்கான ஒரு முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வேறுபாடுகள் சுற்றுச் சூழல் மற்றும் வாழ்நிலை அம்சங்கள் ஆகியவற்றின் விளைவாகக் கூட இருக்கலாம் என்ற போதிலும் மரபணு அம்சங்களும் இதில் குறிப்பிடத்தக்க பங்கினை வகிக்கின்றன என்று விஞ்ஞானிகள் உறுதியாக நம்புகின்றனர்.

உச்சி முதல் பாதம் வரை கரோனாவின் பாதிப்பு
காய்ச்சல்

நோய் எதிர்ப்புக்கான செல்களிடமிருந்து மூளையின் அடிப்பகுதி தகவலைப் பெறுகின்ற போது வெப்பத்தால் செயலிழக்கக்கூடிய உணர்ச்சிமிக்க தீநுண்மி அழிப்பதற்கான ஒரு முயற்சியாக உடலின் வெப்பம் அதிகரிக்கிறது. 
ரத்த உறைவு மற்றும் பக்கவாதம்
உடைந்து போன ரத்தக்குழாய்களை அடைக்கும் வகையில் ரத்தப்ளேட்லெட்டுகள் மற்றும் புரதங்கள் ஆகியவை ஒன்று சேர்வதே ரத்த உறைதல் ஆகும். நிலைமை சீரான பிறகு இந்தக்கட்டிகள் தானாகவே கரைந்து போய்விடும். 
கரோனா நோய்த்தொற்று தாக்குதலுக்கு எதிராக உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதீதமாக செயல்படுவதன் விளைவாக மிகஅதிகமான அளவில் ரத்தஉறைவு ஏற்படுமானால், மூளையில் உள்ள ரத்தநாளங்கள் அடைபட்டு விடக்கூடும். இதன் விளைவாக பக்கவாதம் உருவாகும். 
பாதிக்கப்பட்ட பகுதியைப் பொறுத்ததாகவே இதற்கானஅறிகுறிகள் இருக்கும்.
இருமல்
மூச்சுவரும் பாதையில் உள்ள எரிச்சலூட்டும் பொருட்களை அகற்றும் வகையில் நுரையீரல் காற்றை மிகவேகமாக வெளியே அனுப்புவதன் விளைவாகவே இது உருவாகிறது. 
மூச்சுத்திணறல்
நுரையீரலின் இயல்பான செயல் தன்மையை தீநுண்மி குறைத்து விடும் போது மூச்சுவிடுவது சிரமமான ஒன்றாக மாறிவிடுகிறது.
தசை மற்றும் மூட்டுவலி 
இந்த தீநுண்மி தாக்குதலின் விளைவாக மூட்டுகள் மற்றும் தசைப்பகுதிகளில் (இடதுபக்கத்தில்காட்டப்பட்டுள்ளது) வீக்கம் ஏற்படும். இது வலியையும் இறுக்கத்தையும் ஏற்படுத்தும்.
தீநுண்மி தாக்குதலுக்குப் பிந்தைய அயர்ச்சி (சோர்வு)
இந்தத் தொற்றின் விளைவாக மிக நீண்ட காலத்திற்கு அயர்ச்சியும் பலவீனமான உணர்வும் நீடிக்கக் கூடும்.
குடல்பகுதியில்அறிகுறிகள்
நோயை எதிர்த்துப் போராடவும் அதனால் உருவாகும் குப்பைகளைஅகற்றவும் தொற்று ஏற்பட்டுள்ள பகுதிக்கு நோய்எதிர்ப்பு மூலக்கூறுகளைக் கொண்டு செல்வதற்கான மிகவும் சிக்கலானதொரு நோய்எதிர்ப்பு நடவடிக்கையே வீக்கம் ஆகும். குடல் பகுதியில் ஏற்படும் அதீதமான வீக்கத்தின் காரணமாக கீழ்க்கண்டவை ஏற்படக்கூடும்: 
வாந்தி
வயிற்றுப் பகுதியில் உள்ள நச்சுப் பொருட்களை வாய்வழியாக வெளியேற்றி நச்சுப் பொருட்களை உடலில் இருந்து அகற்றும் வகையில் வயிற்றுப் பகுதியின் தசைப் பகுதிகளும் உதரவிதானப்பகுதியும் சுருங்கிவிரியும் செயலில் ஈடுபடுகிறது. 
வயிற்றுப்போக்கு
திரவத்தை உள்வாங்கிக் கொள்ள இயலாத நிலையில் குடல்பகுதியின் செயல்பாடுகள் திரவக்கழிவாக அதை வெளியேற்றுகின்றன. அடிவயிற்றுவலி வருகிறது.
சிறுநீரகங்கள்
இந்த உடல் உறுப்புகள் ரத்தத்தை சுத்திகரித்து, தேவையான வேதிப்பொருட்களைச் சமநிலைப்படுத்தி, கழிவுகளையும், மீதமுள்ள திரவத்தையும் சிறுநீராக வெளியேற்றுகின்றன. இந்த உறுப்புகள் செயலிழந்து போகும் நிலையில் சிறுநீரகங்களின் செயல்பாட்டை மேற்கொள்ளும் செயற்கைகருவிகளின் மூலமாக இந்த வெளியேற்றும் வேலை மேற்கொள்ளப்படுகிறது.
தோல்புண்கள், வெடிப்புகள், கரோனா கொப்புளங்கள்(கட்டைவிரல்கள்)
மிகச் சிறிய ரத்தநாளங்கள் வீங்கும் சூழ்நிலையில் தோலில் புள்ளிகள், புண்கள்ஆகியவை தோன்றுகின்றன. குளிர்காலத்தில் ரத்தநாளங்கள் சுருங்கி பின்னர் வெப்பமடையும் போது விரிகின்றன. இதன் விளைவாக கால்விரல்களில் வெடிப்பு ஏற்பட்டு, எரிச்சல் உருவாகி, பின்னர்அதன் வழியாக ரத்தம் வெளிப்படுவதும் உண்டு. 

தொகுப்பு: சரோஜ் கண்பத்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com