கிரிக்கெட் வீரரின் மறுபக்கம்

வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வால் வாழ்வாதாரத்திற்காக பானி பூரி விற்பனை செய்து தற்போது 19 வயதுக்குட்பட்டோர் இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத வீரர்களில் ஒருவராக திகழ்கிறார்.
கிரிக்கெட் வீரரின் மறுபக்கம்

வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வால் வாழ்வாதாரத்திற்காக பானி பூரி விற்பனை செய்து தற்போது 19 வயதுக்குட்பட்டோர் இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். இவரது சிறப்பான ஆட்டத்தால் நிகழாண்டு ஐபிஎல் 2020 ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.2.4 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி அருகே பதோஹி, சூரியவான் கிராமத்தில் சிறிய ஹார்ட்வேர் கடையின் உரிமையாளரான பூபேந்திர ஜெய்ஸ்வால்-காஞ்சன் தம்பதிக்கு 4-ஆவது மகனாக பிறந்தார் யஷஸ்வி.
10 வயதிலேயே கிரிக்கெட் ஆட்டத்தின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக பயிற்சி பெறுவதற்காக மும்பை ஆஸாத் மைதானத்துக்கு சென்றார். அருகிலேயே கல்பாதேவி என்ற இடத்துக்கு இடம் பெயர்ந்த அவர் பால் விற்பனை கடையில் தங்கி வேலை செய்து வந்தார். தொடர்ந்து கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்ட நிலையில், அவரால் எந்த பயனும் இல்லை எனக் கூறி கடைக்காரரால் வெளியேற்றப்பட்டார்.
பானிபுரி விற்பனை: கிடைத்த சொற்ப வருவாயும் போனதால், தங்கும் இடத்தையும் இழந்த யஷஸ்வி, மைதானத்தின் பணியாளர்களுடன் கூடாரத்திலேயே 3 ஆண்டுகள் தங்கி இருந்தார். பல நாள்கள் பசியுடன், மேலும் வாழ்வாதாரத்துக்காக பானிபுரி விற்பனையும் செய்து வந்தார். பின்னர் 2013-இல் கிரிக்கெட் அகாதெமி நடத்திய ஜுவாலா சிங் என்பவர் யஷஸ்வியின் திறமையை கண்டு வியந்து அவருக்கு ஆதரவு அளித்தார். முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்க்காரும் தனது ஊக்கத்தை ஜெய்ஸ்வாலுக்கு அளித்தார்.
319 ரன்கள் நாட் அவுட்: இடது கை தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி, கடந்த 2015-இல் மும்பையில் நடைபெற்ற அனைத்து பள்ளிகள் இடையிலான போட்டி ஒன்றில் 319 ரன்கள் (நாட் அவுட்) அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து 2018-இல் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோர் ஆசியக் கோப்பை போட்டியில் 318 ரன்களுடன் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற சிறப்பைப் பெற்றார். அதில் இந்தியா கோப்பை வென்றது. இவர் விஜய் ஹசாரே டிராபி போட்டியில் மும்பை அணி சார்பாக விளையாடி 564 ரன்கள் எடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார். மேலும் இப்போட்டியில் 154 பந்துகளில் 203 ரன்கள் எடுத்தார். இதில் 12 சிக்ஸ் மற்றும் 17 ஃபோர் எடுத்தார். 
2019 உலகக் கோப்பையில் அபாரம்: தென்னாப்பிரிக்காவில் கடந்த 2019 டிசம்பர் மாதம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இறுதிச் சுற்று வரை முன்னேறியது. இதற்கு யஷஸ்வி ஜெயஸ்வாலின் அபார ஆட்டமும் காரணமாகும். பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது. போட்டி நாயகனாகவும் தேர்வு பெற்ற அவர், தற்போது சீனியர் பிரிவில் மும்பை ரஞ்சி அணியில் இடம் பெற்று ஆடி வருகிறார். 

இரட்டை சத சாதனை: கடந்த 2019 அக்டோபர் மாதம் நடைபெற்ற லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்த இளம் வீரர் என்ற உலக சாதனையும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு உரியதாகும். 
ரூ.2.4 கோடிக்கு ஏலம்: அவரது தொடர்ச்சியான அற்புத ஆட்டத்தால் நிகழாண்டு ஐபிஎல் 2020 போட்டிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ரூ.2.4 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார் யஷஸ்வி.
இதுதொடர்பாக அவரது தந்தை பூபேந்திர ஜெய்ஸ்வால் கூறுகையில்: 
யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் கடின உழைப்பிற்கு பலன் கிடைத்துள்ளது. ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என்றும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்றும் நம்புகிறேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பணம் ஒரு புறம் இருக்க அவரது கடின உழைப்பு பலனளித்துள்ளது என்றார். 
-பா.சுஜித்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com