அழகான பயணம்!

""ஒரு கனவோடு, லட்சியத்தோடு வாழ்கிற  எவருக்கும் இது ஒரு இன்ஸ்பிரேஷன் ஸ்டோரி. இதில் என்னுடைய  வாழ்க்கை அப்படி.  ஒருத்தன் கிராமத்தில் இருந்து புறப்பட்டு வருகிறான்.
அழகான பயணம்!

""ஒரு கனவோடு, லட்சியத்தோடு வாழ்கிற எவருக்கும் இது ஒரு இன்ஸ்பிரேஷன் ஸ்டோரி. இதில் என்னுடைய வாழ்க்கை அப்படி. ஒருத்தன் கிராமத்தில் இருந்து புறப்பட்டு வருகிறான். அவனுக்கு எந்தப் பின்புலமும் இல்லை. ஏரோப்ளேன் வாங்கப் போறேன், ஒரு ரூபாய் காசில் பறக்க வைக்கிறேன்னு சொன்னான். அதைச் செய்தான். யாராலும் கனவு காண முடியும். இது கற்பனை கிடையாது. நடக்க முடியாத விஷயம் கிடையாது. இது நடந்தது. அப்படி ஒரு வாழ்க்கையில் நான் வருகிறேன். அவன் செய்யும்போது நாம எல்லோரும் ஏன் செய்யக் கூடாது என்று ஒவ்வொருத்தரையும் இதில் நான் கேட்கிறேன். சிம்பிள். அவ்வளவுதான்...'' "சூரரைப் போற்று' படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறி கிடக்க, சூர்யாவுடன் விடியோ காலில் நடந்த உரையாடல்....

பாமர மக்களுக்கு அதிகம் பரிச்சயம் இல்லாதவர் ஜி.ஆர். கோபிநாத்... அவரின் பயோபிக் எப்படி ரசிகர்களுக்குப் புரியும்..

இந்தக் கேள்வியிலேயே படத்தோட ஒரு பிளஸ் பாயிண்ட் இருக்கிறது. மக்களுக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத ஒருத்தரின் கதையாக இது இருக்கும் போது கண்டிப்பாக ரசிகர்களுக்குப் புதிதாகத் தெரியும். அந்தக் கதை நல்லா இருக்கும்போது, கண்டிப்பா அது மக்களுக்கும் பிடிக்கும். ஜி.ஆர்.கோபிநாத்தின் சாதனைகள் பற்றிப் பலருக்கும் தெரியாது. இந்தப் படத்தில் அதைப் பார்க்கும்போது, கண்டிப்பாக மக்களுக்குப் பிடிக்கும். இதுதான் படத்தோட மிகப்பெரிய ப்ளஸ். மைனஸ்னு சொல்றதைவிட, இந்தக் கதையைப் படமா எடுக்குறதுல சில சிரமங்கள் இருந்தது என்று சொல்லலாம். அப்படி நான் உணர்வது என்னவென்றால், இது ரொம்ப டெக்னிக்கலான படம். ஏர்லைன்ஸ், ஏரோப்ளேன், பிசினஸ்னு சுலபமாகப் புரிந்து கொள்ள முடியாத சில விஷயங்களை எளிமைப்படுத்தி, மக்கள் மனதை தொடுகிற மாதிரி படமாக்கியிருக்கிறோம். அதுதான் கொஞ்சம் சிரமமாக இருந்தது. மற்றபடி படம் வந்த விதம் வேறு. ஒரு ஊருக்கு போக்குவரத்து எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்குமே புரியும். ஒரு போக்குவரத்தின் மூலம் நினைத்த இடத்துக்கு போக முடிகிறது என்றால் மட்டுமே கல்வி, தொழில் அனைத்திலுமே மாற்றம் உண்டாகும். எல்லா வகையான போக்குவரத்தும், அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பது தான் நோக்கம். மாட்டு வண்டி, ஆட்டோ, பஸ் என இருக்காமல் விமானப் பயணம் கிடைத்ததாக இருக்க வேண்டும். ஒருவருக்கு ஒரு கனவின் எந்தளவுக்கு வைராக்கியம் இருந்தால், அது சாத்தியப்படும் என்று சொல்கிற படமாகவும் இருக்கும். மதுரையில் தொடங்குகிற கதை. மக்களிடம் இருந்துதான் ஆரம்பிக்கும். அந்நியம் இருக்காது.

சமீபமாக நீங்கள் சொல்லும் சமூக கருத்துகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்தக் கருத்துகளால்இந்தப் படத்துக்கு தாமதம் என்பதாக சொல்லப்பட்டது....

இதுவரை யாருமே விமானப்படை தளத்தில் போய் படப்பிடிப்பு நடத்தியது கிடையாது. பழுதடைந்த ஓடாத விமானத்தில் தான் படப்பிடிப்பு செய்திருப்பார்கள். ஆனால், நாங்கள் நிஜமான விமானம், ஜெட் என எல்லா வித படப்பிடிப்பும் செய்திருக்கிறோம். பாலிவுட்டில் முக்கியமான தயாரிப்பாளர்களுக்குக் கூட அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. அந்த அனுமதி என்பது ஒரு பெரிய நடைமுறை. படத்தைப்பார்த்துவிட்டு அவர்கள் எதுவுமே சொல்லவில்லை. ஒவ்வொரு அலுவலகத்திலும் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லி, இறுதியில் சான்றிதழ் கிடைத்தது. என்னுடைய தனிப்பட்ட கருத்துகளுக்கும் படத்தின் சான்றிதழ் தாமதத்துக்கும் சம்பந்தமில்லை.

பெரும் உழைப்பு.... ஆண்டுக்கணக்கான பயணம்... மெனக்கெடல்... படப்பிடிப்பு சவால்கள் எப்படியிருந்தது அனுபவம்...

அழகாக இருந்தது. பிடித்ததைத்தான் செய்து வருகிறேன் என்பதில் பெருமைதான். மறுபடியும் ஒரு புதிய அனுபவத்துக்குள் போகிறோம், புதிதாக ஒரு கற்றல் நடக்கிறது என்று சொல்வது மாதிரி இந்தப் படம். படப்பிடிப்புக்காக 60 நாள்கள் தான். ஆனால் ஒவ்வொரு நாளும் நான் இதுவரை கற்காத பாடங்கள் இருக்கின்றன. அதில் ரொம்பவே சந்தோஷம்.

பெண் இயக்குநருடன் பணியாற்றுவது முதல் தடவை... எப்படி...

"சேது' பார்த்தவுடன் பாலாவுடன் வேலை பார்க்க வேண்டும் எனத் தோன்றியது. அப்படித்தான் எனக்கு "இறுதிச்சுற்று' இருந்தது. அப்போதே சுதாவுடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என முடிவெடுத்து விட்டேன். எனக்கு ராக்கி கட்டிவிடும் சகோதரி சுதா கொங்கரா. நண்பர்களுக்குள் வியாபாரம் என்று வரும் போது, கருத்து வேறுபாடு வந்துவிடுமோ என நினைத்து நட்பாகவே இருப்போமே என்று கூறி தவிர்த்தது உண்டு. அப்படித்தான் சுதா கொங்கராவிடம் நிறைய விஷயங்கள் பேசுவோம், ஆனால் படத்துக்காக சீரியஸாக அமர்ந்து பேசியது கிடையாது. ஆனால், அந்த மேஜிக் நடந்தது.

என்னை வைத்து அவரால் அந்தக் கதாபாத்திரத்தைப் பார்க்க முடிந்தது. ரொம்ப அழகான ஒரு பயணம் இது. ஜி.ஆர்.கோபிநாத்தை பற்றிய விஷயங்களில் எதை எல்லாம் வைத்து கதையாகச் சொல்லலாம் என்பதே அவருக்குப் பெரிய சவால். பாட்டு, சண்டைக் காட்சி என்பதெல்லாம் இல்லாமல் வெறும் கதையை எமோஷனல் காட்சிகள் மூலமாகவே எந்தளவுக்கு நம்பவைக்க முடியும் என்பதை இங்கே உணர்ந்தேன். இது சினிமா பயணத்தில் முக்கியமான ஒன்று.

சுதா இயக்கத்தில் என்னையே நான் வித்தியாசமாகப் பார்த்தேன். சிரிக்காதே என்று அடிக்கடி சொல்வார். படம் முழுக்க சிரிக்காமல் நடித்ததே பெரிய சவால். இன்னும் அவரைப் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

சினிமாத்துறையில் பல சிரமங்கள் இருந்தபோதும், எந்த விஷயம் உங்களை முன்நோக்கி நகர வைக்கிறது.....

"நீ இதைப் பண்ணக் கூடாது'னு ஒருத்தங்க சொன்னா, அதை நான் பண்ணணும்னு நினைப்பேன். அதுதான் என்னை ஓட வைக்கிறதென நினைக்கிறேன். அதுமட்டுமல்லாமல், என் படத்தைப் பார்க்கிற ரசிகர்களின் மன ஒட்டத்தைப் பார்ப்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும். எங்கே இருந்தோ வருகிற ஒரு வாழ்த்து, ஒரு புன்னகை, அழுத்தமான கைக் குலுக்கல் அதெல்லாம் பார்க்கும்போதுதான், இன்னும் பல பிரச்னைகள் வந்தாலும் நாம ஓடலாம் என்று தோன்ற வைக்கிறது. நான் நினைத்துப் பார்க்காத ஒரு இடமும் கூட இது. மறுபடியும் மறுபடியும் நல்ல வாய்ப்புகள் வரும் போது, ஏன் மெனக்கிடக் கூடாது என்ற விஷயம்தான் காரணம். ஒவ்வொரு புது முயற்சியும் நமக்குப் பயத்தைக் கொடுக்க வேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே ஒரு வளர்ச்சி இருக்கும், அடுத்தக் கட்டத்துக்குப் போக முடியும் என்பது என் நம்பிக்கை. அப்படி வரும் அனைத்து கதைகளுமே நம்மைப் பயமுறுத்தி, சவாலாக இருக்கும் என்று சொல்ல முடியாது. திடீரென்று சுதா "என்னை இந்தப் படத்தில் 18 வயது பையனாக நடிக்க வேண்டும்' என்றார் "எனக்கு 45 வயதாகப் போகிறது' எனச் சொன்னேன். விமானப் போக்குவரத்தை வைத்து இதற்கு முன்பு யாரும் இவ்வளவு பெரிய படமெடுத்தது கிடையாது. ஆகையால், இதில் நிறைய விஷயங்கள் முதல் முயற்சியாக இருந்தது. அப்படியிருப்பதால் மட்டுமே சமரசமில்லாமல் நாமே தயாரிக்கலாம் என்று முடிவெடுத்தேன். அவ்வளவு பெரிய விமானப் போக்குவரத்துத் துறையில் எப்படி ஒருவர் 1 ரூபாய்க்கு டிக்கெட் விற்றார். அவருடைய சவாலான வாழ்க்கை நம்மிடம் வரும் போது, எப்படி நடிக்காமல் விட முடியும் என்கிறார் சூர்யா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com