களத்தில் சந்திப்போம்
By DIN | Published On : 08th November 2020 06:00 AM | Last Updated : 08th November 2020 06:00 AM | அ+அ அ- |

தமிழ் சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் குறிப்பிடத்தக்கது ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ். நல்ல கதையம்சம், குறைந்த பட்ஜெட், நிறைவான வசூல் என தமிழ் ரசிகர்களின் பரவலான வரவேற்பைப் பெற்ற இந்த நிறுவனம் சிறு இடைவெளிக்குப் பின் தயாரித்து வரும் படம் "களத்தில் சந்திப்போம்'. இந்த நிறுவனத்தின் 90-ஆவது படமாக இது உருவாகி வருகிறது. ஜீவா, அருள்நிதி இருவரும் முதன் முறையாக இணைந்து நடிக்கின்றனர். பிரியா பவானி சங்கர், மஞ்சிமா மோகன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கதையின் பிரதான கதாபாத்திரங்களில் ராதாரவி, ரோபோ ஷங்கர், நரேன், ரேணுகா, மாரிமுத்து , வேலராமமூர்த்தி ஆகியோர் நடிக்கின்றனர்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் ச. ராஜசேகர். படம் குறித்து இயக்குநர் பேசும் போது... "" நட்பை முதன்மையாகக் கொண்ட இக்கதை காதல், காமெடி, ஆக்ஷன் என அனைத்து அம்சங்களும் நிறைந்த ஜனரஞ்சக படமாக உருவாக்கப்பட்டுள்ளது. நட்பும், ப்ரியமும் அது நிகழ்த்தப்படும் கணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மைகளிலேயே வாழும் இருவரின் வாழ்க்கைதான் இந்தப் படம். முழுக்க முழுக்க அன்பு, நேசம், பாசம் கொண்டு கட்டப்பட்ட வாழ்க்கையை அவ்வளவு அழகாக, அற்புதமாக வாழ முடியாத நிலை வருகிற போது, வரும் சிக்கல்கள்தான் கதை. உறவையும், பிரிவையும் காலம்தான் தீர்மானிக்கிறது. அது செய்யும் மாயங்கள் எதையும் கலைத்து போட்டு விடும். ஆனால், இந்த வாழ்க்கைக்கு நடுவே எப்போதும் அன்பும், பரிவும் நிரந்தரம். இன்னொரு இடம் கதையில் இருக்கிறது... அது இன்னும் வலிமை தரும் பகுதி. இன்னும் அறுந்து போகாத வாழ்க்கையைத் துப்பறிந்து தந்திருக்கிறேன்'' என்றார். வசனம்- ஆர். அசோக். இசை - யுவன்ஷங்கர்ராஜா. பாடல்கள் - பா .விஜய் , விவேகா. ஒளிப்பதிவு - அபிநந்தன் ராமானுஜம்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...