தீபாவளிக்கு வெளியாகும் குறும்படம்
By DIN | Published On : 08th November 2020 06:00 AM | Last Updated : 08th November 2020 06:00 AM | அ+அ அ- |

குறும்பட உலகத்தில் குறிப்பிடத்தக்கவர் ஜெ.எம். ராஜா. கோவையைச் சேர்ந்த இவர் இயக்குநர் கே. பாக்யராஜ், நவீன் ஆகியோரிடம் உதவியாளராக இருந்து சினிமா கற்றவர். கரோனா பொது முடக்க காலத்தில் இவர் இயக்கி வெளியிட்ட குறும்படங்கள் இணைய தளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.
"ஒரு நாள்', "இருவர்', "சொந்த பந்தம்' என இவர் இயக்கிய குறும்படங்கள் பல விருதுகளையும் பெற்றுள்ளது. தற்போது "அல்வா' என்ற குறும்படத்தை இவர் இயக்கியுள்ளார். கதையின் நாயகனாக பிரபல கலை இயக்குநர் கிரண் நடிக்கிறார். இதுவரை படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர் முதன் முறையாகக் குறும்படத்தில் நடிக்கிறார். வெண்பா கதாநாயகியாக நடிக்கிறார்.
டெல்லி கணேஷ் மற்றும் அவரது மகன் பாலா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தினேஷ் தங்கராஜ் ஒளிப்பதிவு செய்ய, ரோகித் சோகன் பாபு இசையமைத்துள்ளார். வரும் தீபாவளி பண்டிகைக்கு இணையத்தில் வெளியாகவுள்ள இந்த குறும்படம் குறித்து பேசும் போது.... "" பாக்யராஜ்
பாணியில் குடும்பங்களில் நடக்கும் சில அழகான தொல்லைகளை வைத்து முழுவதும் நகைச்சுவையாக உருவாகி இருக்கிறது. 33 வயது கொண்டவர் 22 வயது பெண்ணைத் திருமணம் செய்கிறார். அதன் பின் அவர்களுக்குள் நடக்கும் பிரச்னைகளை நகைச்சுவையாகச் சொல்லுவதே கதை. முழுப் படத்தில் சொல்ல வேண்டிய சுவாரஸ்ய கதைதான். ஆனால், தற்போதைய சூழலில் அதைக் குறும்படமாக முடித்திருக்கிறேன். சமீபத்தில் வெளியாகியுள்ள டீசருக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இது குறும்படத்துக்கும் கிடைக்கும் என்று நம்புகிறேன். ஹிந்தியில் உருவாகி வரும் மகாத்மா காந்தியின் வரலாற்றுப் படத்துக்கான தமிழ், தெலுங்கு, மலையாள மொழிமாற்று வசனத்தைத் தற்போது எழுதி வருகிறேன்'' என்றார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...