ரோஜா மலரே!: காணாமல் போன காதணி - குமாரி சச்சு: 59

என்னுடைய கை நடித்த "மெயின் சுப் ரகுங்கி'  என்ற ஹிந்திப் படம் வெற்றியடைந்தது.
ரோஜா மலரே!: காணாமல் போன காதணி - குமாரி சச்சு: 59

என்னுடைய கை நடித்த "மெயின் சுப் ரகுங்கி'  என்ற ஹிந்திப் படம் வெற்றியடைந்தது. "வீரத்திருமகன்' படப்பிடிப்பு மைசூர் அருகில் உள்ள தலக்காடு என்ற இடத்தில் நடந்தது. அந்த இடம் சஹாரா பாலைவனம் போல் ஒரே மணல் மேடாக காட்சி அளித்தது. எங்கு நோக்கினும் மணல் தான்.  தமிழ் நாட்டில் ஒரு தலக்காடு என்று ஊர் உள்ளது. அது அல்ல இது. நான் சொல்வது, மைசூருக்கு அருகில் உள்ள தலக்காடு.

இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் காமிரா கண்கள் கொண்டவர். இயற்கை அழகு அனைத்தையும் தன்னுடைய படத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று விரும்புவார். அது மட்டுமல்லாமல் இது மாதிரி பலவித புதிய இடம் நோக்கி பயணித்து, அந்த இடத்தில் இருக்கும் இயற்கை அழகை ரசிப்பது மட்டுமல்ல, அந்த இடத்தில் படப்பிடிப்பை நடத்திட வேண்டும் என்று ஆசை கொள்வார். அதே சமயம் செலவு அதிகம் ஆகாமலும் பார்த்துக் கொள்வார். 

இந்த தலக்காடு என்ற இடத்தில் நாங்கள் தான் முதன் முதலில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம் என்று நினைக்கிறேன். பின்னர் வேறு குழுக்கள் அங்குப் போய் தங்களது படத்தை எடுத்தார்கள். உதாரணமாக "சிட்டுக்குருவி' என்ற படத்தின் படப்பிடிப்பு கூட அங்கு நடந்தது என்று சொல்வார்கள்.  

ஒரு நாள் படப்பிடிப்பின் போது நானும் என்னுடன் கதாநாயகனாக நடிக்கும் ஆனந்தனும் இந்த மணலில் கட்டிப் பிடித்தபடி உருள வேண்டும் என்று இயக்குநர் சொல்லி விட்டார். சரியாக வரும் வரை இரண்டு, மூன்று தடவை காட்சிகளை எடுத்தார்கள். உருண்டு முடித்தவுடன் தலை முதல் பாதம் வரை மணல் ஒட்டியிருந்தது. இது மிகவும் அசெüகரியமாக இருந்தது.  சரியாக உருண்டதும் இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் "சரி' என்று சொன்னதும், நான் மணலை தட்டி விட்டுக் கொண்டிருந்தேன். 

அப்பொழுது உடை அலங்கார நிபுணரின் உதவியாளர் ஒருவர் வந்து, என் காதை காண்பித்து, உங்கள் காதணி எங்கே என்று கேட்டார். ஒரு காதில் காதணி இருந்தது. மறு காதில் அது இல்லை. அது ஒரு நீளமான காட்சி. ராஜா ராணி கதை அல்லவா, மிகவும் ஆடம்பரமாக அந்தக் காதணியை செய்திருந்தார்கள். ஒரு காதணி இருந்தால் போதாது. 

இரண்டும் வேண்டும். அவர் என்னிடம் கேட்டதும், நான் அவரிடம் எங்காவது கீழே விழுந்து இருக்கும். இதை நான் கவனித்துக் கொண்டு இருக்க முடியுமா? என்று சொன்னேன். அவர் நான் மூன்று முறை உருண்ட இடத்தில் எல்லாம் தேடி விட்டு வந்தார். ஆனால், அந்தக் காதணி கிடைக்கவில்லை. என்ன செய்வது என்று அவருக்கும் தெரியவில்லை, எனக்கும் புரியவில்லை. ஏன் என்றால் ஒரு காட்சியில் இருந்த காதணி அடுத்த காட்சியில் இல்லை என்றால் அது சரியாக இருக்காது. இந்த நிலையில் என்ன செய்வது என்று குழப்பம் ஏற்பட்டது. 

தலக்காடு மணல், சற்று அபாயகரமான பகுதி. நாம் பாதுகாப்பாக இல்லா விட்டால் நம்மை அதல பாதாளத்துக்கு இழுத்துக் கொண்டு போய் விடும். அந்த மணல் திட்டின் ஆழம் மிகவும் அதிகம். நல்ல வேளையாக உருளும் காட்சிகள் மாலையில் படமாக்கப்பட்டது. வேறு சில காட்சிகளை காதணி இருக்கும் பக்கம் எடுத்துக் கொண்டு அன்று படப்பிடிப்பை முடித்துக் கொண்டார்கள். மேக்கப் நிபுணர்கள் இருவர் அங்கு இருந்தனர்.  அவர்கள் தான் எங்களுக்கு மேக்கப் செய்வதற்காக பணி அமர்த்தப்பட்டவர்கள். இருவருமே மேக்கப் கலையில் நிபுணர்களாக இருந்தார்கள். 

படப்பிடிப்பு முடிந்த அன்று மாலையிலிருந்து தொலைந்து போன காதணி போலவே, வேறொரு காதணியை வாங்க மைசூர் முழுவதும் சல்லடை போட்டு தேடினார்கள். இன்று இருக்கும் அளவு, மைசூர் அன்று முன்னேறவில்லை. பல கடைகளில் காதணி இருந்தது. ஆனால் பழைய காதணி போல் கிடைக்கவே இல்லை. வேறு என்ன செய்வது என்று யோசிக்க, இதற்கு நெருங்கி வரும் ஒரு காதணியை வாங்கிக் கொண்டு வந்தார்கள். காலையில் படப்பிடிப்பிற்கு வரும் போது ஒரு காதில் உள்ள காதணி போல் ஒன்றை தயார் செய்து விட்டார்கள். ஆனால் அவர்கள் தயார் செய்த காதணி என் காதில் மாட்டிக் கொள்ளத்தக்க வகையில் இல்லை. இதை நாம் எப்படி அணிந்து கொண்டு நடிப்பது என்று யோசிக்க கூட நேரம் கொடுக்காமல், அந்த உடை அலங்கார நிபுணர் மட்டும் அல்ல, அவரது உதவியாளராகக் கூட இருந்தவர், எப்படியாவது இதை என் காதில் மாட்டி விட வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டு வேலை செய்தார். 

இன்று உள்ளது போல் ஒட்டும் பசை கிடையாது. அன்று  அவர்கள் கையில் இருந்தது தாடி, மீசை ஒட்ட பயன்படுத்தும் பசையை வாங்கிக் கொண்டு வந்து, எனது ஒரு காதில் இருந்த காதணி போலவே, அந்த அட்டையில் ஒட்டி தயார் செய்தார்கள். பின்பு அட்டை தெரியாதவாறு செய்தார்கள். இப்படி ஒட்டியவுடன் காதணி மாதிரி உருவம் வந்தவுடன் எல்லோரும் சந்தோஷப்பட்டார்கள். ஆனால் என் காதில் எப்படி இதை அணிவிப்பது என்று அப்புறம் யோசிக்க ஆரம்பித்தார்கள். இவ்வளவு கஷ்டப்பட்டதன் காரணம், மைசூரில் இருந்து சென்னைக்கு வந்து, அதே போல் ஒரு ஜோடி காதணியை வாங்கிப் போக நேரம் எல்லாம் இல்லை என்பதால் தான்.

இப்படி அவர்கள் செய்ததால் பெண்கள் காதில் அணியும் திருகாணி அதில் இல்லை. காதில் திருகாணி இல்லாமல் இருந்தால் எப்படி காதணி காதில் நிற்கும்?. அதற்கும் ஒரு ஐடியா செய்தார்கள். திருகாணியை போல் ஒன்றை வைத்து ஒட்டி விட்டார்கள். இப்பொழுதுதான் கிளைமாக்ஸ் வருகிறது! இந்த காதணியை காதில் நிற்க வைப்பதற்கு என்ன பண்ணினார்கள் தெரியுமா? நூலையும் ஊசியையும் கொண்டு வந்து, அந்த ஒட்டிய காதணியை என் காதில் வைத்து தைத்து விட்டார்கள். இது எப்படி என்று நீங்கள் எல்லோரும் யோசிக்க வேண்டாம். என் காதில் உள்ள துளையைப் பயன்படுத்தி துணி தைப்பது போல் தைத்து விட்டார்கள். அவர்கள் தைக்கும் போது எனக்கு மிகவும் வலித்தது. நானும் அழுதேன். என் பாட்டியும் இதைப் பார்த்து அழுதார்.  மேக்கப் நிபுணர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்டனர். அவர்கள் நிலைமையைச் சொன்னார்கள். ஏவி.எம் செட்டியாருக்கு இது தெரிந்தால் மிகவும் கோபப்படுவார் என்று, மீண்டும், மீண்டும் மன்னிப்பு கேட்டார்கள். அந்தப் படத்தில் வரும் அறிமுகப் பாடல் காட்சியை சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். 

(தொடரும்)

சந்திப்பு: சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com