சிதார் ரவிசங்கர் 100

பனாரஸ் நகரத்தில் 1920-ஆம் ஆண்டு பிறந்த ரவிசங்கருக்கு பத்து வயதிலிருந்தே மேற்கத்திய கலாசாரத்தில் ஆர்வம் அதிகமிருந்தது.
சிதார் ரவிசங்கர் 100

பனாரஸ் நகரத்தில் 1920-ஆம் ஆண்டு பிறந்த ரவிசங்கருக்கு பத்து வயதிலிருந்தே மேற்கத்திய கலாசாரத்தில் ஆர்வம் அதிகமிருந்தது. பாரிஸ் நகரத்தில் பிரபலமாக விளங்கிய இவரது மூத்த சகோதரரும், நடன கலைஞருமான உதயசங்கர் குழுவில் இருந்த போது அவருடன் பல ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றதன் காரணமாக ரவி சங்கருக்கு இசையில் நாட்டம் ஏற்பட்டது. தன் சகோதரரிடம் 14-ஆவது வயதிலேயே கதக், கதகளி போன்ற நடனங்களில் பயிற்சிப் பெற்றார். அவரைப் போலவே நடனக் கலைஞராக வேண்டுமென்ற தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு, 18-ஆவது வயதில் லண்டனில் இருந்த உஸ்தாத் அலாவுதீன்கானிடம் சிதார் பயிற்சி பெறத் தொடங்கினார். சிறிது காலத்திற்குள் அலாவுதீன்கான், இந்தியா வந்து மத்தியப்பிரதேசத்தில் உள்ள மெய்ஹர் என்ற கிராமத்தில் தங்கி சிதார் பயிற்சியளித்து வந்தார்.

ரவிசங்கரும் இந்தியாவுக்கு வந்து, அலாவுதீன்கானிடம் தொடர்ந்து சிதார் பயிற்சிப் பெற்று வந்த போது, கானின் மகளும், சிதார் கலைஞருமான அன்னபூர்ணா தேவியை மணந்து கொள்ள விரும்பினார். 1941-ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடந்தது. ஓர் ஆண்டுக்குப் பின் ஆண் குழந்தையொன்று பிறந்தவுடன், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். பின்னர் ரவிசங்கர் அவரது திறமையால் சர்வதேச அளவிலும், இந்தியாவிலும் பிரபலமடைந்து சிறந்த சிதார் இசை கலைஞராகப் புகழ் பெற்றார். ரிச்சர்ட் ஆட்டன் பரோவின் "காந்தி' திரைப்படம் உள்பட பல படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றார்.

அன்னபூர்ணாவிடமிருந்து விலகிய ரவிசங்கர், வெளிநாடுகளில் நிகழ்ச்சிகள் நடத்தும் போது உடன் தம்பூரா வாசித்து வந்த சுகன்யா மூலம் அனுஷ்கா என்ற பெண் குழந்தைக்குத் தந்தையானார். பின்னர் முறைப்படி சுகன்யாவைத் திருமணம் செய்து கொண்டார். தற்போது ரவிசங்கர் வாரிசாக அனுஷ்கா சிதார் இசைக் கலைஞராக விளங்கி வருகிறார். 2012-ஆம் ஆண்டு அனுஷ்காவுடன் இணைந்து பெங்களூரில் இசை நிகழ்ச்சி நடத்திய ரவிசங்கர், இதுவே என்னுடைய கடைசி நிகழ்ச்சி என்று மேடையில் கூறியது போலவே, அதே ஆண்டில் சில மாதங்களுக்கு பின் காலமானார். இந்த ஆண்டு அவரது நூற்றாண்டு ஆகும். அவரைப் பற்றி பிரபல சரோட் இசைக் கலைஞர் அலிஅக்பர் கான், ரவிசங்கர் மனைவி சுகன்யா மகள் அனுஷ்கா சங்கர் ஆகியோர் தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொள்கின்றனர்:

இசைக்கலைஞர் அலி அக்பர்கான்

சிதார் இசையில் புதிய பரிமாணங்களைப் புகுத்தியவர். சிதார் சரோட் இரண்டுமே பெர்ஷியன் வார்த்தைகளாகும். இதற்கு முறையே "சமர்ப்பணம்' மற்றும் "மெல்லிசை' என்று பொருள். அவர் சிதார் இசைக்கும் பாணி மற்ற கலைஞர்களிடமிருந்து வித்தியாசமாக இருக்கும். ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும் புதுப்புது ராகங்களை அறிமுகப்படுத்துவார். ஏறக்குறைய அவரது பல நிகழ்ச்சிகள் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் ரசிக்கும்படி புதுமையாக இருக்கும். மேலும் நிகழ்ச்சியின் போது ஆடிட்டோரியம், மேடை, ஒளி மற்றும் ஒலி அமைப்பு போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துவதுண்டு.

ரவிசங்கருக்கு சிதார் பயிற்சியளித்த குரு உஸ்தாத் அலாவுதீன்கானும், என்னுடைய தந்தையும் குருவுமான சரோட் கலைஞர் உஸ்தாத் ஹபீஸ் அலிகானும் வெவ்வேறு இசைக்கருவியில் பிரபலமானவர்கள் என்றாலும், ரவிசங்கரும் நானும் சேர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுண்டு. அவரை என்னுடைய மூத்த சகோதரராகவே கருதினேன்.1964-ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம் எங்கள் இருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாததாகும்.

அப்போது சரோட் கலைஞனாக அறிமுகமானேன். கொல்கத்தாவில் நடந்த ஜூகல்பந்தி நிகழ்ச்சியில் என்னையும் மேடையேற்றி அவருடன் பங்கேற்கும் வாய்ப்பினைக் கொடுத்தார். ஏறக்குறைய பத்தாயிரம் பேர் கூடியிருந்த அந்த அரங்கில் வாசித்தது என்றும் மறக்க முடியாதது ஆகும்.

அதே போன்று வாரணாசியில் 1966-ஆம் ஆண்டு இரவு முழுவதும் பிரபல இசைக் கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியொன்றை ரவிசங்கரே, சர்வ பாரதீய அமைப்பின் சார்பாக ஏற்பாடு செய்திருந்தார். பண்டிட் ரவிசங்கருடன் உஸ்தாத் பிஸ்மில்லா கான், உஸ்தாத் அல்லா ரக்கா, பண்டிட் கிஷண் மகராஜ், பண்டிட் பீம் சேன் ஜோஷி, உஸ்தாத் ஜாகீர் உசேன் ஆகியோருடன் என்னையும் அழைத்திருந்தார்.

இரவு முழுவதும் நடக்கும் நிகழ்ச்சி என்பதால் ஏராளமானோர் கூடியிருந்தனர். ஒவ்வொருவராகப் பங்கேற்ற போது ரவிசங்கரின் முறை வந்தது. அவர் மெய்மறந்து  வாசித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த கிஷண் மகராஜ், அவர் வாசிப்பதை நிறுத்தச் சொன்னார். ரவிசங்கர் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார். அவர் வாசிக்கும் போது சிறிது இடையூறு ஏற்பட்டாலும் அவருக்குப் பிடிக்காது. வாசிப்பதை நிறுத்திவிட்டு எழுந்து விடுவார். 

நாங்கள் அனைவரும் என்னவென்று புரியாமல் திகைத்திருந்தோம். அன்றைய பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி, தாஷ்கண்டில் திடீரென இறந்துவிட்டதாகத் தகவல் வந்ததால் நிகழ்ச்சியை நிறுத்தும்படி கூறியதாக கிஷண் மகராஜ் அறிவித்தார். 

அபூர்வமாகப் பிரபல இசைக் கலைஞர்கள் பங்கேற்ற அந்த நிகழ்ச்சி பாதியில் தடைபட்டுப் போனது குறித்து வந்திருந்தோர் அனைவரும் வருந்தினர். இன்று ரவிசங்கரின் வாரிசாக அவரது மகள் அனுஷ்கா வந்திருப்பது மகிழ்ச்சியான விஷயமாகும்.

சுகன்யா சங்கர்

எனக்கு தம்பூரா வாசிக்கத் தெரியும் என்றாலும், இந்துஸ்தானி சங்கீதத்தைப் பற்றி அதிகம் தெரியாது. ஆனால் பண்டிட் ரவிசங்கரின் சிதார் வாசிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. அவரது மைத்துனி லட்சுமி சங்கர் மற்றும் அவருடைய மகள் விஜியுடன் எனக்கு நல்ல பழக்கம் இருந்தது. ஒரு முறை லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹாலில் நடந்த ரவிசங்கர் சிதார் நிகழ்ச்சியின் போது, தம்பூரா வாசிக்க முடியுமா என்று விஜி என்னிடம் கேட்ட போது, இப்படியொரு அதிர்ஷ்டமா என்று நினைத்தபடி உடனே ஒப்புக்கொண்டேன். அப்போது எனக்கு வயது 17. ரவிசங்கர் மேடை  ஏறி வந்த அழகு என்னை மிகவும் கவர்ந்தது.தொடர்ந்து அவரது நிகழ்ச்சிகளில் தம்பூரா வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

அப்போது பிற்காலத்தில் நான் அவரது துணைவியாவேன் என்று நினைக்கவே இல்லை. ரவிசங்கரைப் பற்றி நிறையவே தெரிந்து கொண்டேன். அவரிடம் பயிற்சிப் பெற்ற பலர் அவர் அமைத்துக் கொடுத்த மேடையில் இன்று பிரபலமாக தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றனர். 

இன்று சமூக வலைதளங்களில் ஒருவர் சுயமாகவே புகழைத் தேடிக் கொள்ள முடியும். ரவிசங்கரைப் பொருத்தவரை புகழ் அவரைத் தேடி வந்தது. அனுஷ்கா பிறந்தவுடன் நாங்களிருவரும் முறைப்படி திருமணம் செய்து கொண்டோம்.

அவரது நூறாவது பிறந்த நாளையொட்டி பொது முடக்கம் காரணமாக நேரடியாக அஞ்சலி செலுத்த முடியாதவர்கள் டிஜிட்டல் முறையில் அஞ்சலி செலுத்தும் வகையில் அனுஷ்கா ஏற்பாடு செய்து கொடுத்திருந்தாள். அவரது வாழ்நாளில் அவருக்கு அளிக்கப்பட்ட விருதுகளையும், சான்றிதழ்களையும், வாழ்நாள் சாதனை கிராமி விருது உள்பட அவர் பயன்படுத்திய சிதார் இசைக்கருவிகள், உடைகள் அனைத்தையும் பெங்களூருவில் உள்ள பிரபலமான இசைக் கலைஞர்கள் பயன்படுத்திய பொருட்களை சேகரித்து மக்கள் பார்வைக்காகப் பாதுகாப்புடன் "இந்தியன் மியூசிக் எக்ஸ்பீரியன்ஸ்' என்ற பெயரில் இயங்கும் மியூசியத்திற்குக் கொடுத்து உதவியுள்ளேன். இசைப்பிரியர்கள் இசைக்கலைஞர்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

அனுஷ்கா சங்கர் என்னை சிதார் இசைக்கலைஞராக உருவாக்கிய என் தந்தை பண்டிட் ரவிசங்கருக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். அவர் எனக்கு தந்தை மட்டுமல்ல குருவும் கூட. 2012-ஆம் ஆண்டு அவருடன் சேர்ந்து பெங்களூரில் நடத்திய நிகழ்ச்சி என் வாழ்க்கையில் மறக்க முடியாததாகும். அவர் இந்திய இசையையும், கலாசாரத்தையும் தன் சிதார் இசையின் மூலம் உலகம் முழுவதும் பரப்பியதில் பெரும் பங்கு உண்டு. 

கடந்த ஏப்ரல் மாதம் அவரால் உருவாக்கப்பட்ட மாணவர்களை ஒருங்கிணைத்து, அவரது நூறாவது பிறந்த நாளன்று பெரிய அளவில் விழாவொன்றை நடத்த நானும், என்னுடைய தோழி நோராவும் (ஜோன்ஸ்) திட்டமிட்டிருந்தோம். ஆனால் பொதுமுடக்கம் காரணமாக சிறப்பாக நடத்த முடியவில்லை என்றாலும், ஆலிவர் கிராஸ்க் எழுதிய என் தந்தையின் வாழ்க்கை வரலாறான "இந்திய சூரியன்' என்ற புத்தகத்தை வெளியிட்டோம். அந்த புத்தகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கூடவே என்னுடைய இசையில் ஷில்பா ராவ் பாட, அனன்யா நடனமாட வீட்டிலேயே படமாக்கப்பட்ட "லவ் லெட்டர்ஸ்' என்ற விடியோ ஆல்பத்தையும் வெளியிட்டோம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com