உறவுகளின் பின்னணி
By DIN | Published On : 18th October 2020 06:00 AM | Last Updated : 18th October 2020 06:00 AM | அ+அ அ- |

சரித்தா பிக்சன் சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "எக்ஸ் இசட் ஒய்'. விஷ்ணு பிரியன், பிரியா கார்த்திகேயன், ராம் ஆகாஷ் உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் சுதாகர். படம் குறித்து இயக்குநர் பேசும் போது.... "" உணர்வுகளை கடத்தி விடுகிற சினிமாக்கள்தான் எப்போதும் என் பாணி. நான் சிறு வயதில் இருந்து பார்த்து வளர்ந்த உறவுகள், அதனுள் இருக்கிற புதிர்கள், முடிச்சுகள் இதுவெல்லாம் இங்கே பேசு பொருள். இந்த கரோனா கால முடக்கத்தில் நம் அன்றாடச் செய்திகளில் அடிப்பட்ட வார்த்தை, குடும்ப வன்முறை. இந்த வார்த்தை இதுவரை அறியப்படாத ஒன்று. குடும்பங்களுக்குள் என்ன அப்படி வன்முறை என்று உள் நோக்கினால், ஆயிரமாயிரம் புதிர்கள்.
அப்படி ஒரு சம்பவத்தை மையப்படுத்தியே இந்த திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. மிக சர்வ சாதாரணமாக குற்றங்கள் நம் நாட்டில் நடைபெற்றுவருகின்றன... அதிகாரங்களும், சட்டங்களும் , தண்டனைகளும் , மனித உரிமைகளும் மனிதர்கள் நிம்மதியாக வாழ்வதற்குத்தான் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. பெரும்பாலும் குடும்பங்களுக்குள் நடக்கும் வன்முறைகளும், குற்றங்களுக்கும் சமூகமும் ஒரு வகையில் காரணமாக இருக்கிறது.
சமூகத்தில் ஏற்படும் சிறு மாற்றங்கள் கூட தனிமனித வாழ்விலும், குடும்பங்களிலும் வன்முறைகளை தூண்டும் வகையில் இருந்து விடுவதுண்டு. அப்படி ஒரு குடும்பத்தில் நடக்கும் சஸ்பென்ஸ் நிறைந்த சம்பவங்களே கதை. படப்பிடிப்பு முடிந்து படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.