சாதனை சகோதரர்கள்

மனித உயிர் விலை மதிப்பற்றது. மனித உயிரை சுமந்து செல்லும் அவசர ஊர்தி பெருகி வரும் வாகனங்களால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி கால தாமதம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.
சாதனை சகோதரர்கள்

மனித உயிர் விலை மதிப்பற்றது. மனித உயிரை சுமந்து செல்லும் அவசர ஊர்தி பெருகி வரும் வாகனங்களால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி கால தாமதம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. இது போன்ற சூழ்நிலையில் எங்களது தந்தையை 2 வயதில் இழந்தோம். இந்தச் சூழ்நிலையை மாற்றவே தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் தொழில்நுட்ப கருவியை உருவாக்கியுள்ளோம். இதன்மூலம் பெருநகரங்களிலும் கூட சாலையில் அவசர ஊர்தி நெரிசலில் சிக்காமல் காலதாமதமின்றி மருத்துவமனைக்குச் செல்ல எளிதாக உதவுகின்றது என்கிறார்கள் மதுரை மேலூரைச் சேர்ந்த சகோதரர்களான பாலகுமார்-பாலசந்தர்.

அவர்களிடம் பேசினோம்:

""நாங்கள் இருவரும் தற்போது பிளஸ் 2 படிக்கிறோம். புதிதாகக் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பது 6-ஆம் வகுப்பு படிக்கும் போது உருவான எண்ணம். இதற்கு முன்னர் நாற்று நடும் கருவி, கொசு ஒழிப்பு இயந்திரம் என சிறுசிறு கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்துள்ளோம். எங்கள் தந்தை லாரி ஒட்டுநர். விபத்து ஒன்றில் சிக்கியவருக்கு ரத்த இழப்பு அதிகம் ஏற்பட்டு அவசர ஊர்தி வர தாமதம் ஆனதன் காரணமாக உயிரிழந்தார். இனி இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படக்கூடாது என்பதற்காக நாங்கள் கண்டுபிடித்தது தான் தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல்.

சாலைகளில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலும் அந்த சூழ்நிலையில் கூட அவசர ஊர்தி விரைந்து செல்கின்றது. நமது ஊர் சாலைகளில் ஆங்காங்கே மின் கம்பங்கள் அமைந்துள்ளன. போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடத்திற்கு வருவதற்கு முன்னரே எச்சரிக்கை செய்யத் தொடங்கும். இதனால் அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் தவிர்க்கப்படும். இதனால் அவசர ஊர்தி விரைவாக மருத்துவமனைச் செல்ல முடியும். இந்தக் கருவியைக் கண்டுபிடிக்க 16 ஆயிரம் ரூபாய் செலவானது. அதற்கு முன்பு சோதனை முயற்சி செய்த போது அதிகம் செலவுபிடித்தது.

ஒவ்வொரு கண்டுபிடிப்பை முயற்சிக்கும் போது எங்களது பள்ளி தலைமை ஆசிரியர் ராவணனும், எங்கள் மாமாவும் முடிந்தளவு பணம் தந்து உதவுவார்கள். ஆனால் எங்கள் ஊரைச் சேர்ந்தவர்கள் எதற்கு இருவரும் பணத்தை வீணாக்குகிறீர்கள். உங்கள் அம்மாவே கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கிறார் என அறிவுரைச் சொல்வார்கள்.

ஆனால் அம்மா ஒரு நாளும் எங்களை எதுவும் சொன்னதில்லை. பாராட்டிக் கொண்டே இருப்பார். இத்தனைக்கும் அம்மா சமையல் வேலை செய்து கஷ்டப்பட்டுச் சம்பாதித்துத் தான் எங்களைப் படிக்க வைக்கிறார். மாமா மெக்கானிக் கடை வைத்திருக்கிறார். நாங்கள் இருவரும் அங்கே வேலைக்குச் செல்வோம். அவர் தரும் பணத்தில் எங்கள் அண்ணனை படிக்க வைக்க உதவுகிறோம். பிளஸ் 2 முடிந்தப் பிறகு என்ன படிக்கப் போகிறோம் என்று தெரியவில்லை. படிக்கவும் வசதியில்லை. ஆனால் மக்களுக்குத் தேவையான கண்டுபிடிப்புகளை அதிகம் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது'' என்கிறார்கள் பாலகுமார்- பாலசந்தர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com