விவசாயமே தேசத்தின் ஆதாரம்!

எப்போது கடந்தாலும் எஸ்.பி. ஜனநாதனிடம்  சின்னதாக ஒரு புன்னகை. " வாங்க.. எப்படி இருக்கீங்க...' என்ற விசாரிப்புக்குப் பின் "பேட்டியை ஆரம்பிக்கலாமா...' என்கிறார் உட்கார்ந்ததும்.  ஒவ்வொரு முறையும்
விவசாயமே தேசத்தின் ஆதாரம்!


எப்போது கடந்தாலும் எஸ்.பி. ஜனநாதனிடம்  சின்னதாக ஒரு புன்னகை. " வாங்க.. எப்படி இருக்கீங்க...' என்ற விசாரிப்புக்குப் பின் "பேட்டியை ஆரம்பிக்கலாமா...' என்கிறார் உட்கார்ந்ததும்.  ஒவ்வொரு முறையும் எஸ்.பி.ஜனநாதன் படங்களுக்கான தீவிரமும், எதிர்பார்ப்பும் சமகால இயக்குநர்களில் யாருக்கும் இல்லாதது. இப்போது "லாபம்' படத்துடன் ரசிகர்களை சந்திக்க வருகிறார்.  

காட்சிகளும், வசனங்களும் விவசாயத்தின் மீதான அக்கறையைக் காட்டுகிறதே.... 

விவசாயிகளிடம் சமூகம் வாங்கும் பொருள்களுக்கு மலிவான விலையே கொடுக்கப்படுகிறது.  அதே விவசாயி தனக்காக ஒரு பொருளை வாங்க நினைக்கும்போது, சமூகம் சொல்லும் விலை பல மடங்கு அதிகமாக இருக்கிறது. பற்றாக்குறைக்கு விவசாயி, தனது சேமிப்பையே பயன்படுத்த வேண்டும். சேமிப்பை பிள்ளைகளின் படிப்பு, திருமணம் போன்ற செலவுகளுக்குப் பயன்படுத்திவிட்டால், சாகுபடிக்கு என்ன செய்வது? கடன்தான் வாங்க வேண்டும். ஆக, இந்த உலகுக்கு உணவு படைப்பதற்காக அல்லும் பகலும் உழைத்துக்கொண்டே இருக்கும் உழவனைக் கடனாளியாக்குவது யார்? அரசுகளும் சமூகமும்தானே! விதையை விற்றுவிட்டு வாழ்வைத் தொலைக்கும் அவலத்துக்கு விவசாயிகளைத் தள்ளுவது நியாயமா... இப்படிப் பல கேள்விகள் இருந்தன. ஒவ்வொன்றிலும் அவ்வளவு நியாயம்.

விவசாயப் பின்னணியில் ஒரு கதை.... ஆனால், படத்துக்கு லாபம் எனப் பெயர்... இது எதன் குறியீடாக இருக்கும்.....

விவசாயத்தைப் பேசுகிற அதே நேரத்தில், அது சார்ந்த தொழிற்சாலைகளையும் பேசப் போகிறேன். இப்போதைய தலைமுறைக்கு  விவசாயம் என்பதே தெரியவில்லை. பெருநகரங்களில் நெல் எப்படி விளைந்து வருகிறது என்பது கூடத் தெரியாமல் செத்துப் போகிறவர்கள் இருக்கிறார்கள். இங்கு விவசாயி என்றால் இப்படித்தான் இருப்பார் என்று பிம்பம் விழுந்து விட்டது.  பயணத்தின் விளிம்பில் நின்று பார்த்தால்  இங்கு எல்லாமே விவசாயத்தால்தான் என்பது தெரிகிறது. விவசாயம் - தொழிற்சாலைகள் இரண்டுமே தனித்தனி கிடையாது. தொழிற்சாலைகள் இயங்குவதற்கு விவசாயம் வேண்டும். விவசாயம் நின்று போய்விட்டால் கரும்பு, கயிறு, நூல், பஞ்சு, ஆயத்த ஆடைகள் என எந்தவொரு தொழிற்சாலையும் இயங்காது.  விவசாயம்தான் ஒரு தேசத்தின் ஆதாரம். அதை மெல்ல மெல்ல சாகடித்து விட்டால் என்ன ஆகும் இந்த தேசம். இதற்கு யார் பொறுப்பு.   ஒரு சினிமாக்காரரோ, கிரிக்கெட் வீரரோ அல்ல... விவசாயிதான் இந்த நாட்டின் கதாநாயகன் என்பதை உணரும் காலம் வந்து விட்டது. விவசாயத்தின் மீதான கடமையையும், கருணையையும் நாம் உணர்ந்து, நம் பிள்ளைகளையும் உணரச் செய்வதுதான் இன்றைய முதல் தேவை. 

வழக்கமான விவசாய சினிமாக்கள் நெல் சார்ந்துதான் கதை பேசும்....

விவசாயி கரும்பு உற்பத்தி செய்கிறார். அந்தக் கரும்பைத் தொழிற்சாலைக்குக் கொடுக்கிறார். அதிலிருந்து மின்சாரம். அந்த மின்சாரத்தை வைத்தே அந்த தொழிற்சாலை இயங்குகிறது. மீதமுள்ள  மின்சாரத்தை விற்றுவிடுகிறார்கள். பின்னர் கரும்புச் சாற்றைக் கொதிக்க வைத்துச் சர்க்கரை எடுக்கிறார்கள். சர்க்கரைக் கழிவிலிருந்து மதுபான வகைகள் தயாரிக்கிறார்கள். நமது கரும்பிலிருந்து தான் இந்த மதுபானம் உருவாகியுள்ளது என்பது விவசாயிக்கே தெரியாது. இந்த விஷயங்களை எல்லாம் படத்தின் கதையோட்டத்தில் சொல்லியிருக்கிறேன். அதற்குத் தொழிற்சாலைகளின் பின்புலங்கள் தேவைப்பட்டன. சொல்லப்போனால் அதுதான் இங்கே பிரதானம். 

விஜய் சேதுபதி  எல்லா இயக்குநர்களுக்கும் பிடித்த நடிகராக இருக்கிறார்..

என்னுடைய முந்தைய படங்களை விட, முழுமைக்கு மிக மிக அருகில்  இந்தப் படத்தைக் கொண்டு வந்திருக்கேன். அதற்கு எனக்கு நடிகர்கள் தேவை. சொகுசு காரில் வந்து போகிற நடிகர்கள் இல்லை. அர்ப்பணிப்பு, தேவை எல்லாவற்றையும் உணர்ந்தவர்கள். விஜய்சேதுபதி அது போல் எனக்குத் தெரிகிறது. நான் சொல்லுவதை, களத்தின் தேவையை உணர்ந்து வசனங்களை பேசுகிறார். சமீபத்தில் வந்த ட்ரெயல்ர் பூர்த்தியானதற்கு வசன உச்சரிப்புகளும் ஒரு காரணம்.  எந்த படமானாலும் அதை அவர் உணர்கிறார். முழுமையாக வேலை செய்கிறார்.  அதனால் எல்லோருக்கும் பிடித்தமானவராக இருக்கிறார்.    கடமையையும், செய்ய வேண்டிய உழைப்பையும் கஷ்டம் என்று எடுத்துக் கொள்ளாமல் உழைக்கிறார். ஸ்ருதிஹாசன், தன்ஷிகா என இரு ஹீரோயின்கள். இருவருக்கும் வலு சேர்க்கும் அளவுக்கு கதாபாத்திரம்.  

ஒரு தனி மனிதப் பார்வையை ஜனநாயக பார்வையாக மாற்றி வருகிறீர்களே..

எப்போதுமே நம் முன் இரண்டு சினிமாக்கள் உண்டு. ஒன்று வழக்கமான கமர்ஷியல், இன்னொன்று நீங்கள் சொன்ன தனி மனிதப் பார்வையை ஜனநாயக பார்வையாகப் பார்ப்பது. இந்த இரண்டு சினிமாக்களும்  எப்போதுமே என் முன்னாடி கிடக்கின்றன.  ஆனால் சுலபமாக ஒரு ஹிட் படம் கொடுத்து விட்டு, படத்துக்கு பெரிய சம்பளம், கார், வீடு வாங்கி விடலாம் என்கிற நினைப்பு என்னிடம் எப்போதும் இல்லை. என் இயல்பு அப்படி.  அறம், பரவசம் கொடுக்கும் பயணம், எளியவர்களின் எதிர்பார்ப்பு இல்லாத பிரியம்... இதெல்லாம்தான் எப்போதும் என்னை ஈர்த்து வைத்திருக்கிறது. அதுதான் என் சினிமாக்களில் வெளிப்படுகிறது. நீங்களும், நானும் தெரு முனை டீக்கடையில் பேசிக் கொள்கிற விஷயம்தான் தனி மனிதப் பார்வை. அதைத்தான் நான் ஜனநாயகமாக்கி பார்க்கிறேன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com