ரோஜா மலரே!: தண்ணீரில் நடனம் - குமாரி சச்சு

ஜெமினியின் "சந்திரலேகா' படத்தில் புகழ் பெற்ற டிரம் டான்ஸ் காட்சி உள்ளது போன்று இந்தப் படத்தில் ஒரு பாடல் இருக்கிறது. "நீலப் பட்டாடை கட்டி' என்று பலரும் பாராட்டும் பாடல். இந்தப் பாடல் எடுத்த விதமே சிறப
ரோஜா மலரே!: தண்ணீரில் நடனம் - குமாரி சச்சு

ஜெமினியின் "சந்திரலேகா' படத்தில் புகழ் பெற்ற டிரம் டான்ஸ் காட்சி உள்ளது போன்று இந்தப் படத்தில் ஒரு பாடல் இருக்கிறது. "நீலப் பட்டாடை கட்டி' என்று பலரும் பாராட்டும் பாடல். இந்தப் பாடல் எடுத்த விதமே சிறப்பாக இருந்தது. நடுவில் தாமரைப்பூ, சுற்றிலும் தாமரை இலைகள். இது எடுக்கப்பட்ட இடம் பழைய மகாபலிபுரம் சாலை. ஆனால் கடற்கரை ஓரம் எந்தக் காட்சி எடுக்கப்பட்டாலும் அதனுடன் ஒத்து போகிற மாதிரி காட்சிகளை எடுக்கவேண்டும் என்றால் இங்கு தான் அன்று எடுப்பார்கள். அவ்வளவு ரம்மியமான இடம் .

இன்று அதன் பெயர் ஒக்கியம். சிறிது நடந்தால் கடல். எதிரே சவுக்குத் தோப்பு. காதல் காட்சிகளை மட்டும் எடுக்க இங்கு வர மாட்டார்கள். சண்டை மற்றும் கார் அல்லது மோட்டார் சைக்கிள் ஒன்றை ஒன்று பிடிக்க ஓடும் chasing காட்சிகளைக் கூட இங்குதான் எடுப்பார்கள்.

துரைப்பாக்கம் இருக்கும் இடத்திற்கு அடுத்து ஒரு பெரிய நீர்த்தேக்கம் இருந்தது. அன்று அதில் இருந்து தான் சென்னைக்கே குடிநீர் வந்தது என்று சொல்வார்கள். அந்த நீர்த்தேக்கம் ஆழம் நிறைந்தது. இந்தப் பாடலை இங்கு எடுக்கலாம் என்று இயக்குநர் மற்றும் படக்குழுவினர் முடிவு செய்தார்கள். அதிலும் இந்தப் பாடலை மட்டும் வண்ணத்தில் எடுக்கலாம் என்று நினைத்தார் இயக்குநர் திருலோகசந்தர்.

முதன் முதலாகப் பின்னணி குரலில் பாட, படத்தில் புகுத்தியது ஏவி.எம் தான். அது மட்டும் அல்லாமல் "வேதாள உலகம்' "நாம் இருவர்', "பெண்' இப்படிப் புதுமைகளுக்குப் பெயர் பெற்றது ஏவி.எம். செலவைப் பற்றி என்றுமே கவலைப்படமாட்டார்கள். புதுமையான விஷயங்களை முதலில் செய்ய வேண்டும் என்று விரும்புவார். இப்படி இருவரும் சேர்ந்தால் புதுமைகள் செய்ய கேட்கவா வேண்டும். சரி என்று செட்டியாரிடம் சென்று இதை எல்லாம் விலாவாரியாகச் சொன்னார்கள். இவர்கள் சொன்னதை எல்லாம் செட்டியார் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார்.

செட்டியார் என்றுமே செலவைப் பற்றி கவலைப்படமாட்டார் என்றாலும், தனக்குள் ஒரு கணக்கு வைத்திருப்பார். இந்தப் படத்திற்கு இவ்வளவு தான் செலவு செய்யலாம். இதற்கு மேல் செலவு செய்தால் இந்தப் படம் லாபம் தராது. நஷ்டத்தில் நம்மைத் தள்ளிவிடும் என்ற கணக்கு தான் அது.

அன்று இருந்த நிலையில் கதாநாயகர்களைப் பார்த்து விட்டு தான் திரையரங்கத்தினுள் நுழைவது என்று மக்கள் எண்ணினார்கள். அன்று புகழ் பெற்ற நிலையில் இருந்த கதாநாயகர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் மற்றும் ஜெமினி கணேசன். அவர்களின் படத்தினைப் பார்க்கவே மக்கள் திரையரங்கத்திற்கு வருவார்கள்.

அதே போன்று பெண்களில் பத்மினி, பானுமதி, சாவித்திரி, அஞ்சலிதேவி, செளகார் ஜானகி போன்றவர்கள் பெரிய நட்சத்திரங்கள். இவர்கள் நடிக்கும் திரைப்படத்திற்கு கொஞ்சம் அதிகம் செலவு செய்தாலும், போட்ட முதலை விட கண்டிப்பாக லாபம் கிடைக்கும் என்று தயாரிப்பாளர்களுக்குத் தெரியும்.

அப்படிப்பட்ட நிலையில் நானும் புது முகம், நான் சிறு வயதில் இருந்தே நடித்தாலும் கதாநாயகியாக ஒரு படம் தான் நடித்துள்ளேன். என்னுடன் நடிக்கும் ஆனந்தனும் புது முகம் (இதற்கு முன்னர் ஒரு படம் தான் நடித்துள்ளார்).

ஆக நாங்கள் இருவரும் புது முகம் தான். எங்களை இயக்கும் இயக்குநர் திருலோகசந்தருக்கும் இதுதான் முதல் படம். அதனால் செலவு அதிகம் செய்ய வேண்டாம் என்று செட்டியார் நினைத்தார் போலும். அதனால் இதற்கு முன்பே "அலிபாபாவும் 40 திருடர்களும்' என்ற படம் மட்டும் வண்ணத்தில் வெளியிடப்பட்டு இருந்தது.

அன்று ஆங்கிலத்தில் சொல்வது போல் artiste value இருந்தாலும் அந்த அளவிற்கு இல்லை என்று செட்டியார் நினைத்தார். அன்று கலர் ஃபிலிம் ரோல் விலை அதிகம். அப்படி எடுத்தால் செலவு அதிகம் ஏற்படும். அதனால் "வீரத்திருமகன்' படத்திற்கான இந்தப் பாடலை "கருப்பு வெள்ளை' யாகவே எடுக்கலாம் வண்ணம் வேண்டாம் என்று செட்டியார் முடிவு செய்து எல்லோரிடமும் சொல்லி விட்டார். ""அதே சமயம் எடுக்கும் பாடலை கண்களுக்குக் குளிர்ச்சியாக, அழகாக, நிறைவாக எடுங்கள்'' என்றும் சொல்லிவிட்டார்.

நாங்கள் படப்பிடிப்பிற்கு தேர்ந்தெடுத்த இடம் பழைய மகாபலிபுரம் சாலை. அங்கு ஒரு பிரச்னை உண்டு. அங்கு சுற்றிலும் சவுக்குத்தோப்பு என்பதால் பகல் 2 மணி முதல் 4 மணி வரை தான் சூரியன் வெளியே தலையைக் காட்டும். அந்த 2 மணி நேரத்தில் தான் படப்பிடிப்பு நடத்த முடியும். அங்கு செட் போட்டுப் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்யப்பட்டது. பெரிய தாமரைப்பூ இருக்கும். அந்த தாமரைப்பூவைச் சுற்றிலும் தாமரை இலைகள் இருப்பது போல் ஒரு பெரிய செட். நடுவில் உள்ள தாமரைப்பூவில் நான் இருப்பேன். சுற்றிலும் உள்ள இலைகளின் மேலே நடனமாடும் பெண்கள் இருப்பார்கள். இரண்டு மணி நேரத்தில் முழுப் படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க வேண்டும். அதனால் தூரத்திலிருந்து காட்சியைப் பதிவு செய்வது, அருகிலிருந்து காட்சியை எடுப்பது என எல்லாவற்றையும் ஒரு சேர எடுத்து முடித்து விடவேண்டும்.

அந்தக் காலத்தில் "மிச்செல்' கேமரா என்று ஒன்று உண்டு. அதில் ஒரு குறிப்பிட்ட தூரம் வரைதான் படம் எடுக்க முடியும். அருகிலிருந்து காட்சியை எடுப்பது கடினம். எங்கள் நல்ல காலம் அப்பொழுதுதான் "ஏரிப்ளெக்ஸ்' என்ற கேமரா வந்த சமயம். அதையும் செட்டியார் உபயோகப்படுத்திக்கொள்ளச் சொன்னார். இப்பொழுது தான் இரண்டு, மூன்று கேமரா மூலம் காட்சிகளைப் படமாக்க முடியுமா என்ன? அன்றே இந்தப் பாடல் காட்சிகளைப் பல கோணங்களில் படமாக்க இரண்டு கேமராவை உபயோகப்படுத்திப் படமெடுத்தார்கள்.

இது எல்லாமே நடுத்தண்ணீரில் நடக்கும். இதை எப்படி எடுத்தார்கள் என்று எல்லோரும் இன்று கூட என்னிடம் கேட்பார்கள். சில ஒளிப்பதிவாளர்களே கூட என்னிடம் கேட்டு இருக்கிறார்கள். இன்று கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் முறையில் எது வேண்டுமானாலும் செய்ய முடியும். இன்னும் சொல்லப்போனால், அன்று மனிதர்கள் தான் இயந்திரத்தை வேலை செய்ய வைத்தார்கள். இன்று அது நேர்மாறாக இயந்திரம் மனிதர்களை இப்படி வேலை செய்யுங்கள் என்று வேலை வாங்குகிறது.

நான் தாமரைப்பூவில் நடுவில் மொட்டு விரிந்த இடத்தில் நின்றுகொள்வேன். மலர்ந்த தாமரைப்பூ உள்ளதால், நான் தடுக்கி விழுந்தால் கூட பிடித்துக் கொள்ள இடம் இருந்தது.

ஆனால் அந்த தாமரைப்பூவை சுற்றி இருக்கும் இலைகளின் மேலே நடனமாடும் பெண்களுக்குப் பிடித்துக் கொள்ள எந்த வசதியும் இல்லை. அது மட்டுமல்ல: அந்த இலைகள் அவர்கள் எடையைத் தாங்க வேண்டும். அன்று நடன அமைப்பாளராக இருந்த சின்னி சம்பத் தான், இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்து கொடுத்த மாஸ்டர்.

மரப்பலகை, டிரம் இவைகளுடன் சென்று எல்லாம் சரியாக வருகிறதா என்று ஒத்திகைப் பார்த்தார். ஒன்று சரியாக இருந்தால், மற்றது சரியாக வராது. இரண்டு மூன்று நாட்கள் இருந்த பிறகும் எதுவுமே சரியாக வரவில்லை.

எப்படி இதைச் செய்வது என்று தெரியாமல், எல்லோரும் குழப்பத்தில் ஒன்றும் புரியாமல் செட்டியாரிடம் சென்று சொல்ல முடிவு செய்தார்கள். செட்டியாரிடம் சென்று சொன்னவுடனேயே, அவர் ஒவ்வொருத்தரையும் அழைத்து நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்க ஆரம்பித்தார். எல்லோரும் அவரவர் செய்ததைச் சொன்னார்கள். நாளை மாலை இதே சமயத்தில் வாருங்கள் என்று எல்லோரிடமும் சொன்னார் செட்டியார். எல்லோருக்கும் எப்படி செட்டியார் இதை முடிக்கப் போகிறார் என்று குழப்பத்துடனே சென்றார்கள். செட்டியார் என்ன செய்தார் தெரியுமா?

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com