சிற்பக் களஞ்சியம் - ஒடிசா முக்தீசுவரர் கோயில்

ஒடிசா மாநிலத்தின் தலைநகராகவும், பல திருக்கோயில்கள் நிறைந்து கோயில் நகரமாகவும்விளங்கும் புவனேசுவரில், கோயில்களில் சிற்பம் மற்றும் கட்டடக்கலை அழகில் ரத்தினம் போல் ஒளிவிடும் முக்தீசுவரர் கோயில்... 
சிற்பக் களஞ்சியம் - ஒடிசா முக்தீசுவரர் கோயில்


ஒடிசா மாநிலத்தின் தலைநகராகவும், பல திருக்கோயில்கள் நிறைந்து கோயில் நகரமாகவும்விளங்கும் புவனேசுவரில், கோயில்களில் சிற்பம் மற்றும் கட்டடக்கலை அழகில் ரத்தினம் போல் ஒளிவிடும் முக்தீசுவரர் கோயில் சிறப்பிடம் பெற்று விளங்குகிறது.

சோமவம்சி அரச பரம்பரையினரால் கி.பி. 970-இல் இக்கோயில் கட்டப்பட்டதாகும். சிவபெருமான் முக்தீசுவரருக்காக எடுப்பிக்கப்பட்டதாகும். ஒடிசா மாநிலத்தின் கலிங்கக் கட்டடக்கலையில் கோயில்கள் கருவறை, முன் மண்டபம் (ஜக்மோகன்), நடன மண்டபம், போக மண்பம் என்ற அமைப்புகளைக் கொண்டு விளங்கும். முக்தீசுவரர் கோயில் கருவறை, ஜக்மோகன் அமைப்புகளைக் கொண்டு விளங்குகிறது.

தனிச்சிறப்பு 

முக்தீசுவரர் கோயிலின் அமைப்பை போன்று, சிற்ப வேலைப்பாடு நிறைந்த சுற்றுச் சுவரும், கோயிலின் நுழைவு வாயிலின் முன் அமைந்துள்ள நுணுக்கமான சிற்ப வேலைப்பாடு நிறைந்த தோரணவாயிலும் குறிப்பிடத்தக்கதாகும். ஜக்மோகன் என்னும் முன் மண்டபத்தின் கூரையில் காணப்படும் விதான சிற்ப வேலைப்பாடுகள் அனைவரையும் கவரும் வண்ணம் அமைந்துள்ளது.

சுற்றுச்சுவர் 

திருக்கோயில் மேற்கு திசை நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது. இப்பகுதி கோயில்கள் அதிக கடினம் இல்லாத சிவப்பு நிற மணற்கல்லால் கட்டப்பட்டவையாகும். இக்கல்லை இங்கு "ராஜரன்யா'  எனப்பெயரிட்டு அழைக்கின்றனர். கோயிலைச் சுற்றி அமைந்திருக்கும் சுற்றுச் சுவரை "சித்தாரண்யம்'  என்ற பெயரில் குறிப்பிடுகின்றனர். சுற்றுச் சுவருக்குள் மூன்று பக்கங்களில் சிறு சிறு கோயில்கள் அழகு செய்கின்றன.

திருக்கோயிலின் கிழக்கு பக்கத்தில் கிணறு உள்ளது. அதனை "மரீசி குண்டம்' என அழைக்கின்றனர். இக்கிணற்று நீர் புனிதமானதும் மருத்துவ குணம் உள்ளதாகவும் விளங்குகிறது. கிணறுக்கு செல்லும் வழியில் வாயில் மேற்புறம் அமர்ந்த கோலத்தில் லகுளீசர் (சிவபெருமான்) குருவாகவும் அவரது மாணவர்கள் படிக்கும் நிலையில் சிற்பம் காணப்படுகிறது.

சுற்றுச்சுவரின் வெளிப்புறம் சிற்ப வேலைப்பாடு நிறைந்து விளங்குகிறது. சுவரில் நான்கு வரிசையில் பலவித சிற்ப வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. சுமார் 30 சிற்பங்கள் தேவகோட்டம் போன்ற அமைப்பில் உள்ளன. இவற்றில் சிலவற்றில் தெய்வ உருவங்கள் காணப்படவில்லை.

தோரணவாயில்  

சிற்ப வேலைப்பாடு நிறைந்தும், அழகுமிக்கதுமான "தோரணவாயில்' நுழைவு வாயிலை அலங்கரிக்கிறது. இக்கோயிலில் மட்டுமே இத்தகைய அழகிய தோரணவாயிலைக் காணமுடியும்.

இரண்டு பக்கங்களில் இரண்டு பெரிய தூண்கள். தூண்களின் அடிப்பகுதியில் - பாதத்தில் விமான அமைப்பு போன்ற வேலைப்பாடு காணப்படுகிறது. சதுர வடிவான கீழ்பகுதியும், மேலே தூணின் நடுப்பகுதி 16 பட்டையான அமைப்புகளுடன் காணப்படுகிறது. அதில் மேற்பகுதியில் காணப்படும் மாலைத்தொங்கல் பகுதி அழகாகக் காட்சி அளிக்கிறது. அதற்கும் மேலே நெல்லிக்காய் போன்ற பகுதியும், அதற்கு மேலே கவிழ்ந்த தாமரைப்பகுதி அழகு செய்கிறது. இரண்டு தூண்களுக்கு மேல் காணப்படும் வளைந்த பகுதி நுண்ணிய வேலைப்பாட்டுடன் காட்சி அளிக்கிறது. 

மூன்று கர்ணகூடு அலங்கார வேலைப்பாடுகளும், இரு பக்கங்களிலும் மகரதுணி வெளியே நீட்டிக் கொண்டிருப்பதும் சிற்ப வேலைப்பாட்டுத்திறனுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. வளைவுக்கு மேல்பகுதியில் கலசமும் அமைந்துள்ளது.

கோயில் நுழைவுவாயில் 

கோயிலின் நுழைவு வாயில் மிக நுணுக்கமான மரவேலைப்பாடு போன்று காட்சி அளிக்கிறது. இருபுறமும் சண்ட - பிரசண்ட என்ற இரு துவாரபாலகர்களும், சாமரம் வீசும் பெண்களுடன் காட்சி தருகின்றனர். நுழைவு வாயிலின் மேற்புறம் சிவன் யோகேசுவரராகக் காட்சி தரும் சிற்பம் உள்ளது. கால் வைத்து நுழையும் வாசற்படியே அழகிய சிற்ப வேலைப்பாட்டுடன் காணப்படுகிறது. நுழைவு வாயிலின் மேலே மேற்கூரையில் சிங்கத்தின் வடிவம் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது.

ஜக்மோகன் (முன் மண்டபம்) 

அடுத்துள்ள முன்மண்டபம் அடுக்கடுக்கான கற்பலகை போன்ற அமைப்புடன் பிரமிட் போன்ற வடிவத்துடன் காணப்படுவது சிறப்பாகும். இம்மண்டபத்தின் உட்புறக் கூரை வடிவமைப்பு சிறப்பானதாகக் காட்சி அளிக்கிறது. முதலில் சதுரம், அடுத்து எண்கோண வடிவம், அடுத்து செவ்வக வடிவம். முதலில் சதுரவடிவில் எட்டு தாமரை இதழ்கள் உள்ளன. இதில் வீரபத்ரர் மற்றும் சப்தமாதர் வடிவங்களும் இடம் பெற்றுள்ளன. சாமுண்டா தவிர மற்ற தேவியர் கையில் குழந்தையுடனும், அவரவர்களுக்குரிய வாகனத்துடன் காட்சி அளிப்பது மிகச் சிறப்பானது. 

அடுத்துள்ள எண்கோண வடிவ அமைப்பில் நடனமாடும் விநாயகர், இசையமைக்கும் கணங்களின் வடிவங்கள், மயில் வாகனத்துடன் காட்சி அளிக்கும் கார்த்திகேயனைக் காணலாம். அடுத்து பார்வதி தேவி தியானம் செய்யும் நிலையிலும் பெண்கள் இசைக்கருவிகளை வாசிக்கும் கோலத்திலும் சிற்பங்கள் காணப்படுகிறது. ஜக்மோகன் மண்டபத்தின் கூரை உள்விதானத்தில் காணப்படும் சிற்ப வடிவங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இம்மண்டபத்தின் வெளிப்புறச்சுவரில் காணப்படும் சாளரம் (ஜன்னல்), மற்றும் நாகஸ்தம்பங்கள், சாலபஞ்சிகா என்ற கொடிப்பெண்களின் வடிவங்கள், விடலா எனப்படும் யாளியின் மீது அமர்ந்து செல்லும் சிற்பவடிவங்கள் நம்மை வியந்து பார்க்க வைக்கிறது.

கருவறை  

கருவறையில் சிவபெருமான் சிறிய வடிவிலே காட்சி தருகிறார். நுழைவாயிலில் துவாரபாலகர் சிற்பங்களும், வாயிலின் மேற்பகுதியில் கஜலட்சுமி வடிவமும் அழகாகக் காட்சி தருகிறது. அதற்கும் மேலே சூரியன் முதல் கேது வரையிலான நவக்கிரகங்களும் தாமரை மலர் மீது அமர்ந்த கோலத்தில் காணப்படுவது சிறப்பானது. பொதுவாக ஒடிசா கோயில்களில் நவக்கிரகங்களின் வடிவங்களை நுழைவு வாயிலின் மேல்பகுதியில் அமைப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளதைப் பார்க்கலாம்.

கருவறை விமானம் நெடிதாக உயர்ந்து வளைந்து ஒடிசா கட்டடக் கலைப்பாணியுடன் காட்சி தருகிறது. கருவறையின் அடிப்பகுதியை "படா' என அழைப்பர். இது சிற்ப வேலைப்பாடு மிகுந்து விளங்குகிறது. மகரமீன் மீது நின்ற வண்ணம் கங்கையும், ஆமையின் மீது நின்ற வண்ணம் யமுனையும் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது. இதற்கும் மேலே சிவபெருமான் நடேசனாக நடனம் ஆடும் காட்சியை கண்டு ரசிக்கலாம். மேலே சிகரம் நெல்லிக்காய் போன்ற வடிவமைப்புடன் மற்றும் அதன் மேலே கலசமும் கம்பீரமாகக் காட்சி அளிப்பதைக் காணலாம்.

ஒடிசா கலிங்க கட்டடக்கலை, சிற்பக்கலை, ஆகியவற்றில் மிகச்சிறந்த நிலையிலும், உயர்ந்த நிலையிலும் விளங்கியதை முக்தீசுவரர் கோயில் எடுத்துக் கூறுகிறது. அவசியம் இக்கோயிலைக் கண்டு ரசித்து மகிழ்ச்சி அடைவோம்.!

தொல்லியல் துறை (ஓய்வு)  

படங்கள்  :  சிவசங்கர்பாபு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com