தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகில் 80- களில் வலம் வந்தவர் சுமலதா. திருமணம், குழந்தை என்றான பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். கணவர் அம்பரீஷ் இறந்த பிறகு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று லோக்சபா எம்.பி. ஆனார். அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தார். இந்த நிலையில் தன் சினிமா வாழ்க்கை பற்றி சுமலதா கூறியதாவது... ""ஹிந்தியில் 10 படங்களில் நடித்திருக்கிறேன்.
ஜிதேந்திரா, தர்மேந்திரா மற்றும் மிதுன் சக்ரபர்த்தியுடன் சேர்ந்து நடித்திருக்கிறேன். அந்த காலத்தில் தென்னிந்திய திரையுலகில் படப்பிடிப்பு எல்லாம் குறுகிய காலத்தில் முடித்து விடுவார்கள். ஆனால் பாலிவுட்டில் அப்படி இல்லை. அதனால் எனக்கு பாலிவுட்டில் வேலை பார்ப்பது வித்தியாசமாக இருந்தது. உதாரணத்திற்கு, நான் நடித்த ஒரு காட்சியின் தொடர்ச்சியை ஆறு மாதங்கள் கழித்து கூட படப்பிடிப்பு நடத்துவார்கள். நான் நடித்த" நியூ டெல்லி' பட படப்பிடிப்புக்காக தொடர்ந்து 15 இரவுகளில் படப்பிடிப்பு நடந்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அதிகாலை 4 மணி வரை படப்பிடிப்பு நடந்தது. 3 முதல் நான்கு மணிநேரம் தான் தூக்கம்.
ஆனால் அப்பொழுது எல்லாம் அது சாதாரணம். கமலுடன் சேர்ந்து நடித்தேன். ஆனால் அந்தப் படம் வெளியாகவில்லை. ஒரு நாள் அந்த கனவும் நிறைவேறலாம். கரோனாவில் எல்லோரும் தங்களை காத்துக் கொள்ள வேண்டும்'' என்றார்.