உறவுகளே என்றும் உயிர்நாடி!

தர்மபுரியை சேர்ந்தவர்கள் விமலாதேவி-கணேசன் தம்பதிகள். வேலை காரணமாக 2002- ஆம் ஆண்டு சிங்கப்பூர் சென்றனர்.
உறவுகளே என்றும் உயிர்நாடி!

தர்மபுரியை சேர்ந்தவர்கள் விமலாதேவி-கணேசன் தம்பதிகள். வேலை காரணமாக 2002- ஆம் ஆண்டு சிங்கப்பூர் சென்றனர். இருவருமே அங்குள்ள ஐ.டி நிறுவனத்தில் லட்சங்களில் ஊதியம் பெற்று, அங்கே நிரந்தரக் குடியுரிமை பெற்று வாழ்ந்து வந்தனர். ஒரு கட்டத்தில் வேலை, குடியுரிமை எதுவுமே வேண்டாம் எங்களுடைய உறவுகளே என்றும் உயிர்நாடி என்பதை உணர்ந்து தற்போது சொந்த கிராமமே சொர்க்கம் என்ற நிலையில் சிறிய அளவில் விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர்.

முதலில் விமலாதேவியிடம்பேசினோம்:

""எம்.காம்., படித்த என்னுடைய கணவர் கணேசன், ஐ.டி., நிறுவனத்தில், ஆலோசகராகவும், எம்.சி.ஏ., படித்த நான் அதே நிறுவனத்தில், வியாபார ஆலோசகராகவும் பணியாற்றினோம். எங்களுக்கு இரு மகள்கள், ஒரு மகன். எங்களுடைய மாத வருமானம் 6 லட்சம்.

சிங்கப்பூர் வாழ்க்கை கற்றுக்கொடுத்த விஷயங்கள் ஏராளம். சட்டத்தை அனைவரும் மதிக்க வேண்டும். ஒழுங்கு மிகவும் அவசியம். எங்கள் குழந்தைகளும் அங்கே தான் படித்தனர். ஒரு கட்டத்தில் பணம் மட்டும் வாழ்க்கையாகிவிடாது. உறவுகளின் பந்த பாசம் அவசியம் என்பதைப் புரிந்து கொண்டு சொந்த ஊர் திரும்பிவிட்டோம். அங்கு சம்பாதித்தது 10 மடங்கு என்றால், இங்கு 1 மடங்கு தான் வருமானம் கிடைக்கிறது. ஆனால் மன நிறைவான வாழ்க்கை வாழ்கிறோம். எங்கள் குழந்தைகள் சிங்கப்பூரில் இருந்தததை விட சிறு கிராமத்தில் இருப்பதைத் தான் விரும்புகிறார்கள்'' என்கிறார் விமலாதேவி.

தொடர்ந்து கணேசன் சொன்னார்:

""நாங்கள் ஊர் திரும்ப இரண்டு காரணங்கள். முதல் காரணம் அப்பா உடல் நலமில்லாத நிலையில் இருந்தார். அவர் ஆஸ்பத்திரி செல்ல பிறருடைய உதவியை நாட வேண்டியிருந்தது. அம்மா-அப்பாவை பார்த்துக் கொள்வதைத் தவிர வேற வேலை எதுவும் முக்கியமில்லை. மேலும் என்னுடைய குழந்தைகளுக்கு இங்குள்ள கலாசாரம், உறவினர்கள் யார் என்பதே அதிகம் தெரியாமல் இருந்தது. அது சரியான நேரத்தில் தெரிந்தால் தான் அவர்களின் எதிர்கால வாழ்க்கையும் நன்றாக இருக்கும் என்ற காரணத்திற்காக சொந்த ஊர் வந்தோம்.

எங்களுடைய பூர்விக தொழில் விவசாயம் தான். ஆனால் விவசாயத்துடன் தொடர்பு விடுபட்டு 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. கூடுமானவரை மருந்து இல்லாத வாழ்க்கை வாழ ஆசைப்பட்டோம். அந்த நேரத்தில் சுபாஷ் பாலேக்கர் பேச்சை கேட்க சந்தர்ப்பம் கிடைத்தது. நம்ம ஊர் நம்மாழ்வார் போன்ற நல்ல விஷயங்கள் பலவற்றைக் கற்றுத் தந்தார். எனவே அவர் காட்டிய பாதையில் கொஞ்சம் நிலத்தை வாங்கி மா, தேக்கு பாக்கு, வாழை பயிரிட்டதோடு, கரும்பும் பயிரிட்டோம். மேலும், 50 ஆடுகள், 14 நாட்டு மாடுகள், 40 கோழிகள் வளர்த்து, அவற்றுக்குத் தனித்தனியாகக் கொட்டகை அமைத்துப் பராமரிக்கிறோம். அதன்மூலம் கிடைக்கும் இயற்கை உரத்தால், விவசாயம் மேற்கொள்கிறோம்.

சொந்த ஊருக்கு திரும்பி வந்தால் என்ன செய்வது யோசிப்பவர்களுக்கு முடிந்தவரை வழிகாட்டுகிறோம். எங்களுடைய முழு நேர தொழில் என்று சொல்வதை விட, எங்கள் முழு நேர சேவையும் விவசாயம் தான். அதே நேரத்தில் உறவுகள் தான் மிகப்பெரிய பலம்.

கவலை, வருத்தம் என மனதிற்குள் ஆயிரம் விஷயங்கள் இருக்கும். ஆனால் அவை அனைத்தும் ஒரு விழாவில் ஒன்று கூடும் போது காணாமல் போய்விடும். இது நானும் என் மனைவி விமலாவும் கண்கூடாக உணர்ந்த விஷயம். தூங்காமல் விடிய விடிய பேசிக்கொண்டுயிருக்கிறோம். இது தான் வாழ்வில் உன்னதமான தருணம். இதற்காக எதை வேண்டுமானாலும் இழக்கலாம்'' என்கிறார் கணேசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com