விளையாட்டு... விளையாட்டல்ல! 

மதுரையிலிருந்து 18 கி.மீ தொலைவில் உள்ளது கள்ளந்திரி கிராமம். இங்குள்ள படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையில் பாதை காட்டி வருகிறார் உடற்கல்வி இயக்குநரான ரங்கராஜன்.
விளையாட்டு... விளையாட்டல்ல! 

மதுரையிலிருந்து 18 கி.மீ தொலைவில் உள்ளது கள்ளந்திரி கிராமம். இங்குள்ள படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையில் பாதை காட்டி வருகிறார் உடற்கல்வி இயக்குநரான ரங்கராஜன்.


தனக்குச் சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில் இரண்டரை ஏக்கரை ஒதுக்கி நடைப்பயிற்சிக்கான பாதை, கைப்பந்து மைதானம், இறகுப்பந்து கூடம், நீச்சல் பயிற்சி, காவலர் தேர்வில் தேர்ச்சி பெற வசதியாகக் கயிறு ஏறுதல், புல் அப்ஸ் பயிற்சி போன்றவற்றை அளித்து இளைஞர்களுக்கு எதிர்காலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.  அவரைத் தொடர்பு கொண்டு பேசினோம்:

""நான் 1987-ஆம் ஆண்டு முதல் மதுரைக் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநராக இருந்து வருகிறேன். கடந்த ஆண்டு ஓய்வு பெற்றேன். தற்போது சுயநிதி கல்லூரியின் உடற்கல்வி இயக்குநராகப் பணியாற்றி வருகிறேன். என்னுடைய சொந்த ஊர் கள்ளந்திரி கிராமம். மதுரைக்கு மிக அருகில் உள்ளது. இங்கு எங்கள் பரம்பரை சொத்து உள்ளது. ஆரம்பத்தில் என்னுடைய மகன்கள் இறகுப்பந்து  விளையாடுவதற்கு களம் அமைத்துக் கொடுத்தேன். தொடர்ந்து தோப்பிலேயே நடைப்பயிற்சி செய்வதற்காக ஊர் மக்கள் வந்தார்கள்.

அதனால் நடைப்பயிற்சிக்கான பாதையைத் தனியாக ஏற்படுத்திக் கொடுத்தேன். எங்கள் ஊரை சுற்றி 5 கிராமங்கள் உள்ளன. அங்குள்ள இளைஞர்கள் வந்து கைப்பந்து விளையாட பயிற்சி செய்தார்கள். உடனே அவர்களுக்கு 25 மீட்டர் இடம் ஒதுக்கி கைப்பந்து மைதானம் ஏற்படுத்திக் கொடுத்தேன். இதைப்பார்த்து ஏராளமான இளைஞர்கள் வர ஆரம்பித்தார்கள். இதனால் தற்போது 3 கைப்பந்து மைதானம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறேன். 
சமீபத்தில் தான் கள்ளந்திரி கைப்பந்து கிளப் சார்பாகத் தமிழக அளவில் முக்கிய அணிகள் இடம் பெற்ற கைப்பந்து போட்டியை நடத்தி முடித்தார்கள்.

இப்பொழுது காலை விடிந்ததும் நடைப்பயிற்சி செய்வதற்கு ஊரில் இருக்கும் மக்களும், கைப்பந்து பயிற்சி செய்பவர்களும்,  ராணுவம் மற்றும் காவலர் தேர்வில் பங்கு பெறும் இளைஞர்கள் ஓட்டப்பயிற்சி, கயிறு ஏறுதல், புல்அப்ஸ் பயிற்சி எடுக்க வந்துவிடுவார்கள். குறிப்பாக கயிறு ஏறுதல் என்பது கடினமான பயிற்சி. பெரும்பாலான இளைஞர்கள் திறமை இருந்தும் கயிறு ஏற முடியாமல் காவலர் தேர்வில் தோல்வி அடைகிறார்கள். நான் சப் இன்ஸ்பெக்டர் ஆக வேண்டும் என்ற ஆசையில் கயிறு ஏறும் பயிற்சிக்கு முயற்சித்தேன். ஆனால் எங்குமே கயிறு ஏறும் வசதியில்லை.  அதனால் நானே அவர்களுக்குக் கயிறு ஏறுவதற்கான பயிற்சி அளிப்பேன். புல் அப்ஸ் பயிற்சி ராணுவத்தில் சேரும் இளைஞர்களுக்கான அவசியமான ஒன்றாகும். இவை இரண்டையும் பயிற்சி பெறுவதற்காக நாள்தோறும் 80 பேர் வரை வருகிறார்கள். அவர்களுக்குக் காலை மாலை, தேநீர்,  காபி கொடுப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளேன். 

கரோனா பொது முடக்கம் காரணமாக மதுரை சுற்று வட்டாரப் பகுதியில் இருந்த  நீச்சல் குளம் அத்தனையும் மூடிவிட்டார்கள். என்னிடம் நீச்சல் பயிற்சி பெற வசதி செய்து தருமாறு கேட்டார்கள். தோப்பில் இருந்த கிணற்றில் படிகளை ஏற்படுத்தி நீச்சல் பயிற்சி பெற வசதியாக "லைப் ஜாக்கெட்' வாங்கிக் கொடுத்துப் பயிற்சி அளித்தேன். காரணம் அது 60 அடி ஆழமான கிணறு. பயிற்சி பெற வரும் இளைஞர்களுக்கு ஆபத்து நேர்ந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். மேற்கண்ட வசதிகளை ஏற்படுத்த யாரிடமும் இதுவரை எந்தப் பணமும் வாங்கியதில்லை. என்னால் முடிந்த  பணத்தைச் செலவு செய்துள்ளேன். இதுவரை எவ்வளவு செலவானது என்று கணக்குப் பார்த்தது கூடக் கிடையாது. 

காரணம் இப்போதுள்ள இளைஞர்கள் பெரும்பாலும் செல்லிடப்பேசி, இணையதளம் எனப் பாதை மாறி எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திப்பதில்லை. அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். தீய பழக்கம் அவர்களைக் நெருங்கக்கூடாது. அதனால் தான் விளையாட்டுத்துறையில் அவர்களை ஈடுபடுத்த நினைக்கிறேன். விளையாட்டுத்துறையில் அவர்களைக் கொண்டு முறையாகப் பயிற்சி பெற வைத்து அரசு வேலை வாங்கி கொடுக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். இளைஞர்களுக்காக இன்னும் நிறையச் செலவு செய்ய வேண்டும் என ஆசையிருக்கு. 

கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு இன்னும் விளையாட்டைப் பற்றிய போதுமான விழிப்புணர்வு இல்லை. இறகுப்பந்து பற்றிக் கூட அவர்கள் தெரிந்திருக்கவில்லை. அதனால் கிராமத்துக் குழந்தைகள் அனைத்து விளையாட்டுகளையும் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு விருப்பமான விளையாட்டுகளில் பங்கேற்றுச் சாதனைப் படைக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். இதற்காக என்னுடைய வாழ்நாள் முழுவதையும் அவர்களுக்காகச் செலவிடஇருக்கிறேன்'' என்கிறார் ரங்கராஜன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com