உடல் நலனைக் காக்கும் கேடயம்!

மதுரையை அடுத்துள்ள நிலக்கோட்டையில்  "வள்ளுவம் வாழ்வியல் நடுவம்' என்ற அமைப்பு மரபு விதைகளைச் சேகரித்துப் பாதுகாப்பதுடன்  இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுடன் விதைகளைப் பரிமாறிக் கொள்கிறது.
உடல் நலனைக் காக்கும் கேடயம்!


மதுரையை அடுத்துள்ள நிலக்கோட்டையில் "வள்ளுவம் வாழ்வியல் நடுவம்' என்ற அமைப்பு மரபு விதைகளைச் சேகரித்துப் பாதுகாப்பதுடன் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுடன் விதைகளைப் பரிமாறிக் கொள்கிறது. இந்த அமைப்பின் பொறுப்பாளராக இருக்கும் வெற்றிமாறன் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து மனம் திறக்கிறார்:

""இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் சீடனாக இருக்கும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதனால் வங்கி வேலையையும் ராஜினாமா செய்துவிட்டு அய்யாவின் "வானகம்' அமைப்பில் இணைந்து இயற்கை விவசாயம் செல்லும் திசையில் பயணிக்கத் தொடங்கினேன். நம்மாழ்வார் மறைந்தபிறகு அவரது இயற்கை விவசாயத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவும், பாரம்பரிய காய்கறிகளின் விதைகளைச் சேகரித்து விநியோகம் செய்யவும் சொந்த ஊரான நிலக்கோட்டையில் நண்பர்களுடன் இணைந்து "வள்ளுவம் வாழ்வியல் நடுவம்' என்ற அமைப்பைத் தொடங்கினேன்.

காய்கறி, மானாவாரி பயிர்களை இயற்கை முறையில் விவசாயம் செய்வதுடன் நமது மரபு காய்கறிகளின் விதைகளைச் சேகரித்துப் பாதுகாத்து, அதிகரித்து, பரிமாற்றம் செய்து வருகிறோம். காய்கறியில் மட்டும் சுமார் 68 இன காய்கறிகள் விதைகளைச் சேகரித்து "மரபு விதை வங்கி'யாக மாற்றியுள்ளோம்.. அவற்றைப் பயிரிட்டு விதைகளைச் சேகரித்துப் பெருக்கி வருகிறோம்.
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் விளையும் தக்காளி இனத்தில் மட்டும் 13 வகை விதைகள் எங்களிடம் உண்டு. தக்காளியில் மஞ்சள், சிவப்பு, கருஞ்சிவப்பு நிறங்களில் தக்காளி இருக்கும். வெகு நாள்கள் அழுகாமல் இருக்கும் புது ரகத் தக்காளிகளை விடப் பாரம்பரிய தக்காளிகள் இனிப்பும் புளிப்பும் சேர்ந்த சுவை பிரமாதமாக இருக்கும்.. வெகு நாள்கள் அழுகாமல் இருக்கப் பல மாற்றங்களைப் புதிய ரகத் தக்காளிகளில் செய்வதால் சதைப்பற்று இருக்கலாம். ஆனால் சுவை குறைவாகவே இருக்கும்.

வெண்டை வகையில் 12 வகை விதைகளைச் சேகரித்து வைத்துள்ளோம். இதில் வெள்ளை வெண்டை, சிவப்பு வெண்டை, பச்சை வெண்டை, யானைத்தந்த நீள வெண்டை, மாட்டுக் கொம்பு வெண்டை, முள்கள் நிறைந்த சுனை வெண்டை போன்ற இனங்களும் அடக்கம்.

"கோழி முட்டை வெள்ளை கத்தரி' செடியில் கோழி, முட்டைகளை அடை காப்பது போல் செடிக்கு அடியில் கத்தரிக்காய் காய்த்து பெருகிக் கிடைக்கும். சுவை பிரமாதமாக இருக்கும். இந்த வகை கத்தரிக்காயை விளைவித்தால் விவசாயிகளுக்குக் கணிசமான வருவாய் கிடைக்கும்.

கீரை வகைகளில் அரைக்கீரை, சிறுகீரை, காசினிக்கீரை, பருப்பு கீரை, சிவப்பு புளிச்சகீரை. பச்சை புளிச்சகீரை போன்றவற்றைப் பயிரிட்டு வருகிறோம். "திசு வளர்ப்பு' முறை (பண்ள்ள்ன்ங் ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங் ) மூலம் இந்த வகை காய்கறிச் செடிகளை வளர்க்கலாம் என்றாலும் இந்த முறையில் வளரும் காய்கறியிலிருந்து விதைகள் எடுத்து மீண்டும் பயிரிட முடியாது. அதனால் விவசாயி செடிகளுக்காக, விதைகளுக்காகப் பிறரைச் சார்ந்து இருக்க வேண்டும். மரபு விதையைப் பயிரிட்டால் பயிர் விளைந்து காய்கறிகள் கிடைக்கும் போது அதிலிருந்து விதைகளைச் சேகரித்து மீண்டும் பயிரிடலாம். விதைக்காக செடிக்காக பிறரைச் சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் விவசாயிக்கு இருக்காது.

நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்கும் தன்மை கொண்ட மரபு காய்கறி விதைகள், நோய்களை எதிர்க்கும் ஆயுதமும் உடல்நலனைக் காக்கும் கேடயமும் ஆகும். இதைப் புரிந்து கொண்டு விவசாயிகளும் இயற்கை விவசாயத்தில் மரபு விதைகளைப் பயிரிட முன் வர வேண்டும்.

மேலும் மருது, புன்னை, சிராய், திருவோடு மர விதைகளையும் சேகரித்து வைத்திருப்பதுடன், எங்கள் நிலங்களில் நட்டு வளர்த்து வருகிறோம். இந்தப் பணிகள் 2016-ஆம் ஆண்டிலிருந்து நடந்து வருகிறது. அத்துடன் இயற்கை விவசாயம் செய்வது குறித்த பயிற்சிகளையும் இயற்கை முறையில் உரங்கள், பூச்சி கொல்லிகள் தயாரிக்கும் விதம் பற்றியும் விவசாயிகளுக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கும் சொல்லித் தருகிறோம். இந்தப் பயிற்சி வகுப்புகளில் தமிழ்நாட்டிலிருந்து பரவலாகக் கலந்து கொள்கிறார்கள்.

தமிழகத்தின் மரபு விதை காப்பாளர்களான ஆதியகை பரமேஸ், உழுது உண் சுந்தர், சீர்தாணியம் ஜனகன், செஞ்சோலை செந்தில், மருதம் கார்த்திக், வானவன் மாலதி , தனசுந்தர் கார்த்திக், கோட்டேரி சிவகுமார் , புதுச்சேரி ராஜசேகர் மணி, விதை பயணி அருண் ஆகியோர் சேகரித்துப் பகிர்ந்த மரபு விதைகளைப் பரவலாக்கல் பயணத்தில் எங்கள் "வள்ளுவம் வாழ்வியல் நடுவமும்' இணைந்துள்ளது.

நாங்கள் சேமித்து வைத்திருக்கும் பாரம்பரிய விதைகளை இயற்கை விவசாயம் செய்வதற்கு முன் நிலத்தைப் பண்படுத்த வேண்டும். ஏற்கெனவே நிலத்தில் பயன்படுத்தப்பட்ட ரசாயன உரங்களின் மிச்சங்கள் இருக்கும். அதனால் கொளுஞ்சி போன்ற செடிகளை வளர்த்து பிறகு நிலத்தை உழுது கொளுஞ்சி செடிகள் மண்ணில் புதையச் செய்து உரமாக மாற்ற வேண்டும். அடுத்தக் கட்டமாக மாட்டின் சாணம், ஆடுகளின் புழுக்கைகளை நிலத்தில் சேர்த்து உழ வேண்டும். அப்போது நிலம் தான் இழந்த இயற்கையான சத்துக்களை மீட்டு எடுத்துக் கொள்ளும்.

திருவோடு மரத்தில் தான் காய்க்கும். இது மருத்துவக் குணம் வாய்ந்தது. விஷத்தை முறிக்கும் மருத்துவக் குணம் திருவோட்டிற்கு உண்டு. வெளிநாடுகளில் திருவோட்டை நட்சத்திர விடுதிகளில் உணவுப் பண்டங்களைப் பரிமாறிக் கொள்ளப் பயன்படுத்துகிறார்கள். கலைப்பொருள்கள் செய்யவும் திருவோட்டை பயன்படுத்துகிறார்கள். திருவோடு மரத்தையும் விளைவித்து வருகிறோம்''என்கிறார் வெற்றிமாறன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com