சத்தம் இல்லாமல் சமூகப்பணி

சென்னை ராஜா அண்ணாமலை புரத்தைச் சேர்ந்தவர் உமாமகேஸ்வரி. சிறு குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித்தரும் ஆசிரியைப் பணி செய்தவர்.
சத்தம் இல்லாமல் சமூகப்பணி

சென்னை ராஜா அண்ணாமலை புரத்தைச் சேர்ந்தவர் உமாமகேஸ்வரி. சிறு குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித்தரும் ஆசிரியைப் பணி செய்தவர். நாள்தோறும் அவர் பள்ளிச் செல்லும் வழியில் பசியால் வாடும் மனிதர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உணவு வழங்கி சேவை செய்து வருகிறார். இவருடன் கைகோர்த்து தனது சமூகப்பணியை சத்தம் இல்லாமல் செய்து வருகிறார் திரைப்பட இயக்குநரான அகத்தியன்.

எப்படி இந்த எண்ணம் உருவானது?

ஆசிரியை உமா மகேஸ்வரி சொல்கிறார்:

சாலையோரங்களில் வாழ்பவர்களின் உணவு மற்றும் பிற விஷயங்கள் எவ்வாறு சமாளிக்கப்படுகிறது எனும் கேள்வியுடனே அவர்களைக் கடந்து போவேன். அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் உருவானது. அவர்களின் வாழ்க்கை முறை என் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதுவே இந்தப் பணிக்கு அழைத்துச் சென்றது. சர்ச்ர்ர்க்ஜ்ஹள்ற்ங் என்ற தன்னார்வ அமைப்பின் மூலம் அவர்களுக்குச் சேவை செய்யவும், அவர்களுடன் நேரிடையாக உரையாடி அவர்களின் அன்பைப் பெறும் வாய்ப்புக்கிடைத்தது.

சிறு வயது முதல் அனைத்துச் செயல்களிலும் என் அம்மாவைப் பின்பற்றியே வளர்ந்தேன். கொடுத்து மகிழ்வதிலும் அப்படியே. 2019 ஜனவரி மாதத்தில் எனது சேவை செய்யும் மனப்பான்மை மேலோங்கியிருந்த காரணத்தால் நேரமின்மை குறித்து ஆசிரியை வேலையை ராஜினாமா செய்தேன். எங்களது குடும்ப நண்பர் அகத்தியன், சேவை மனப்பான்மை உடையவர். இல்லாதோர்க்கு உணவளிப்பது தனது நீண்ட நாள் கனவு என ஒருமுறை கூறிய பொழுது நாம் இணைந்து செயல்பட முடியுமா? என கேட்டேன். சந்தோஷமாக ஒப்புக்கொண்டது மட்டுமல்லாமல் 2019 தீபாவளிக்கு நடைபாதை வாழ் மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று அதனைச் செயல்படுத்தவும் செய்தார்.

பணமிருந்தும் நேரமில்லாதவர்கள், மனமிருந்தும் பணம் இல்லாதவர்கள் ஆகியோரை ஒன்று சேர்த்தால் பலருக்கு நன்மை கிடைக்கலாம் என்ற அகத்தியனின் யோசனை கூற மேற்படி நண்பர்கள் அனைவரிடமும் கூடி பேசினோம்.

இந்த யோசனை அனைவருக்கும் பிடித்து விடவே அந்த தீபாவளிக்கு 150 புத்தாடைகள் மற்றும் 250 பேருக்கு இனிப்புடன் உணவு எனத் தொடங்கியது தான்"அறம் செய விரும்பு' என்னும் தன்னார்வத்தொண்டு நிறுவனம். உணவிடுதல் மட்டும் எங்கள் நோக்கமல்ல. அவர்களுக்குப் படிக்க உதவி செய்து அவர்களது வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதை நோக்கி நாங்கள் பயணிக்கத் தயாராகிவிட்டோம்.

ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவோ,ஒரு நிகழ்வின் பகுதியாகவோ அவர்கள் தரும் சிறுதொகையைக் கொண்டு கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக இயன்றவரை எல்லா நாள்களிலும் ஒருவேளை உணவும்,சில சமயங்களில் இரண்டு வேளையும், இன்னும் இயலும்போது மூன்றுவேளையும் உணவிட்டு வருகிறோம். தமிழகமெங்கும் இப்பணியை விரிவு செய்யும் நோக்கில் கடந்த தீபாவளியன்று மதுரை,சிதம்பரம், சேத்தியா
தோப்பு,கொடைக்கானல், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் உணவு வழங்கினோம்.

நண்பரும் இயக்குநருமான அகத்தியனும் நானும் சேர்ந்து இந்தச் சேவையைத் தொடங்கினாலும் உறுப்பினர்களின் உழைப்பு பெறும் பங்கு வகிக்கிறது. ஹாஜி, சங்கீதா, தணிகா, ஜெயஸ்ரீ , மிதிலா கார்த்திக், சாந்தா என்று பல தூண்கள். நேரம் காலம் பாராமல் சேவை செய்யும் மனப்பான்மை உடையவர்கள்.

கரோனா காலத்தில் நடைபாதை வாழ் மக்களுக்கு உணவு தவிர அவர்களுக்கு மளிகை மற்றும் அத்தியாவசிய பொருள்கள் காய்கறிகள் வழங்கினோம். தினமும் குறைந்தது 25லிருந்து 100 மக்களின் பசியைப் போக்க முடிவதில் திருப்தி அடைகிறோம்.

""இரவு நேரத்தில் பசியுடன் உறங்குதல் கொடுமை. ஒவ்வொரு நாளும் அவர்களை எழுப்பி உணவிடுகையில் அவர்களின் வாழ்த்து எங்களின் மகிழ்ச்சி.

விழாக்களிலும்,விருந்துகளிலும் தேவைக்கு மேல் உணவை வாங்கி உண்ணாமல் குப்பையில் போடும் பழக்கத்திலிருந்து நம்மை நாமே மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை மனித குலம் உணரவேண்டும். உணவகங்களில் உண்ணும்போது நாம் குப்பைக்கு அனுப்பும் உணவு பல பேரின் பசியைத் தீர்க்கும்.

"உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே' என்ற புறநானூற்றுப் பாடலை நாம் மனதில் கொள்ள வேண்டும். தனக்கு இயலுமென்றால் ஒரு மனிதன் ஒரு நாளைக்கு ஒருவருக்கு உணவிட வேண்டும். அது இயலாது போனால் ஒரு வாரத்துக்கு ஒருவருக்கு ஒருவேளை உணவிடவேண்டும். அதுவும் இயலாது என்போர் ஒருமாதத்திற்கு ஒருமுறை ஒருவேளை ஒருவருக்கு உணவிட வேண்டும். இதில் எதுவுமே இயலாது என்னும் சூழ்நிலையிருப்பின் தன் ஒருவேளை உணவை ஒரு மாதத்திற்கு ஒருமுறை கொடுத்து உதவலாம்'' என்கிறார் அகத்தியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com