காணாமல் போன நீர்நிலைகள்: கண்டுபிடித்த இளைஞர்கள்

சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் ஏழு பேர் குழுவாக இணைந்து காணாமல் போன ஆறுகள், ஏரிகளை கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
காணாமல் போன நீர்நிலைகள்: கண்டுபிடித்த இளைஞர்கள்

சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் ஏழு பேர் குழுவாக இணைந்து காணாமல் போன ஆறுகள்,ஏரிகளை கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்த முயற்சியை முதலில் தொடங்கிய மாணவர்களான நந்தபாலன், கரண், ரக்சிதாவை சந்தித்து பேசினோம்: முதலில் பேசத் தொடங்கினார் மாணவர்
நந்தபாலன்.

""நானும், கரணும் அண்ணாநகரிலுள்ள சென்னை பப்ளிக் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கிறோம். ரக்சிதா திருவள்ளூரிலுள்ள ஏ.பி.எஸ் பள்ளியில் 9 -ஆம் வகுப்பு படிக்கிறார்.

என்னுடைய லட்சியம் தொல்லியல் துறையில் பணியாற்ற வேண்டும் என்பது. என்னுடைய நண்பன் கரணுக்கு ஆர்க்கிடெக்ட் ஆக வேண்டும் என்பது கனவு. அதனால் படிக்கும் போதே அதற்கான வேலையில் இறங்கினோம். சென்னையிலுள்ள பழைமையான கட்டடங்கள் எவை? அதன் வடிவமைப்பை பற்றி ஆராயத் தொடங்கிய போது அவை தற்போது என்ன நிலையில் உள்ளன என்பதை கண்டறிய தொடங்கினோம். அப்போது எங்களுடன் கல்லூரி மாணவர்களான தமிழ்செல்வி, பத்மலோசனி காவ்யா, மீனாட்சி, சிவகார்த்திகேயன், மனோகர், ஹரிதா என பலரும் இணைந்து கொண்டார்கள். தொடர்ச்சியான எங்களது ஆய்வில் சென்னையில் இருந்த பல ஏரிகள், ஆறுகள் காணாமல் போய் இருப்பதை கண்டுபிடிக்க முடிந்தது அப்போது தொடங்கியது தான் காணாமல் போன ஆறுகள், ஏரிகளை கண்டுபிடிக்கும் ப்ராஜெக்ட்.

நான் சிறுவனாக இருந்த போது கொளத்தூர் பகுதியில் வசித்தோம். அப்போது சிறிய அளவு மழை பெய்தாலும் மாதவரம், சூரப்பட்டு, பகுதியில் தண்ணீர் தேங்க ஆரம்பித்துவிடும். ஏன் இந்தப் பகுதியில் தேங்குகிறது என்பதை ஆராய்ந்தோம். அப்போது சி.எம்.டி.ஏ இணையதளத்திலும் வெள்ளம் பாதித்த பகுதிகளாக இவை இருந்தன.

சென்னையில் முன்பு இருந்த ஆறுகள், ஏரிகள் என்ன? என்ற தேடலில் இறங்கினோம். ஏழு பேர் மூன்று குழுக்களாக பிரிந்தோம். முதல் குழு கன்னிமாரா நூலகம், டி.பி.ஐ வளாகத்தில் உள்ள நூலகத்தில் உள்ள தகவல்களை திரட்டினோம். இரண்டாவது குழு இணையத்தில் உள்ள தகவல்களை கண்டறியும் முயற்சியில் இறங்கியது. மூன்றாவது குழு சென்னை முழுக்க வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களை சந்தித்து விவரங்களை சேகரித்தது. மேலும் "கூகுள் மை மேப்' என்ற ஆப் மூலம் பிரிட்டிஷ்காரர்கள், பிரெஞ்சுகாரர்கள் உருவாக்கிய சென்னையின் பழைய மேப்பை கண்டுபிடித்தோம். இதே துறையின் வல்லுநரான வெங்கடேஷ் ராமகிருஷ்ணனிடம் பல விஷயங்களை கேட்டு தெரிந்து கொண்டோம். நாங்கள் செய்த ஆய்வில் இதுவரை காணாமல் போன 97 நீர் நிலைகளை கண்டறிந்துள்ளோம். இவற்றில் 32 முற்றிலுமாக மறைந்து விட்டன. குறிப்பாக ஏரியின் கறைகள் அதிகம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.''

இந்த ஆய்வின் போது உங்களுக்கு தெரிய வந்த விஷயங்கள் என்ன?

இதன் மூலம் ஆக்கிரமிப்பாளர்கள் இரண்டு விஷயங்களை செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இரண்டாவது ஓடும் தண்ணீரின் திசையை மாற்றி வேறு திசையில் திருப்பிவிட்டுள்ளனர். குறிப்பாக எழும்பூர் ஆறு என்ற பெயரில் ஆறு ஒன்று இருந்தது. இந்த ஆறு ஓடும் திசையை மாற்றி கூவம் ஆற்றில் கலக்க விட்டுள்ளனர்.

இந்த காணாமல் போன நீர் நிலைகளில் தண்ணீர் தேங்கினால் வெள்ளம் ஏற்படாது. நிலத்தடி நீரும் வற்றாது தண்ணீர் பிரச்னையும் இருக்காது. ஆனால் இன்று அனைத்து நீர் நிலைகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் செல்ல இடமில்லை. அதனால் சென்னை அடிக்கடி வெள்ளத்தில் மிதக்கிறது என்கிறார் மற்றொரு மாணவரான கரண்.

""பிரிட்டிஷ்காரர்கள் தங்களுடைய ஆட்சி காலத்தில் சென்னை துறைமுகத்தை கட்டினார்கள். இதனால் வடக்கு பகுதியிலுள்ள மண் அனைத்தும் கிழக்கு பகுதிக்கு வந்துவிட்டது. இதனால் உருவானது தான் மெரினா கடற்கரை. நுங்கம்பாக்கத்தில் "லாங் டேங்க்' ஏரி என்ற இடம் இருந்தது. பிரிட்டிஷ் காலத்திலேயே மண் போட்டு மூடப்பட்டுவிட்டன. அதுதான்

இன்றைய லேக் ஏரியா- வள்ளுவர் கோட்டம்'' என்கிறார் ரக்சிதா.

உங்கள் குழுவின் தேடலிலுள்ள முக்கிய அம்சங்கள் என்ன?

நமது இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ்காரர்கள் இயற்கையை, நமது பூமியையும் மிகவும் மதித்தார்கள். அவர்கள் வடிவமைத்த இடங்களில் இன்று வரை வெள்ளம் வரவில்லை. அவர்கள் கட்டிய கட்டடங்கள் பிரிட்டிஷ் பாரம்பரிய முறைப்படி கட்டியிருக்கலாம். ஆனால் நமது பாரம்பரியமான மரங்கள், சுண்ணாம்பு, கடுக்காய் போன்றவற்றை பயன்படுத்தி தான் கட்டடங்களை உருவாக்கினார்கள். அவர்கள் உருவாக்கிய கட்டடங்கள் இன்றும் அப்படியே உள்ளன. 1783-ஆம் ஆண்டிலேயே புரசைவாக்கம் பகுதி பெரும்பாலும் வயல்கள் அடங்கியது. இந்த பூமியின் செழிப்பை உணர்ந்தவர்கள். நம்மிடமிருந்து நிலத்தை வாங்கி விவசாயம் செய்தனர். அவர்கள் ஆண்ட காலத்தில் இயற்கை பேரிடர் மக்களை எந்த வகையிலும் பாதிக்கவில்லை.

இன்று சிறுசேரி ஐ.டி பார்க் உள்ள இடம் செழிப்பான வளமான பூமி, வயல்காடாக இருந்த இடம். இயற்கை தன்னை தானே புதுப்பித்து கொள்ளும் இடம். அதன் மேல் பல மாடி கட்டடங்களை கட்டியிருக்கிறார்கள். இயற்கையை அழிக்கும் வேலையை நாம் செய்யும் போது பேரிடர்களை சந்தித்து தானே ஆக வேண்டும். பக்கிங்காம் கால்வாய் ஒரமாக தூண்கள் அமைக்கப்பட்டு இன்று வேளச்சேரி பறக்கும் ரயில் ஓடுகிறது. தற்போது எண்ணூர் துறைமுக விரிவாக்கம் என்ற திட்டத்தால் பழவேற்காடு ஏரியே காணாமல் போகும் நிலையில் உள்ளது. இந்த பழவேற்காடு ஏரியால் தான் சென்னையில் அதிகம் மழை பெய்கிறது. அந்த ஏரியும் காணாமல் போய்விட்டால் சென்னையில் அதிகம் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பது உறுதி. இயற்கையை அழிக்காமல் நமது வசதிகளை மேம்படுத்த முயலலாம்.

உங்கள் குழுவின் நோக்கம் என்ன?

நாங்கள் ஏழு பேர் இணைந்து செய்த ப்ராஜெக்ட் விவரத்தை முதலமைச்சரின் செயலாளரிடம் தெரிவித்து இருக்கிறோம். அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம். ஏரிகள், ஆறுகளை கண்டறிந்து தண்ணீர் தேங்கும் நடவடிக்கை மேற்கொண்டாலே சென்னையில் இனி வெள்ளம் வராது. மேலும் கூவம் ஆற்றை சுத்தம் செய்வதற்கான வழிமுறைகளை கண்டறிந்துள்ளோம். அதாவது கூவம் ஆற்றின் தொடக்கத்தில் அணை ஒன்று உள்ளது. அதனை மழை காலங்களில் திறந்தாலே போதும் கூவம் சுத்தமாகிவிடும். தொழிற்சாலை கழிவுகள், நகரத்திலுள்ள கழிவகள் அவற்றில் கலக்காமல் இருந்தாலே கூவம் ஆறு சுத்தமாகிவிடும். கூவம் ஆற்றை ஆக்கிரமித்துள்ள வீடுகளை அகற்றினால் போதுமானது. சென்னை என்பதே கால்வாய் தான். வடசென்னை, தென் சென்னை இரண்டிற்கும் நடுவே கால்வாய்கள் இருந்துள்ளன. எங்களுடைய நோக்கமே அனைத்து நீர் நிலைகளும் மீட்கப்பட வேண்டும் என்பதே. இயற்கையை அழிக்காதீர்கள். அது இறைவனின் படைப்பு.

மாணவர்களாகிய நீங்கள் இது போன்ற விவகாரங்களில் தலையிடுவதை உங்கள் பெற்றோர்கள் தடுக்கவில்லையா?

எங்கள் குழுவிலுள்ள அனைத்து மாணவர்களின் பெற்றோர்களும் எங்களை ஊக்குவிக்கிறார்கள். குறிப்பாக ஆக்கிரமிப்பிற்கு பின்னால் அரசியலும் இருக்கும் என்பது எங்களுக்கும், பெற்றோருக்கும் நன்றாகவே தெரியும். ஆனால் நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை தைரியமாகச் செய்யுங்கள். நாங்கள் உங்களுக்கு துணை நிற்போம் என்று ஆதரவு தருகிறார்கள்'' என்கிறார் மாணவர் நந்தபாலன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com