வாசிப்பு பழக்கம் பெருகி உள்ளது

இதுவரை 500 சிறுகதைகள், 200 நூல்கள் எழுதியிருக்கும் ரஸ்கின் பாண்ட் டிற்கு 87 வயதாகிறது. இந்திய ஆங்கில இலக்கியத்தில் ரஸ்கின் பாண்டிற்கு தனி இடம் உண்டு.
வாசிப்பு பழக்கம் பெருகி உள்ளது


இதுவரை 500 சிறுகதைகள், 200 நூல்கள் எழுதியிருக்கும் ரஸ்கின் பாண்ட் டிற்கு 87 வயதாகிறது. இந்திய ஆங்கில இலக்கியத்தில் ரஸ்கின் பாண்டிற்கு தனி இடம் உண்டு. பள்ளி, கல்லூரி பாடப்புத்தகங்களில் இவரது சிறுகதைகளோ அல்லது கட்டுரைகளோ இடம் பெற்றிருக்கும். ஆங்கில வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள் ரஸ்கின் பாண்டைக் கடக்காமல் பயணிக்க முடியாது. இந்தியாவில் குழந்தைகளுக்கான ஆங்கில இலக்கியத்தில் ரஸ்கின் முன்னோடி ஆவார்.

ரஸ்கினின் வாழ்க்கை சோகமாக அமைந்துவிட்டது. தீவிரமாகக் காதலித்து திருமணம் புரிந்து கொண்ட பிரிட்டிஷ் பெற்றோருக்குப் பிறந்த ரஸ்கின், எட்டு ஆண்டுகளுக்குள் ஏற்பட்ட பெற்றோரின் மணமுறிவு காரணமாக பல இடங்களில் வளர்ந்தார். சொந்த தந்தை இறந்ததும் வளர்ப்பு தந்தையிடம், தாயுடன் சில ஆண்டுகள் வாழ்ந்தார். அப்பா மீது பாசம் கொண்டிருந்த ரஸ்கின் அப்பா இறந்ததும் பாட்டியிடம் வளர்ந்தார்.

வாழ்க்கை முழுக்க தான் வளர்ந்த இடங்களின் பின்னணியில் கதை எழுதும் வழக்கம் கொண்ட ரஸ்கின் "தி ரூம் ஆன் தி ரூஃப்' , "தி ப்ளூ அம்பேறெல்லா' , "டைம் ஸ்டாப்ஸ் அட் ஷாமிலி' போன்ற படைப்புகளில் தனி முத்திரை பதித்தவர். தனது படைப்புகளில் ஆங்காங்கே தனது சொந்த சோக வாழ்க்கையைப் குறிப்பிட்டிருந்தார். ஆங்கிலோ இந்திய இலக்கியத்தில் இவரது பங்களிப்பிற்கு அங்கீகாரமாக பத்மஸ்ரீ, பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. சமீபத்தில் தனது பிறந்த நாளை யொட்டி, பழையதும், புதியதுமாய் ரஸ்கின் எழுதிய 25 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

""எழுபது ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன். புதிய தொகுப்பில் நான் எழுதியவற்றில் எனக்கு ரொம்பவும் பிடித்த சிறுகதைகளுடன், புதிய சிறுகதைகளையும் சேர்த்து வெளியிட்டுள்ளேன். ஒவ்வொரு பிறந்த நாளை யொட்டி புதிய நூல் ஒன்றை வெளியிட முயற்சிப்பேன். அப்படி செய்தும் வந்திருக்கிறேன். ஒவ்வொரு பிறந்த நாளின் போது புதிதாக நூல் ஒன்றை எழுதவும் தொடங்குவேன். அது எனது பழக்கம்.

நான் பதினேழு வயதாக இருக்கும் போது எனது முதல் சிறுகதை அன்றைய பிரபல வார இதழாக இருந்த "தி இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆப் இந்தியா' வில் வெளி வந்தது. அடுத்ததாக "தி ரூம் ஆன் தி ரூஃப்' நாவலை எழுதினேன். வாசகர்களுக்கு அன்றிலிருந்து வாசிப்பில் வித்தியாசமான அனுபவங்களை வழங்கி வருகிறேன்.

வாழ்க்கையில் கிடைக்கும் அனுபவங்கள் . சந்திக்கும் மனிதர்கள்... முக்கிய நிகழ்வுகள்.. அனைத்தையும் குறித்து வைத்துக் கொள்வேன். எழுத அமரும் போது எனது வாழ்க்கைப் புத்தகம் திறக்க அதில் எனக்கு கிடைக்கும் முத்தான அனுபவங்களை, சம்பவங்களை நான் எழுத்தால் கோர்க்கிறேன்.

பள்ளியில் அருமையான நூலகம் இருந்தது. ஐம்பதுகளில் டிவி, இணையம், விடியோ விளையாட்டுகள், சமூக வலைதளங்கள் எதுவும் இல்லையென்றாலும் மாணவர்களும், பெரியவர்களும் வாசிக்க நூலகம் போக மாட்டார்கள். திரையரங்கிற்குச் சென்று திரைப்படம் பார்ப்பார்கள். அல்லது வேறு ஏதாவது செய்வார்கள். வாசிக்க மாட்டார்கள். அன்று கல்வி எல்லாரையும் சென்றடையவில்லை. இப்போது கல்வி அறிவு பரவியுள்ளதால் வாசிக்கும் பழக்கம் பெருகி உள்ளது'' என்று சொல்லும் ரஸ்கின் திருமணம் செய்து கொள்ளவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com