இந்தியாவின்  முதல்  "3  டி'  வீடு

முப்பரிமாண  அதாவது 3  டி  அச்சிடலில் சிறிய பொருள்களை, அதாவது சின்னச் சின்ன பொம்மைகளை, ஒன்றரை அடி உயரமுள்ள  உருவச் சிலைகளை உருவாக்கிக் கொண்டு இருந்தார்கள்.
இந்தியாவின்  முதல்  "3  டி'  வீடு

முப்பரிமாண அதாவது 3 டி அச்சிடலில் சிறிய பொருள்களை, அதாவது சின்னச் சின்ன பொம்மைகளை, ஒன்றரை அடி உயரமுள்ள உருவச் சிலைகளை உருவாக்கிக் கொண்டு இருந்தார்கள்.

சென்னையைச் சேர்ந்த "த்வஸ்தா' கட்டட நிறுவனம், சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் 600 சதுர அடி பரப்பளவுள்ள வீடு ஒன்றினை 3 டி முறையில் உருவாக்கியிருக்கிறார்கள்.

"எல் அண்ட் டி' நிறுவனம் காஞ்சிபுரத்தில் முதன்முதலாக வீடு ஒன்றை3 டி முறையில் உருவாக்கியிருந்தாலும், அது கட்டுமானத்துடன் நின்றுவிட்டது. வசிப்பதற்கான தரை, சமையல் அறை, வாழும் அறை கழிப்பறை போன்ற வசதிகள் இல்லாமல் இருந்தது. ஆனால் "த்வஸ்தா' உருவாக்கிய வீடு, ஒரு சின்ன குடும்பம் வாழ தேவையான வசதிகள் என்னென்ன வேண்டுமோ அவற்றைக் கொண்டுள்ளது. முழுமையாக நிறைவு பெற்று வர்ணம் பூசப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்தியாவின் முழுமைபெற்ற முதல் 3 டி வீடு என்ற பெருமையையும் பெறுகிறது.

சென்னை ஐ.ஐ.டி யில் படித்த மூன்று மாணவர்கள் ஆதித்யா, வித்யாஷங்கர், பரிவர்தன் இணைந்து "த்வஸ்தா' கட்டட நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர்.

"அஸ்திவாரம் முதல் அனைத்து சுவர்கள் வரை, 3 டி முறையில் பிரத்யேக இயந்திரம் மூலம் கட்டப்படுகிறது. செங்கல், சிமெண்ட், ஜல்லி, மணல் எதுவும் 3 டி வீடு கட்டுமானத்தில் பயன்படுத்தப்படவில்லை. பிரத்யேக கலவை கருவிகுழாயின் வழியாக வந்து எந்த இடத்தில் எந்த அளவுக்கு பிழிய வேண்டுமோ அந்த அளவுக்கு மெல்ல மெல்ல அடுக்கு அடுக்காக இடியாப்பமாவை பிழிவதுபோல பிழிந்து செல்கிறது. இடியாப்ப மாவு பிழியும் போது அநேக மெல்லிய இழைகள் இறங்கும். ஆனால் 3 டி அச்சிடல் முறையில் கனமான கலவை இழை ஒன்று மட்டும் வெளிவரும்.

கட்டடத்தின் முப்பரிமாண கட்டுமான வரைபடம் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, மென்பொருள் ஒன்றின் மூலம் இந்த 3 டி கருவி இயக்கப்படுகிறது. கொத்தனார்கள், சித்தாள்கள் வேலையை இந்தக் கருவி அனாயாசமாகச் சளைக்காமல் செய்கிறது.

கூரையைத் தாங்கும் உயரத்திற்கு எல்லா சுவர்களும் எழுந்ததும், வழக்கமாக இரும்புக் கம்பிகளைப் பின்னி கான்கிரீட் கலவையால் கூரை வார்க்கப்படுகிறது. விரைவில் கூரை வேலையையும் 3 டி கருவியைப் பயன்படுத்தி செய்யப் போகிறார்கள். அதற்காகான ஆராய்ச்சி "த்வஸ்தா' நிறுவனத்தில் நடைபெற்று வருகிறது. தரையில் டைல்கள், குளியல் அறைக்குத் தேவையான பொருள்களை, மின் சாதனங்கள் போன்றவைகளை கடைகளிலிருந்து வாங்கிப் பொருத்திக் கொள்ள வேண்டும்.

3 டி வீடு கட்டுமான முறையில் வீட்டின் கட்டுமான செலவுகள் குறையும். ஒரு சதுர. அடிக்கு 1200 ரூ. வரை ஆகுமாம். குறைந்த நாள்களில் வீட்டைக் கட்டி முடிக்கலாம். கரோனா காலத்தில் பல கட்டுப்பாடுகள் இருந்ததால், ஐ.ஐ.டி வளாகத்தில் 600 சதுர அடி பரப்பளவுள்ள இந்த வீட்டைக் கட்டி முடிக்க 21 நாள்கள் ஆனது. பொதுவாக இது மாதிரியான வீட்டை 3 டி கட்டுமான முறையில் ஐந்து நாள்களில் கட்டி முடிக்கலாம் என்கிறது "த்வஸ்தா' நிறுவனம். "இந்தியாவில் குறைந்த செலவில் குறைந்த கால அளவில் அனைவருக்கும் வீடு' என்ற லட்சியத்தில் உருவானதுதான் இந்த 3 டி வீடு கட்டுமானம்..!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com