பாதை காட்டும் பாடகர்

சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள பல்நோக்கு மருத்துவமனையில் வரும் பார்வையாளர்களுக்கு முடிந்தளவு மருத்துவ உதவிகளை செய்து பாதை காட்டும் பணியை ஓர் ஒப்பந்த ஊழியராக சிறப்பாகச் செய்து வருகிறார்
பாதை காட்டும் பாடகர்

சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள பல்நோக்கு மருத்துவமனையில் வரும் பார்வையாளர்களுக்கு முடிந்தளவு மருத்துவ உதவிகளை செய்து பாதை காட்டும் பணியை ஓர் ஒப்பந்த ஊழியராக சிறப்பாகச் செய்து வருகிறார் பாடகரான  கானா பெப்சி தாஸ்.

மாலை வேளை ஒன்றில் அவரை சந்தித்துப் பேசினோம்: 

""நான் பிறந்து திருவல்லிக்கேணி. படிச்சது சிந்தாதிரிப்பேட்டை.  12 வயதில் இருந்து இறந்தவர்களுக்காகக் கானா பாடல்களைப் பாட ஆரம்பித்தேன். அதனால் அம்மா கண்டித்தார். ஆனால் கலை என்பதே என் ரத்தத்திலே உள்ளது. காரணம் அப்பா நாடக நடிகர். தொடர்ந்து கானா பாடல்களைப் பாடுவதை நான் விடவில்லை.

தெருவோரங்களில் பாட ஆரம்பித்தேன்.  மாட்டு வண்டிகளில் பாடுவேன். அதனைத் தொடர்ந்து மேடைகளில் பாட ஆரம்பித்தேன். என்னுடைய திறமைகளைப் பார்த்து ஜெயம்ரவி-

திரிஷா நடித்த "பூலோகம்' படத்தில் பாட வாய்ப்பு தந்தார்கள். மறைந்த இயக்குநர் ராமநாராயணன் அவருடைய இரண்டு படங்களில் பாட வாய்ப்பளித்தார். இப்படியாக எனது கலைப்பயணம் தொடங்கி இதுவரை 26 படங்களில் வரும் பாடல்களுக்கு பாடியுள்ளேன். எல்லா வகையான பாடல்களும் பாடும் அளவுக்கு  என்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டேன். 

சாதாரண கலைஞனான என்னை அங்கீகரிக்கும் வகையில் கண்ணதாசன் விருது. சிறந்த கவிஞர் விருது வழங்கினார்கள். பாமர மக்களுக்கு உதவுவதற்காக சிறந்த மருத்துவப் பணியாளர் விருதும் வழங்கினார்கள். சில விழாக்களில் நான் பாடும் போது ரசிகர்கள் "இந்தப் பாடல் நீங்கள் பாடியது தானா ஏற்கெனவே கேட்டிருக்கிறேன்' என்று ஆச்சரியப்பட்டு பாராட்டுவார்கள். அந்த நிமிடம் மகிழ்ச்சியாக இருக்கும். 

பாடகராக இருக்கும் போது வேலை தொடர்ச்சியாக இருக்காது. அந்த காலகட்டத்தில் நர்சிங் உதவியாளர் படிப்பை தனியார் கல்லூரியில் படித்தேன். எங்கள் பகுதியிலுள்ள மருத்துவர் சண்முக சுந்தரத்திடம் பணியாற்றினேன். அவர் சான்றளித்ததால் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தது.

மருத்துவமனை பிரம்மாண்டமாக இருப்பதால் வருபவர்களுக்கு முதலில் எங்குச் செல்ல வேண்டும். எந்த மருத்துவரை பார்க்க வேண்டும் என்ற விவரம் தெரியாது. இங்கு வருபவர்கள் ஏராளமான பிரச்னைகளுடன் வருவார்கள். அவர்களை அழைத்துச் சென்று எனக்குத் தெரிந்த மருத்துவர்களிடம் காட்டி முடிந்த உதவிகளைச் செய்வேன். பசியுடன் வருபவர்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுப்பேன். என்னால் முடிந்த பண உதவி அவர்களுக்கு செய்வேன்.  
எனக்குத் திருமணமாகிவிட்டது. இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். 5 அடி 8 அங்குலம் உள்ள சிறிய அறையில் தான் வசிக்கிறேன். வசிக்கும் இடம் சிறியது என்றாலும் பெரியளவில் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் உள்ளது'' என்கிறார் தாஸ். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com