பணம் முக்கியமில்லை பாராட்டு போதும்!

காலை 7.30 மணி  மேற்கு மாம்பலம் போஸ்டல் காலனி. தனது சாலையோர டிபன் கடையில் பரப்பரப்பாக இயங்கி கொண்டிருக்கிறார்கள் வெங்கடேசன்- ராஜலெட்சுமி தம்பதிகள்.
பணம் முக்கியமில்லை பாராட்டு போதும்!

காலை 7.30 மணி  மேற்கு மாம்பலம் போஸ்டல் காலனி. தனது சாலையோர டிபன் கடையில் பரப்பரப்பாக இயங்கி கொண்டிருக்கிறார்கள் வெங்கடேசன்- ராஜலெட்சுமி தம்பதிகள். மலிவு விலையில் இவர்கள் வழங்கும் டிபன் ஐயிட்டங்களை சாப்பிடுவதற்கே இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை குவிந்திருக்கிறார்கள். 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இவர்களுடைய டிபன் கடையைமாம்பலம் பகுதியில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்தளவு தரமான உணவை குறைந்த விலையில் வழங்கி வருகிறார்கள். 

பரப்பரப்பாக இயங்கிக் கொண்டிருந்த வெங்டேசனிடம் பேசினோம்:

""என்னுடைய சொந்த ஊர் திருவிடைமருதூர். என்னுடைய அப்பா சீனிவாச ஐயர். மிகப்பெரிய சமையல் கலைஞர்.  மாம்பலம் சீனு என்று சொன்னால் அவரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவருக்கு இப்போது 97 வயதாகிறது. என்னுடன் தான் இருக்கிறார்கள். என்னுடைய 13 வயதில் அப்பாவுடன் சென்னை வந்தேன். அவருக்கு உதவியாக இருந்து அனைத்து சமையல் தொழிலையும் கற்றுக்கொண்டேன். 

10 ஆண்டுகளுக்கு முன்னால் ஏதாவது தொழில் தொடங்க வேண்டும் என்று யோசித்த போது தெரிந்த தொழில் சமையல் தான். அதனால் வீட்டு அருகிலேயே குறைந்த விலையில் டிபன் கடை போடலாம் என்று என்னுடைய மனைவி ராஜலெட்சுமியுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்தேன். ஆரம்பக் காலங்களில் மக்கள் சாப்பிட யோசித்தார்கள். சாப்பிட்டவர்கள் ருசியும், தரமும் நல்லாயிருக்குன்னு மத்தவங்க சொல்லி வந்தவுங்க கூட்டம் தான் அதிகம். காலையில் 30 ரூபாய்க்கு ஸ்பெஷல் பொங்கல் வழங்குகிறோம். இதனுடைய ருசி வேறு எங்கும் கிடைக்காது. ஒரு முறை சாப்பிட்டவர்கள் மீண்டும் தேடி வருவார்கள். பொங்கல் வாங்குவதற்கு என்றே ரெகுலர் கஷ்டமர்கள் இருக்கிறார்கள்.  இது தவிர குறைந்த விலையில் கிச்சடி, இட்லி, வடை, பூரி டிபனாக வழங்குகிறோம்.

காலை 7.30 மணிக்குக் கடைத் தொடங்கினால் 10.30 மணிக்குள் கொண்டு வந்த ஐயிட்டங்கள் எல்லாமே விற்று விடும்.  குறைந்தது நூறு பேர் காலை உணவை எங்கள் கடையில் சாப்பிடுவார்கள். நான் கடை தொடங்கிப் பத்து ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை யாரும் குறை சொல்லி வந்தது கிடையாது. சாப்பிட்டவர்கள் பாராட்டுவார்கள் அது போதும். மேலும் சிலர் சாப்பிட்டு முடிந்ததும் பணம் குறைவாக உள்ளது என்பார்கள். பரவாயில்லை இருப்பதைக் கொடுங்கள்  என்று வாங்கிக் கொள்வேன். சிலர் காரில் வந்து பார்சல் வாங்கிப் பின்பு பணம் கொண்டு வரவில்லை. ஏ.டி.எம் மில் எடுத்துத் தருகிறேன் என்பார்கள்.

அவசரமில்லை. அடுத்த முறை வரும் போது தாருங்கள் என்று வீட்டுக்கு முதலில் சாப்பாட்டை கொண்டு கொடுக்க செல்வேன். இந்த கரோனா காலத்தில் ஒரு வருடம் கடை போடவில்லை. வருமானம் இல்லாமல் வெளியே சமையல் வேலைக்குச் சென்றேன்'' எனப் பேசி முடிக்கிறார் வெங்கடேசன்.

""முந்தின நாள் இரவே குருமா, சட்னி, சாம்பார் வைப்பதற்காகக் காய்கறிகளை வெட்டி வைத்து விடுவேன். பூரி மசாலாவுக்கு உருளைகிழங்கு வேக வைத்து தயார் செய்து விடுவேன். காலை 4 மணிக்கு எழுந்து சமையல் வேலைகளைத் தொடங்கி விடுவேன். 

என்னுடைய மகள்கள் காயத்ரி, பிருந்தா உதவியாக இருப்பார்கள். டிபன் வகைகள் தயாரானதும் வண்டியில் வைத்து விற்கும் இடத்திற்குக் கொண்டு சென்று விடுவோம். காலை வியாபாரம் தொடங்கினால் முடியும் வரை மின்னல் வேகத்தில் வேலை செய்ய வேண்டும். காரணம் சாப்பிட வருபவர்களின் விருப்பம் அறிந்து  டிபன் ஐயிட்டங்களைக் கொடுக்க வேண்டும். 

பார்சல் கட்டி கொடுக்க வேண்டும். இந்த பரபரப்பு என்பது பழகி போய்விட்டது. இன்னும் சில தினங்களில் மாலையில் கடை போட உள்ளோம். இரவு உணவாக அடை அவியல், சோலாபூரி, சாப்பாத்தி போன்ற உணவுகள் கிடைக்கும். அதுவும் குறைந்த விலையில் வழங்குவதால் கூட்டத்திற்குப் பஞ்சம் இருக்காது. போதும் என்று  சொல்வது சாப்பாட்டை மட்டும் தான். அந்த சாப்பாட்டை இல்லாதவர்களுக்கு குறைந்த விலையில் கொடுப்பதே எங்களுக்கு ஆத்ம திருப்தி அளிக்கிறது'' என்கிறார் வெங்கடேசனின் மனைவி ராஜலெட்சுமி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com